கோயில்கள் எவ்வளவு காலம் மூடிக் கிடந்தாலும், அங்கே தெய்வங்களின் சாந்நித்யம் குறைவதே கிடையாது.
ஸ்ரீரங்கம், நாராயணபுரத்தில் எல்லாம் பகவான் விக்ரகங்கள் புதைந்து கிடந்தன. அங்கே சாந்நித்யம் எப்படியிருக்கிறது என்று சொல்லவே தேவையில்லை.
டில்லி பாதுஷா செல்லப்பிள்ளையை (நாராயணனின் சிலை) எடுத்துச் சென்று விட்டார். ராமானுஜர் அவரை "வா' என்று அழைத்ததும், வந்தாரா இல்லையா! இந்த நிகழ்ச்சிகளெல்லாம் எழுதப்பட்ட வரலாற்று சான்றுகள்! ஆக, அர்ச்சாவதாரமான பெருமாளை வழிபடுங்கள். இந்த வழியைப் பின்பற்றிக் கொண்டு முக்தியடையப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவும் சொன்னேன்.
பகவானைப் பொறுத்தவரை நைவேத்யம், பூஜை என எது குறைந்தாலும், அவருக்கு எந்தக்குறைவும் வந்துவிடாது.
சரி...அர்ச்சாவதாரமான சிலையை வணங்க நாங்கள் கோயிலுக்குப் போகத்தான் செய்கிறோம். அங்கே 5 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை டிக்கெட் வாங்கிக் கொண்டு சுவாமியைத் தரிசிக்க அனுப்புகிறார்கள். தர்மதரிசனம் என்றால் ஒருநாள் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது.
தன் பக்தன் கால்கடுக்க நின்றால் தான் தெய்வம் தரிசனம் தருமா என்ன!
ஒன்று செய்யலாம்... 250 ரூபாய் டிக்கட் வாங்குபவன் மட்டும் தான் அதிக பக்தி கொண்டவன் என போர்டு மாட்டலாம் போல!
தேவஸ்தானத்தார் ஏன் இப்படி செய்கிறார்கள்? கோயில்கள் பணம் புழங்கும் இடமாக உள்ளது. இவ்வாறு பணம் வாங்குவதில் சாஸ்திரத்துக்கு சம்மதமும் இல்லை. இது மிகவும் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது.
கோயில்களை பராமரிக்க பணமில்லை என்றால், பிற வகைகளில் பணம் வருவதற்கு உரிய முயற்சியை எடுக்க வேண்டுமே தவிர, பக்தனிடம் வசூலிக்கக் கூடாது. வடக்கே உள்ள கோயில்களில் இந்த பேச்சுக்கே இடமில்லை. அங்கே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி எல்லாரும் வரிசையில் நிற்க வேண்டும். நடை திறந்ததும் பணமின்றி தரிசனம் செய்து விட்டு வருகிறார்கள். பொது தரிசனம், பணதரிசனம் என்ற பேச்சுக்கு இங்கே இடமில்லை.
பணமுள்ளவன் என்ன செய்கிறான்? அவசர வேலை இருப்பதாகச் சொல்லி, டிக்கெட்டை எடுத்து வேக வேகமாக தரிசனம் செய்கிறான். இது கூடாது. தரிசனத்துக்காக எல்லாருமே காத்திருக்கத்தான் வேண்டும். காசு கொடுத்தவர்கள் முன்னால் போய் சுவாமியை மறைத்திருக்க மற்றவர்கள் பார்க்கும்படியான நிலை இருக்காது.
ஒருவர் சகஸ்ரநாமம் (1000) சொல்லிக் கொண்டிருந்தார். "சொல்லும்போதே, 980 ஆயிடுத்தா...' என்று இடைக்கேள்வி வேறு! அவ்வளவு அவசரம்! எப்போது முடியுமென! இந்த அவசர பிரார்த்தனையால் எந்த பயனும் இல்லை.
துவாரகையில் காலை 5.30க்கு சந்நிதி திறக்கிறார்கள். மக்கள் ஏராளமாகக் காத்து நிற்கிறார்கள். இங்கே வி.ஐ.பி., தரிசனமெல்லாம் கிடையாது. எல்லாருக்கும் ஒரே வரிசை. 20 நிமிடம் ஏராளமானோர் தரிசனம் செய்வார்கள். உடனே திரை போட்டு விடுவார்கள். ஏன் தெரியுமா! குழந்தை கண்ணனின் கால் வலிக்குமாம்! எவ்வளவு நேரம் தான் அவன் கால்வலிக்க நின்று தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பான்! அவனை அங்குள்ளவர்கள் சிலையாகப் பார்ப்பதில்லை. தெய்வமாகவே பார்க்கிறார்கள். ஆனால், திருப்பதி பெருமாள் என்ன செய்கிறார்! காலை முதல் இரவு வரை நடையே அடைப்பதில்லை.
ஏன்..நம்ம ஊர் பெருமாள் புரட்டாசி சனியன்று ஓய்வே இல்லாமல், காலை முதல் இரவு வரை தொடர்ந்து நின்று கொண்டிருப்பார். இவ்வாறு மரபுகளை மாற்றுவது ஏற்புடையதல்ல. எந்த விதத்திலும் நியாயமும் இல்லை. ஐந்து வேளை நைவேத்யம் என்றால், அந்தந்த வேளைகளில் தான் செய்ய வேண்டும். ஐந்து வேளை நைவேத்யத்தையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடாது. பணம், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஆகமத்தை மாற்றக்கூடாது. ஆனால், கூட்டம் நிறைய வருகிறதே என்ன செய்ய என பக்தன்
தலையில் தப்பைக் கட்டி விட்டனர். இப்படியெல்லாம் செய்து, ஒழுங்காய் இருக்கும் பகவானை சீண்டி பார்க்கக்கூடாது.
அடுத்து இன்னொரு பிரச்னைக்குள் போவோம்.
பகவான் மீது 1008 குடம் பாலை ஊற்றலாமா? பகவான் நம்மிடம் இப்படி எதையும் கேட்பதில்லை.
இருந்தாலும், இப்படி ஊற்றி விட்டு, "நான் உனக்கு இவ்வளவு சிறப்பு செய்துள்ளேன். எனக்கு அதைக்கொடு,' 'என்று பேரம் பேசுகிறார்கள். நாம் பிறந்தததன் நோக்கம் என்ன! மீண்டும் அவனை அடைய வேண்டும் என்பது தான்! முக்தி என்பது இங்கே மறக்கடிக்கப்பட்டு, ஏதோ ஒன்றை அவனிடம் கேட்கிறான்.
பகவான் என்ன செய்கிறான்! "இவன் எதையோ செய்துவிட்டு, எதையோ கேட்கிறானே! சரி...ஏதோ கொடுப்போம் என சின்ன சின்னதாய் கொடுப்பான். அதாவது, அழுகிற குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து சமாதானம் செய்வது போல! இவன் எப்போது திருந்தப் போகிறான்! அழியா இன்பமான முக்தியை எப்போது கேட்டுப் பெறப் போகிறான் என அவன் காத்திருக்கிறான்.
அவ்வாறு கேட்டால், மலர்ந்த முகத்தோடு தன்னையே கொடுப்பான். ஒரு சிலர் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வதாக என்ன செய்கிறார்கள் தெரியுமா? பாவம் செய்து சேர்த்த பணத்தை பெருமாள் உண்டியலில் கொண்டு சேர்க்கிறார்கள். தன் பாவத்தில், பகவானையும் பங்குக்கு அழைக்கிறார்கள். இது மிகப்பெரிய குற்றம்.
பிராயச்சித்தம் என்றால் என்ன தெரியுமா?
ஆத்மா ஏற்கனவே செய்த பழைய பாவங்களால் நொந்து போயுள்ளது. இப்போது, இதுபோன்ற தவறுகளைச் செய்து புது புது பாவங்களையும் சேர்த்துக் கொள்கிறது. இவ்வாறு இல்லாமல், தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பெயர் தான் பிராயச்சித்தம்.
சரி... பாவம் செய்யக்கூடாது என்கிறீர்களே! பாவங்களை எப்படி தவிர்க்க வேண்டும்? புண்ணியச் செயல்களை ஏன் செய்ய வேண்டும்?
- மேலும் ஆனந்திப்போம்
நன்றி - தினமலர்