சனி, 14 டிசம்பர், 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 16

இனி நாம் மகாலட்சுமி வைபவம் பற்றி ஆனந்திப்போம்.

யாருடைய வைபவம் பற்றி யார் பேச வேண்டும் என்ற தகுதி முதலில் நிர்ணயிக்கப்பட வேண்டும். யாரும் யாருடைய வைபவம் பற்றியும் பேசிவிட முடியாது. உலகத்திலுள்ள ஒருவரைப் பற்றி பேசினால் கூட, அவரைப் பற்றி பேச ஒரு தகுதி வேண்டும் என்று நாம் சொல்லிக் கொள்கிறோம். அப்படியானால், தாயார் மகாலட்சுமியைப் பற்றி பேச எந்தளவுக்கு தகுதி வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த தகுதி நமக்கு இருக்கிறதா என்றால் அது கேள்விக்குரிய விஷயம் தான்.
பொதுவாக பகவத் (தெய்வ) விஷயத்தில் நாம் அறிந்தது மிகக்குறைவே. அதிலும் பகவானைப் பற்றியதை விட பிராட்டியின் வரலாறு நமக்கு தெரியவே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். நம் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதவர் ஸ்ரீமன் நாராயணன். அவருடைய பெருமையை இவ்வளவு.. அவ்வளவு என்றெல்லாம் வரையறுத்துக் கூற முடியாது. அப்படியிருக்க அவரது பிராட்டி பற்றி நமக்கு என்ன தெரியும்! இன்னும் சொல்லப்போனால். மகாலட்சுமி தாயாருக்கே கூட அவளைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது தான் என்பது தான் மிகவும் ஆச்சரியமான விஷயம்.

பகவான் எல்லாம் தெரிந்தவர், எல்லா சக்திகளும் உடையவர் என்று நாம் சொல்கிறோம். இதுபற்றி கூரத்தாழ்வானுக்கு ஒருமுறை சந்தேகம் வந்து விட்டது.

""உன்னைப் பற்றி உலகத்தார் இப்படி இரண்டு விஷயம் சொல்கிறார்களே! இது உண்மை தானா?'' என்று அவரிடமே கேட்டு விட்டார். ஒரு நாத்திகன் இப்படி கேட்டால் அதில் வியப்பில்லை. ஆஸ்திகர்களே இப்படி கேட்டால், பகவானால் எப்படி பதில் சொல்ல முடியும்?
ஆனால், எதற்காக அப்படி கேட்டார் என்பதற்கு விளக்கம் கேளுங்கள்.

பகவானுக்கு எல்லாம் தெரியும் என்றால், பிராட்டியாரின் பெருமை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால், பிராட்டியின் பெருமைக்கு ஒரு எல்லை இருக்கிறது என்று அர்த்தமாகி விடுகிறது. பிராட்டியாரின் பெருமைக்கோ எல்லை இல்லை என்பதே உண்மை. இருக்கிற ஒன்றைப் பற்றி பேசினால் தான் அதில் அர்த்தமுண்டு. அப்படி பேசுபவன் தான் ஞானி. இல்லாத ஒன்றைப் பற்றி பேசினால், அவனைப் பைத்தியம் என்றுதான் முடிவு கட்ட முடியும். தாயாரின் பெருமைக்கு எல்லை இருக்கிறது என்றால் அதுபற்றி பேசலாம். இல்லை என்றால் பேச முடியாது. 

முயலுக்கும், குதிரைக்கும் கொம்பு இருக்கிறது என்று நான் பேசினால், என்னை ஞானி என்பீர்களா!
பைத்தியம் என்பீர்களா! எது கிடையாதோ அதைப்பற்றி பேச வேண்டும் என்கிற அவசியம் ஞானிக்கு கிடையாது. பிராட்டியின் வைபவத்துக்கு எல்லை இல்லை எனும் போது. அதுபற்றி பகவானுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இல்லை என்றாகி விடுகிறது. உபநிஷத்துகளும் அவளது வைபவத்துக்கு எல்லை இல்லை என்கின்றன. பிராட்டியைப் பற்றி பேசினால், முதலில் ஆனந்தப்படுவது பெருமான் தான். அவளது வைபவம் பற்றி சொல்லிமாளாது.

மழை நீர் கடலில் கொட்டுகிறது. அதனால் கடலுக்கு என்ன லாபம்? மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் கடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது பரந்து விரிந்து தான் கிடக்கும். ஆனால், கடலில் பொழிவதால் மழைக்குத் தான் பெருமை. "கடலோடு, நான் என்னை சம்பந்தப்படுத்திக்கொள்கிறேனே' என்று மழை பெருமைப்பட்டுக் கொள்ளும்.

அதுபோல, தாயாரின் வைபவம் பற்றி பேசினால் நம் நாக்கிற்கு நல்லது. எத்தனையோ அழுக்கான அருவருப்பான விஷயங்களை இந்த நாக்கு பேசுகிறது. அந்த நாக்கைச் சுத்தப்படுத்த அவளது வைபவம் பற்றி பேசிக் கொள்ளலாம். ""சரி...உம்மைப் போல் அதுபற்றி பேசுபவர்களுக்கு நாக்கு சுத்தமாகும். எங்களுக்கு என்ன லாபம்?'' என்று கேட்பீர்கள். அதைக் காதால் கேட்கிறீர்களே! உங்கள் காதுகளுக்கு நல்லது. ஏனெனில், இந்த காது எத்தனையோ கெட்டதுகளையும் கேட்கிறது. அதைச் சுத்தப்படுத்த இந்த நல்லது தேவை.

மகாலட்சுமி என்பவள் யார்? அந்த பிராட்டிக்கு பூதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று நிலைகள் உண்டு. 

ஸ்ரீ.. வைஷ்ணவம், திரு..மால் அடியார்கள் என்பதில் உள்ள ஸ்ரீ, திரு என்பதெல்லாம் தாயாரையே அடையாளம் காட்டுகிறது. 

தாயாரைப் பிரிந்து பகவான் இருப்பதே இல்லை. ஆழ்வார்கள் பாசுரம் பாடும் போது, "திரு..மால்' என்றே பாடுகிறார்கள். எங்காவது "மால்' என்று பாடினால், அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். நாம் திருமண்காப்பு (நாமம்) இடும் போது கூட, ஸ்ரீசூர்ணத்தையும் சேர்த்தே இடுகிறோம்.
பகவான் பற்றி எத்தனை எத்தனை சூக்தங்கள் உள்ளதோ, அந்தளவுக்கு பிராட்டிக்கு இல்லை. விஷ்ணு சூக்தம், நாராயண சூக்தம், சமகங்கள் என்று எத்தனையோ பகவானுக்கு உண்டு. தாயாருக்கோ ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, சிரக்ஷா, மேதா என்று குறிப்பிட்ட சில சூக்தங்களே உள்ளன. வேதாந்த தேசிகன் பகவானைப் பற்றி 28 சூக்தங்கள் இயற்றினார். ஆனால், அதில் நாச்சியாருக்கு ஒன்றே ஒன்று தான் உண்டு. ஆழ்வார்கள் 100 பாசுரம் பாடினால், அதில் ஒன்றே ஒன்று தான் பிராட்டியைப் பற்றி இருக்கும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது, இது ஓரவஞ்சனையோ என்றே தோன்றுகிறது. பராசர பட்டரும் பூர்வ சதகம், உத்தர சதகம் என்று 120 ஸ்லோகங்கள் வீதம் எழுதினார். ஆனால், தாயாருக்கு 60, 65 ஸ்லோகங்கள் தான் இருக்கிறது. ஆளவந்தார் 60 ஸ்தோத்திர ரத்தினம் பாடியும் தாயாருக்கு குறைவாகவே இருக்கிறது. இதைப் பார்க்கும் போது, தாயாருக்கு வைபவம் குறைவோ என்று தோன்றுகிறது.

இவ்வாறு குறைவாக இருக்க காரணம் என்ன? 

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக