வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 9



புத்திசாலிகள் மட்டுமே தன்னிடம் வரவேண்டுமென பகவான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஈடுபாடு உள்ளவன் வந்தால் போதும் என்கிறான். உடலுக்குரிய சட்டதிட்டம் அளவுக்கு உட்பட்டது. ஆத்மாவுக்குரிய சட்டதிட்டம் அளவில்லாதது. பகவான் ஒரு உருவத்துடன் பிறக்கிறான். அதை "அப்ராக்ருதம்' என்பார்கள். நமது உருவமோ "ப்ராக்ருதம்'. அதாவது, நமது புலன்கள் கட்டுப்பாட்டை இழக்க வைக்கும். பகவானிடம் கொள்ளும் ஈடுபாடு, புலன்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

நமது உடல் ரஜோ, தமோ, சத்வம் என்னும் மூன்று வகை குணங்களால் பிசைந்து செய்யப்பட்டுள்ளது. பெருமானின் குணம் சத்வம் மட்டுமே. எப்பொழுது எந்தக்கலரில் தோய்க்கிறோமோ அந்த வகையான கலரில் நாம் மாறி விடுவோம். அதுபோல, பகவானைப் பார்த்துப் பார்த்து அவனது சத்வகுணம் தோயத்தோய நாமும் மாறி விடுவோம். 

அதனால் தான் குழந்தைகளை கோயில்களுக்கு கூட்டிப் போக வேண்டும் என்பது! சிலர் சொல்கிறார்கள். ""என் பிள்ளை குழந்தையாக இருக்கும்போது, தீபாவளிக்கு நான் எடுத்துக்கொடுத்த துணியை அணிந்து கொண்டான். 

இப்போது 16 வயதானதும், பணத்தைக் கொடு, நானே கடைக்குப் போகிறேன் என்கிறான்,'' என்று. இப்படி சொல்பவன் கோயிலுக்கு அழைத்தால் வருவானா என்று! இதுபோன்று சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கலங்கக்கூடாது.அவனை கோயிலுக்கு சென்றால், பகவானின் சத்வகுணம் அவன் மீது தோயத்தோய அவனும் மாறி விடுவான். 

சிலர் சாப்பிடவே மாட்டார்கள். உடல் குண்டாக இருக்கும். நன்றாக சாப்பிடுபவனின் உடலோ மாறவே மாறாது. இது அவரவர் உடல்வாகைப் பொறுத்தது. ஆனால், பகவானுக்கு இதுபோன்ற உருவ அமைப்பெல்லாம் கிடையாது. அவனது உருவம் இச்சை (விருப்பத்தின் படி அமைந்தது) என்கிறார் வேதாந்த தேசிகன். அவராக விருப்பப்பட்டு பன்றியாக, மீனாகப் பிறந்தார். அதாவது, அவர் விருப்பம் காரணமாகப் பிறந்தார். நாம் கர்மம் காரணமாக பிறக்கிறோம்.

உலகத்தில் தர்மம் தலைகுனியும் போது பகவான் பிறப்பார். இப்போது கலியுகம். 5115 ஆண்டு தான் வந்துள்ளது. இன்னும் 4லட்சத்து 27 ஆயிரம் ஆண்டுகளை கடக்க வேண்டியுள்ளது. இப்போது தர்மம் இருக்கிறதா என்றால் இல்லை என்று நமக்கு தோன்றுகிறது. ஆனால், அவர் பிறக்கவில்லை என்னும் போது, தர்மம் இன்னும் தலை குனியவில்லை என்று அர்த்தமாகிறது. நம் காலத்துக்குள் நாம் பகவானைப் பார்க்க மாட்டோம் என்றாலும், நம் கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன்கள் அவரைப் பார்ப்பார்கள். மனிதன் தனக்குப்பிறகு தன் பிள்ளை என்ன செய்யப்போகிறான் என்று தான் நினைக்கிறான். பகவானோ வேறு ஏதோ நினைக்கிறான். நாம் பிறப்பதற்கு காரணம் கர்மங்களைத் தொலைப்பதற்கு தான். ஏதாவது பிராயச்சித்தம் செய்து இதைத் தொலைத்தாக வேண்டும். ஆனால், எவ்வளவு பிராயச்சித்தம் செய்தாலும் அது தொலைய மாட்டேன் என்கிறது. காரணம், செய்த பாவங்களுக்கு எண்ணிக்கையே இல்லை. பிராயச்சித்தம் செய்தாலும் சுக துக்கத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும். 

கொசு கடிக்கிறது என்றால் உடலில் களிம்பு பூசலாம். வலையைப் போட்டு படுக்கலாம். இதன்மூலம் தாக்குதலைக் குறைக்கலாம். பிராயச்சித்தம் செய்வது என்பதும் இதுபோலத்தான்! இதன்மூலம் நாம் படும் துன்ப அனுபவங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

நாம் பண்ணிய புண்ணியத்தால் பிறவி ஏற்படுகிறது. அதற்கான சுகத்தை அனுபவிக்க அனுபவிக்க புண்ணியத்தின் அளவு குறைந்து விடும். அதுபோல, செய்த பாவத்திற்கேற்ற அளவு துக்கத்தை அனுபவிப்போம். பாவக்கணக்கு குறைய வேண்டுமானால், துன்பத்தை விருப்பத்துடன் அனுபவிக்க வேண்டும். 

நம்மாழ்வார் இப்படித்தான் சொல்கிறார். அதேநேரம், துன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க பகவானை அடைய நேரம் வந்துவிட்டதாக அர்த்தம். இந்த உண்மையை உணர்ந்துவிட்டால் துன்பம் பற்றிய கலக்கம் வராது. மகான்களும் துன்பப்பட்டிருக்கிறார்கள். இப்போது, ஒரு கேள்விக்கும் இங்கே விடை கிடைக்கிறது. படித்து முனைவர் பட்டம் பெற்று, ஸ்லோகங்களையெல்லாம் சொல்லும் பண்டிதனால் மட்டும் தான், பகவானை அடைய முடியுமா! பாமரனால் முடியாதா என்பது கேள்வி. இதற்கு பதில்... 

"துன்பத்தைக் கண்டு கலங்கி கவலைப்பட்டால் அவன் பாமரன். துன்பத்தை விருப்பத்துடன் அனுபவித்தால் அவன் பண்டிதன். இந்தப் பண்டிதர்களே பகவானை நெருங்க முடியும். தர்மம் நிலைக்க, துஷ்டர்களை அழிக்க பகவான் பிறக்கிறான். நாம் அதற்காக பிறக்கவில்லை. அவனுக்கு பாவ புண்ணியம் கிடையாது. அடியாரை ரட்சிக்கவே அவன் பிறக்கிறான். கோவர்த்தன மலையைத் தூக்குவது, அசுரர்களைக் கொல்வது போன்ற சித்து வேலைகளைச் செய்கிறான்.

சரி...பாவ புண்ணியம் என்கிறீர்களே! அதன் உண்மை நிலை என்ன என்பது பற்றி சொல்லுங்களேன் என்பீர்கள். கர்மம் என்றால் கிரியை. அதாவது செயல்வினை (செயல்பாடு). இதை மூன்று வகையாக வேதம் பிரிக்கிறது. சிலவற்றை செய், சிலவற்றை செய்யாதே என்னும் வேதம், சிலவற்றை செய்யலாம் என்றோ, செய்யக்கூடாது என்றோ சொல்லவில்லை. 

தர்ப்பணம், சிராத்தம், சந்தியாவந்தனம், நாமஸ்மரணை (பகவானின் நாமம் சொல்லுதல்) ஆகியவற்றை செய் என்கிறது. பொய் சொல்லாதே, திருடாதே, சிசுவதை செய்யாதே, பெண்ணை அவமதிக்காதே, பிராணிகளை வதைக்காதே என்று செய்யக்கூடாதது பற்றி கட்டளையிடுகிறது. 

அப்படியானால் செய் என்றோ செய்யாதே என்றும் எந்தெந்த செயல்களை வேதம் சொல்கிறது. அறிய ஆவலாய் இருக்கிறதல்லவா!

- இன்னும் ஆனந்திப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக