பிரம்மாவுக்கு நான்கு முகம். இவை ரிக்,யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கும். வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டு, பிரம்மா படைத்தல் தொழிலைச் செய்கிறார். பிரம்மமான திருமால், இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார். பிரம்மாவுக்கு வேதம் பிரமாணம்! ஆனால், பிரம்மத்துக்கு, வேதமா பிரமாணம் என்றால் அது தான் இல்லை.
திருமகளாகிய லட்சுமியின் புருவநெறிப்பே(புருவத்தை வளைத்தல்) அவருக்கு பிரமாணம். மேல்நோக்கி லட்சுமி நெறித்தால் மேலான உயிர்களும், கீழ்நோக்கி நெறித்தால் கீழான உயிர்களும் உலகில் பிறக்கின்றன. படைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதும் அவளே. படைத்து முடித்ததும் ஏற்படும் ஆயாசம், களைப்பைத் தீர்ப்பவளும் அவள் தான். அவளுடைய குளிர்ந்த பார்வையால் திருமாலின் களைப்பு நீங்கி விடும். அப்போது மகிழ்ச்சிக்களிப்பில் திருமால் கூத்தாடி மகிழ்வார்.
கணவனுக்கு கட்டுப்பட்டு, மனைவி செயல்படுவது தானே வழக்கம். ஆனால், இங்கு தாயார் அமர்ந்த நிலையில் இருந்து கட்டளையிட, அதற்கு ஏவல் செய்ய காத்திருக்கிறார் பெருமாள். ஆனால், பிரம்மமாகிய திருமாலை விட்டுப் பிரியாதவளாகவும், சைதன்ய சொரூபமாகவும்(அறிவு நிலை), சிருஷ்டி பிரமாணமாகவும், அவருக்கு ஒளியாகவும் இருப்பவள் தாயாரே. சூரியனை விட்டு ஒளி எப்படி தனித்து இருப்பதில்லையோ, அதுபோல பிராட்டி பெருமாளை விட்டு, தனித்து எப்போதும் இருப்பதில்லை.
சம்சாரக் கடலில் தத்தளிக்கும் உயிர்கள் அனைத்திற்கும் லட்சியமாக திகழ்பவள் லட்சுமி. பாவத்தைத் தொலைத்து பெருமாளின் திருவடியில் எப்படி உயிர்களைச் சேர்ப்பது என்ற ஒரே சிந்தனை தான் பிராட்டிக்கு. இந்த லட்சியத்தை முன்னிட்டே அவள் இயங்குகிறாள்.
பிரதிவாதி பயங்கர அண்ணன் சுவாமி எழுதிய வேங்கடேச சுப்ரபாதம் "மாதஸ் தஜகதாம் மதுகைடபாரே..... என்று லட்சுமியை போற்றித் துதிக்கிறது. வேங்கடேச பிரபத்தி, வேங்கடேச ஸ்தோத்திரம், வேங்கடேச மங்களம் ஆகிய துதிகளும் பிராட்டியை முன்னிட்டு தான் தொடங்குகிறது. ஆழ்வார்கள் பாசுரமும், "கோலத்திருமா மகளோடு' என்று, திருமால் உயிர்களைக் காக்கும் சிறப்பை போற்றுகின்றன. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உயிர்களை "திரு'வுடன் சேர்ந்தே பெருமாள் பாதுகாக்கிறார். ஏதோ கடமைக்காக இதைச் செய்யவில்லை. உகந்து உயிர்களைக் காப்பதாகச் சொல்கிறார்கள் ஆழ்வார்கள். விருப்பத்தோடு பணியைச் செய்தால் தான், அதில் ஈடுபாடு இருக்கும்.
பிரணவ மந்திரமான "ஓம்' என்பது அ, உ, ம் ஆகிய மூன்று எழுத்துக்களின் சேர்க்கை. இதில் "அ' என்பது பரமாத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் எழுத்து. "ம்' என்பது ஜீவாத்மா. பரம்பொருளாகிய பரமாத்மாவுக் கும், உயிர்களாகிய ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பே ஓங்காரம். "அ' என்னும் அகரம் உயிரெழுத்துகளில் முதன்மையானது. பரம்பொருளான திருமாலே இந்த பிரபஞ்சத்தில் முதன்மையானவர். அகரம் என்பதற்கே "ரட்சிப்பவன்' (காப்பவன்) என்று தான் பொருள். பெருமாள் இதையே (காத்தல் தொழில்) செய்கிறார்.
காத்தல் என்றால் என்ன? விரும்பாததை போக்க வேண்டும். இஷ்டப்படுவதை தர வேண்டும். பெருமாள், ஜென்மம், பிறவி, மரணம், பாடு, கர்மா,சரீரம் என்ற வேண்டாதவற்றைப் போக்குகிறார். நாம் விரும்பக்கூடிய திருவடி மோட்சத்தைத் தருகிறார். ஆனால், நமது விருப்பு, வெறுப்பு மாறிக்கொண்டே இருக்கிறது. குளிரில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சால்வையை போர்த்திக்
கொள்கிறோம். ஆனால், கோடையில் யாரும் சால்வையை விரும்புவதில்லை. பத்ரிகாசிரமத்தில் பெருமாளைத் தரிசிக்கச் சென்றால் கடுங்குளிரை உணர முடிகிறது. அதைச் சமாளிக்க சால்வை தேவைப்படுகிறது. மீண்டும் ரயிலைப் பிடித்து நாக்பூர் வந்ததும் வெயிலின் தாக்கம் ஆரம்பித்து விடும். சின்ன வயதில் இருந்த சந்தோஷம், வயதான காலத்தில் மாறி விடுகிறது. குழந்தைகள் பாகற்காய், வேப்பம்பூ போன்ற கசப்பான பொருட்களை விரும்புகிறார்களா என்றால் அறவே கிடையாது. ஆனால், வயதாகும் போது இவையெல்லாம் உடல்நிலை கருதி தேவை என்பதை உணர ஆரம்பிப்பார்கள். விருப்பும் வெறுப்பும் மனிதனுக்கு மாறிக் கொண்டே இருக்கக் கூடியது.
சம்சார பந்தத்தில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு பிறவி, மரணம், வினைப்பயன் போன்ற விரும்பத்தகாதவை எத்தனையோ இருக்கின்றன. இதை போக்கி மோட்சம் என்னும் விரும்பக்கூடியதை திருமால் அருள்புரிகிறார். நம்மை இந்த விதத்தில் தான் அவர் ரட்சிக்கிறார். அதற்கு துணைநிற்பவள் பிராட்டியே. அவளது இயற்கை குணமாகிய கருணையால் இதை மேற்கொள்கிறாள்.
ஆண்டாள் திருப்பாவையின் 19வது பாசுரத்தில், ""குத்துவிளக்கெரிய....' என்று தொடங்கும் பாசுரத்தில் "தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்' என்று ஒரு கேள்வி கேட்கிறாள். தத்துவம் என்பது சொரூபத்தையும், தகவு என்பது குணத்தையும் குறிக்கும். ""கண்ணா! எங்களுக்கு அருள்புரியாவிட்டால் அது உன் சொரூபத்திற்கோ, குணத்திற்கோ பொருந்தாமல் போய்விடுமே!'' என்கிறாள் ஆண்டாள். நப்பின்னையும் கண்ணனோடு துயில் கொண்டிருக்கிறாள். அவளிடம் ஆண்டாள்,
""மைத்தடங்கண்ணினாய்! நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்' என்று கேட்பதும் இதே பொருளில் தான். இதைக் கேட்டு நப்பின்னையோடு கண்ணன் வந்து வாயில் கதவைத் திறந்து ஆய்ப்பாடிப் பெண்களை அழைத்துச் செல்கிறான்.
காப்பதற்கு மட்டுமில்லை! திருமால் வஞ்சனை செய்தாலும், தாயாரே காரணம். நம்மாழ்வார் கண்ணனை நினைத்து தவிக்கிறார். அவரால், அவனைப் பிரிந்து இருக்க முடியவில்லை. எப்போதும் கண்ணனின் நினைவு. அதனால், அமைதிக்காக தாமிரபரணி கரைக்குச் செல்கிறார். அங்கு அலை மீது ஆடியபடி நாரை ஒன்று இருப்பதைப் பார்க்கிறார். அதனிடம், "மடநாராய்! உன்னையும் திருமால் வஞ்சித்து விட்டானா? அவனைப் பிரிந்ததால் இப்படி வெளுத்து பசலை நோய் வந்து விட்டதே'' என்று கேட்கிறார். ரட்சிக்க மட்டுமில்லாமல், வஞ்சிப்பதாக இருந்தாலும், மால் தனித்து வராமல் லட்சுமியை அழைத்துக் கொண்டு செல்வநாரணனாகத் தான் வரவேண்டும் என்கிறார் ஆழ்வார்.
இந்த பெயர்களுக்கு என்ன அர்த்தம்?
அயோத்தி மன்னர் தசரதர், புத்திரகாமேஷ்டி யாகத்தில் கிடைத்த பாயசத்தை தன் துணைவியரான கோசலை, கைகேயி, சுமித்திரைக்கு வழங்கினார். மூவரும் கருவுற்றனர். நான்கு குழந்தைகள் பிறந்தனர். (சுமித்திரைக்கு இரட்டைக் குழந்தை) குலகுரு வசிஷ்டர், குழந்தைகளுக்கு ஜாதகம் கணித்து பெயரிட்டார். அவர்கள் பிறந்த நேரத்தின் அடிப்படையில், எப்போதும் ஆனந்தமாக இருப்பவன் என்னும் பொருளில் கோசலையின் பிள்ளைக்கு "ராமன்' என்று பெயர் வைத்தார். எதையும் தாங்குபவன் என்னும் பொருளில் "பரதன்' என கைகேயியின் குழந்தைக்கு பெயரிட்டார். வலிமையும், அழகும் மிக்கவன் என்னும் பொருளில் "லட்சுமணன்' என்றும், "எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்' என்னும் பொருளில் "சத்ருகனன்' என்றும் சுமித்திரையின் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டினார்.
- இன்னும் ஆனந்திப்போம்
நன்றி - தினமலர்