வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 11


நித்ய கர்மம், நைமித்திக கர்மம், காம்யகர்மம் என்ற மூன்றாக கர்மங்களைப் பிரிக்கலாம்.

நித்ய கர்மம் என்றால் அன்றாட வழிபாடு. சந்தியாவந்தனம், தினசரி பூஜை போன்றவை இதில் அடங்கும். நைமித்திக கர்மம் என்பது, ஏதாவது காரணம் கருதி செய்யப்படுவது. உதாரணமாக, சூரிய கிரகணம் வருமானால் தர்ப்பணம் முதலானவை செய்கிறோமே! அதுவே நைமித்திகத்தில் அடங்கும். காம்யகர்மம் என்றால் ஆசைகளை, தேவைகளை நிறைவேற்ற செய்வது. செல்வம் வேண்டுமா! அதற்கென ஒரு யாகம். புகழ் வேண்டுமா! அதற்கு தனி யாகம், எதிரிகளை அழிக்க வேண்டுமா! அதற்கு சேன யாகம்..குழந்தை வேண்டுமா! புத்திர காமேஷ்டி யாகம்...இன்னும் வாஜபேயி யாகம், ராஜசூய யாகம், அஸ்வமேத யாகம் முதலானவை.

இந்த கர்மங்களை நாம் நிச்சயம் செய்தாக வேண்டுமா! செய்தால் என்ன லாபம், செய்யாவிட்டால் என்ன விளைவு...!

இவற்றில் நம்மால் செய்ய முடிந்த எளிய கர்மம் நித்யகர்மம். நித்யகர்மத்தை பண்ணினால் புண்ணியம். செய்யாவிட்டால் பாவம்...வேலைக்குப் போனால் சம்பளம்..போகாவிட்டால் இல்லை...சம்பளம் இல்லாமல் குடும்பம் இயங்காது..அது மாதிரி நித்யகர்மாக்களைச் செய்தால் தான் உலகம் இயங்க முடியும்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது.

என்ன தான் கர்மாக்களைச் செய்தாலும் "விதி', "தலையெழுத்து' என்றெல்லாம் இருக்கிறதாமே! அவற்றை வெல்ல முடியாது...அவை இயக்கும் பாதையில் தான் நாம் செல்வோம் என்கிறார்களே! அது சரியானது தானா?

ஒரு கர்மா செய்தால், அதற்குரிய புண்ணியம் உடனே கிடைத்து விடும் என்பதில்லை. சிலவற்றுக்கு பத்து வருடம் கழித்து கூட கிடைக்கும். சிலருக்கு உடனே கிடைக்கும். தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். 

அவருக்கு கிடைத்த பாயாசக்குடம் மூலம், 12 மாதங்களில் புத்திர பாக்கியம் கிடைத்து விட்டது.

ஒருவர் கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார். கட்டும்போதே இறந்து விட்டார். உடனே என்ன சொல்வோம்? "கோயில் கட்டிய புண்ணியம் கூட கிடைக்காமல் போய்விட்டான்' என்று.

சரி...நம் கர்மாக்களுக்கு புண்ணியத்தை இவ்வாறு மறைவாக நின்று தருவது யார்?

இதை "அபூர்வம்' என்பார்கள். "அபூர்வம்' என்றால் "நம் முன்னால் இல்லாதது' என்றும், "எப்போதும் நிலைத்து நிற்கக்கூடியது' என்றும் பொருள். இந்த அபூர்வமே நமக்குரிய பாவ புண்ணியங்களை வழங்கும். மற்றபடி "பிரும்மலிபி' "லிகித ரேகா' எனப்படும் தலையெழுத்து என்றெல்லாம் எந்த எழுத்தும் கிடையாது.

அப்படியானால் விதி என்ற சொல்லுக்கு பொருளே கிடையாதா? உண்டு...

சொல்கிறேன் கேளுங்கள்.

""பாவத்தைச் செய்தவுடன் பெருமானின் திருஉள்ளத்தில் கோபம் உண்டாகிறது. புண்ணியம் செய்ததும் அனுக்கிரகம் உண்டாகிறது. 

இதற்குப் பெயர் தான் விதி''.

""சரி...நான் ஒளிந்து மறைந்து யாருக்கும் தெரியாமல் பாவம் செய்தேன். அது எங்கோ இருக்கும் அந்த பகவானுக்கு தெரியவா போகிறது!'' என்று ஒருவர் கேட்கலாம்.

மறைப்பதென்பதோ, செய்ததை அழிப்பதென்பதோ அவன் விஷயத்தில் நடக்காத காரியம். அவருக்கு மறதியே கிடையாது.

ஆனால், ""இனிமேல் இந்த பாவத்தைச் செய்யமாட்டேன், நீயே என்னைக் காக்க வேண்டும்,'' என்று சரணாகதி அடைந்துவிட்டால், உடனே அதை அழித்து விடுவார்.

கூரத்தாழ்வான் இதை எளிமையான வார்த்தைகளில் சொல்கிறார்.

""எதெது பகவானுக்கு பிடித்ததோ அது புண்ணியம். எதெது பிடிக்காதோ அது பாவம்,'' என்று. எனவே அவருக்கு பிடிக்காததைச் செய்யக்கூடாது.

பகவான் கிருஷ்ணர் கீதை 18ம் அத்தியாயம், 66வது ஸ்லோகத்தில், தன்னையே தர்மமாக ஸ்தாபித்துக் கொள்கிறார். ""என்னையே தர்மமாய் பற்று,'' என்கிறார் அவர். பகவானே தர்மமாக விளங்குகிறார்.
நான்காவது அத்தியாயத்தில் "ஸம்பவாமி யுகே யுகே' என்கிறார். தர்மத்தை நிலைநாட்டதான் பிறப்பதாகவும் அவர் சொல்கிறார்.

புண்ணியத்தைச் செய்து விட்டால் நாம் அவரை அடைந்து விடலாமா என்று ஒருவர் கேட்டால், ""அதுவே இறுதியானது,'' என்று சொல்லிவிட முடியாது. அந்த புண்ணியத்தையும் பகவானிடமே அர்ப்பணித்து விட வேண்டும். அப்போது தான் அவரை அடைய முடியும்.

பட்டினி கிடந்து விரதமிருந்தாலும், அதற்குரிய பலனை அவரிடமே சமர்ப்பித்து விட வேண்டும். அதனால் தான் "ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்' என்பார்கள்.

""வாயால், மனதால்...எதனால் தர்மகாரியம் செய்திருந்தாலும், அனைத்தையும் பகவானுக்கு சமர்ப்பிக்கிறேன்'' என்று சொல்ல வேண்டும்.

சரி....பாவ, புண்ணியம் பற்றி இவ்வளவு சொல்கிறீர்களே! தர்மகாரியம் செய்வதால் புண்ணியம் உண்டா என்றால் இல்லை என்று தான் சொல்வேன். "இதென்ன புதுக்குழப்பம்' என்பவர்கள் சற்று பொறுங்கள்.
குளம் வெட்டுவது புண்ணியம் தான் என்றாலும், தர்மத்தை எப்படி செய்யவேண்டும் என நூல்கள் சொல்லியுள்ளதோ அதன்படி தர்மம் செய்தால் தான் புண்ணியம் கிடைக்கும்.

இதை இன்னும் விபரமாக விளக்க, திருப்பாவையில் ஆண்டாள் சொல்வதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

திருப்பாவை 28ம் பாட்டு, "கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்'. இந்த பாசுரத்தில், "கண்ணா! எனக்கென்று ஒரு புண்ணியமும் கிடையாது. மாடு மேய்ப்பேன், சாப்பிடுவேன், விரதம் இருக்கும் அறிவெல்லாம் என்னிடம் இல்லை,'' என்கிறாள் ஆண்டாள்.

உடனே கண்ணன் சொன்னானாம்...""அப்படியா! எப்போது, உன்னிடத்தில் ஒரு புண்ணியமும் இல்லையோ, அப்போது நானும் நீ கேட்பதைக் கொடுப்பதற்கில்லை,'' என்று கையை விரித்து விட்டான்.

உடனே ஆண்டாள், ""பொறு! பொறு! நான் இன்னும் பாட்டை முடிக்கவில்லை...

""உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது'' என்றாள்.

அதாவது, நாங்களாக முயற்சி எடுத்து புண்ணியம் செய்யவில்லையே ஒழிய, நீ எங்கள் இடையர் குலத்தில் வந்து பிறந்தாயே! அதுவே நாங்கள் செய்த புண்ணியமல்லவா!''என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம். கண்ணன் பேசவில்லை.

""எங்களைத் தேடி வந்த புண்ணியம் நீயல்லவா கண்ணா!'' என்றாள் ஆண்டாள்.

இப்படித்தான் பகவான் நம்மைத்தேடியும் வருவான். தனக்கு யார் மீது விருப்பமோ அவர்களைத் தேடி வருவான்.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக