மனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா? இன்றைக்கு உணவு மாற்றத்தால் வருகிற சர்க்கரை வியாதி, தைராய்டு சிக்கல், ரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படுகிற மன அழுத்தம், மூட்டு வலி… என்றெல்லாம் உடனே பட்டியலிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் கட்டுப்பாடு, பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி ஆகியவற்றால் அவற்றில் இருந்து நிவாரணம் பெறுவது மிக மிகச் சுலபம்!
ஆனால், மனிதனின் மிகப்பெரிய, பயங்கரமான நோய்… பொறாமைதான்! ‘அட… அவன் கார் வாங்கிட்டானே’, ‘இவன் வீடு வாங்கிட்டானே…’, ‘அவங்க பையன் டாக்டருக்குப் படிக்கிறானாமே’, ‘இவங்க பொண்ணு அமெரிக்காவுல எம்.டெக். படிக்கப் போயிருக்காளாமே’… என்று ஒருவர் பொறாமைப்படத் துவங்கிவிட்டால், அதைவிட மோசமான, மளமளவென பரவக்கூடிய வியாதி வேறு எதுவுமில்லை.
உறவுகளிலும் நட்பிலும் இந்தப் பொறாமை குணங்கள் அடிக்கடி வெளிப்படும். அத்தையிடம் அதிகம் பேசினால் சித்திக்குப் பிடிக்காது போகும். சித்தப்பாவைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னால், மாமா முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வார். அம்மாவைப் புகழ்ந்தால் மனைவியும், மனைவியைப் பற்றிப் பெருமையாக ஏதும் சொல்லிவிட்டால் அம்மாவும் வருந்துகிற, கோபப்படுகிற, பொறாமைப்படுகிற கட்டமைப்பில்தானே இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது!
குறிப்பாக, நட்பு வட்டத்திலேயேகூட பொறாமை குணங்கள் அடிக்கடி தலைதூக்குவது உண்டு. ‘அவனும் இவனும் நகமும் சதையும் மாதிரி! எப்பப் பார்த்தாலும் ஒண்ணாத்தான் சுத்துவாங்க; ஒரே தட்டுல தான் சாப்பிடுவாங்க. மத்தவங்களை இவன் கண்டுக்கவே மாட்டான்; அவன் சொன்னதுதான் இவனுக்கு வேத வாக்கு!’ என்று பெருமையாகவும், அதே நேரம் கொஞ்சம் பொறாமையோடும் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கலாம்.
அதனால்தான் தன் நட்பு குறித்து எவரும் பொறாமைப்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக
இருந்தார் ஸ்ரீகிருஷ்ணர். பாண்டவ சகோதரர்களுடன் அத்தனை இணக்கமாகவும் தோழனாகவும் இருந்தபோது, எந்தப் பாகுபாடும் இன்றி அவர்களுடன் வளைய வந்தார் கிருஷ்ணன்.
‘நீ சத்ரியன்; நானோ இடைப்பிள்ளை’ என்றெல்லாம் ஏற்றத்தாழ்வுகளைப் பார்க்கவில்லை எவரும். சத்ரியனாயிற்றே என்று பாண்டவர்கள் சொல்வதை பயந்து கேட்டுக்கொள்ளவில்லை, கண்ணபிரான். ‘இடைப்பிள்ளைதானே இவன்’ என்று உதாசீனப்படுத்துவதுபோல் கண்ணபிரானை நடத்தவில்லை பாண்டவர்கள். பரந்தாமனுக்குப் பாண்டவர்கள் தேவை. காரணம், அவர்களைக் கொண்டுதான் உலகத்து மனிதர்களுக்குப் பாடம் நிகழ்த்தத் திருவுளம் கொண்டார் இறைவன். எனவே, தருமத்தை நிலைநாட்ட, நல்லவர்களின் பக்கமே எப்போதும் இறைவன் இருப்பதை எல்லோர்க்கும் உணர்த்த, பாண்டவர்களுடன் இணக்கமாகவும் நெருக்கமாகவும் இருந்தார் பகவான்.
அதேபோல் பாண்டவர்கள், கிருஷ்ண பரமாத்மாவின் அண்மை தங்களுக்கு மிக அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். துரியோதனாதிக் கூட்டத்தை வெல்வதற்கு வியூகமும் பேரருளும் கொண்ட கிருஷ்ணர், நம்முடன் இருப்பதே ஜெயத்தைத் தரும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இதுதான் நட்பின் மிகப்பெரிய சொத்து. நம்பிக்கையும் நல்ல விஷயங்களுமாகக் கைகோக்கும் இடத்தில், நட்புதான் பிரதான அங்கம் வகிக்கிறது.
நட்பு எங்கே இருக்கிறதோ, அங்கே நம்பிக்கை நிச்சயம் உறுதிப்பட்டிருக்கும். நம்பகத்தன்மையான இடத்தில் பயத்துக்கோ குழப்பத்துக்கோ வேலையே இல்லை. குழப்பமில்லாத மனநிலையில் செய்கிற
எல்லாக் காரியங்களிலும் தெளிவு இருக்கும். தெளிவுடனும் துணிவுடனும் பணி செய்ய… அங்கே வெற்றி நிச்சயம்! மகாபாரத யுத்தத்தில் எத்தனை ஆயுதங்கள் இருந்தாலும், வியூகங்கள் அமைக்கப்பட்டாலும், சூழ்ச்சிகள் செய்யப்பட்டாலும் அத்தனையையும் தவிடு பொடியாக்கினார் கண்ண பரமாத்மா.
காரணம்… இறைவன் பாண்டவர்களின் உற்ற தோழன்! அதனால்தான் கண்ணனை ஸ்நேகிதமாக்கிக்கொள்ள அனைவரும் விரும்புகிறோம்.
திருக்குறளில்கூட, ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்று நட்பின் உயர்வையும், அது தருகிற பலத்தையும் அழகுறச் சொல்லியிருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பார்கள். இதற்கும் கண்ணபிரானே உதாரணம். இந்த உலகில், ‘அவன் அப்படி… இவன் இப்படி…’ என்று ஒருவரிடம் மற்றவர்களைப் பற்றி ஐந்து நிமிடம் பேசிவிட்டு, அதன்பின் அவரைப் பற்றி ஐம்பது குற்றச்சாட்டுகளை மற்ற அனைவரிடமும் சொல்வார்கள். அதுமட்டு மின்றி, ‘இப்படியா செய்வாய்? இவ்வளவு முட்டாள்தனமாகவா நடந்துகொள்வாய்? இதுகூடத் தெரியாதா உனக்கு?’ என்றெல்லாம் எள்ளி நகையாடுவார்கள்.
ஆனால், நண்பன் என்பவன் குற்றங்குறைகளுக் கெல்லாம் அப்பாற்பட்டவன்! ‘ஏம்பா… அவன் கூடவா நட்பு வைச்சிருக்கே? அவன் தப்பானவனாச்சே!’ என்று எவரேனும் சொன்னால், ‘இருந்துட்டுப் போகட்டுமே.. அதனால என்ன? அவன் எனக்கு நண்பன். அவ்வளவு தான்!’ என்று உறுதியுடன் தெரிவிக்கிற வேளையில்… அங்கே தெரிந்துவிடும் நட்பின் அடர்த்தி!
நியாயத்துக்கு, பாண்டவர் கள் மீது கோபம்கொண்டு அவர்களையும் அவர்களின் நட்பையும் தூக்கிப்போட பகவானுக்கு நிறைய காரணங்கள் இருந்தன. ‘சூதாடியவர்களுடன் நான் நட்பாக இருக்கமாட்டேன்’ என்று பகவான் சொல்லியிருக் கலாமே? அப்படிச் சொல்லிப் பிரிந்திருந்தால், ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்பதை பகவான் நமக்கு எப்போது உணர்த்தியிருப்பார்?
”சூதாடுவதே தவறு. அதிலும், திரௌபதியை வைத்து எப்படிச் சூதாடலாம்?’ என்று ஆத்திரப்பட்டாரேயழிய, அதனால் பாண்டவ சகோதரர்களைப் புறக்கணிக்கவில்லை. சபையில், அனைவரின் முன்னே திரௌபதியை மானபங்கப்படுத்தும்போது, ‘தருமா, காப்பாற்று’ என்றோ, ‘அர்ஜுனா, காப்பாற்று’ என்றோ, ‘பீமா, காப்பாற்று’ என்றோ அவள் கூப்பிடவில்லை. ‘கண்ணா, காப்பாற்று!’ என்றுதான் அழைத்தாள். உயிர் காக்கும் தோழனான கண்ணபிரான், தனது மானத்தையும் காத்தருள்வான் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தாள் அவள்.
நட்பு அப்படித்தான். மானத்தைக் காத்து, உயிரைப் பாதுகாத்து, வெற்றியையும் தேடித் தரும். அந்த வெற்றியை அடையும்வரை ஓய்வு ஒழிச்சலின்றிச் செயல் படும். கண்ணபிரானும் அப்படித்தானே செயல்பட்டார்?!
நன்றி - சக்தி விகடன்