தாய் பெண் கேட்டுச் சென்றாலும் மனம் பொறுக்காத சீனிவாசன், பத்மாவதியை
அப்போதே பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும், அவளிடம் திருமண உந்துதலை உருவாக்க
வேண்டும் என்பதற்காகவும் குறி சொல்லும் குறத்தியின் வேடமிட்டார். சிவப்பு புடவை கட்டினார்.
கைகளில் பச்சை குத்திக் கொண்டார். கண்களில் மை
தீட்டியாயிற்று. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. இடுப்பில் கூடை,
கையில் மந்திரக்கோல்...அரிய வேஷம்...
பெருமாள் கோயில்களில் மோகினி அலங்காரத்தை நாம் விழாக்காலங்களில் பார்ப்போம்.
அவர் அலங்கார பிரியர்.
கண்ணபுரத்திலே அவர் சவுரி முடியணிந்து சவுரிராஜராக காட்சியளிக்கிறார்.
இப்போது, குறத்தி வேஷம் போட ஆசை வந்து விட்டது. அந்த மாயவன்(ள்) கிளம்பி விட்டான்(ள்).
""குறி பார்க்கலையோ குறி'' என்று கூவிக்கொண்டே நாராயணபுரத்தின்
வீதிகளில் திரிந்தாள். அரண்மனை உப்பரிகையில் மகளின் நிலை குறித்து கவலையோடு நின்று
கொண்டிருந்த ஆகாசராஜனின் மனைவி தரணீதேவியின் கண்களில் அவள் பட்டாள்.
மகளின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்ன என்பதை குறி சொல்பவள் மூலம்
தெரிந்து கொள்வோமே என்று அவளை அழைத்து வரச்சொல்லி ஏவலர்களிடம் சொன்னாள்.
எவ்வளவு செல்வம்... அரண்மனை வாசம்...இத்தனையும் இருந்து பயனென்ன! மனதுக்கு
நிம்மதி வேண்டும், குறிப்பாக, குழந்தைகள் குறித்த விஷயத்தில் பல பெற்றவர்கள் தங்கள்
நிம்மதியை இழந்து விடுகிறார்கள். அதிலும் பெண் குழந்தைகள் என்றால்...தரணீதேவிக்கும்
இப்போதைய நிலை இதுதான்! நாம் நம் பிள்ளைகள் சரியாகப் படிக்காவிட்டாலோ, படித்த பின்
நல்ல வேலை கிடைக்காவிட்டாலோ, அவர்களின் போக்கில் மாற்றம் தெரிந்தாலோ, ஜாதகத்தைத் தூக்கிக்
கொண்டு ஜோசியரிடம் ஓடுவதில்லையா! அதே போல, தரணீதேவி மகளின் நிலையறிய குறி சொல்பவளைக்
கூப்பிட்டாள்.
குறி சொல்லும் வேடத்தில் வந்த சீனிவாசன். ராணிக்கு வணக்கம் செலுத்தினார்.
""பெண்ணே! என் மகள் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். என்ன
நோய் என்றே புரியவில்லை. இதற்கு காரணம் என்ன? இவளது எதிர்காலம் பற்றி சொல்லு,'' என்றாள்.
""அம்மா! உள்ளதை உள்ளபடி சொல்கிறேன், கேளுங்கள்,'' என்று
கணபதி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, குமாரசுவாமியாகிய முருகக்கடவுள்,
சரஸ்வதி, லட்சுமி, கனகதுர்க்கா, வீரபத்திரர், அஷ்டதிக் பாலகர்கள், வனதேவதைகளைக் குறித்து
வணங்கிப் பாடி, இவர்கள் மீது ஆணையாக நான் சொல்வதெல்லாம் உண்மை எனச்சொல்லி விஷயத்துக்கு
வந்தாள்.
பத்மாவதியை அழைத்த அவள், ""இளவரசி! நீங்கள் உங்கள் மனதில்
கொண்டுள்ள எண்ணம் எனக்கு விளங்கி விட்டது. சில நாட்களுக்கு முன்பு, காட்டில் நீங்கள்
நீலமேக வண்ணன் ஒருவனைப் பார்த்திருக்கிறீர்கள். அவன் தன் மனதை உங்களிடம் கொடுத்து விட்டு,
உங்கள் மனதைப் பறித்துக் கொண்டு போய்விட்டான். அவன் நினைவு இப்போது வாட்டுகிறது. அவனே
மணாளனாக வேண்டும் என்பதே உங்கள் எண்ணம். உங்கள் கையில் தான் கல்யாண ரேகை ஓடுகிறதே!
பிறகு, யார் அதை தடுக்க முடியும்! எத்தனை கோடி தேவர்கள் தடுத்தாலும், உங்களுக்கும்,
வேடனாக வந்தானே! அந்த வாலிபனுக்கும் திருமணம் நடந்தே தீரும். இதற்காக மனம் வருந்த வேண்டாம்.
நான் சொன்ன வாலிபன் இவன்தானா என பாருங்கள்,''என்றவள், தன் மந்திரக்கோலை கூடைக்குள்
ஒரு சுழற்று சுழற்றினாள்.
கூடைக்குள் பத்மாவதியும், தரணீதேவியும் பார்த்தனர்.
காட்டுக்குள் வேடனாக வந்த சீனிவாசனின் அழகு முகம் தெரிந்தது. அவன் இவர்களைப்
பார்த்து சிரித்தான். அந்த மந்திரச்சிரிப்பில் சொக்கிப் போனாள் பத்மாவதி.
விஷயம் அம்மாவுக்கு தெரிந்து விட்டதே என்று பயம் ஒரு புறம்! வெட்கம்
ஒருபுறம்... தனது அறைக்குள் ஓடிவிட்டாள்.
பின்னர் குறத்தி ராணியிடம், ""அம்மா! இந்த வாலிபனே உங்கள்
மகளுக்கு மணாளாவான். இதைத் தடுக்க தங்களாலும், ஆகாசராஜ மகாராஜாவாலும் எக்காரணம் கொண்டும்
முடியாது. இவ்வளவு தான் விஷயம். தாங்கள் எனக்குரிய குறிக்காசை கொடுங்கள். நான் புறப்படுகிறேன்,''
என்றாள்.
அவளுக்கு பொன்னாபரணங்கள் பல கொடுத்து அனுப்பிய தரணீதேவியைக் கவலை குடைய
ஆரம்பித்து விட்டது.
மகளைக் கண்டித்தாள்.
""தாயே! குறத்தி சொன்னது முற்றிலும் உண்மை. வாழ்ந்தால் அந்த
அழகிய இளைஞனுடன் தான் வாழ்வேன். சூரிய சந்திரரின் பாதையில் கூட மாற்றம் ஏற்படலாம்.
ஆனால், அவரை மணப்பதென்ற என் நிலைப்பாட்டில் எந்த மாறுதலுமில்லை. அவர் யாரென விசாரித்து
திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்,'' என்றாள்.
தரணீதேவிக்கு ஒன்றும் புரியவில்லை.
"ஒரு வேடனுக்கு தன் மகளைக் கொடுப்பதாவது! பரம ஏழையான அவன் தன்
மகளைத் திருமணம் செய்து கொண்டால் தன்னை யாராவது மதிப்பார்களா! பத்மாவதிக்கு சுயம்வரம்
என அறிவித்தால், எல்லா தேசத்து இளவரசர்களும் ஓடி வந்து விடுவார்களே! அவர்களில் உயர்ந்த
ஒருவனைத் தேர்ந்தெடுக்காமல் இவனுக்குப் பெண்ணைக் கொடுப்பதாவது! அவள் குழப்பத்துடன்
கணவரின் அறைக்குச் சென்றாள்.
தங்கள் மகள் ஒரு வேடனைக் காதலிக்கிறாள் என்ற விஷயத்தை அவனது காதிலும்
போட்டாள். ஆகாசராஜன் சிரித்தான்.
""தரணீ! உனக்கென்ன பைத்தியமா! நம் செல்வமகளை சாதாரணமான ஒருவனால்
எப்படி திருமணம் செய்ய இயலும்? அன்றொரு நாள், நாரத மகரிஷி நம் அரண்மனைக்கு வந்தார்.
அந்த ஸ்ரீமன் நாராயணனே அவளை திருமணம் செய்வார் என்றல்லவா வாழ்த்திச் சென்றார். நாரத
மகரிஷியின் வாக்கு எப்படி பொய்யாகும். நீ மனதை அலட்டாதே. நம் மகளுக்கு வந்திருப்பது
பருவகால நோய் தான். இது இந்த வயதில் எல்லா கன்னியருக்கும், காளையருக்கும் வரும் என்பது
அறிந்த ஒன்று தானே! நாமும் அந்த வயதைக் கடந்து தானே வந்துள்ளோம்,'' என்றான்.
—தொடரும்
நன்றி - தினமலர்