ஒரு வழியாக பேரருளாளன் வரதராஜன் கண் திறந்தான்.
பெருமாள் அரையர் வரதராஜனிடம், ராமானுஜரை தன்னோடு அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்.
பெருமாளுக்கு அதில் இஷ்டமே இல்லை. மிகுந்த பிரயாசையின் பேரில் பெருமாளிடம் அனுமதி பெற்றார் அரையர். ராமானுஜரும் அரையருடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். உலகமே போற்றும் மாபெரும் சகாப்தத்தைப் படைப்பதற்காக ஸ்ரீரங்கத்துக்கு அந்த மகான் சென்று கொண்டிருந்தார்.
அங்கு சென்றதும் பெரியநம்பியை தன் குருவாக ஏற்றுக் கொண்டார். ராமானுஜர் அங்கு வந்ததில் பெரிய
நம்பிக்கு அலாதி மகிழ்ச்சி. தன் மகன் புண்டரீகாட்சரை ராமானுஜரின் சீடனாக்கினார் என்றால் அவர் மீது நம்பி கொண்டிருந்த பாசத்திற்கு அளவீட்டைக் கூறுவதற்கில்லை.
இப்படியிருக்க ராமானுஜருக்கு தன் தம்பி கோவிந்தரைப் பற்றிய நினைவு வந்தது. இவர் ராமானுஜரின் சித்தி மகன் என்பது ஏற்கனவே அறிந்த விஷயம் தான். ராமானுஜர் யாதவப்பிரகாசருடன் காசி சென்ற போது, அவர் ராமானுஜரைக் கொலை செய்ய முயற்சித்த தகவலை சொல்லிக் காப்பாற்றி விட்டு, காளஹஸ்தியில் சிவவழிபாட்டில் இறங்கி விட்டார்.
ராமானுஜர் கோவிந்தனை வைணவத்துக்கு திருப்ப விரும்பினார். அவர் தன் அருகில் இருப்பது மிகப்பெரிய பலம் என கருதினார். அப்போது திருமலையில் (திருப்பதி) பெரிய திருமலை நம்பி என்பவர் ஏழுமலையானுக்கு தொண்டு செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு ராமானுஜர் கடிதம் எழுதினார்.
""தாங்கள், காளஹஸ்தியில் சிவப்பணியில் ஈடுபட்டுள்ள என் தம்பி கோவிந்தனுக்கு தக்க அறிவுரை சொல்லி ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வையுங்கள்,'' என குறிப்பிட்டிருந்தார். பெரிய திருமலை நம்பி கோவிந்தரை சந்திக்கச் சென்றார். கோவிந்தர் அங்குள்ள குளக்கரையில் தினமும் மலர் பறிக்க வருவார். ஒருநாள் வெண்தாடியுடன் பெரியநம்பி, குளக்கரையில் தன் சீடர்களுக்கு, பல்வேறு சாஸ்திரங்கள் குறித்து போதனை செய்து கொண்டிருந்தார். கோவிந்தன் ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார். அந்தப் பெரியவரின் பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. பின்னர் மரத்தில் இருந்து இறங்கி, மலர்களுடன் அவர் இருந்த இடத்தைக் கடந்து சென்றார். வயதில் மிகவும் சிறியவராயினும் கூட பெரிய திருமலை நம்பி கோவிந்தனை,
""மகாத்மாவே, இங்கு வாருங்கள்,'' என மரியாதையுடன் அழைத்தார். அவர் யார் எனத் தெரியாவிட்டாலும், கோவிந்தன் பணிவுடன் அவர் அருகே சென்றார்.
இருவருக்கும் அருமையான உரையாடல் நிகழ்ந்தது. அது சுற்றியிருந்தவர்களுக்கு தேனாய் இனித்தது. விஷ்ணு, சிவன் ஆகியதெய்வங்களின் பெருமையை நாவினிக்க அவர்கள் பேசினர்.
நம்பி: ""தம்பி! இந்த பூக்களை யாருக்குகொண்டு செல்கிறீர்கள்?''
கோவிந்தன்:""சுவாமி! சிவனை வழிபடுவதற்காகஇதனைப் பறித்துச்செல்கிறேன்,''
நம்பி: சிவனுக்கு பூ வழிபாடு சரியாக இருக்காது. அவர் ஆசைகளை வேரறுத்து எரித்து அதனை வெண்ணீறாக பூசியிருப்பவர் அல்லவா? அவருக்கு இந்த பூக்களின் மீது ஆசையிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவர் மயானத்தில் வசிப்பவர். நாராயணன் மீது அபிமானம் உள்ளவர். இந்த பூக்கள் கல்யாண குணங்கள் கொண்ட திருமாலுக்கு தானே பொருத்தமாக இருக்க முடியும்?
கோவிந்தன்: பெரியவரே! தாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். இறைவன் என்பவன் எல்லாம் உடையவன். அவன் தான் நமக்கு கொடுப்பவனே ஒழிய, நம்மால் பக்தியை மட்டுமே அவனுக்கு திருப்பி செலுத்த இயலும். சிவன் விஷத்தைக் குடித்து உலகத்தைக் காத்தவர். அவருக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். அதற்கு இந்த மலர்கள் தேவையில்லாமல் இருக்கலாம். உள்ளத்தில் இருந்து பக்தி பூக்களைச் சொரிந்தால் போதும். இருப்பினும் மலர் தூவி வழிபடும் சம்பிரதாயம் மூலம் பக்தி வளருமென்று கருதுகிறேன்.
நம்பி: நீங்கள் சொல்வது மிகமிக சரி. அறிஞர்கள் மட்டுமே இவ்வாறான கருத்தைக் கூற முடியும். உங்கள் பக்தி மெச்சத்தகுந்தது. பகவான் ஹரி வாமனனாக "தான்' என்ற அகந்தையை அடக்க வந்தவர். அவரிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து. அது மட்டுமல்ல. கீதையில் பகவான், "ஒருவன் அவனது சொந்த தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும்' என சொல்லியுள்ளார். அதன்படி பார்த்தால், நீங்கள் பகவான் ஹரியைவழிபடுவதே முறையானது.
கோவிந்தன்: திருமாலுக்கும், சிவனுக்கும் தாங்கள் பேதம் கற்பிக்க வேண்டாம். கண்டாகர்ணன் போன்ற பக்தியுள்ளவன் என என்னை எண்ணாதீர்கள். இப்படியாக அவர்களின் உரையாடல் தொடர்ந்தது. பெரிய திருமலை நம்பி, கோவிந்தனை விடுவதாக இல்லை.
யார் அந்த கண்டாகர்ணன்? அவனது கதையைக் கேளுங்கள்.
கண்டாகர்ணன் சிவனை மட்டுமே வழிபட்டான். சிவன் அவனை திருத்த எண்ணி, நாராயணனின் உடலைத் தன்னோடு சேர்த்து, சங்கர நாராயணனாக காட்சியளித்தார். அப்போதும் அவன் சிவன் இருந்த பகுதியை மட்டுமே வணங்கினான்.
தான் சமர்ப்பித்த நைவேத்யம் மற்றும் மலர்களின் வாசனை சிவனின் பக்கமே செல்லும் வகையில் விசிறினான். இதற்காக சிவன் அவனை தண்டித்து ஒரு கிராமத்தில் துன்பம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்து வாழ வைத்தார். அங்கிருந்தவர்கள் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடினர். அப்போதும் திருந்தாத அவன், தன் காதுகளில் கண்டாவைக் (மணி) கட்டிக் கொண்டு, விஷ்ணு என்ற சப்தம் விழாமல் இருக்க அடித்துக் கொண்டே இருந்தான்.
-தொடரும்...
நன்றி - தினமலர்