ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 4


பெருமானின் உடம்பில் சத்வமயம் மட்டுமே நிறைந்திருக்கும். குணங்கள் மூன்று. அவை சத்வம், ரஜஸ், தமோ. சத்வம் என்றால் தெளிவு, ஞானம்...அதாவது போதுமென்ற நிலை. ரஜஸ் என்றால் வேணும் வேணும் என்ற நிலை. கோபமும் இதில் அடங்கும். தமோ என்றால் சோம்பல், தூக்கம், மயக்கம்.

மனித உடலில் ரஜஸ், தமோ குணங்களே நிறைந்திருக்கும். அப்படியானால் பகவானைப் போல நானும் சத்வமயமாக விளங்க வேண்டும் என நினைத்தால் என்ன செய்ய வேண்டும். படிக்காரம் போட்டாக வேண்டும். என்ன படிக்காரம்? அவனது நினைவு என்னும் படிக்காரம். அவனையே ஸ்மரிக்க வேண்டும் என்ற படிக்காரம். எதை நினைக்கிறோமோ அது தானே நடக்கும்! அதுபோல, பகவானை நினைக்க நினைக்க சத்வகுணம் தானாக வந்து விடும். 

இது வெந்நீருடன் தண்ணீரைக் கலப்பது போல. வெந்நீரில் தண்ணீரைக் கலந்தால் வெந்நீர் "தண்' (குளிர்ச்சி) நீர் ஆகி விடும். சத்வகுணம் கொண்ட பகவானுடன் நம் மனது கலக்க கலக்க அந்த குணம் தானாக நமக்கு வந்துவிடும். உலக வழக்கில் கூட நமக்கு நகை, பகவானுக்கு திருவாபரணம். நமக்கு வேட்டி, புடவை. அவனுக்கு வஸ்திரம். அவனுக்குஉரிய எல்லாமே உயர்ந்ததாக உள்ளது.

""நான் எனக்கேற்ற உயர்ந்த திருமேனியை எடுத்து பூமியில் பிறக்கிறேன்,'' என பகவான் கீதையில் சொல்கிறான். 

அதனால் தான் ராமராகவும், கண்ணனாகவும் அவன் பிறந்தான். இதற்கு ஆதாரமாக ராமாயணம், மகாபாரதம் உள்ளது. 

ஆனால் மனிதன் கர்மத்தின் வழியாகப் பிறக்கிறான். நமது உடல் சுகதுக்கத்தை அனுபவிக்கும் கருவி.
அடியார்களின் மனதை ஒடுக்கி அவர்களுக்கு உய்வைக் கொடுப்பது பெருமானின் உருவம்.

மனதை ஒடுக்க வேண்டுமானால், உடல் அதற்கேற்ற வகையில் இருக்க வேண்டும். உதாரணமாக, சாப்பிட்டு முடித்ததும் ஏதோ ஒரு மயக்கம் வரும். காரணம், மூளைக்கு போகும் ரத்தம் குறையும். பசியோடு இருந்தால் தான் நான் சொல்கிற உபன்யாசம் புரியும். அதனால் தான், பூஜையெல்லாம் முடிந்த பிறகு பிரசாதம் கொடுக்கிறார்கள். இவ்வாறு மனதையும், உடலையும் ஒடுக்கி அவனது உருவத்தை நினையுங்கள். 

அடியாரை ரட்சிக்கவே பகவான் திருமேனி எடுத்துள்ளார். நமது உடம்பு செயற்கை. பகவானின் உடம்பு இயற்கை. கர்மத்தால் நமக்கு உடம்பு வந்தது. இந்த உடம்பு பஞ்சபூதத்தால் ஆனது. பகவானோ பஞ்சசக்தி படைத்தவர். நம் உடம்பை நினைத்தால் துக்கம். அவர் உருவத்தை நினைத்தால் ஆனந்தம். நம் உடம்பு நெருப்புக்கு இரையாகப் போவது. பகவானுக்கு இப்படி இல்லை. அவர் வராஹம், நரசிம்மம், ராமன், கண்ணன் என வந்தார். அதேதிருமேனியோடு திரும்பிப் போனார். அடியாருக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைக்கும் போது, அவர் நினைக்கும் வடிவத்தில் இங்கே வருவார். அதையே நாம் கோயில்களில் பார்க்கிறோம். ஸ்ரீவைகுண்ட திவ்ய சம்ஸ்தானத்தைக் கூட அவர் தன்னுடன் எடுத்து வந்தார்.

சரி...பகவானுக்கு உருவம் இருக்கிறது என்றால், ஏதாவது ஒரே உருவத்துடன் வர வேண்டியது தானே! பல உருவங்கள் எதற்கு என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு உணவு பிடிக்கும். ரவை, சர்க்கரை, நெய் இது மாதிரி தனித்தனி பொருட்கள்.... ஒருவருக்கு கேசரி பிடிக்கும். இன்னொருவருக்கு மைசூர்பாகு, அடுத்தவருக்கு பாதுஷா, ஒருவருக்கு தேங்காய் பர்பி.. பொருட்கள் ஒன்று தான். ஆனால், செய்கிற பட்சணத்தின் உருவமும், சுவையும் மாறுபடுகிறது. அதுபோல, ஒருவனாகிய பகவான் ஒருவனே வைகுண்டத்தில் அமர்ந்த நிலையில் வைகுண்டநாதன், திருப்பாற்கடலில் சயன கோலம், பூலோகத்தில் இருந்தவர்களுக் காக விபவம் (அவதாரங்கள்) என பல வடிவங்கள் எடுத்தான்.

ராமனாக வந்து 11 ஆயிரம் ஆண்டுகள் இருந்தான். கண்ணனாக வந்து 100 ஆண்டுகள் இருந்தான். நரசிம்மனாக ஒரு மணி நேரமே வந்தான். நம் தேசத்தில் அன்று இருந்தவர்களுக்காக இந்த அவதாரங்கள் நிகழ்ந்தன. அதை இன்றும் நாம் பார்க்க வேண்டாமா! அதனால் தான் உருவமாக கோயில்களில் இருக்கிறான். அதையே அகோபிலம், காஞ்சிபுரம்...ஏன் நமது ஊர்களில் கூட அவன் நரசிம்மனாக இருக்கிறான்.

இதையெல்லாம் நான் நம்பமாட்டேன், எனக்கு நிஜ நரசிம்மனைப் பார்த்தாக வேண்டும் என்று யாராவது சொன்னால் அது சாத்தியமாகிற ஒன்றா! ஒருவேளை அது சாத்தியமாகிறதென்றே வைத்துக் கொள்வோம். கோயிலில் போனதும், நரசிம்மன் சந்நிதானத்தில் தன் நிஜ உருவைக் காட்டுவதாக வைத்துக் கொள்வோம். அதைப் பார்க்கிற சக்தியும், அவனது உக்ரத்தை தாங்குகிற சக்தியும் நமக்குண்டா? 

பகவான், என்ன நமக்கு சாதாரணமாக பிடிபடுகிறவரா என்ன!

அவர் அர்ச்சாவதாரமாக (சிலை வடிவம்) பல திருத்தலங்களில் இருக்கிறார் என்பது மட்டுமல்ல, நம் மனதின் உள்ளேயே இருக்கிறார். அப்படியானால், அவரை ஏன் நான் பார்க்க முடியவில்லை என்றால், அவர் கிட்டே இருக்க இருக்க நமக்கு பிடிபடவே மாட்டார். 

இன்னொரு கேள்வி..

கோயிலில் போய் தான் பகவானைத் தரிசிக்க வேண்டுமா! வீட்டில் போதாதா என்பது பலர் மனதில் எழுகிறது.
வீட்டில் குளித்து விட்டும் சமைக்கலாம். குளிக்காமலும் சமைக்கலாம். எப்படி சமைத்தாலும் உணவு தயாராகி விடும். ஆனால், குளித்து விட்டு பகவானை நினைத்தபடியே சமைத்தால் அந்த உணவு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எங்கே தூங்கினாலும் தூங்கலாம். ஆனால், பெட்ரூமில் படுத்தால் தொந்தரவில்லாமல் நன்றாகத் தூங்கலாம். கோயில்களில் வைகானஸ அல்லது பாஞ்சராத்ர ஆகமப்படி பகவானை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 

அங்கே பல ஆச்சார்யார்களின் பாதம் பட்டிருக்கும். அத்தகைய இடத்தில் பகவானை வணங்குவது மிகவும் உயர்ந்தது. புண்ணியம் கிடைக்கும். வீட்டில் பிரார்த்தனை செய்யும் போது இவ்வாறு முடியுமா! பல தொந்தரவுகள் இருக்கும். இப்போது கோயிலுக்குப் போனால் கூட கைபேசி சிணுங்குகிறது என்பது வேறு விஷயம்.

கோயிலில் பகவானை வணங்குவதற்கும், வீட்டில் வணங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்க ஒரு சிறுசம்பவத்தை உதாரணமாக சொல்லப் போகிறேன்.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை