வியாழன், 16 ஜனவரி, 2014

அர்ச்சனை வழிபாட்டை ஆரம்பித்து வைத்த ஆசார்யன் - கோமடம் மாதவாச்சாரியார்

பூவுலகில் நம்மாழ்வாரை முதல் ஆசார்யனாகக் கொண்டுதான் குரு பரம்பரையே தொடங்குகிறது. அப்படியானால் ஏனைய ஆழ்வார்கள்  ஆசார்யார்கள் ஆகமாட்டார்களா என்ற சந்தேகம் எழலாம். நமக்கு விடை தருகிறார், ஸ்ரீபராசர பட்டர். ‘எல்லா ஆழ்வார்களும் நம்மாழ்வாருக்குள்  அடக்கம்’ என்று ஒரு தனிப் பாடலில் குறிப்பிடுகிறார்: 

‘‘பூதம் ஸரச்ச மஹதாஹ்வய பட்டநாத  ஸ்ரீ பக்திசார குலசேகர - யோகிவாஹான் பக்தாங்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ரான் - ஸ்ரீமத் பராங்குச முனிம் - ப்ரணதோஸ்மி நித்யம்’’

அதாவது, ‘‘முதலாழ்வார்களான மூவரோடு, திரு மழிசைப்பிரான், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடிகள், திருப்பாணர், குலசேகரர், திருமங்கை மன்னன், மதுரகவிகள், ஸ்ரீராமானுஜர்  ஆகியவர்களோடு சேர்ந்த ஸ்ரீஸ்வாமி நம்மாழ்வாரை தினமும் வணங்கி வழிபடுகிறேன்,’’ என்று பொருள்.

ஆகையால், ஸ்ரீநம்மாழ்வரை அங்கி என்கிறார். அதாவது, மற்ற ஆழ்வார்களும், ஸ்ரீராமானுஜரும் இவருக்கு அங்கங்கள் என்பதாகப் பொருள். எப்படி  வேதமானது பகவானை அங்கி என்றும், ஏனைய தேவர்களை அங்கங்கள் என்றும் கூறுமோ, அப்படியே இங்கும் சொல்லப்பட்டிருப்பது குறிப்பிட த்தக்கதாகும். ஒரு சமயம்  ஸ்ரீநாதமுனிகள் திருக்குடந் தையிலுள்ள ஆராவமுதன் சந்நதிக்கு எழுந்தருளியபோது, அங்குள்ள அடியார்கள், ஸ்வாமி  நம்மாழ்வாரின் பத்து பாசுரங்களை ‘‘ஆராவமுதே அடியேனுடலம் நிற்பாலன்பாயே...’’ என்று தொடங்கி முடிவில் ‘‘குழலின் மலியச் சொன்ன  ஓராயிரத்துள் இப்பத்தும் மழலை தீரவல்லார் காமர்மானேய் நோக்கியர்க்கே’’ என்று பாடி முடிந்தவுடன் அவர்களை நோக்கினார். ‘‘உங்களுக்கு  ஆயிரம் பாடல்களும் தெரியுமோ?’’ என்று கேட்டார் நாதமுனிகள்.

அந்த அடியார்கள், ‘‘எமக்குத் தெரியாது. ஆனால், இந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தெரியும்’’ என்றனர். ‘‘அட, அப்படியானால், ஏனைய  தொள்ளா யிரத்துத் தொண்ணூறு பாடல்களும் எங்கே கிடைக்கும்?’’ என்று நாதமுனிகள் வினவினார். அவருக்குக் கிடைத்த பதில் வரை ஆச்சரிய த்தில் ஆழ்த்தியது: ‘‘யாரோ ஸ்ரீ நாதமுனிகள் என்றொருவர்வரப் போகிறாராம். இவர் நம்மாழ்வாரின் திருக் குறுகூருக்குச் சென்று, அங்கு எழுந்தரு ளியுள்ள ஸ்ரீஆதிப்பிரானை தரிசித்துவிட்டு, அங்குள்ள புளிய மரத்தடியில் எழுந்தருளியுள்ள ஸ்வாமி நம்மாழ்வாரைப் பிரார்த்தித்து ஆயிரம்     பாடல்களையும் கைவரப்பெற்று, உலகத்திற்கே பிரகாசத்தை அள்ளி வீசப் போகிறாராம்!’’

அந்த பதிலைக் கேட்டு நாதமுனிகள் அப்படியே நெகிழ்ந்துபோய்விட்டார். மறுகணமே, யோசிக்காமல் திருக்குறுகூர் நோக்கி நடந்தார்.ஆதிப்பிரானை  தரிசித்துவிட்டு, உடனேயே அதே வேகத்தில் ஸ்ரீ நம்மாழ்வாரை தரிசிக்க புளியமரத்தடிக்கு வந்தார். நம்மாழ்வார் மீது, அவரது சீடரான ஸ்ரீமதுரக  வியாழ்வார் பாடிய பத்துப் பாடல்களையும் கற்றுணர்ந்து 10000 முறை திரும்பத் திரும்பச் சொல்லி நம்மாழ்வாரின் கிருபைக்கு ஸ்ரீநாதமுனிகள் பாத் திரமானார். ‘‘என்ன வேண்டும்?’’ என்று ஸ்வாமி நம்மாழ்வார் அர்ச்சாவதார திருமேனியராகக் கேட்டார்.நாதமுனிகள் கண்ணீர் பெருக்கி, மெய்  சிலிர்த்து, ‘‘நீவீர் சாதித்த ஆயிரம் பாடல்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்,’’ என்று பிரார்த்தித்தார்.

உடனே  ஸ்ரீநம்மாழ்வார், தமது திருவாய் மொழியிலுள்ள ஆயிரம் பாடல்களையும் தந்து, மேலும் மூன்று பிரபந்தங்களாகிய திருவாசிரியம், பெரிய  திருவந்தாதி, திருவிருத்தம் ஆகியவற்றையும் அளித்தார். அதோடு ஏனைய ஆழ்வார்களின் பாடல்களையும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும்      அருளினார். இப்படிப் பேரருள் புரிந்ததற்காகவே, ஸ்வாமி நம்மாழ்வாரை இப்பூவுலகின் முதல் ஆசார்யராக கொள்கிறோம். வால்மீகி, வியாசர்  போன்றோர் வந்த சத் சம்பிரதாயத்திலேயே ஊன்றி ஞானத்தோடு திகழ்ந்தவர் நம்மாழ்வார். ‘மேலும் சொன்னால் விரோதமிது ஆகினும் சொல்லு வன் கேண்மினோ’ என்று உண்மையையே உரைத்தவர்.

தம் உணவு, போஷணைகள் எல்லாமே ஸ்ரீமன் நாராயணனால் அளிக்கப்பட்டவை; ‘உண்ணும் சோறும் பருகும் நீரும், தின்னும் வெற்றிலையுமெல் லாம் கண்ணன்’ என்றிருந்தார், இந்த ஆழ்வார். கிஞ்சித்தும் கர்வம் கொள்ளாதவர். ‘அடியேன் சிறிய ஞானத்தன்’ என்று தன்னை எளிமைப்படுத் திக்கொண்டவர். கர்மேந்திரிய சுகங்களை விட்டுவிட்டு எல்லாமே பகவான் என்றிருந்தார். ‘என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை சொல்  முடிவு காணேன். நான் சொல்வது என் சொல்லீரே,’ என்ற நிலையில் இருந்தார். தனக்கும், பிறர்க்கும் இதையே நினைத்து நினைத்து நெஞ்சுருகி,  ‘கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ’ என்ற பெருந்தன் மையுடன் விளங்கினார். இப்பெருந்தகையை  ‘தேவுமற்றறியேன் குறுகூர்
நம்பி பாலினின்னிசை பாடித் திரிவனே’ என்று போற்றினார்.

ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய வைணவ ரகசியங்கள்தான் எவை? மோட்சத்தில் இச்சை உடையவன் அறிய வேண்டிய ரகசியம் மூன்று என்கிறார்.  அவை: திருமந்திரம், த்வயம் (இரட்டை), சரம ச்லோகம். திருமந்திரத்தை பகவான் பதரிகாச்ரமத்தில் (பத்ரிநாத்) அருளினான். த்வயத்தை, பகவான்  தன்னுடைய விஷ்ணு லோகத்தில் ஸ்ரீமகாலக்ஷ் மிக்காக ஆதிசேஷன் மற்றும் கருடனுக்கு வெளியிட்டான். சரம ஸ்லோகத்தை குரு க்ஷேத்திரத்தில்  தேர்த்தட்டில் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் ரீதியில் இசைத்தான். இவை மூன்றும், ஒரு குருவின் அருகிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டிய  ரகசியங்கள். திருமந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிற திருவெட்டெழுத்தில், ‘ஓம்’ என்பது பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனுக்கும்  ஜீவாத்மாவுக்கும் உள்ள அநாதியான, சுவாமி-தாசன் உறவை அறிவிக்கிறது.

‘நமோ’, நான் என்கிற அகங்கார மமகாரங்களை ஒழிக்கும் சூட்சுமமும், ‘நாராயணா’, நாராயணனுக்கே அடிமை; அவனுக்கே கைங்கரியம் செய்ய  வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இரண்டாவதாக த்வயம், ‘ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நமஹ’ என்ற   தத்துவம். அதாவது, சரணாகதி அடைய விரும்புபவன், பிராட்டியின் மூலமாக பகவானைப் பற்றவேண்டும். இதையே நம்மாழ்வார், ‘உடனமர் காதல்  மகளிர் திருமகள், மண்மகள், ஆயர்மடமகள் என்றிவர் மூவர்’ என்னும் பாசுரத்தில் அறிவித்திருக்கிறார். மூன்றாவதான சரம ஸ்லோகம், எந்த தாத்பர்யத்தை வெளிப்படுத்துகிறது? ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: இந்த பகவத்கீதை ஸ்லோகத்தை தேர்த் தட்டிலே அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசித்தான். அதாவது, ‘‘மகான்களைப்போல எல்லா தர்மங்க¬ளயும் விட்டொழித்து என் ஒருவனையே சரணம் அடைவாயாக. நான் எல்லா பாவங் களிலிருந்தும் உன்னை விடுவிக்கிறேன்; மேலான மோட்சத்தை  அருள்கிறேன்,’’ என்கிறான்.
 
இந்தக் கருத்துகளை நம்மாழ்வாருடைய பாசுரங்களில் காணலாம். ‘உயர்வர உயர்நலம்...’ என்று தொடங்கி பல இடங்களில் நாராயணனை  விவரிக்கிறார். ‘ஓம்’ என்ற சப்தத்தை முதல் பாடலில் வலியுறுத்தி, ‘நாம் அவனுக்கே ஆட்செய்வோம்’ என்பதையும் ‘ஒழிவில் காலமெல்லாம்  உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேணும் நாம்’ என்று அருளி அதன் மூலம் திருமந்திரத்தை விளக்குகிறார். ‘கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்’ என்றும், ‘கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே’ என்றும் பாடி, சரணாகதி லட்சணமான சரம ஸ்லோகத்தின் தாத்பர்யத்தை வெளியிட்ட ருளினார். நாலாயிரமும் எதைக் கூற வருகின்றன?

முதலாயிரத்தில் அமைந்த திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, குலசேகர் பாடிய பெருமாள் திருமொழி, தொண்டரடிப்பொடிகள்  பாடிய திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமழிசைப்பிரான் பாடிய திருச்சந்த விருத்தம், திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் ஆகியவை  யாவும் ஓம் என்கிற பிரணவத்தின் அர்த்தமாகப் பாடப்பட்டவை. அதே ஆயிரத்தில் மதுரகவிகள் பாடிய ‘கண்ணினுண் சிறுத்தாம்பு’ என்பது  ‘நமஹ’ என்பதன் பொருளை விளங்கச் செய்வதாகும்.

இரண்டாம் ஆயிரத்தில் திருமங்கை மன்னன் பாடிய பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை ‘நாராயணாய’ என் பதன் பொருளை விளங்கச் செய்கிறது. மூன்றாவது ஆயிரமாகிய இயற்பா முழுவதுமே சரம ஸ்லோகத்தை விவரிக்கிறது. இதை தீர்க்க சரணாகதி  என்பார்கள், பெரியோர். நாலாவது ஆயிரத்தில் த்வயத்தையும், அர்த்த பஞ்சகத்தையும் விவரித்து அந்தாதியாக பாடியுள்ளார் ஸ்வாமி நம்மாழ்வார். ஆழ்வார்களின் பாடல்கள் மறைந்தபோதிலும், நம்மாழ்வார் ஒருவரே தீர்க்க தரிசனத்தால், இன்ன இன்ன பாடல்கள், இந்த இந்த ஆழ்வாரால்  பாடப்பட்டது என்று கூறி நாலாயிரத்தையும் அர்ச்சாவதார ரூபியாகவே மதுரகவிகளுக்கு சொன்னார். இப்போது பிரபந்தங்களைப் படிக்கவும்,  பாடவும், எண்ணி எண்ணி மகிழவும் கிடைத்திருக்கிற தென்றால், அதற்கு  நம்மாழ்வாரின் கருணைதான் காரணம்.

ஸ்வாமி நம்மாழ்வார் இவ்வாறு பிரபந்தங்களை நாதமுனிகளுக்கு அருளியதை மகான் எம்பார் நயமாக வர்ணிக்கிறார்: ‘நம்மாழ்வார் என்ற  காளமேகம், லட்சுமிநாதனெனும் கடலிலே புகுந்து கருணையாகிற நன்னீரை முகந்து மேலெழுந்து, கருமேகமாகி,  கர்ப்பவதிபோல் மெல்ல நகர்ந்து  நாதமுனி என்ற மலை உச்சியில் நாலாயிரத்தையும் மழையாகப் பொழிந்தது. அந்த மழை, உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி என்ற அருவிகள்  மூலமாக ஆளவந்தார் (யாமுநாச்சியர்) என்ற பெரிய ஆற்றையடைந்து, வீரநாராயணபுரத்தில் (வீராணம்), எம்பெருமானாராகிய (சுவாமி ராமானுஜன்)  ஏரியில் வந்து தேங்கி நிறைந்து நின்றது. அந்த ஏரியிலிருந்து புனித நீர் ராமானுஜரின் 74 சிஷ்யர்கள் (74 சிம்மாசன அதிபதிகள்) வழியாக  மக்களுக்குள் எப்போதும்  பாய்ந்து கொண்டேயிருக்கிறது.’’

‘வேதத்தின் உட்பொருளையெல்லாம் தம் நெஞ்சில் எம்பெருமான் நிலை நிறுத்தினான்’ (‘மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள், நிற்கப் பாடி என் னெஞ்சுள் நிறுத்தினான்’) என்று மிக குதூகலத்துடன் கூறுகிறார். இப்படி வேதங்களிலுள்ள அரிய பெரிய கருத்துகளை யாவரும் அறியும் வண்ணம்  இனிய எளிய தமிழ்ப் பாக்களால் பாடினார். இதை அனைவரும் கற்றுணர்ந்து ஊரும், நாடும், உலகமும்  தன்னைப் போலவே பகவானுடைய திரு நாமங்களையும் தார்கள் என்கிற குணநலன்களையும் எப்போதும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்பினார்.

இப்படிப் பல பெரு மைகளோடு விளங்கும் ஆழ்வாரைக் காண, ‘விண்ணாட்டவர் மூதுவர்’ என்னும்படியான நித்ய சூரிகளும், மஹரிஷிகளும், தேவர்களும், குறுகூருக்கு  வர, ஆழ்வார் அக்குழாத்துக்கும் சேர்த்து ‘பொலிக பொலிக பொலிக’ என்று பல்லாண்டு பாடி காப்பிட்டு மகிழ்ந்தார். ‘பொலிக...’ என்கிற பாசுர த்தின் மூலம் உலகைத் திருத்தி பகவான் திருவடியில் சேர்த்து வைக்கும்படியான ராமானுஜர் வரப் போகிறார் என்று பல இடங்களில் குறிப்பால்  உணர்த்தினார்.

‘அருளாழி வரிவண்டே’ என்று, ராமானுஜரை வண்டாக விளித்தே பாசுரத்தை அருளினார். இவரை ப்ரபன்ன ஜன கூடஸ்தர் என்றழைப்பர்.  பகவானை ஏழைப் பங்காளன் என்பதுபோல், அவனிடம் பக்தி செய்து உயர்ந்த சரணாகதியின் மூலம் அவனை அடைவதே ப்ரபத்தி மார்க்கமாகும்.  அப்படி உயர்ந்த பக்தியான சரணாகதி செய்த வர்களை ‘ப்ரபன்ன ஜனங்கள்’ என்றழைப்பார்கள்.  அவர்கள் எல்லோருக்கும் தலைவனாக ஸ்வாமி  நம்மாழ்வார் திகழ்வதால் அவரை ‘ப்ரபன்ன ஜன கூடஸ்தர்’ என்பார்கள்.

இப்போது திவ்ய தேச கோயில்களில் தெய்வத் திருமேனியை நாம் தரிசித்து பூஜித்து பக்தி செலுத்துகிறோமே, அந்த அர்ச்சராதி மார்க்கத்தை முதன்முதலாக உருவாக்கியவர் நம்மாழ்வார் என்றறியும்போது வியப்பால்  விழிகள் விரிகின்றன. ‘சூழ்விசும் பணி முகில் தூரியம் முழக்கின்’ முதலான பத்துப் பாடல்களில் அந்த மார்க்கத்தை அவர் விவரித்திருக்கிறார்.  வடமொழியிலுள்ள வேதத்தில் எப்படி அர்ச்சராதி மார்க்கம் விவரிக்கப்பட்டிருக்கிறதோ, அப்படியே இவரும் வெளியிட்டிருக்கிறார். தன்னுடைய  முப்பத்தைந்தாவது வயதில் ‘அந்தமில் பேரின்பத்து அடியரோடிருக்கும்படி’, அவாவற்று வீடு பேறு பெற்றார். 

நன்றி - தினகரன்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக