ராமாயணத்திலே லட்சுமி பிராட்டியாரின் வைபவம் அழகாக வர்ணிக்கப்படுகிறது. அதை அனுபவிக்கும் முன், பிராட்டியின் இன்னும் சில குணங்களைப் பற்றிச் சொல்கிறேன்.
பெருமாளின் ஒரு கண் கும்பகர்ணனையும், ராவணனையும் பார்க்கிறது. இன்னொரு கண் விதுரன், சஞ்சயன் போன்ற மகாத்மாக்களையும் காண்கிறது. ஒரு பக்கம் சண்டைக்காரர்கள், இன்னொரு பக்கம் ரசிகத்தன்மை. இவ்வாறு, அவர் ரசிக்கக் கற்றுக் கொண்டது பிராட்டியிடத்தில் தான். ஸ்ரீமகாலட்சுமி தாயார் பள்ளியில் படித்த ஒரே மாணவன் பெருமாள் மட்டும் தான்.
அவள் பெருமாளிடம் நம்பிக்கையுடன் பேசுவாள்.
நம்மிடம் நம்பிக்கையில்லாமல் பேசுவாள். பெருமாளுக்கும், பிராட்டிக்கும் ஒருவர் மீது ஒருவர் வைத்த நம்பிக்கையின் அளவு சமமானது. ஆயர்பாடியில் நந்தகோபன் வீட்டில் நந்தகோபன், யசோதை, கண்ணன் ஆகியோர் வரிசையாகப் படுத்திருப்பார்கள். இதில் நடுவில் இருப்பவள் யசோதை. அவளது ஒரு கை நந்தகோபன் மீது இருக்கும். இன்னொரு கை, கண்ணன் படுத்திருக்கும்
தொட்டில் மீது இருக்கும். கட்டிலுக்கும், தொட்டிலுக்கும் பாலமாக இருப்பவள் அவள். அதுபோல் ஜீவாத்மா என்ற தொட்டில் கயிறு லட்சுமி பிராட்டியின் ஒரு கையில், பரமாத்மா என்கிற திருமால் மீது ஒரு கை. இந்த இருவரையும் இணைக்க அவள் முயற்சி செய்கிறாள்.
ஓம்காரத்தின் நடுவிலும் அவள் தான் இருக்கிறாள். "ஓம்' என்பதை அகரம், உகரம், மகரம் (அ,உ, ம) என்று பிரிப்பர். இதில் அகரம் என்பது பரமாத்மா. உகரம் லட்சுமி தாயார். மகரம் ஜீவாத்மா.
பரமாத்மாவையும், ஜீவாத்மாவையும் சேர்த்து வைக்க அவள் பாடுபடுகிறாள். ஜீவாத்மா செய்த பாவத்தால் பரமாத்மா கோபமாக இருக்கிறார். இந்த கோபத்தையும், பாவத்தையும் அவள் நடுவில் இருந்து மாற்றுகிறாள். உபதேசம் மூலம் இருவரையுமே திருத்தப் பார்ப்பாள். திருத்த முடியாவிட்டால், தன் பார்வை கடாட்சத்தால் இருதரப்பையும் திருத்தி விடுவாள்.
புருவத்தை நெளிப்பாள், கண்ஜாடை காட்டுவாள்...! இதை நமது லவுகீக வாழ்வுடன் ஒப்பிடக்கூடாது. லட்சுமி தாயார் இப்படியெல்லாம் செய்து தானா பரமாத்மாவைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று நம் சாமானிய வாழ்க்கையைக் கொண்டு கணக்கு போட்டு விடக்கூடாது.
கங்கைக்கரையில் பரிசல் இருக்கும். அக்கரைக்கு கொண்டு விடச்சொல்லி கரையில் வைத்து கூலி பேசினால், பரிசல்காரன் ""இஷ்டப்பட்டதைக் கொடுங்க!'' என்று சொல்லி ஏற்றி விடுவான். நடு ஆற்றிற்கு போன பிறகு தான். ""உங்களுக்கு நீச்சல் தெரியுமா?'' எனக் கேட்பான். அப்போது, அவனது கேள்வியைப் புரிந்து கொண்டு கூலி நிர்ணயமாகும். நீச்சல் தெரியும் என்றால் ஒரு கட்டணம். தெரியாது என்றால் இன்னொரு கட்டணம். அப்போது, அவன் கேட்டதைக் கொடுத்து தான் ஆக வேண்டும்.
அதுபோலத் தான் தாயாரும்! பெருமாள் அவளது பார்வையில் மயங்கிக் கிடக்கும் போது, அவள் ஜீவாத்மாவை கரைத்தேற்றுவது குறித்து பேசுவாள். நம் உலக வழக்கில், கணவனிடம் மனைவி இப்படி கேட்பது என்பது, ஏதாவது சுயநலம் கருதி! ஆனால், ஜீவாத்மாக்களின் நன்மை கருதி, தாயார் பெருமாளிடம் கேட்கிறாள். இதை தேக ரீதியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆத்மா, பரமாத்மா சம்பந்தம் என்று எண்ண வேண்டும். பரமாத்மாவிடம் அழகையும், ஜீவாத்மாவிடம் அருளையும் காட்டி அவள் திருத்துவாள்.
இப்போது, ராமாயணம் பக்கம் திரும்புகிறேன்.
ராமன் காட்டுக்குப் புறப்பட்டு விட்டான். சீதாதேவி உடன் வருவேன் என்கிறாள். ராமன் ஒத்துக்கொள்ளவில்லை.
உடனே சீதை,""உங்கள் மாமனார் மாமியாரிடம் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்,'' என்று வேகமாக ஒரு வார்த்தையை விட்டாள்.
அதோடு விட்டாளா! புருஷோத்தமனாகிய பகவானைப் பார்த்து, ""நீங்கள் என்னைக் காட்டுக்கு அழைத்துச் செல்லாவிட்டால், "ஆண் உடை உடுத்திய பெண்ணுக்கு என் பெண்ணைக் கொடுத்து ஏமாந்தோமே' என்று என் தந்தை ஜனகர் வருத்தப்படுவார்,'' என்றாள்.
அவ்வளவு தான்! இவளை அழைத்துக் கொண்டு போவதைத் தவிர வேறு வழியில்லை என்று ராமன் முடிவு செய்து விட்டார்.
அதோடு விட்டாளா! ""நீங்கள் காட்டுக்குப் போக வேண்டும் என்ற விஷயம் உங்களுக்கு இன்று தான் தெரியும். ஆனால், எனக்கு என் ஐந்து வயதிலேயே தெரியும். என் அப்பா, என் ஜாதகம் குறித்து ஜோதிடரிடம் பலன் பார்த்தார். நான் குணவானுக்கு வாழ்க்கைப்படுவேன், சக்கரவர்த்திக்கு வாழ்க்கைப்படுவேன், பெரிய நாட்டுக்கு ராணியாவேன்... என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந் தவர்...ஆனால்... என்று இழுத்தார்.
அந்த "ஆனால்' என்பது இடிவிழுந்தாற் போல் இருந்தது. ஏனெனில், "இவள் வனவாசம் போக வேண்டும்' என்றும் இருக்கிறது என்றார். எனவே, நான் அப்போதே காட்டுக்குப் போக மூட்டை கட்டி வைத்து விட்டேன். நான் ஏற்கனவே கிளம்பி விட்டேன். நீர் வேண்டுமானால், பின்னால் வாரும்,'' என்று சொல்லாக்குறையாக கிளம்பி விட்டாள் அவள்.
இந்த சமயத்தில் லட்சுமணன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான்.
""நானும் உன்னோடுவருவேன் அண்ணா,'' என்றான்.
""நீ இங்கிருந்து தாயார்களையும், தந்தையையும் கவனித்துக் கொள்,'' என்றார் ராமபிரான்.
அவனோ, ""அண்ணா! நீங்கள் சீதாபிராட்டியாரிடம் பேசிக்கொண்டிருந்த போது, என்னை அழைத்துச் செல்வதாக சொன்னீர்களே!'' என்றான்.
""அப்படி ஏதும் நான் சொல்லவில்லையே!'' என்ற ராமபிரானிடம்,""அண்ணா! நீங்கள் பிராட்டியாரிடம் பேசும் போது, பரதனை உன் கூடப்பிறந்த தம்பியாக நினைத்துக் கொள் என்றீர்கள். சத்ருகனனை பெற்ற மகன் போல் பார்த்துக் கொள்ள சொன்னீர்கள்.
கவுசல்யாவை தாயார் போலும், தசரதரை தந்தை போலும் கவனித்துக் கொள்ளச் சொன்னீர்கள். என்னை எப்படி நினைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதுவும் பிராட்டியிடம் சொல்லவில்லையே! இதிலிருந்தே புரிந்து கொள்ள மாட்டேனா! என்னை நீங்கள் அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என்று!'' என்று கேட்டான்.
ராமபிரானிடம் பதில் இல்லை.
எனவே, ரொம்பப் பெரியவர்கள் பேச்சில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களது பேச்சை பிறர் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் கழுத்தில் கத்தி வைக்குமளவு கூட அந்த பேச்சின் தன்மை போய் விடும். இருந்தாலும் ராமன் மறுத்தார். லட்சுமணனோ சீதாராமரின் திருவடிகளைப் பிடித்து, தன்னையும் அழைத்துச் செல்ல ஒப்புதல் பெற்றான்.
- இன்னும் ஆனந்திப்போம்
நன்றி - தினமலர்