வியாழன், 16 ஜனவரி, 2014

நாயகியாய் மாறி நாயகனை நயந்த நம்மாழ்வார் - கோமடம் மாதவாச்சாரியார்

திருவாழ்மார்பனான எம்பெருமான் கோயில் கொண்டுள்ள திருவண்பரிசாரத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கை, தம் குழந்தை காரிமாறன்(நம்மாழ்வார்) சாதாரண குழந்தையைப் போல் பால், அமுது உண்ணக் காணாது மிகவும் வருத்தமுற்றாள். ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டுள்ள ஆதிபிரான் இக்குழந்தைக்கு மயர்வற மதிநலம் அருளியபடியால் பிறந்தநாள் முதல், சாதாரண குழந்தை போலல்லாமல், கோயிலிலுள்ள புளிய மரத்தடியில் 'பத்மாஸனோபவிஷ்டம்' என்கிறபடி பத்மாசனத்தில் அமர்ந்து எம்பெருமானின் தியானத்திலேயே இருந்தது. சதா சர்வ காலமும் பகவானின் சொரூபத்திலேயே தோய்ந்து கிடந்தது. 

சில காலத்திற்குப் பிறகுதான் மதுரகவியாழ்வார் மூலமாக பேசத் தொடங்கி நான்கு வேதத்தின் சாரமாக நான்கு பிரபந்தங்களை அருளினார் காரிமாறன். இவருடைய கிருஷ்ணானுபவம், இவரே கண்ணபிரானோ என்று வியக்கும் அளவுக்கு பக்தியில் உயர்ந்திருந்தார். சாம வேதத்தின் சாரமாக உள்ள திருவாய் மொழியின் ஆரம்பத்திலேயே கண்ணன் யசோதைப் பிராட்டியால் உரலில் கட்டப்பட்டதைக் கண்டு, சிந்தைமருண்டு, ''எத்திரம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே'' எனக் கூறி மயங்கி விழுந்தார்.

அப்படியே ஆறு மாத காலம் கிருஷ்ண மோகத்திலேயே கிடந்தார். பகவானைக் கட்ட யாரால்தான் முடியும்? யசோதைப் பிராட்டிக்கு தன் திருவயிற்றைக் காட்டி கட்டும்படி கண்ணன் செய்தது, அவள் செய்த பக்தியால்தானே! பகவானும் ''கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயனன்றோ!'' அதாவது, அவனாகவே கட்டுப்பட்டாலொழிய அவனை யாராலும் கட்ட முடியாது. அப்படி கட்டிய பிறகு, கயிற்றை அறுத்துக்கொண்டு வரத் ‘தெரியாமல்’ கண்ணபிரான் உரலினோடேயே இருந்தானே அந்தக் காட்சியில்தான் ஆழ்வார் நெஞ்சுருகிப் போனார்.

''நம் பந்தம் நம்மால் அறுக்க வொண்ணாதது போலவே, அவன் பந்தமும் அவனால் அறுக்க வொண்ணாது'' என்பர், பெரியோர். இதன் பொருள் என்னவெனில், நாம் இந்த சம்சாரமாகிய கடலில் கட்டுண்டு, கரை நம் கண்ணுக்குத் தெரியாததால் கரை சேர முடியாதபடிக்கு கிடக்கிறோம். அப்படியிருக்க, கிணற்றிலே விழுந்த ஒரு பூனை வெளியே வரத் தெரியாமல் தவிக்கும் காலத்தில், யாரேனும் ஒரு குடத்தை கயிற்றில் கட்டி அக்கிணற்றிலே இறக்கினால், அந்தப் பூனை குடத்தினுள் அமர்ந்து சுலபமாக வெளியே வருவதுபோல, பகவானாகிய குடமானது, நம் பக்தியாகிய கயிற்றிலே இட்டு குருநாதனால் இறக்கப்படும்போது நாம் சுலபமாக இக்கடலிலிருந்து வெளியே வந்துவிடலாமல்லவா!

அதாவது, நம் பந்தம் நம் முயற்சியால் அறுக்க வொண்ணாததாகும். இதன்படியே பகவான் பக்தனுக்காக இரங்கி வந்து விட்டானானால், நம் இதயத்தினுள் கட்டுப்பட்டு கிடப்பான். அப்படி கிடக்கும்போது அந்த பந்தத்தை அவனே அறுக்க வொண்ணாததாக இருப்பான். மார்வமென்பதோர் கோயிலமைத்து மாதவனென்னும் தெய்வமாக இதயத்துள் உறைவன். பக்தர்களின் பாதத்துளிக்கு ஆசைப்பட்டு அவர்களின் பின்னா லேயே பகவான் சதா சென்று கொண்டி ருப்பான்; அந்த பக்தர்களின் இதயத்தைவிட்டு நீங்கவே மாட்டான் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

இதைக் கண்டுதான் ஸ்வாமி நம்மாழ்வார் அப்படி மோகித்துக் கிடந்தார். நம்மாழ்வாரைப் பற்றி கூறுகையில் 'கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிரம்’’ என்பர், பெரியோர். த்ருஷ்ணா என்றால் அளவு கடந்த காதல், அன்பு, வேட்கை எனப்படும். அப்படியாயின் கிருஷ்ண த்ருஷ்ணா என்பதற்கு இருவகையான வியாக்கியானம் இட்டருள்வர் பெரியோர். 1. கிருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை என்றும் 2. க்ருஷ்ண த்ருஷ்ணை என்றும் கூறுவர். முதலில் கூறப்பட்டதன் கருத்து யாதெனில் கிருஷ்ணனிடத்தில் ஆழ்வார் தமக்குள்ள வேட்கையை பலவாறாக வெளிப்படுத்துகிறார்.

''கங்குலும் பகலும் கண் துயிலறியாள், கண்ண நீர் கைகளால் இறைக்கும், சங்கு சக்கரங்களென்று கைகூப்பும், தாமரைக் கண்ணென்றே தளரும், எங்கனே தரிக்கேன் உன்னைவிட்டென்றும், இருநிலம் கைதுழாவிருக்கும், செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய், இவன் திறந்தென் செய்கின்றாயே’’ என்று தன் பாசுரம் வாயிலாகத் தெரிவிக்கிறார். அதாவது, பராங்குச நாயகியாகிய நம்மாழ்வார் பெரிய பெருமாளிடத்தில் (திருவரங்கம்) மோகித்துக் கிடந்தபடி, ‘இந்த நாயகி விஷயமாக என்ன செய்ய நீர் எண்ணுகின்றீர்?’ என்று தாயாராகத் தன்னை உருவகித்துக்கொண்டு கேட்கும் பாணியில், தமக்குள்ள அவாவை, வேட்கையை, காதலை வெளிப்படுத்துகிறார்.

''கங்குலும் பகலும்'' (இரவும் பகலும்) விடாது பக்தி செய்து
''அழுது அழுது அலமந்தம் மாவழுங்க கிடக்கிறார். அப்படி ‘அழுத கண்ண நீர் கைகளால் இறைக்கும்’ என்கிறபடி தம் கைகளால் எடுத்து எடுத்து இறைத்து அதுவே தாமிரபரணி நதியாக மாறிவிட்டது
என்று கூறும்படி இவருக்கு பகவானிடத்தில்
பித்து உண்டாகியது. தான் உடனே அவனோடு
சேர மாட்டோமா என்கிற தாபமும் உண்டானது.

இரண்டாவதன் பொருளான, ''க்ருஷ்ண த்ருஷ்ணை என்றால் கிருஷ்ணனுக்கு நம்மாழ்வாரிடத்தில் அளவு கடந்த காதல், அன்பு, வேட்கை, அவா உண்டாயிற்று. அவரை உடனே பார்க்க எண்ணி, காட்சி கொடுத்து மயர்வற மதிநலமருளி, தானே நம்மாழ்வாரோ என்று எண்ணும்படி அவரோடு இரண்டறக் கலந்த உணர்வாகப் பொருள் உரைப்பார்கள். இவர் புளிய மரத்தடியிலேயே கிடக்க, எல்லா திவ்யதேசத்து எம்பெருமான்களும், ஆழ்வார் திருநகரிக்கு வந்து காட்சி கொடுத்து, ‘என் திவ்யதேசத்தை பாடு’ எனக் கேட்டு பாடலை வாங்கிக் கொண்டார்கள். ஆக, பகவானுக்கும் நம்மாழ்வாரிடம் ஆராத காதல் உண்டானது.

இதை ஸ்ரீமத் பாகவதத்தில் அம்பரீஷ சரிதத்தில், பகவானே துர்வாச மகரிஷிக்கு விளக்கியுள்ளார். ‘சாதுக்களின் இதயத்தில் என்றும் நீங்காமல் தான் உறைகிறேன். அவ்வண்ணமே என் இதயத்தில் சாதுக்கள் உறைகின்றனர். எங்கள் உறவு யாராலும் பிரிக்க முடியாத பந்தம்’ என்கிறார். அதாவது, பகவானின் இருதயமே வேதம். ஆனால், பகவானோ, ‘என் இதயத்தில் சாதுக்கள் உறைகிறார்கள்’ என்கிறார். அப்படியென்றால், சாதுக்களே வேத ஸ்வரூபம்தானே! அதனால்தான் ஸ்வாமி நம்மாழ்வாருக்கு ''அனந்தா வை வேதா'' என்கிறபடி நான்கு வேதமும் அனந்தமானது.

அந்த வேதங்களே நான்கு பிரபந்தங்களாக உதித்தது. நான்கு வேதங்களுக்குள் சாம வேதமாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் அருளியதால்தானோ என்னவோ, சாமவேத சாரமான திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரமும் ஆழ்வார் வாக்கில் ஈரத் தமிழாக வெளிவந்தன. வேதம் என்ற ஒன்று உண்டானால் அதற்கு முன்பாக ப்ரணவம் என்று சொல்லக்கூடிய ஓம் என்ற சொல் வேண்டுமே! மேலும் ஓம் என்பது அ, உ, ம என்று மூன்று எழுத்தாக விரியும். இதை முதற்சொல்லாக வைத்து தம் பிரபந்தமாகிய திருவாய்மொழியை ஆரம்பித்துள்ளார், நம்மாழ்வார்.

''உயர்வற..........
மயர்வற மதிநலம்..........
அயர்வறும்............
துயரறு சுடரடி...........  (முதல் பாட்டு)

இங்கு சற்று உ, ம, அ என்று மாறுபட அமைந்திருக்கிறது. 'அ' என்ற எழுத்து பகவானை (விஷ்ணுவை) குறிக்கும். 'உ' என்ற எழுத்து குருநாதனைக் (ஆசார்யனை) குறிக்கும். 'ம' என்ற எழுத்து சாதாரண மனி தனைக் (சேதனனை) குறிக்கும். முதலில் 'உயர்வற' என்று ஆரம்பித்து ஆசார்ய சம்பந்தத்தைக் கூறுகிறார். அடுத்து, ''மயர்வற'' என்று சிஷ்ய ஸம்பந்தத்தைக் (மனிதனை) கூறி, அதன் பிறகு முதலில் கூறப்பட்ட ஆசார்யன், பின்னால் சொல்லப்பட்ட சிஷ்யனை பகவானோடு சேர்த்து வைப் பதால் அயர்வறும் என்று கூறி பகவானைச் சுட்டிக்காட்டி அப்படிப்பட்ட பகவானின் திருவடியைத் தொழுவோம் வாரீர் (துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே) என்று சொல்லி, தம் முதல் பாசுரத்திலேயே சரணாகதி தத்துவத்தை வெளியிட்டருளியுள்ளார்.

ஸ்வாமி நம்மாழ்வாரைப் பொதுவாகவே 'பராங்குச நாயகி' என்றே வழங்குவர். (ஸ்வாமி திருமங்கையாழ்வாரை 'பரகால நாயகி' என்றே கூறுவர்.) ''மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற அவதரித்த'' என்று உபதேச ரத்தினமாலை எழுதிய மணவாள மாமுனிகள் அருளியுள்ளார். மாறனாகிய நம்மாழ்வார் நான்கு மறையை தமிழில் ஓதினார். (திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி). ஆனால் திருமங்கையாழ்வாரோ வேதத்திற்கு ஆறு அங்கம்போல, ஆறு திவ்ய பிரபந்தங்களை அருளியுள்ளார். அவை:

பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருவெழுக் கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். நம்மாழ்வார் ஏன் தன்னை நாயகியாக பாவித்துக்கொள்ள வேண்டும்? மறைகள் பகவானை ஒரு புருஷன், அவனே எல்லோருக்கும் நாதன், நாயகன் என்றெல்லாம் வர்ணித்து மகிழ்கின்றன. அப்படிப்பட்ட நாயகனை, நாயகி பாவத்தில் அனுபவிப்பதே சாலச் சிறந்தது என்பதற்காகவே தலைவி பாடுவதாகவே பாசுரங்களை அருளியுள்ளார் நம்மாழ்வார். 

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக