புதன், 5 செப்டம்பர், 2012

ராமானுஜர் - பரணிபாலன் - 15



தன் மகன் இவருக்கு சீடராகி விட்டால், மீண்டும் பழைய நிலையை அடைவான் எனக் கருதினார். வீட்டிற்கு வந்ததும் மகனிடம் தன் கருத்தை வலியுறுத்திச் சொன்னார்.

சீடனுக்கே சீடனாவது, யாதவப்பிரகாசருக்கு அதிர்ச்சியாய் இருந்தாலும், தாயின் சொல்லில் ஏதோ ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தார். அந்த வரதராஜன் சித்தம் அதுதான் என்றால், யாரால் தடுக்க இயலும் என புரிந்து கொண்ட அவர், திருக்கச்சிநம்பியிடம் பேசிப் பார்ப்போம் என அவர் வீட்டுக்குச் சென்றார்.

""நம்பி! தாங்கள் தான் என் பிரச்னைக்கு பேரருளாளனிடம் தீர்வு கேட்டு சொல்ல வேண்டும்,'' என்றார்.
அன்றிரவில் பெருமாளிடம் நம்பி இந்த விஷயத்தைச் சொன்னார். பெருமாள், என்ன சொல்லியிருப்பார் என்று சொல்லாமலே தெரிந்திருக்குமே! "சரி' என சொல்லிவிட்டார். மறுநாள் பெருமாளின் விருப்பத்தை யாதவப்பிரகாசரிடம் சொல்லி விட்டார் திருக்கச்சிநம்பி. அன்றிரவில் அவர் கண்ட கனவிலும் ஒரு தெய்வ சக்தி அவ்வாறே கூறியது. இனியும், கவுரவம் பார்க்கக்கூடாது எனக் கருதிய பிரகாசர், ராமானுஜரைச் சந்திக்க முடிவெடுத்தார்.

மறுநாள் கோயிலுக்கு சென்றார். ராமானுஜர் அவரைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை செய்தார். அவருக்கு இருக்கை கொடுத்தார். தன் முன்னாள் சீடனின் பணிவான தன்மையை மனதுக்குள் போற்றினார் பிரகாசர். இருப்பினும் தொட்டில் பழக்கம் கடைசி வரை வருமாமே! அவர் தன் வழக்கமான பாணியில், அதிமேதாவித்தனமான கேள்வி ஒன்றைக் கேட்டார். ""ராமானுஜா! உன் தோளில் சங்கு, சக்கரம் பொறித்துள்ளாய். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாமா? இதைப் பார்க்கும் போது நீ குணங்களுடன் கூடிய பிரம்மத்தை (உருவத்துடன் கூடியது) வணங்குவதையே சரியானதென நினைப்பதாக கருதுகிறேன். இதற்கு சாஸ்திரம் ஏதாவது ஆதாரம் வைத்துள்ளதா? சொல்,'' என்றார்.

ராமானுஜர் கூரத்தாழ்வார் பக்கம் திரும்பி, ""இதோ! கூரத்தாழ்வார் இருக்கிறாரே. அவர் சாஸ்திர வல்லுநர். அவர் உங்களுக்கு தக்க விளக்கமளிப்பார்,'' என்றார்.

கூரத்தாழ்வார் மடைதிறந்த வெள்ளமென தன் சாஸ்திர உரையைத் துவக்கினார். ஞாபகசக்தியில் சிறந்தவர் அல்லவா? அதனால், அவ்விடத்தில் பக்தி மழை பொழிந்தது என்று சொல்வதை விட கொட்டித் தீர்த்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

""ஆசிரியர் கோமானே! எங்கள் ஆச்சாரியர் உத்தரவுப்படி உங்களிடம் பேசுகிறேன். சங்கு, சக்கர சின்னங்களை அக்னியில் அழுத்தி அதை உடலில் பதித்துக் கொண்டவன் பரமாத்மாவுடன் இணைகிறான். அவன், பிரம்மலோகத்தில் வாழத் தகுதியுள்ளவன் ஆகிறான். பூணூல் தரிப்பது எப்படியோ, அதுபோல வைணவர்கள் சங்கு, சக்கர பொறியை உடலில் தரித்துக் கொள்ள வேண்டும். இது பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க உதவும். இவ்வுலகில் நாராயணனே முடிவான உண்மை. அவனே நமக்கு புகலிடம் தருபவன்,'' என்று கூரத்தாழ்வார் பேசப் பேச யாதவப்பிரகாசர், வாயே திறக்காமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார்.
தன்னால் கொடுமைக்கு ஆளான சீடனின் சீடனே இப்படி இருந்தால், ராமானுஜரிடம் எவ்வளவு விஷயம் இருக்கும் எனக் கருதிய அவர், அப்படியே எழுந்தார். ராமானுஜர் முன் போய் நின்றார். தடாலென காலில் விழுந்து விட்டார். அம்மாவின் விருப்பம், திருக்கச்சிநம்பி மூலமாக பெருமாளே சொல்லி அனுப்பியது எல்லாம் சரியானதே என்பதை உணர்ந்தார்.

""ராமானுஜா! நீ சாதாரணமானவன் அல்ல. அந்த ராமபிரானின் தம்பி தான். அகந்தை என் கண்களை மறைத்திருந்தது. இனி நீயே எனக்கு கதி. என்னை சீடனாக ஏற்றுக்கொள்,'' என்றார்.

ராமானுஜரும் அவரைத் தனது சீடராக ஏற்றார். அதன்பிறகு அவரது போக்கே மாறிவிட்டது. முந்தைய கெட்ட எண்ணங்கள் அறவே அழிந்தன. ராமானுஜரின் உத்தரவுப்படி வைணவர்களின் கடமை குறித்து ஒரு நூலையும் எழுதினார்.

அவரது எண்பதாவது வயதில் இந்நூல் முடிவுற்றது. இதன்பிறகும் சில காலம் வாழ்ந்த அவர் திருமாலின் திருவடிகளை எய்தினார். யாதவப்பிரகாசர் ராமானுஜருக்கு சீடரானது, அவரது பக்திமயமான தோற்றம், இறைவனிடம் தன்னை அர்ப்பணித்து விட்ட பாங்கு எல்லாமே சுற்றுப்புறத்திலுள்ள வைணவர்களிடையே பரவியது. எல்லாரும் கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்தனர்.

இதனிடையே, கிணற்றடி தண்ணீர் பிரச்னையில் ஸ்ரீரங்கம் திரும்பி விட்ட, பெரியநம்பி ஸ்ரீரங்க மடத்துக்கு தலைவர் இல்லையே என்ற கவலையில் இருந்தார். ஆளவந்தாருக்கு பிறகு, மடத்தில் திருமாலின் திருக்குணங்கள் பற்றி பேசுவதற்கு கூட சரியான ஆளில்லையே என்று வருத்தப்பட்டார்.

ஆளவந்தார் இருந்த போது, ராமானுஜரை ஒரு தெய்வீக புருஷர் என்று சொன்னது அவர் நினைவில் மாறி மாறி வந்தது. என்ன செய்வதென கலங்கிய அவர், ரங்கநாதனிடம் சென்றார்.

""ரங்கநாதா, இது என்னப்பா சோதனை? இந்த பிரச்னைக்கு தீர்வு தான் என்ன?'' என்று கேட்டார்.
அப்போது, ரங்கநாதர் பெரியநம்பியிடம் பேசினார். ""நம்பி! கவலைப்படாதே. வரதராஜன் உத்தரவின்றி ராமானுஜன் அங்கிருந்து கிளம்ப மாட்டான். எனவே வரதராஜனைப் பாடிப்புகழ்ந்து, அவனிடம் அனுமதி பெற வேண்டியது உனது பொறுப்பு. பாடுவதற்கு தகுதியான ஆள் திருவரங்க பெருமாளரையர். அந்த சங்கீத கலாநிதியை காஞ்சிபுரத்துக்கு அனுப்பு. வரதராஜன் சங்கீதப்ரியன். அவன் சங்கீதத்துக்கு மகிழ்ந்து அவன் வரம் கொடுக்கும் வேளையில், ராமானுஜனை கேட்டு பெற்று விடச் சொல்,'' என்றார்.

இதையடுத்து பெருமாள் அரையர் காஞ்சிபுரம் சென்றார். வரதராஜனைப் பற்றி உளமுருகிப் பாடினார். ஆனால், வரதராஜனுக்கோ ராமானுஜரை அங்கிருந்து அனுப்ப மனமில்லை. அவன் பாட்டை ரசித்தானே ஒழிய, பதில் ஏதும் சொல்வதாகத் தெரியவில்லை. பெருமாள் அரையர் விடாப்பிடியாக பாடிக் கொண்டிருந்தார். தன் சக்தியனைத்தையும் திரட்டிப் பாடினார்.

-தொடரும்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக