திங்கள், 8 அக்டோபர், 2012

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 17


இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது காவலன் வந்து நின்றான்.

""அரசே! தங்களைக் காண ஒரு அம்மையார் வந்திருக்கிறார். அவரது முகத்தில் நிறைந்த தேஜஸ் காணப்படுகிறது. கானகத்தில் வசிப்பவர் என்று அனுமானிக்கிறேன். துறவி போலும் இருக்கிறார், இல்லத்தரசி போன்றும் காணப்படுகிறார். அவரை அனுப்பி வைக்க தங்கள் அனுமதி வேண்டுகிறேன்,'' என்றான்.

""வரச்சொல்,'' என்று ஆகாசராஜன் உத்தர விட்டதும், தரணீதேவியும் அவனுடன் சென்று வந்திருப்பது யார் என பார்க்கச் சென்றாள். சேஷாசல மலையில் இருந்து கிளம்பிய சீனிவாசனின் தாய் வகுளாதேவி தான் அவள். அந்த மாதரசியை மன்னரும் ராணியும் வரவேற்றனர். அவரை ஆசனத்தில் அமர்த்தி உபசரித்து, ""தாயே, தாங்கள் யார்! இந்தச் சிறியேனைக் காண வந்த நோக்கம் என்ன? தங்களைப் பார்த்தால் பெரியதபஸ்வி போல் தெரிகிறது. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?'' என்றான்.

மலர்ந்த முகத்துடனும், புன்சிரிப்புடனும் ஆகாசராஜனையும், தரணீதேவியையும் வாழ்த்திய அந்த நடுத்தர வயது பெண்மணி, ""ஆகாசராஜா! நான் பெண் கேட்டு வந்துள்ளேன்!'' என்றாள்.
""பெண்ணா! யாருக்கு யார் பெண்ணைக் கேட்டு வந்துள்ளீர்கள்?'' என்ற ஆகாசராஜனிடம், ""மன்னா! என் பெயர் வகுளாதேவி, சேஷாசல மலையில் வசிக்கிறேன். என் மகன் சீனிவாசன். அவன் உன் மகளைக் காதலிக்கிறான். அவள் நினைவாகவே இருக்கிறான். சகல வசதிகளும் பொருந்திய அவனை விட்டு செல்வம் தற்காலிகமாக விலகியிருக்கிறது. தரித்திரனா யினும் மிகுந்த தேஜஸ் உடையவன். இன்னொரு முக்கிய விஷயம்! அவன் ஸ்ரீமன் நாராயணனின் அம்சம்,'' என்றாள்.

தங்களுக்கு வரப்போகும் மருமகன் அந்த ஸ்ரீமன் நாராயணனே என நாரதர் மூலமாக வாக்கு கேட்டிருந்ததும், குறத்தி சொன்ன குறியும். இப்போது இந்த அம்மையார் சொன்னதும் சரியாக இருக்கவே, ஆகாசராஜன் தம்பதியர் மகிழ்ந்தனர். தன் மகன் தரித்திரன் என்பதை, வெளிப்படையாக ஒப்புக்கொண்டது அவர்களுக்கு இன்னும் பிடித்திருந்தது. இருப்பினும், பெண்ணைக் கட்டிக் கொடுப்பவர்கள், யாரோ ஒருத்தி வந்து கேட்க மாப்பிள்ளையை பற்றி விசாரிக்காமல் கொடுத்து விடுவார்களா என்ன!

ஆகாசராஜன் அந்த அம்மையாரிடம், ""அம்மையே! நாங்கள் பெண்ணைப் பெற்றவர்கள். எங்கள் குல குருவிடம் ஆலோசனை கேட்டு அதன் பிறகு தங்களுக்கு முடிவைச் சொல்கிறோம்,'' என்றான்.
""அவ்வாறே ஆகட்டும். அவசரமில்லை, நீங்கள் பெண்ணைப் பெற்றவர்கள். கலந்தாலோசித்து செய்யுங்கள். ஆனால், உங்கள் பெண் ஸ்ரீமன் நாராயணனுடன் வாழப்போகிறாள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்,'' என்ற வகுளாதேவி அவர்களிடம் விடைபெற்றாள்.

வாசல் வரை வந்து அவளை வழியனுப்பிய ஆகாசராஜன் தம்பதியர், தங்கள் குலகுருவாகிய சுகயோகியிடம், இதுபற்றி ஆலோசனை செய்ய முடிவெடுத்தனர். ஆகாசராஜன் தன் தம்பியான தொண்டைமானிடம், சுகயோகியை அழைத்து வரும்படி சொன்னான்.

அவனும் ஆஸ்ரமம் சென்று தக்க மரியாதைகளுடன் அவரை அழைத்து வந்தான்.

அவருக்கு பாதபூஜை செய்த ஆகாசராஜன், ""தவசீலரே! எங்கள் குலத்தின் விடிவிளக்கே! சேஷாசல மலையிலுள்ள ஆதிவராக க்ஷேத்திரத்தில் சீனிவாசன் என்ற இளைஞன், வகுளாதேவி என்ற தாயின் பராமரிப்பில் இருக்கிறான். அவனுக்கு தன் மகளை மணமுடித்துக் கொடுக்கும்படி அந்தத் தாய் என்னிடம் வந்து கேட்டாள். பத்மாவதியும் அந்த இளைஞனையே மணம் முடிப்பேன் என அடம் பிடிக்கிறாள். அவனோ வேடன், பரம தரித்திரன், என்பதால் அவனுக்கு ராஜகுமாரியை கட்டி வைக்க என் மனம் அஞ்சுகிறது. அரண்மனை வாழ்வில் திளைத்த அரசிளங்குமரி, எப்படி அவனுடன் எளிய வாழ்வு வாழ முடியும்? அவனிடமிருந்த செல்வமெல்லாம் தற்காலிகமாக மட்டுமே விலகியிருப்பதாக அவனது தாய் சொல்கிறாள். தங்கள் ஞானதிருஷ்டியால் ஆராய்ந்து, என் மகளை அவனுக்கு மணம் முடித்து வைக்கலாமா என்பது பற்றி சொல்லுங்கள்,'' என்றான்.

சுகயோகி ஆழ்ந்த ஆலோசனையில் ஆழ்ந்தார். சற்றுநேரத்தில் அவரது முகம் மலர்ந்தது.
""ஆகாசராஜா! நீ கொடுத்து வைத்தவன், ஸ்ரீமன் நாராயணனுக்கு நீ மாமனாராகப் போகிறாய்! சீனிவாசன் அவரது அம்சம் என்பது நிஜமே. உன் மகள் பத்மாவதி நிறைந்த புண்ணியம் செய்தவள் என்பதாலேயே இது நிகழ்கிறது. அவளை சீனிவாசனுக்கு மணம் முடித்துவை. இதனால், நீ ஜென்மசாபல்யம் பெறுவாய். அந்த நாராயணனுடன் கலக்கும் பாக்கியம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இனி உனக்கு பிறவிச்சுழல் இல்லை. நிச்சயதார்த்தத்துக்கு உடனடியாக நாள் குறித்து விடு,'' என்றார்.

குருவின் அனுமதி கிடைத்து விட்டதால், மகிழ்ச்சியடைந்த ஆகாசராஜன் தம்பதியர் சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடத்த முடிவெடுத்தனர்.

""சுவாமி! அப்படியானால், தாங்களே நிச்சயதார்த்தம் மற்றும் முகூர்த்த நாட்களைக் குறித்து விடுங்கள்,'' என்றான் ஆகாசராஜன்.

சீனிவாசன் - பத்மாவதி திருமணத்துக்கு தேவர்களின் குருவான பிரகஸ்பதியை வரவழைத்து, நாள் குறித்தால் நல்லதென சுகயோகி கருதினார். பிரகஸ்பதியுடன் தேவாதி தேவர்களையும் வரவழைக்க முடிவெடுக்கப்பட்டது.

பிரகஸ்பதியும் பூமிக்கு வந்தார்.

""ஸ்ரீமன் நாராயணனின் அம்சமான சீனிவாசனின் திருமண நாளைக் குறிப்பதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ,'' என்ற பிரகஸ்பதி பஞ்சாங்கத்தை தீவிரமாக ஆராய்ந்தார். 

வைகாசிமாதம், வெள்ளிக்கிழமை, வளர்பிறை தசமி திதியில் முகூர்த்தம் நிர்ணயிக்கப் பட்டது.
அந்த முகூர்த்த பத்திரிகை சீனிவாசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் எழுதபட்டிருந்த வாசகம் இதுதான்.

""ஸ்ரீஸ்ரீசேஷாஸலவாசியான ஸ்ரீ ஸ்ரீனீவாஸனுக்கு ஆகாசராஜன் எழுதிய சுபமுகூர்த்த பத்திரிகை என்னவென்றால், பரமபுருஷனே! தங்கள் விஷயமெல்லாம் (பத்மாவதி யுடனான காதல்) பெரியோர் சொல்ல சந்தோஷமடைந்தேன். ஆகையால், தங்களுக்கு என் மகள் சவுபாக்கியவதி பத்மாவதியை திருமணம் செய்து கொடுக்க ஸங்கல்பித்துள்ளேன் (உறுதிசெய்தல்) தாங்கள் தங்கள் பந்து மித்திர ஸபரிவார ஸமேதமாக விஜயம் செய்து நான் அளிக்கும் கன்யாதானத்தை ஏற்றுக்கொள்ளும் படியாக வேண்டிக்கொள்கிறேன்,''.

இந்த முகூர்த்த பட்டோலையை, சீனிவாசனிடம் நேரில் கொடுக்க சுகயோகி சென்றார்.

—தொடரும்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக