வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 8


கிரிக்கெட் ஆடுபவன் பந்தை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் மட்டுமே கவனம் கொள்ள வேண்டும். வெளியே ரசிகர்கள் ஆரவாரம் செய்வது பற்றியோ, வாத்தியம் இசைப்பது பற்றியோ, ஆரஞ்சுதோல், அம்பு வீசுபவனையோ பற்றி கவலைப்படக்கூடாது. ஆசிரியருக்கு மாணவர்கள் ஆயிரம் புனைப்பெயரை வைப்பார்கள். அதுபற்றி அவர் கவலைப்படக்கூடாது. பாடம் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். 

ஒருவன் வண்டி ஓட்டி பழகுகிறான். "நான் வண்டி ஓட்டி பழகப்போகிறேன், ஊருக்குள் போக்குவரத்தை தடை செய்யுங்கள்' என்றால் நடக்கிற காரியமா! பழகுபவன் தான் போக்குவரத்தை அனுசரித்துப் போக வேண்டும். இதுபோல் தான் கோயில்களில் நடக்கும் சம்பவங்களும். ஒருவன் மணியடிப்பான், ஒருவன் பல கதைகளைப் பேசிக்கொண்டிருப்பான், ஓரிடத்தில் காலை மிதித்து விட்டதாக சண்டை நடக்கும், இதுபற்றி வழிபடுகிற நமக்கு கவலை இல்லை. நம் மனம் பகவானிடம் லயித்து விட வேண்டும். 

வியாதி என்று வந்து விட்டால் மருந்து சாப்பிட்டாக வேண்டும். அதில் ஒன்றிரண்டு பக்கவிளைவு இருக்கத்தான் செய்யும். பக்கவிளைவு ஏற்படுமே என்பதற்காக மருந்தே சாப்பிடமால் விட்டுவிட்டால் முக்கியமான வியாதி எப்படி குணமாகும்? அதற்காக கோயில்களில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு ஓடி ஒளிய வேண்டும் என்று சொல்லவில்லை. அதையும் தடுக்க முயற்சி எடுக்கத்தான் வேண்டும்.

திருமங்கையாழ்வார் அப்படித்தான் செய்தார். பகவானுக்கு விரோதமாக யாராவது பேசினால், என் கையில் சக்தி இருந்தால் தவறுகளை அறுத்துவிடுவேன்,'' என்கிறார். நீ செய்யும் வினையைச் செய், பலனைப் பற்றிக் கவலைப்படாதே.

நான் பல இடங்களில் உபன்யாசம் செய்கிறேன். செல்லுமிடங்களில் உண்மையை எடுத்துக்கூறுவது என் பொறுப்பு. 

அதையெல்லாம் எல்லாரும் கேட்டு அப்படியே நடக்க வேண்டுமென நான் எதிர்பார்க்க முடியுமா! ஏன்..சிலர் உபன்யாசம் முடிந்து செல்லும் போதே திருட்டுத்தனமான காரியம் ஒன்றைக்கூட செய்யலாம். அதற்காக, நான் வருத்தப்பட முடியுமா! 

சொல்வது என் பொறுப்பு. கேட்பது அவர்கள் முடிவு. பகவானால் தான் அவர்களைத் திருத்த முடியும். அவர்களைத் தண்டிக்க நான் யார்? தவறு செய்யும் மனிதனைத் தண்டிக்கும் அதிகாரம் இன்னொரு மனிதனுக்கு இல்லை. அந்த உரிமை பகவானுக்கு மட்டுமே உண்டு. 

நம் பிள்ளைகள், பெண்களிடம் நாம் நல்லதைச் சொல்ல வேண்டியது கடமை. அதை அவர்கள் கேட்பார்களா என்றால் தெரியாது. அதிலும் 16 வயதில் புத்திமதி சொன்னால் காதிலேயே ஏறாது. ஆனாலும், புத்திமதியை தொடர வேண்டும். பொதுவாக 16 முதல் 30 வரை திமிரும் வயது. ஏனெனில், நாமும் அப்படித்தான் இருந்தோம். நம் பிள்ளைகளின் வயதில், நாம் நம் பெற்றவர்களின் சொல்லைக் கேட்டோமா என்றால் இல்லை. நாம் சத்தியசந்தனாகவோ, துருவனாகவோ இருந்தோமா...நிச்சயம் இல்லை!

""உன் வயசுப்பிள்ளைகள் எப்படியெல்லாம் ஆயிட்டாங்க தெரியுமா!'' என்று பெற்றவர் பிள்ளைக்கு புத்திமதி சொன்னால், ""உன் வயசுக்கு எத்தனை பேர் ஜனாதிபதி ஆயிட்டாங்க! நீ அப்படியா ஆனே!'' என்று பிள்ளை பெற்றவரிடம் எதிர்க்கேள்வி கேட்பான். நம் பெண்கள், பிள்ளைகள் உள்ளத்தில் நம்மால் உட்கார முடியாது. ஆனால், பகவான் அவர்கள் உள்ளத்தில் அமர்ந்திருக்கிறான். அவர்கள் திருந்துவார்கள் என காத்திருக்கிறான்.
நம் பிள்ளைகளுக்கும் ஒருநாள் 40 வயது ஆகும். அப்போது, அவன் குழந்தை அவனை இதே மாதிரி கேட்பான். அப்போது தான் அவனுக்கு நல்லது கெட்டது புரியும். நாமும் இதே போல நம் பெற்றவர்களைக் கேட்டோமோ என்று எண்ணிப்பார்ப்பான். அப்போது தான், அவனது பெற்றோர் அவனது சிறுவயதில்...அவனது உள்ளத்துக்குள் போட்டாரே நல்ல விதை! அது அப்போது தான் கனிந்து பலனளிக்கும். ஆக, நம்மைக் கட்டுப்படுத்தும் சக்தி மனிதர்களிடம் இல்லை. பகவானிடம் மட்டுமே இருக்கிறது.

அரிவாள்மனை தானாக வெண்டைக்காயைத் திருத்தாது. நாம் தான் திருத்த வேண்டும். அதுபோல் தான் பெற்றவர்களும், நல்லதை பிள்ளைகளிடம் சொல்ல வேண்டும். கோயிலுக்குப் போகும் போது, பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும். இப்படி இப்படி வணங்க வேண்டும் என்று கற்றுத்தர வேண்டும். அவர்கள் வர மறுக்கத்தான் செய்வார்கள். 

எப்படியோ எடுத்துச் சொல்லி அழைத்துச்செல்ல வேண்டும். ஒருவேளை அறவே மறுத்து விட்டாலும், அவர்களுக்கு குறிப்பிட்ட வயது வந்ததும், நாம் சொன்ன அறிவுரையை அவர்கள் கடைபிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

இன்று போடுகிற விதை அன்று முளைத்து விடும்.கோயிலுக்குப் போய் பகவானைப் பார்க்க பார்க்க அவனுக்குரிய சத்வகுணம் (சாந்தகுணம்) அவனையறியமாலேயே வந்து விடும். இன்று புதுமை, அறிவியல் என்ற பெயரால் தான் இளையவர்கள் பகவானின் அருகில் வர மறுக்கிறார்கள். அவர்களிடம், "ஒரு ஸ்லோகமாவது படி, காலாவது படி' என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். கால், அரைக்கால் ஸ்லோகத்தில் கூட பகவான் இருப்பார். 

சொல்லியும் கேட்கவில்லை என்பதற்காக, அவர்கள் விஷயத்தில் பதட்டமே கூடாது. பதட்டம் என்பதே பாவத்தின் பலன் தான். இவர்களுக்கு தான் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு வரும். புண்ணியம் செய்திருந்தால் பதட்டமே வராது. 

இதனால் தான் சொல்கிறேன். நாம் நமது பழையமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வர வேண்டும். கடைசிகாலத்தில் இன்றைய எந்த நவீனமும் நம் கூட வராது. நாம் சொல்கிற கேசவ, நாராயண, கோவிந்த நாமங்கள் தான் கூட வரும்.

""சரி...பகவானை நெருங்குவதற்கு நமக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும். ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்கிறீர்களே! இதெல்லாம் எனக்கு தெரியாதே! நான் அந்தளவுக்கு புத்திசாலி இல்லையே! என்னால் பகவானை அடைய முடியுமா!'' என ஒருவர் கேட்கலாம்.

காத்திருங்கள் விடைக்கு!

- மேலும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக