புதன், 5 செப்டம்பர், 2012

ராமானுஜர் - பரணிபாலன் - 14



தஞ்சாமாம்பாள் மகிழ்ச்சியடையும் அளவிற்கு ராமானுஜர் அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் என தெரிந்து கொள்ளும் முன், ஒரு திருத்தத்தையும் இந்தக் கதையில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அத்தியாயம் 12ல், ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் நடந்த இடம் காஞ்சிபுரம் என்று வந்துள்ளது. மதுராந்தகத்தில் பெரியநம்பியை சந்தித்த போது, அங்கேயே பஞ்ச சம்ஸ்காரம் நடந்து விட்டது. அங்குள்ள ஏரிகாத்த ராமர் கோயில் எதிரிலுள்ள குளக்கரையில், வேள்வித் தீ மூட்டி, சங்கு, சக்கர முத்திரைகளைக் காய்ச்சினார். அதை ராமானுஜரின் புஜங்களில் ஒற்றினார் என்பதே சரியானது. இதைச் சுட்டிக்காட்டிய எல்லா வாசகர்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன் அவர்களின் திருப்பாதங்களிலும் தண்டனிடுகிறேன்.
இனி கதைக்கு வருவோம்.

அந்த கடிதத்தை ராமானுஜரே, தன் மாமனார் தனக்கு எழுதியதைப் போல எழுதி அனுப்பியிருந்தார். அதில் சொல்லப்பட்டிருந்த விஷயம் இதுதான்.

""சிரஞ்சீவி மாப்பிள்ளைக்கு, மாமா எழுதிக் கொண்டது. இங்கு நாங்கள் ÷க்ஷமமாய் இருக்கிறோம். அங்கு தாங்களும், தஞ்சாவும் நலமாய் இருக்க பெருமாளை வேண்டுகிறேன். என் இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயித்துள்ளேன். தாங்கள் உடனே தஞ்சமாம்பாளை அனுப்பி வையுங்கள். உங்களுக்கு பணிகள் இடைஞ்சல் தராவிட்டால், நீங்களும் வாருங்கள். இங்கு உங்கள் அத்தை தனியாக திருமண வேலைகளைச் செய்ய கஷ்டப் படுகிறாள். தஞ்சாவை அனுப்பினால், வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும். மீண்டும் ÷க்ஷமம் வேண்டுகிறேன்,''.

இந்த கடிதத்துடன், அந்தப் பெரியவர் ராமானுஜர் வீட்டுக்கு திரும்பவும் போனார். ""அய்யா! வீட்டில் யார் இருக்கிறீர்கள்?'' என்றார்.

தஞ்சாமாம்பாள் எட்டிப் பார்த்தாள்.

""அம்மா! தங்களைப் பார்க்கத்தான் வந்தேன். உங்கள் தகப்பனார் உங்கள் கணவருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பியுள்ளார், அதைக் கொடுக்க வந்தேன்'' என்றார். பிறந்த வீட்டில் இருந்து ஒருவர் பேசினாலோ, கடிதம்
போட்டாலோ பெண்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். தஞ்சமாம்பாளுக்கும் அதே நிலை. அவள் வானத்துக்கும், பூமிக்குமாய் குதிக்காத குறை தான்.

""இப்போ பார்த்து இந்த மனுஷன் எங்கே போயிட்டார்? ஏற்கனவே கோபிச்சுண்டு போனார். எப்போ வருவாரோ?'' என்றவள், வந்தவரை உபசரிக்கத் தொடங்கினாள். அவரை குளிக்கச் சொன்னாள்.
சமயம் பார்த்து ராமானுஜரும் வீட்டுக்கு வந்தார். அவள் அவசரமாக கடிதத்தை அவர் கையில் கொடுத்தாள். அவர் படிப்பது போல பாவனை செய்தார்.

""தஞ்சா! உன் தங்கைக்கு கல்யாணமாம். மாமா கடிதம் எழுதியிருக்கார். உன்னை ஒத்தாசைக்கு வரச் சொல்லியிருக்கார். நீ போயிட்டு வா. எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கு. இவர் கூடவே உன் வீட்டுக்கு போ. நான் வேலையை முடிச்சுட்டு வரேன். ஆத்துல மாமி, மாமாவுக்கு என் மரியாதையை தெரிவிச்சுடு,'' என்றார்.

அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மின்னல் வேகத்தில் ஜடை முடித்தாள். படபடவென புதுப்புடவை மாற்றினாள்.

கணவரின் காலில் விழுந்து ஆசிபெற்றாள். அதுதான் அவரிடமிருந்து கிடைக்கும் கடைசி ஆசி என்பதை அவள் உணரவில்லை அவள். கிளம்பி விட்டாள்.

ராமானுஜரும் வீட்டில் இருந்து வெளியேறினார். நேராக வரதராஜப் பெருமாள் கோயில் நோக்கி நடந்தார்.

""பெருமாளே! இன்று முதல் நான் உனக்கு தொண்டன். இல்லறத்தை துறந்து விட்டேன். என்னை ஏற்றுக்கொள்,'' என்றார்.

பின் வரதராஜரின் பாதத்தில் வைக்கப்பட்ட காவித்துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு கோயில் குளத்தில் குளித்தார். யாக குண்டம் எழுப்பி தீ மூட்டினார். ""பணம் வேண்டாம். பெண் வேண்டாம். நீ மட்டுமே வேண்டும்,'' என வேண்டினார். இவற்றை துறப்பதாக சத்தியமும் செய்தார். இதன்பிறகு கோயிலிலேயே தங்கிவிட்டார்.
ராமானுஜர் துறவியானது குறித்து ஊரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசினர். ""இந்தப் பையன் நல்ல அழகன். அவன் மனைவியும் அழகி. அப்படியிருக்க,, இவர் துறவறம் பூண்டது ஏன்? இவரால் கடைசிவரை துறவறத்தைக் கடைபிடித்து விட முடியுமா?'' என்றனர். சிலர் அவர் துறவியான பிறகு முகத்தில் ஏற்பட்டுள்ள தேஜஸ் பற்றி பேசினர். அவரைப் பார்க்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. ராமானுஜரின் மருமகன் முதலியாண்டன் என்ற தாசரதி அவரிடம் முதல் தீட்சை பெற்றார்.

அடுத்து ஞாபக சக்திக்கு சொந்தக்காரரான கூரத்தாழ்வார் சீடர் ஆனார். ஒருமுறை ஒன்றைக் கேட்டால் போதும். அதை மறக்கவே மாட்டார். இப்படியிருக்க வரதராஜப் பெருமான் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினார். ஒரு காலத்தில், ராமானுஜரை காசிக்கு அழைத்துச் சென்று, அவரைக் கொலை செய்ய முயன்றவர் அவரது குருவான யாதவப் பிரகாசர். அவர் ராமானுஜருக்கு அவ்வாறு துரோகம் செய்த நாளில் இருந்து மனஅமைதியில்லாமல் இருந்தார். தன் மகனின் நிலையைப் புரிந்து கொண்ட அவரது தாய், ஒருநாள் கோயிலுக்கு வந்தார். ராமானுஜரின் ஒளி பொருந்திய முகம் அந்தஅம்மையாரை ஈர்த்தது.

-தொடரும்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக