ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 7

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 7


பகவானுக்கு பல ரூபம். அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டினார். அதைப் பார்த்ததும், அவனுக்கு பேரானந்தம்.. மற்றொரு பக்கம் பயம்...காரணம், இப்படி ஒரு பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்ததால்...!

கீதை 11ம் அத்தியாயத்தில் அர்ஜுனனனே சொல்லும் ஸ்லோகம் அது. அதன் பொருளைக் கேளுங்கள்.
""உலகனைத்திலும் நிகரற்றவரே! நீரே தந்தையாய் குருவாய் உள்ளீர். உம்மை வணங்குகிறேன். உமக்கு சமமானவர் யாரும் இல்லை. உம்மை விட உயர்ந்தவனும் இருக்கமாட்டான்,'' என்று அர்ஜுனன் விஸ்வரூப பகவானை வணங்குகிறான். அவனுடைய இப்போதைய நிலை என்ன தெரியுமா?

இதுவரை பார்க்காததைப் பார்ப்பதால் ஆனந்தமயம். கோரமாக இருக்கிறது என்பதால் நடுக்கம். உடனே மீண்டும் சொல்கிறான்.

""பகவானே! புன்சிரிப்பு, பீதாம்பரம், சங்கு, சக்கரம், சிறுத்த இடை, பருத்த நான்கு தோளோடு மீண்டும் காட்சி தா! எனக்கு தோழனாய், கேசவனாய் காட்சி தா'' என்கிறான்.

""இது நன்றாக இல்லையா அர்ஜுனா?'' என்கிறான் கண்ணன்.

எண்ணிறந்த தோள், திருவடி, கைகள், ஆயிரமாயிரம் கண், முகம், எங்குமிருக்கும் உருவமாய் இருக்கிறனே! இது பிடிக்கவில்லையா!'' என்று கண்ணன் எதிர்க்கேள்வி போடுகிறான்.

""கிருஷ்ணா! உன் வாய்க்குள் எல்லாரும் போகிறார்கள், பின்பு உமிழ்கிறாய், இதைப் பார்க்க முடியவில்லை. ஆனால், நாங்களும் ஒருநாள் அழிவோம் என்பது எனக்கு தெரிகிறது. நாங்கள் மட்டுமல்ல, எங்கள் பேரன், பேத்திகளும் அழியத்தான் போகிறார்கள்,'' என்றான் அர்ஜுனன்.

"உலகமே என்பேரில்' என்று சொல்லவே இந்த விஸ்வரூபத்தை எடுத்தான் கண்ணன். எல்லாம் முடியும், எல்லாம் பிறக்கும்! அது எல்லாம் அவனது இந்த உருவத்துக்குள் தான். முதல், நடு, முடிவில்லாத உருவம்...நாம் இதை நாடகக்காட்சியில் வேண்டுமானால் பார்த்திருப்போம். அங்கே அந்த உருவத்தை ஓரளவே காட்ட முடியும். திரைப்படங்களில் 3டி, 4டி, 5டி அளவுக்கு  வேண்டுமானால் காட்டலாம்.
ஆனால், அர்ஜுனன் கண்டது எங்கே பார்த்தாலும் கண்ணன் மயம்! ஒரு அளவுக்கு உட்படாமல் உயர்ந்தும் பரந்தும் நின்றான். அந்தப் புலன்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. சரி...

இப்படி ஒரு உருவத்தைக் காட்டுகிறானே...அதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டாமா?

""அந்தக் கண்ணனை நான் பால், முத்து, பவளம், தேன் என்று எந்தப்பெயர் கொண்டு அழைப்பேன்,' 'என்கிறார்
நம்மாழ்வார். அவனை நீரா, நிலமா என்று கேட்கிறார்.

ஒரு மண்டபம் நிறைய மாம்பழத்தைக் கொட்டுவோம். ஒரு குழந்தையை அழைத்து அதில் ஒன்றை எடு என்றால், அதில் எது சிறந்தது என்று தேடும். ஆழ்வாரும் அதே போல் சிறந்த பெயர் ஒன்றைத் தேடுகிறார். ஆனால், அவனது பெரிய உருவத்தைப் பார்க்கும்போது, எந்தப் பெயரால் அழைப்பதென புரியவில்லை. அதாவது, அந்த உருவம் நம் மனதுக்கு, வாக்குக்கு கட்டுப்படாதது என அர்த்தமாகிறது.

இந்த பிரபஞ்சத்தில் பத்து, பதினைந்து சூரியன்கள் உள்ளன. பல லட்சம் நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால், அவை வெகு தொலைவில் இருப்பதால் அவற்றின் வெளிச்சம் நம்மை அடையவில்லை என்று விஞ்ஞானி சொல்கிறான். வெளிச்சம் நம்மை அடையவில்லை என்பதற்காக, வானத்தில் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லி விட முடியுமா! அதுபோல, பிரம்மத்தின் (இறைவன்) உருவமும் நாம் அறிய முடியாத ஒன்றாக இருக்கிறது என்று மெய்ஞானிகள் சொல்கிறார்கள். நட்சத்திரங்கள் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வது போல, இறை உருவமும் இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். விஞ்ஞானத்துக்கு ஒரு நியாயம், மெய்ஞானத்துக்கு ஒரு நியாயமா?

நாம் பேசுமிடங்களில் ஒலிபெருக்கி வைக்கிறார்கள். அதன் ஒலி வெகுதூரத்துக்கு கேட்கிறது. இதை யாரோ ஒருவர் கண்டுபிடித்தார்? இதை நாங்கள் நம்பமாட்டோம் என்று சொல்கிறோமா? வாட்சைப் பயன்படுத்துகிறோம். 

இதைக் கண்டுபிடித்தவர் யாரானாலும் பரவாயில்லை. இது காட்டும் மணியை நம்புகிறேன் என்று சொல்கிறோமா இல்லையா! 

இப்படி விஞ்ஞானத்தை நம்புவது போல, மெய்ஞானத்தையும் நம்ப வேண்டும். நாம் வாழும் காலம் மிக குறுகியது. அதை வீணாக்கக்கூடாது. இருக்கிற காலத்துக்குள் மெய்ஞானம் சொல்வதை அப்படியே கடைபிடிக்க வேண்டும்.

ஆனால், கோயிலுக்குள் போனால், வெளிஅரசியலை விட கோயில் அரசியல் மிகப்பெரிதாக இருக்கிறது. பெருமாள் முன்னேயே சண்டை போடுகிறார்கள். அர்ச்சகர்கள், பக்தர், நிர்வாகிகள் என்று ஏக சண்டை...அதே இடத்திற்கு ஒரு பிரதமரோ, முதல்வரோ வந்திருந்தால் சண்டை போடுகிறார்களா! அமைதியாக இருக்கிறார்கள், சண்டை போடவும் முடியாது. 

அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பு பெருமாளுக்கு இல்லை.

பெருமாள் கடவுள் என்றாலும் கடவுள் என்ற மதிப்பு பக்தனிடம் வரவில்லை. அங்கே வருகிற ஆட்சியாளர்களுக்கு ஐந்தாண்டு தான் ஆதிக்கம். அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட காலம் பதவி. ஆனால், பகவான் ஆட்சியோ அனாதி காலம். அதற்கு எல்லையில்லை. பெருமாள் முன் போனவுடனேயே நமக்கு அந்த புத்தி வந்து விட வேண்டும். எல்லையில்லா ஆட்சியை உடைய இறைவன் முன் சண்டை சச்சரவு கூடாது என்ற மனநிலை வந்து விட வேண்டும். ராமனும், கண்ணனும் பிறந்த போது, நாமும் பிறந்திருந்தோம். புல்லாகவோ, பூண்டாகவோ, ஏன்...இரண்யகசிபுவாகவோ பிறந்திருக்கலாம். ஆனால், ஒன்று நிச்சயம்...பிரகலாதனாக மட்டும் பிறந்திருக்க மாட்டோம். அப்படியானால் தான், முக்தி பெற்றிருப்போமே! 

அவர்களையெல்லாம் தரிசித்தும் முக்தியடையாமல் விட்டுவிட்டோம். ஆனால், இன்று அதே நரசிம்மனை தரிசிக்க கோயில் இருக்கிறது. கோயிலுக்குப் போனால் நான் பெரியவன், நீ பெரியவன் என்று சண்டையைப் பார்க்கிறோமே! 

மனஅமைதிக்காக அங்கே செல்லும்போது, இப்படி நடந்தால், என் மனம் எப்படி பகவான் மீது லயிக்கும் என்று ஒரு கேள்வியை வீசுவீர்கள். அதற்கு பதில்...

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை