வியாழன், 16 ஜனவரி, 2014

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 18

பெரிய பிராட்டி என அழைக்கப்படும் திருமகளே (லட்சுமி) பெருமாளுக்கு அடையாளம். கோயில்களில் திருமார்பு நாச்சியார் என பெருமாளின் மார்பில் இவள் இருப்பாள். பக்கத்து நாச்சியாராக அவருக்கு அருகிலும் இருப்பாள். தனிக்கோயில் நாச்சியாராகவும் வீற்றிருப்பாள். ஆனால், பெருமாளுக்கு இப்படி தனித்தனி சந்நிதிகள் இருக்காது. பெருமாள் நிஜம் என்றால், அதன் நிழல் தான் தாயார். பெருமாள் எங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் தாயார் நிழல் போல தொடர்கிறாள். முக்தி பெற்ற உயிர்களை வைணவத்தில் "நித்யசூரிகள்' என்று குறிப்பிடுவர். இந்த நித்யசூரிகளுக்கெல்லாம் தலைவியாக இருப்பவள் பெரியபிராட்டி தான். 

நிஜம், நிழல் இரண்டில் எதற்கு மதிப்பு அதிகம் என்று கேட்டால் எல்லோரும் நிஜத்திற்குத் தான் என்று பதில் சொல்வர். ஆனால், மரம் நிஜமாக நம் கண்முன் நிற்கிறது. ஆனால், வெயிலுக்கு ஒதுங்குபவர் மரத்தடிக்குச் சென்று, "அம்மாடி! இப்ப தான் குளிர்ச்சியா இதமா இருக்கு!'' என்று சொல்லுவார் அல்லவா? அதுபோல, பெருமாளை நேராக அனுபவிக்க முடியாது. நிழல் போல இருக்கிற பிராட்டியே நமக்கு அருளை வாரிக் கொடுக்கிறாள். 

கட்டித் தங்கத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 

அந்த தங்கத்தை ஆபரணத்தங்கமாக மாற்றி விட்டால் நாம் வேண்டிய ஆபரணமாக்கி அணிந்து கொள்கிறோம். பெருமாள் கட்டித் தங்கமாக இருக்கிறார். பிராட்டியே ஆபரணத்தங்கம். தாயாருக்குத் தான் பிள்ளைகளின் கஷ்டநஷ்டம் தெரியும். நமக்காக பெருமாளிடம் அருள்புரிய வேண்டிக் கொள்கிறாள். தாயாரின் சம்பந்தத்தால் தான் பெருமாளுக்கு ஏற்றம், பெருமை எல்லாமே. அப்படியானால், பெருமாள் தாயாருக்கு தாழ்ந்தவரா? என்று கேட்டால், அவர் ஸ்வதந்திரர் அதாவது யாருக்கும் அடிமை இல்லாதவர். நவரத்தினங்களின் ஒன்றான மாணிக்கத்திற்கு மதிப்பு அளிப்பது அதன் ஒளி. அதுபோல, பெருமாளுக்கு ஒளியாக இருந்து தாயாரே அவரை விளங்கச் செய்கிறாள். ஒளி எப்போதும் தனித்திருக்காமல் அதோடு ஒன்றியிருப்பது போல, தாயாரும் பெருமாளை ஒன்றியே இருக்கிறாள். 

சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு கட்டம்.

அதாவது, ஒருசமயம் வேதாந்தங்கள் எல்லாம் ஒன்று கூடி, யார் பரம்பொருள் (தெய்வம்) என்று விவாதம் செய்தன. 

உலகத்திற்கு மூலமுதற்காரணம் யார் என தத்துவஆராய்ச்சியில் இறங்கின.பிரம்மா, ருத்ரர், இந்திராதி தேவர்கள் என ஒவ்வொருவரின் நெஞ்சத்தை அடைந்த வேதாந்தங்கள், "யார் பிரம்மம்?' என அறிய முற்பட்டன. திருமாலின் மார்பில், திருமகளின் பாதச்சின்னம் இருப்பதைக் கண்டு ஸ்ரீமந்நாராயணரே மூலமுதற்பொருள் என உணர்ந்தன. 

யமுனை ஆற்றங்கரையில் மரத்தின் மீதமர்ந்து கண்ணன், தீர்த்தத்தை (தண்ணீர்) தன் காலால் அடித்தபடி ஊஞ்சலாடிக் கொண்டிருந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அந்த அழகைக் கண்ட திருமகளுக்குத் தானும் அதுபோல ஆனந்திக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. திருமகளும், திருமாலின் மார்பில் இருந்தபடி, ஊஞ்சல் போல அசைத்து மகிழ்ந்தாள். அவள் பாதத்தில் கிடக்கும் குங்குமமும், குங்குமப்பூவும் அவளின் திருவடிகள் பட்டு தெறித்தன. திருமாலின் கருத்த மேனியில் சிவப்பான வட்டமாக கோலமிட்டது போல அது இருந்தது. வேதாந்தங்கள் ஒன்றுகூடி, திருமாலின் நெஞ்சத்தில் இந்த காட்சியைக் கண்டு "இவரே பரம்பொருள்' என்ற முடிவுக்கு வந்தன. 

திருமங்கையாழ்வார் திவ்யதேச யாத்திரையாக, தேரெழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலுக்கு வருகிறார். எம்பெருமானின் அழகில் ஈடுபட்டு 40 பாசுரங்கள் பாடினார். "திருநெடுந்தாண்டகம்' என்னும் அப்பாசுரத்தில், "திருவுக்கு திருவாகிய செல்வன்' என்று பெருமாளைக் குறிப்பிடுகிறார். மரியாதையாக ஒருவரை அழைக்க வேண்டுமானால், ஸ்ரீமான், திருவாளர், "திரு' என்றெல்லாம் அடைமொழி கொடுக்கிறோம். உண்மையில் திருவுடையாக இருப்பவர் பெருமாள் தான். அவரே " ஸ்ரீதேவி நாச்சியாருக்கே "ஸ்ரீ' யாக இருக்கிறார். 

கங்கை,யமுனை தீர்த்தங்களில் நீராடச் சென்றால் அந்த ஜலபிரவாகத்தில் மீன்கள் துள்ளி விளையாடும். அதை நாம் தொட்டுப் பார்த்தால் "வழவழ' என நீரின் தன்மையைப் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். மீன் தண்ணீருக்குள்ளே இருப்பதால் நீரின் தன்மை உண்டாகி விட்டது. அதுபோல, பெருமாளின் நெஞ்சம் மட்டுமில்லாமல், திருவடி முதல் திருமுடி வரை எங்கு தொட்டாலும் திருமகளின் சம்பந்தம் இருக்கும்.
வருணதேவனின் பிள்ளையான பிருகுவுக்கு ஒருசமயம். "பிரம்மம் (தெய்வம்) எது?' என்ற சந்தேகம் எழுந்தது. 

தந்தையிடமே கேட்டு விடலாம் என கருதிய பிருகு, தந்தையின் திருவடியை வணங்கி, "பிரம்மம் எது?' என்று கேட்டபோது, வருணனும், ""எதனிடத்தில் உலகம் உருவானதோ, எதை உலகைக் காக்கிறதோ, எதில் உலகம் ஒடுங்குகிறதோ அதுவே பிரம்மம்'' என்று உபதேசித்தார். இதே கருத்தை கம்ப நாட்டாழ்வாரும், ""உலகம் யாவையும் தாமுள ஆக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர்'' என்று குறிப்பிடுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் செய்யும் அந்த பரம்பொருள் நாராயணரே. 

ஸ்ரீதேவி தாயாரை மார்பிலே கொண்டிருக்கும் பெருமாள், ஏன் இந்த உலகை உற்பத்தி செய்தார் தெரியுமா? உயிர்கள் எல்லாம் மோட்சகதியை அடைய வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், அதற்கு யாராவது முயற்சித்தார்களா? 

குருக்ஷேத்திரத்திலே மனம் குழம்பிய அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் நேரில் வந்து 700 ஸ்லோகங்களில் கீதையை உபதேசித்தார். ஆனால், "ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே' என்று சொல்லி, அர்ஜூனன் கூட, பெருமாளைச் சரணடைய முன்வரவில்லை. இந்த பூவுலக வாழ்வை முடித்து விட்டு, பஞ்ச பாண்டவர்கள் எல்லோரும் செய்த தர்மத்தின் பயனால் சொர்க்கத்தையே அடைந்தனர். ஆச்சார்ய மார்க்கமாக நல்ல குருவின் உதவியோடு தான் நாம் மோட்ச கதியை அடைய முடியும். அதற்கு ஸ்ரீதேவியைத் தன் மார்பிலே தாங்கியிருக்கும் நாராயணரின் திருவடிகளை, இளமைப்பருவத்தில் இருந்தே கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை பாசுரத்தில் குறிப்பிடுகிறார். 

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக