கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 42

ஞாயிறு காலையில் இத்தனை மணிக்கு எழுந்திருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மெள்ளக் கண் விழிப்பவர்கள், மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் சொல்வார்கள்… ‘அடடா! நேத்திக்கு சுகமா தூங்கினேன். அடிச்சுப் போட்டாப்ல, நிம்மதியான உறக்கம். ஆனந்தமா இருந்துச்சு தூக்கம்!’வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை எனும் விடுமுறை நாள் என்பது எத்தனை பெரிய சுகம்! சனிக்கிழமை இரவு தூங்கப் போகும்போதே, ‘அப்பாடா… நாளைக்கு அரக்கப்பரக்க எழுந்து ஓடவேணாம்’ என்று நிம்மதியுடன் தூங்கச் செல்வதில் இருந்தே துவங்கி விடுகிறது நிம்மதியும் சந்தோஷமும்.

அது எப்படி? விழித்துக்கொண்டிருக்கும்போதுதானே நமக்கு என்ன நேர்கிறது என்பதை நம்மால் உணர முடியும்? கை, காலை அசைக்காமல், கண்கள் சொருக, உலகமே இடிந்து விழுந்தாலும் காதில் விழாத அளவுக்குத் தூங்குகிறபோது, அப்படியான தூக்கத்தை நிம்மதியான தூக்கம் என்று எப்படி நம்மால் சொல்ல முடிகிறது? அப்படி உணருவது யார்? அந்த சுகமான தூக்கம் என்பது யாரைச் சென்று சேர்ந்து, நிம்மதியைத் தருகிறது?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அது ஆத்மாவின் சந்தோஷம் என்பதை உணரமுடியும். சரீர சந்தோஷம், ஆத்ம சந்தோஷம் என இரண்டு வகை உண்டு. நமக்குப் பிடித்த ஆடைகளை அணிவதும், பிடித்த உணவை உண்பதும், விரும்பிய வாகனத்தில் பயணிப்பதும், சொகுசு மெத்தையில் படுப்பதும் சரீர சந்தோஷங்கள். ஆனால், ஆத்ம சாட்ஷாத்காரத்தை உணர்ந்து தெளிந்து புரிந்து நடப்பதுதான் ஒவ்வொரு மனிதனின் கடமை என்கிறார் பகவான்.

அதனால்தான் அர்ஜுனனுக்கு உரைத்த கீதையில், சரீர அனுபவம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை ஸ்ரீகிருஷ்ணர். கண்ணில் படுகிற, தொட்டு உணரக்கூடிய சரீரம் பற்றி நாமே அறிந்துகொள்வோம் என்று பகவானுக்குத் தெரியாமலா இருக்கும்! ஆகவே, நாமே தெரிந்துகொள்ளக்கூடிய எளிய விஷயத்தைப் புறந்தள்ளிவிட்டு, முக்கியமான விஷயங்களைப் பாடமாக்கி, எளிமையாகத் தந்தார் கிருஷ்ண பரமாத்மா. அவர் சொல்லச் சொல்ல, அர்ஜுனன் மலைத்துப் போனான். வாழ்வின் அத்தனை சூட்சுமங்களையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் ஒருங்கே பயின்றான்; படித்ததைச் செயலாக்கினான்; வெற்றியும் பெற்றான்.

‘குளித்துவிட்டுச் சாப்பிடு’ என்கிறது வேதம். தினமும் நீராடு என்று சொல்லியிருக்கலாம். ஒவ்வொரு வேளையும் சாப்பிடு என்று அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால், அப்படிச் சொல்லாமல், குளித்துவிட்டுச் சாப்பிடு என்று சொல்லியிருக்கிறது வேதம். ஏன்?

உடல் வியர்த்து, உடலில் சோர்வும் அயர்ச்சியும் வந்துவிட்டால், யாரும் சொல்லாமல் நாமே குளிக்கத்தான் போகிறோம். அதேபோல, பசி நேரம் வந்துவிட்டால், வழக்கம்போல் வேளாவேளைக்குச் சாப்பிடத்தான் போகிறோம். ஆகவே, வேதம் குளி என்றும் சொல்லவில்லை; சாப்பிடு என்றும் போதிக்கவில்லை. ‘குளித்துவிட்டுச் சாப்பிடு’ என்று வேறொரு இடத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அப்படிச் செய்வதில்தான் தேக ஆரோக்கியமும் ஆத்ம சுத்தியும் இருக்கிறது என்பதைச் சூசகமாக உணர்த்துகிறது வேதம். அதை எளிமையாக எல்லோருக்கும் உணர்த்தியவர் பரமாத்மா.

சாப்பிடுவது மட்டுமல்ல; வீட்டில் பெண்கள் குளித்த பிறகுதான் அடுப்பைப் பற்றை வைக்கவேண்டும்; அரிசி போன்ற தானியங்களைத் தொடவேண்டும். குளித்துவிட்டுச் சுத்தபத்தமாகச் சமையலறைக்குச் சென்று உணவு தயாரிப்பதே உத்தமம். இன்றைய காலகட்டத்தில், குழந்தை ஏழரை மணிக்கும் கணவர் எட்டு மணிக்கும், மனைவி எட்டரை மணிக்குமாக பள்ளிக்கும் வேலைக்கும் ஓடவேண்டியிருக்கிறது. ஆனாலும் வேதம் அறிவுறுத்துவதை, சான்றோர்கள் உபதேசித்ததை ஒருபோதும் மீறக்கூடாது.
வேதத்தின் நாயகனும் அகில உலகத்தின் தலைவனாகவும் திகழ்கிற பரம்பொருள், நண்பனாகவும் தூதனாகவும் இருந்து எப்படியெல்லாம் உலகுக்கு அருள்பாலித்தார் என்று பார்த்தோம். இப்போது வேதத்தின் மூலமாகவும் கீதையின் வாயிலாகவும் உபதேசித்து, நமக்கெல்லாம் ஆச்சார்ய புருஷனாகவும் திகழ்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஏழைக் குசேலனுக்கு நண்பனாக இருந்து, அவனுடன் சேர்ந்து அவல் உண்டார். அவனுடைய குடிசையை மாளிகையாக மாற்றி, நாயகனாகவும் அருள்பாலித்தார். அர்ஜுனனுக்குச் சொல்கிற சாக்கில், கீதையை உலகுக்கு எடுத்துரைத்து தன்னை ஆச்சார்யனாக வெளிப்படுத்தி, பாடங்கள் தந்து வழிநடத்தினார். பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிக்கொண்டுவிட்டால் போதும்… இந்த ஜன்மத்தை இனிதே நிறைவேற்றித் தந்து அருள்பாலிப்பார் பரமாத்மா.

”கண்ணா… எனக்கு ஒரு ஆசை! ஜகத்துக்கே நாதன் என்கிறாய்; உலகமே உன் சொத்து என்று சொல்கிறாய். புல்லாங்குழலும் சிரசில் மயில்தோகையும் கொண்டு உன் அழகுத் திருமுகத்தைக் காட்டுகிறாய். ஆனால், ஜகத்துக்கே நாதனாகத் திகழும் உன் திருக்கோலத்தைக் காண வேண்டும். அதுவே என் ஆசை. எனக்கு அருள்வாயா?” என்று அர்ஜுனன் கேட்டான்.

”அவ்வளவுதானே…” என்று சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு, பூமிக்கும் வானுக்குமாக விஸ்வரூபம் எடுத்து நின்றார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அசுரர்களும் தேவர்களும், முனிவர்களும் ஞானிகளும், பெண்களும் குழந்தைகளும், மனிதர்களும் மரங்களும் என உலகில் உள்ள அனைத்துமே அவன் வாய்க்குள் வந்து விழுந்தன. பிறகு, அந்த உயிர்கள் அவனில் இருந்து வெளிவந்து உலகில் விழுந்தன. இதைப் பார்த்து பிரமித்து நின்றான் அர்ஜுனன். ”என் ஆச்சார்யரே… என்னை ஆளும் பரம்பொருளே! உம்மை வணங்குகிறேன்” என்று சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான்.

”எனக்கு நண்பனாக இருந்து தோள் கொடுத்தாய். நாயகனாக இருந்து வெற்றிக்கு வியூகம் அமைத்தாய். தூதனாகச் சென்று அத்தனை காரியங்களிலும் ஈடுபட்டாய். ஆச்சார்யனாக இருந்து கீதோபதேசத்தை வழங்கி, புத்தி தெளிய வைத்தாய். ஆத்மாவைப் புரிய வைத்தவனும் நீயே! பரமாத்மாவான உன்னைச் சரணடைதலே மோட்சத்துக்கு எளிய வழி என்று எடுத்துரைத்தவனும் நீயே! உன்னை வணங்கித் தொழுகிறேன், கண்ணா… என்னை ஆட்கொண்டு அருள்பாலிப்பாயாக!” என்று கண்ணீர் மல்கக் கை கூப்பி, நமஸ்கரித்தான் அர்ஜுனன்.

கண்ணபிரான், எல்லாமானவன்! எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவனை ஒருகணம் நினைத்தால் போதும்… ஏதேனும் ஒரு ரூபத்தில், ஓடோடி வந்து நம்மைக் காப்பான் என்பது சத்தியவாக்கு.

(அடுத்தது நிறைவுப் பகுதி) 

நன்றி - சக்தி விகடன் 
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை