குபேரா! இப்போது நடப்பது கலியுகம். இந்த யுகம் பணத்தின் மீதுதான் சுழலும்.
எல்லாரும் பணம் பணம் என்றே அலைவார்கள். செல்வத்தைத் தேடியலையும் அவர்கள் பல பாவங்களைச்
செய்வார்கள். பின்னர் மனதுக்குள் பயந்து பிராயச்சித்தத்திற்காக என்னை நாடி வருவார்கள்.
நல்வழியில் சேர்க்காத பணம் அவர்களுக்கு பயன்படாது. அவர்களிடம் இருக்கும் செல்வம் என்னையே
வந்தடையும்படி செய்வேன். அவ்வாறு சேரும் பணத்தை உனக்கு வட்டியாகக் கொடுத்து விடுவேன்,''
என்றார்.
குபேரனும் திருப்தியானார்.
ஒருவழியாக, திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் கிடைத்துவிட்டதால், சீனிவாசன்
மகிழ்ச்சியடைந்தார். தன் சகோதரர் கோவிந்தராஜரிடம் அந்த தொகையை ஒப்படைத்து,
""அண்ணா! தாங்கள் தான் திருமணத்தை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்,''
என்றார்.
"திருப்பதிக்கு சென்று வந்தால் பணம் கொட்டுமாமே, வாழ்வில் திருப்பம்
உண்டாகுமாமே' என்ற பொதுப்படையான கருத்து இருக்கிறது. அதற்கு காரணமே, இந்தக் கோவிந்தராஜப்
பெருமாள் தான். இவருக்கு கீழ் திருப்பதியில் கோயில் உள்ளது.
ஏழுமலையான் தொடரைப் படிக்கும் வாசகர்கள், திருப்பதியில் தரிசனம் செய்வது
எப்படி என்ற விபரத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். திருப்பதிக்கு செல்லும் முன்பாக
உங்கள் குலதெய்வக்கோயிலுக்கு சென்று வர வேண்டும். முடியாதவர்கள் குலதெய்வத்தை மனதார
நினைத்து வீட்டில் பூஜை செய்ய வேண்டும். திருப்பதிக்குச் சென்றதும், முதலில் திருச்சானூர்
(அலமேலு மங்காபுரம்) சென்று அங்கு பத்மாவதி தாயாரை வணங்க வேண்டும். அதன்பிறகு திருமலை
சென்று சுவாமி புஷ்கரணி எனப்படும் தெப்பக்குளத்தின் கரையிலுள்ள ஸ்ரீவராகசுவாமியை வணங்க
வேண்டும். பிறகு தான் ஏழுமலையான் சன்னதிக்கு செல்ல வேண்டும். ஏழுமலையானை வணங்கிய பிறகு,
கோயில் எதிரேயுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று அவரை வணங்கியபின், மலை உச்சியில் உள்ள
ஆகாசகங்கை தீர்த்தம், சக்ர தீர்த்தம், வேணுகோபால சுவாமி கோயில், பாபவிநாச தீர்த்தம்
ஆகிய இடங்களுக்குச் சென்று தீர்த்தம் தெளிக்க வேண்டும். பிறகு, கீழ் திருப்பதிக்கு
கோவிந்தராஜர் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்து விட்டு ஊர் திரும்ப வேண்டும். மீண்டும்
குல தெய்வத்தை வணங்கி திருப்பதி பயணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மீண்டும் கதைக்கு திரும்புவோம்.
கீழ்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜரின் கையில் தனரேகை ஓடுகிறது. நாம்
எவ்வளவுக் கெவ்வளவு பாலாஜிக்கு உண்டியல் காணிக்கை இடுகிறோமோ, அதைப் போல் நான்கு மடங்கு
பணம் கோவிந்தராஜரை வணங்கினால் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏழுமலையான் திருமணச்செலவுக்குரிய பணத்தை
கஜானாவில் வைத்துக்கொண்ட கோவிந்தராஜர், தன் கையால் எடுத்துச் செலவழிக்க செலவழிக்க,
அதைப் போல் நான்கு மடங்கு தொகை உயர்ந்து கொண்டே வந்தது. இதனால், தடபுடலாக திருமண ஏற்பாட்டைச்
செய்தார் கோவிந்தராஜர்.
தேவலோக சிற்பியான மயனை வரவழைத்து பந்தல் போட்டார். மாவிலை முதல் நவரத்தினங்கள்
வரையான தோரணங்கள் தொங்க விடப்பட்டன. பெண் வீட்டாரும், திருமண வீட்டிற்கு வரும் தேவர்களும்,
விருந்தினர்களும் தங்குவதற்கு விடுதிகள் அமைத்தார். (திருப்பதியில் இப்போதும் விடுதிகள்
அதிகமாக இருப்பது இதனால் தான் என்பர். அங்கே தினமும் உற்சவர் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கும்,
பத்மாவதி தாயாருக்கும் திருமண உற்சவம் நடக்கிறது. பத்மாவதி தாயார் கோயிலில் வெள்ளிக்கிழமைகளில்
நடக்கும் திருமண உற்சவம் விசேஷமாக இருக்கும்) அடுத்து திருமணப்பத்திரிகை தயாரிக்கும்
பணி நடந்தது. இந்த பத்திரிகை தயாரிப்பு பணியை தாயார் வகுளாதேவியிடம் சீனிவாசன் ஒப்படைத்து
விட்டார். வகுளாதேவி தகுந்த முறையில் அதை வடிவமைத்தார். ஈரேழு பதினான்கு லோகங்களிலும்
உள்ள தேவர்கள், ரிஷிகள், முக்கியஸ்தர்களுக்கெல்லாம் பத்திரிகை அனுப்ப முடிவாயிற்று.
இத்தனை பேருக்கும் மின்னல் வேகத்தில் சென்று பத்திரிகை கொடுப்பதென்றால் நடக்கிற ஒன்றா? இதுபற்றி ஆலோசித்த வகுளாதேவியின் மனதில் சிக்கியவர்
கருட பகவான்.
கருடனை அழைத்த அவள், ""கருடா! நீ வேகமாகச் சென்று இவ்வுலகிலுள்ள
முக்கியஸ்தர்களுக்கு பத்திரிகை கொடுத்து வா,'' என்று அனுப்பி வைத்தாள்.
கருடனுக்கு பெருமாளின் சேவையில் முக்கியப் பங்கு உண்டு. "ஆதிமூலமே'
என அலறினான் யானையாக இருந்த கஜேந்திரன் என்னும் கந்தர்வன். அவன் பெருமாள் பக்தன். இவனுக்கு
எதிரி கூகு என்பவன். இவன் முதலையாக மாறி திரிகூடமலையில் இருந்து கிளம்பும் ஆற்றில்
கிடந்தான். ஒருமுறை, யானையின் காலை முதலை கவ்வ, பக்தனான கஜேந்திரன் தன்னைக் காக்கும்படி
வேண்டி ஆதிமூலமாகிய பெருமாளை அழைத்து பிளிறினான்.
பெருமாளின் காதில் இது விழுந்ததோ இல்லையோ, கருடனை திரும்பிப் பார்த்தார்.
அவனுக்கு தெரியும். தன் மீது அவரை ஏற்றிக்கொண்டு கணநேரத்தில் அந்த நதிக்கரையை அடைந்து
விட்டான். யானையைக் காப்பாற்றினார் பெருமாள்.
இதனால் தான் பெருமாள் கோயில்களில் கருடசேவை நடத்துகிறோம். கருட சேவையைத்
தரிசிப்பவர்களுக்கு உடனடி பலன் கிடைத்து விடும். திருப்பதியில் நடக்கும் புரட்டாசி
பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில், ஏழுமலையான் கருடவாகனத்தில் பவனி வருவது கண்கொள்ளாக்காட்சி.
ஏராளமான பக்தர்கள் இதைப் பார்க்க கூடுகிறார்கள். மூலவரே அன்று பவனி வருவதாக ஐதீகம்.
இப்படிப்பட்ட பெருமைக்குரிய கருடன் திருமண பத்திரிகைகளுடன் பல உலகங்களுக்கும்
பறந்தான்.
—தொடரும்
நன்றி - தினமலர்