திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார்திருநகரி என்கிற ஊர் உள்ளது. இதைச் சுற்றி ஒன்பது கோயில்கள் உள்ளன. நம்மாழ்வாராலேயே பாடப்பெற்று, இன்றும் 'நவ திருப்பதி' என்ற பெயரோடு பிரசித்தமாக விளங்குகின்றன. இந்த ஆழ்வார் திருநகரியானது குருகாபுரி, திருநகரி என்றே வழங்கலாயிற்று. 'குரு' என்ற சொல்லுக்கு சங்கு என்றும், நாரை என்றும், குருக்கத்தி மலர் என்றும் பல பொருட்கள் உள்ளன. மேலும், சங்கு வடிவம் கொண்ட சங்க முனிவர் என்பார் இருந்த தலமாதலால் குருகூர் என வழங்குவர். இப்படி பெருமை வாய்ந்த தலத்தில் காரியார் என்ற வேளாளர் குல வைணவத் திலகர், திருமாலை நெறிதவறாது வழிபட்டு வந்தார். இவரது தந்தை பொற்காரி, 'திருவண்பரிசாரம்' என்ற திவ்யதேசத்திலுள்ள உடையநங்கை என் பவளை தன் மகனான காரியாருக்கு மணமுடித்து வைத்தார். பின்னர் வைகுந்தம் அடைந்தார்.
காரியாரும், உடைய நங்கையும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். நீதிநெறி வழுவாது வாழ்வாங்கு வாழ்ந்து திருமாலே கதி என்று கிடந்தனர். காலங்கள் செல்ல செல்ல தமக்கு இன்னும் மகப்பேறு இல்லையே என்று வருந்தினர். இவ்விருவரும் திருமாலை வணங்கி வருகையில், திருக்குறுங் குடியிலுள்ள வாமன நம்பியை வேண்டினால் மகப்பேறு கிட்டும் என்று ஓர் அசரீரி ஒலித்தது. உடனே, அந்த திவ்யதேசத்திற்கு ஏகி வாமன நம்பியை உளமாற வழிபட்டனர். பகவானும் ‘நாமே உமக்கு புத்திரனாகப் பிறப்போம்’ என்று கூறி ஆசீர்வதித்தார். அவர்கள் பேரானந்தம் அடைந்து தம் ஊ ருக்குப் புறப்பட்டனர்.
உபயநங்கை கர்ப்பம் தரித்தாள். பத்து மாதம் கடந்தபிறகு, சூரிய குலத்து ராமன் போலவும், சந்திர குலத்து கண்ணபிரான் போலவும், இந்த குரு கையார் குலத்தின் ஒளிவிளக்காக ஒரு குழந்தை தோன்றிற்று. காரியார் குழந்தைக்குக் காரிமாறன் என்று பெயரிட்டார். பிறந்த அந்தக் கணமே சடம் என்கிற மாயையை கோபித்துக் கொண்டே அவதரித்தவர் என்பதால் இக்குழந்தைக்கு சடகோபர் என்கிற திருநாமமும் உண்டு.
''ராதே கலிதினே லாபே வைசாகே காவ்யவாஸரே!
லக்னே கர்க்கடகே ஸுத தநயம் நாதநாயிகா||''
- என்று ஒரு ஸ்லோகம் 'திவ்ய சூரி சரிதம்' என்கிற புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் ‘லாபே’ என்றால் நாற்பத்து மூன்று என்று பொருள். அதாவது,‘‘கலியுகம் பிறந்து 43ம் நாளில், வசந்த ருதுவில், ப்ரமாதி வருடத்தில், வைகாசி மாதம், சுக்ல பட்சத்தில் சதுர்த்தசியில் விசாக நட்சத்திர த்தோடு கூடிய வெள்ளிக் கிழமையில், ''ப்ரபன்ன ஜன கூடத்தர்'' என்று சொல்லக்கூடிய நம்மாழ்வார் தோன்றினார் என்று வர்ணிக்கிறது. சுவாமி மணவாள மாமுனிகள் என்ற வைணவப் பெரியார் தம் நூலாகிய 'உபதேச ரத்தின மாலை' நம்மாழ்வாரைப் பற்றி கூறுகையில், ''உண்டோ, வைகாசி விசாகத்துக்குக் கொப்பொரு நாள்? உண்டோ, சடகோபர்க் கொப்பொருவர்? திருவாழ் மொழிக்கொப்பு தென்குருகைக்குண்டோ? உண்டோ ஒப்பார்தனிலொக்குமூர்'' என்று வியக்கிறது.
''சடாரிம் ஸைர்யபம் பஜே'’’ என்றே இவரைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன. ‘சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்ஸேனரின் அம்சமாக அவதரித்த சடகோபரை உபாஸிக்கிறேன்’ என்று அதற்குப் பொருள். ஆசார்யர்களில் தலைவரான பிள்ளை லோகாசார்யாரின் தம்பியான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற ஒரு மஹான் ‘ஆசார்ய ஹ்ருதயம்’ என்கிற நூலை எழுதியருளியிருக்கிறார். இந்த நூலில் ஸ்வாமி நம்மாழ்வாரின் அவதார ரகசியத்தை பின்வருமாறு கூறுகிறார்.
'அத்ரி ஜமதக்னி பங்க்திரத வஸுநந்த
ஸுநுவானுடைய யுக வர்ணக்ரமாவதாரமோ?
வ்யாசாதிவதாவேசமோ? மூதுவர் கரைகண்டோர்
சீரியரிலே ஒருவரோ? முன்னம் நோற்ற
அனந்தன்மேல் புண்ணியங்கள் பலித்தவரோ
என்று சங்கிப்பர்கள்''
-என்று அருளியுள்ளார். அதாவது, ''ஒவ்வொரு யுகம்தோறும் எம்பெருமான் அவதரித்தானே, அதேபோல கலியுகத்தில் அந்தப் பெருமாளே ஸ்வாமி நம்மாழ்வாராக அவதரித்தாரோ? நான்மறைகளை முறைப்படுத்தி வெளியிட்ட வியாசராக அவதரித்ததுபோல, ஸ்ரீமன் நாராயணன் வேளாள குலத்தில் உதித்த இந்த நம்மாழ்வாரிடம் ஆலோசித்து மீண்டும் தமிழ் மறையை வெளிப்படுத்தினானோ? வைகுண்டத்திலுள்ள விண்ணாட்டவர் மூதுவராகிய நி த்ய முக்தர்களில் ஒருவரோ? இப்படி யாருமல்லாமல், முன் ஜென்மங்களில் பல நற்பயன்கள் காரணமாக திரட்டியதின் விளைவாய் இப்படி அவதரித் தாரோ? வைகுண்டப் பெருமான் பாம்பணைப் பள்ளி கொள்ளுமிடத்து தன்னுடைய கடாட்சத்தால், ஒரு நித்ய ஸம்ஸாரியை நித்ய ஸூரியாக்கினாரோ என்றெல்லாம் வியாக்கியானம் சொல்வார்கள்.
ஏனெனில், உண்மையில் ஸ்வாமி நம்மாழ்வாரும் நித்ய ஸூரிகளில் ஒருவர் அல்ல, நம்மைப்போல் ஒரு சம்சாரியே அதாவது, பூமியில் வாழ்பவர் ஆவார். இந்த சம்சாரி, எந்தவித காரணமுமின்றி, எதிர்பார்ப்புமின்றி திருவாய்மொழி போன்றதொரு தமிழ்மறையை அருளிச் செய்தார். அப்படியொரு சம்சாரிக்கு பகவான் மயர்வற மதிநலம் அருளிளான் என்றால் அது பகவானுக்கும் பெருமைதானே! ஆக, சாதாரண நித்ய சம்சாரிகளில் சிலரை எம்பெருமான் விசேஷ அனுக்கிரஹம் செய்து அவர்களை ஆழ்வார்களாக்கி, அவர்களைக் கொண்டு இவ்வுலகை உய்விக்க திருவுள்ளம் கொண்டான்.
இப்படி பற்பல பெருமைகளை கொண்டவரே நம்மாழ்வார். இவர் அவதரித்தது முதல் அழாமல், தாய்ப்பால் அருந்தாமல் கிடந்தார். கவலைப்பட்ட பெற்றோர், இவர் இப்படி உள்ளாரே, பசிக்கு தாய்ப்பால் கூட உண்ணாமல் இருந்தால் உடல்நலம் பாதிக்காதா என்று பயந்து திருமாலின் சந்நதியில் இட்டனர். ஆழ்வார்திருநகரியில் உள்ள எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு கருணையுடன் அவரை நோக்க, இந்தக் குழந்தை மெல்ல நகர்ந்து ஒரு புளிய மரத்தடியில் சென்று உட்கார்ந்து கொண்டது. பகவானை மழை, வெயிலிலிருந்து ஆதிசேஷன் எப்படி காப்பாரோ அதேபோல் இந்த குழந் தையை புளியமரமே காப்பாற்றிற்று. அதாவது, ஆதிசேஷனே இந்த மரத்திற்குள் ஆவேசித்து இந்த ஆழ்வாரை காப்பற்றினார் என்றே
கொள்ள வேண்டும்.
இப்படியிருக்கையில், மதுரகவிகள் என்ற மற்றுமொரு ஆழ்வார், ஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள 'திருக்கோளூர்' என்கிற திவ்யதேசத்தில் அவதரித் தார். இவருடைய இன்கவிகள் தேன் சொட்டுவதுபோல் இருக்குமாதலால் இவரை மதுரகவிகள் என்றே கொண்டாடினர். அந்த மதுரகவியாழ்வார் ஒரு சமயம் வடநாட்டு திவ்யதேச யாத்திரைக்குச் சென்றார். முக்தியளிக்கும் நகரங்களில் கீர்த்தி பெற்ற திருஅயோத்தி மாநகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசீதாராமனை தரிசித்தார். அச்சமயத்தில் தென்திசையில் பெரிய அக்னிப் பிழம்பு ஒன்று பெரிய தேஜஸாக தோன்ற அதைப் பார்க்க எண்ணி அதன ருகில் சென்றார். அதுவோ தென்திசை நோக்கி நகர்ந்து கொண்டே சென்றது. அவரும் அதைத் தொடர்ந்தார்.
அந்த தேஜஸானது தமிழகத்திலுள்ள தன்னுடைய ஊர்ப் பக்கம் சென்றதால் ஆச்சரியம் கொண்டு, ஆவலுடன் அதன் பின்னேயே சென்றார். தன் ஊ ருக்கு அருகிலுள்ள திருநகரியில் சென்று அங்கு கோயில் கொண்டுள்ள எம்பெருமானின் சந்நதியிலுள்ள புளிய மரத்தடியில் அது சென்று மறைந் தபோது அப்படியே திகைத்து நின்றுவிட்டார். அங்கு சென்ற மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரைக் கண்டார்; பகவானையே கண்டதாக எண்ணி மகிழ்ந்தார். நம்மாழ்வார் கண்களை மூடிக் கொண்டு எதுவும் பேசாமல் இருக்கவே, மதுரகவிகளும், இவர் பேச்சிழந்தவரோ என்ற சந்தேகத்துடன் அதை சோதித்துப் பார்க்க, ஒரு சிறு கல்லை இவர் மீது வீசினார்.
நம்மாழ்வார் மேல் அக்கல் பட்டவுடன் தியானத்திலிருந்த ஆழ்வார், மெல்ல கண் திறந்து பார்த்தார். அவர் பேசுவாரோ என்பதையும் சோதித்தறிய, ''செத்ததின் வயிற்றிலே சிறியது பிறந்தால் அது எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’’ என்று கேட்டார். அதாவது, அறிவற்ற உடலோடு அணு பரிமாணமான ஆத்மாவுக்குத் தொடர்பு உண்டானால், அந்த ஆத்மா எதை அனுபவித்துக் கொண்டு எதைப் பற்றாகக் கொண்டு வாழும் என்று வினவ, உடனே நம்மாழ்வாரும், ''அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்'' என்று கூறினார்.
அதாவது, அதிலிருக்கும் இன்ப துன்பங்களையே அனுபவித்துக் கொண்டு அவ்வுடலையே பற்றியிருக்கும் என்று பொருள். இதைக் கேட்ட மதுரகவிகள் மிகமிக இன்புற்றார். இவர் ஞானிதான், மகான்தான் என்று போற்றிப் புகழ்ந்து, நம்மாழ்வாரின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்கினார். இவரையே தனக்கு எல்லாமுமாகக் கொண்டு கைங்கரியம் செய்து வந்தார். இந்த சமயத்தில்தான் சுவாமி நம்மாழ்வார் நான்கு வேதங்களுக்கு ஈடாக நான்கு தமிழ் மறைகளை அருளினார். ரிக்வேத சாரமாக திரு விருத் தத்தையும், யஜுர் வேத சாரமாக திரு வாசிரியத்தையும், சாம வேத சாரமாக திரு வாய் மொழியையும், அதர்வண வேத சாரமாக பெரிய திருவந்தாதியையும் அருளிச் செய்தார்.
இதோடு நில்லாமல் இவற்றின் தேறிய பொருளை மதுர கவியாழ்வார்க்கு விரித்து ரைத்தார். மதுர கவியாழ்வாரும், அவை எல்லாவற்றையும் பட்டோலை செய்து கொண்டார். அதன்பிறகு மதுர கவியாழ்வார் சுவாமி நம்மாழ்வார் விஷயமாக ''கண்ணினுண் சிறுத்தாம்பு'' என்று ஆரம்பித்து பத்து பாடல்களைப் பாடினார். அதன் தேறிய பொருள் என்னவெனில், ஒருவனுக்கு தன் ஆசார்யனான குருவைத் தவிர வேறொரு தெய்வம் கிடையாது என் பதாகும். ‘தேவுமற்றறியேன் குருகூர் நம்பி’ என்று பாடிப்பாடி மகிழ்ந்தார். ஆம், சுவாமி தேசிகனும், தன்னுடைய வடமொழி ஸ்லோகங்கள் வாயிலாக இப்பொருள்பட, ‘‘ஆசார்யாத் இஹ ஸமதிகான் அன்யான் நமன்யாமஹே'' என்று எழுதியிருக்கிறார். ‘நம் குருவைத் தவிர மேலான தெய்வம் கிடையாது, நாம் அறியோம்’ என்று பாடினார்.
நன்றி - தினகரன்