ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 5


வேத வியாசர் மகாபாரதம் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது சரஸ்வதி நதி பேரிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது. இவர் கதை சொல்வதற்கு சிரமமாக இருந்தது. "கீழே போ' என்று சொல்லி விட்டார். பத்ரிகாசிரமத்தில் கீழே போனவள், திரிவேணி சங்கமத்தில் அந்தர்வாகினியாக கலக்கிறாள். ஒரு செயலைச் செய்யும் போது, இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பது போலவே, கடவுள் வழிபாடும் இடையூறின்றி இருக்க கோயிலுக்குப் போக வேண்டும்.

குளம், குட்டை, ஏரி. ஆறு என எங்கு தண்ணீர் இருக்கிறதோ, அங்கு தான் தண்ணீர் எடுக்க முடியும். அதுபோல், எங்கு கோயில் உள்ளதோ அங்கு தான் "அருள்' என்னும் தண்ணீர் கிடைக்கும். பகவானுக்கு விக்ரஹநிலை மிக உயர்ந்த நிலை. எப்போது வேண்டுமானாலும் இதை வணங்கப் போகலாம். எப்போது வேண்டுமானாலும், அருளாகிய தண்ணீரைப் பெறலாம். நைமிசாரண்யம், திருவேங்கடம் (திருப்பதி), வானுமாமலை என பகவான் பல இடங்களில் விக்ரஹ நிலையில் காட்சி தருகிறான். வேறு நிலையில், அவன் காட்சி தரமாட்டானா என்றால் அதுவும் தருவான்.

அந்தணர்களுக்கெல்லாம் நெருப்பில் காட்சி தருவான். யோகிகளுக்கெல்லாம் உள்ளத்தில் காட்சியளிப்பான். இது மட்டுமல்ல... எங்கும் அவர் இருப்பார் என்று ஒரு கட்சி சொல்லும். ஆனால், நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு பிரதிமை (உருவம்) வடிவில் காட்சி தருகிறான். 

சரி..."கடவுளை நீ பார்த்திருக்கிறாயா' என்று யாராவது நம்மிடம் கேட்டால், உருவத்தை மனதில் கொண்டு, "பார்த்திருக்கிறேன்' என்று சொல்லலாமா? என்றால் "ஆம்' என அடித்துச் சொல்ல வேண்டும். காரணம், அதனுள் இருப்பவன் நிஜபகவானே.

"உருவம் நிஜமென்றால், அதை யாராவது கொள்ளை அடித்து விட்டுப் போகிறார்களே! அது உயிருள்ள தெய்வம் என்றால், அவர்களைத் தண்டிக்க வேண்டியது தானே! அல்லது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானே' என்று அடுத்து சிலர் கேள்வி கேட்பார்கள். இதை கரிக்கட்டையால் சுவரில் எழுதுகிறவர்களும் உண்டு.

நம்மிடம் யாரும் கேள்வி கேட்காதவரை தெம்பாக இருப்போம். கேட்டு விட்டால் பயந்து விடுவோம்.
பகவானின் அர்ச்சா வடிவம் (உருவம்) தண்டிக்க வந்ததல்ல. தண்டனை ஏதும் இல்லாமல் கருணையோடு நம்மைக் காண வந்திருக்கிற வடிவம். அவன் நம் குற்றத்தைப் பார்ப்பதில்லை. அது நம்மைக் காக்கத்தான் வந்துள்ளதே தவிர, தன்னைத்தானே காத்துக் கொள்ளாது. ஒரு அலுவலகம் என இருந்தால் சட்டதிட்டம் வைத்துக் கொள்ளலாம். பகவானும் சட்டதிட்டம் வகுத்துக்கொண்டால் நம்மால் தாங்க முடியுமா? குற்றம் பாராமல் உள்ளார். இழுத்த இழுப்புக்கு வந்துள்ளார். அவர் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு வினாடி நினைத்தால் போதும். இங்கு யாராலும் இருக்க முடியாது.

பிரதமர் நம் ஊருக்கு வந்தால், ஜில்லா அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்வர். பரபரப்புடன் இருப்பார். அவர் வந்து நிகழ்ச்சியை முடித்து விட்டுப் போன பிறகு தான் மூச்சு விடுவர். அங்கே அவரவருக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் அவரவரும் நிற்க முடியும். மீறிப்போனால், வெளியே தூக்கிப் போட்டு விடுவர். 

பகவானும், சட்டதிட்டம் என சொல்லிக்கொண்டு இப்படி செய்தால் நம்மால் தாங்க முடியுமா! அவர் கருணையின் வடிவாக உள்ளதால் தான், நம்மால் இங்கே இருக்கவாவது முடிகிறது. அந்த தெய்வத்தை புளியோதரை, புஷ்பம் என சமர்ப்பித்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். பால், பழமெல்லாம் அது சாப்பிடுமா? என்றால், நிச்சயமாக சாப்பிடும். வாயால் என்ன! மூக்கால் கூட சாப்பிடும். இதற்கெல்லாம் ஆதாரமிருக்கிறது. தொண்டைமான் சக்கரவர்த்தி சீனிவாசனுடன் பேசியுள்ளார். திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் பெருமாள் ஆற்றுமணலைப் பொன்னாக்கி அளித்துள்ளார். காஞ்சிப் பெருமாள் திருக்கச்சி
நம்பியுடன் பேசியுள்ளார். இவையெல்லாம் உருவவடிவில் பகவான் நம்மோடு உறவாடுகிறான் என்பதற்கான சான்றுகள் தானே! 

அப்படியானால், அவன் நம்முன் நேரடியாகத் தோன்ற வேண்டியது தானே என்று ஒரு கேள்வி எழுகிறது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.அவன் நரசிம்மமாக நம் முன்னால் வந்தால், நிலைமை என்னாகும்? நாம் என்ன செய்தாலும், போனால் போகிறது என்று தானே விட்டு வைத்துள்ளார்! வேண்டாமென அவர் அடங்கி இருக்கிறார். அதுதான் அவரது பெருமை. "நாம் அவருக்கு பிரசாதம் செய்தாக வேண்டுமா?' என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

அவர் பெயரை வைத்து நாம் சாப்பிடத்தான் பிரசாதம். லட்டு, சர்க்கரைப் பொங்கல் என பிரசாதம் வைப்பது என்பது அவரவர் விருப்பம். நம் விருப்பத்தைக் கூட தன் விருப்பமாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
விதுரர் வீட்டுக்கு கண்ணன் வந்தான். அங்கே கறியமுது ஏதும் இல்லை, தாம்பூலம் இல்லை. பழம் மட்டுமே இருக்கிறது. அதையும், பகவான் முகத்தைப் பார்த்தபடியே உறித்துக் கொடுக்கிறார். எப்படி? 

பகவானைக் கண்ட பரவச பதட்டத்தில், என்ன செய்கிறோம் என்ற உணர்வின்றி, பழத்தைக் கீழே போட்டு விட்டு தோலை அவரிடம் கொடுக்கிறார். அதையும் அவன் விருப்பமாக ஏற்றுக்கொண்டான். ஆக, பகவான் தனக்கு உணவா பெரிதென நினைத்தான்! பக்தனின் பதட்டத்தையும், பக்தியையும், தூய உள்ளத்தையும் அல்லவா உணவாகக் கொண்டான்! 

தினமும் அரைமணி நேரமாவது பக்தியுடன் முறைப்படி வணங்குங்கள். பெண்கள் இதை அவசியம் செய்ய வேண்டும். விளக்கை கை ஏற்றட்டும். நாம சங்கீர்த்தனத்தை வாய் சொல்லட்டும். மனம் எப்போதும் அவனை நினைக்கட்டும். உங்கள் வீட்டிலுள்ள பகவானின் உருவத்தை உங்கள் குழந்தை போல் கவனித்துக் கொள்ளுங்கள். குகன் பகவானுக்கு தேன், தினைமாவு கொடுத்தான். சபரி கடித்த பழத்தைக் கொடுத்தாள். அன்போடு எதைக்கொடுத்தாலும் அவன் பெற்றுக் கொள்கிறான்.ஆண்டாள் என்ன கொடுத்தாள்!

"தூமலர் துவித்தொழுது' என்று பாவையில் பாடுகிறாள். அவள்அளித்தது தூயமலர்கள். சரி...உருவத்திற்கு சக்தியுண்டு என்கிறீர்களே! எத்தனையோ கோயில்கள் மூடிக்கிடக்கிறதே! அங்கே பகவானின் சாந்நித்யம் குறைந்து போகுமா?

இந்தக் கேள்விக்கு விடை...காத்திருங்கள்!

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை