வியாழன், 16 ஜனவரி, 2014

திருடிய பொருட்களால் திருமால் சேவை - கோமடம் மாதவாச்சாரியார்

மன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் திருவரங்கப் பெருஞ் செல்வரானார்க்கு பல்வேறு கைங்கர்யங்களை செய்து வந்தார். இவர் ஒரு சமயம்  சோழநாட்டுத் திருப்பதிகளை (சிதம்பரம் முதல் திருவரங்கம் ஈறான 40 திவ்ய தேசங்கள்) மங்களாசாசனம் செய்து வருகையில் சீர்காழியில், இவரு டைய சிஷ்யர்கள் வழக்கப்படி, ‘‘நாலுகவிப் பெருமாள் வந்தார், அருள்மாரி வந்தார், அரட்டமுக்கி வந்தார், அடையார்சீயம் வந்தார், ஆலிநாடர் வந் தார், மங்கை வேந்தன் வந்தார், பரகாலன் வந்தார்’’ என்று திருமங்கையாருக்கான விருதுகளை முழங்கிக்கொண்டு சென்றார்கள். அப்போது அவ்வூரில் இருந்த திருஞானசம்பந்த நாயனாரின் அடியார்கள் அவர்களைத் தடுத்தனர். 

‘‘எங்கள் நாயனார் இருக்குமிடத்தில் நீங்கள் ஏனையோருக்கு விருது  முழங்கிச் செல்லலாகாது’’ என்றனர். உடனே ஆழ்வாரும், ‘‘அப்படியாயின், அந்த நாயனாருடன் விவாதத்தில் ஈடுபடுவோம்’’ என்று மறுமொழி கூறினார். பிறகு, சீர்காழியில் வைணவ குலத்தில் உதித்த ஒரு வைஷ்ணவ அம்மையார் கொடுத்த வெண்ணெயை உண்ட தாடாளப் பெருமானை (காழிச்சீராம விண்ணகரப் பெருமாள்) எழுந் தருள்வித்துக்கொண்டு நாயனார் இருக்குமிடம் சென்றார், ஆழ்வார். திருஞானசம்பந்தர் ஒரு கவி சொல்ல, திருமங்கையாழ்வார் அதில் பல குற்றங் குறைகளை கூறினார்.

‘‘அப்படியானால் நீவிர் ஒரு கவி சொல்லும்,’’ என்று நாயனார் சவால் விடுக்க, ஆழ்வாரும், காழிச்சீராம விண்ணகரப் பெருமானை குறித்து ‘‘ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி’’ என்று  தொடங்கி, பத்துபாட்டுகள் அருளிச் செய்தார். கடைசிப் பாசுரத்தில் விஷ்ணுதாசன் என்ற அர்த்தத்தில் அகம்பாவமே இல்லாமல், ‘‘ஆலிநாடன், அ ருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்கு மலர்க்குழலியர்வேள், மங்கை வேந்தன், கொற்றவேல், பரகாலன், கலியன் சொன்ன சங்கமுகத்  தமிழ்மாலை பத்தும் வல்லார், தடங்கடல் சூழ் உலகுக்கு தலைவர் தாமே’’ என்று அருளிச் செய்தார்.

இதைக்கேட்ட திருஞானசம்பந்தர் மறுமொழி ஏதும் கூறாமல், ‘‘உமக்கு இவ்விருதுகளெல்லாம் பொருந்தும்’’ என்று ஆழ்வாரை வியந்து, தம்மிடமுள்ள  வேலாயுதத்தை காணிக்கையாக அளித்தார். சீர்காழிக்கு அருகிலுள்ள, திருவாலி திருநகரி திவ்ய தேசத்திற்குச் சென்றால் இன்றும் வேல் கொண்ட ஆழ்வாரை தரிசிக்கலாம். திருவரங்கச் செல்வனாரான அழகிய மணவாளனுக்கு விமானம், மண்டபம், கோபுரம், மதில் ஆகியவற்றை உருவாக்கும் கைங்கர்யங்களை செய்யத் திருவுள்ளம் கொண்டார் ஆழ்வார். அதற்காக திருநாகையில் (நாகப்பட்டினம்) உள்ள புத்த விகாரத்திலிருந்த தங்க புத்த பிரதிமையை, அந்த  சேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள உறுதி பூண்டார்.

அவர் தம் பரிவாரங்களுடன் புறப்பட்டு நாகப்பட்டினம் அடைந்து விசித்திரமான  சிற்ப  வேலைகளையுடைய புத்த விகாரத்தைக் கண்டார். அதனுள் நுழைவதற்கு எங்கும் வழி காணாது தவித்தார். வெளியே சுற்றி வந்தபடி அந்த ஆலயம்  முழுவதையும் ஆராய்ந்து பார்த்தார். ஆலய சிகரத்தில் சக்கர உருவிலுள்ள ஒரு யந்திரம் இடைவிடாது சுழன்று கொண்டிருந்தது. அதை நிறுத்தினால்  அந்த சிகரம் வழியாக உள்ளே செல்ல இயலும் என்று ஊகித்தார். பல வாழைத் தண்டுகளைக் கொண்டுவந்து சிறுசிறு துண்டுகளாக்கினார். அவற்றை  அச்சக்கரத்தில் நுழைத்தார். தண்டுகளின் நூல்கள் நடுவில் சுற்றிக் கொண்டதால் அந்தச் சக்கரப் பொறி அசையாமல் நின்று விட்டது.

அதற்குப்பின் தமது சீடர்களுள் ஒருவரை அவ்வழியாக ஆலயத்தினுள் இறங்கச் சொல்லி விக்ரகத்தை எடுத்து வரச் செய்தார். அந்த சீடரும் அவ்வாறே  கவர முயற்சித்தபோது, அந்த பிம்பம் தன் மந்திர பலத்தால் அவர் கைக்குச் சிக்காமல் அந்த ஆலயம் முழுவதும் திரிந்து ஓடத் தொடங்கியது.  ஆனால், ஒரு கட்டத்தில், ஆழ்வாரின் அருளால் சீடர் கரம் பட, விக்ரகத்தின் சக்தி குன்றத் தொடங்கியது. தன் சக்தி குன்றியதும், அந்த புத்த உரு வம் பேசத் தொடங்கியது. ‘‘ஈயத்தாலாகாதோ, இரும்பினாலாகாதோ, பூயத்தால் மிக்கதொரு பூதத்தாலாகாதோ, தேய்த்தேய்பித்தளை நற்செம்புகளாலாகாதோ, மாயப்பொன் வேணுமோ மதித்தென்னைப் பண்ணுகைக்கே’’ என்று அரற்றியபடி கீழே விழுந்தது.

பின்பு அந்த சீடர், அந்த  பொற்பிரதிமையை எடுத்துக் கொண்டு வந்து குருநாதர், திருமங்கையாழ்வாரிடம் அளித்தார். அதைப் பாதுகாப்பாக, இரவோடு இரவாக, நாகப்பட்டின த்திலிருந்து எடுத்துச் சென்றார். விடியும் சமயத்தில் திருக்கண்ணங்குடி திவ்யதேசத்தை அடைந்தார். அங்கே உழப்பட்டு சேறாகியிருந்த ஒரு வயலில்  அந்த தங்க விக்ரகத்தைப் புதைத்து வைத்தார். தன் சீடர்களுடன் அருகிலிருந்த உறங்காப் புளி மரத்தடியில் தங்கினார். பொழுது விடிந்தவுடன் வயலுக்குச் சொந்தக்காரர், வயலில் நடுவதற்காக நாற்றுச் சுமையை எடுத்துக்கொண்டு வந்தார். அவரைப் பார்த்த ஆழ்வார் அவரைத் தடுத்தார். ‘‘இந்த வயலில் நீங்கள் உழக் கூடாது. காரணம், இது எங்கள் பாட்டன் வயல், எங்கள் சொத்து’’ என வாதிட்டார்.

இது கேட்டுத் திடுக்கிட்ட வயலுக்குச் சொந்தக்காரர் அவர் வாதத்தை மறுத்து அந்த வயல் தனக்குச் சொந்தமானதுதான் என்று அறுதியிட்டுக் கூறினார்.
உடனே திருமங்கையாழ்வார், ‘‘இந்த நிலம் எனக்குச் சொந்தம் என்பதை நிரூபிக்கும் பத்திரத்தை நான் நாளைக்குக் கொண்டு வருகிறேன். அந்தப்  பத்திரம் தவறானதாக இருந்தால் இந்த நிலம் உனக்கே சொந்தமாகும்’’ என்று கூற, அவரும் சம்மதித்து அன்றைக்கு வயலில் வேலை செய்யாமல்  திரும்பிச் சென்றார். நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆழ்வார். தங்கமய புத்தரைக் கவர்ந்து வந்து, அவர் பொருட்டு ஒரு பொய்யையும் சொல்லி, பெருமாள் சேவையை  நிறைவேற்ற நினைத்த அவருக்கு, ஏற்படவிருந்த மிகப் பெரிய தடை நீங்கியது! பிறகு அவர் புதைக்கப்பட்ட பொன் விக்ரகத்தை எடுத்துக் கொண்டு  ஸ்ரீரங்கம் சென்று அங்கே உருக்கி விற்றனர். இப்படி உருக்கப்பட்ட தங்கத்தை அவர் எப்படிப் பயன்படுத்தினார்?

‘‘ஜிதபாஹ்ய ஜிராதி மணி ப்ரதிமா அபி
வைதிகயந்நிவ ரங்கபுரே
மணிமண்டப வப்ரகணான் விததே
பரகாலகவி: ப்ரணமே மஹிதான்’’

என்ற ஸ்ரீரங்கராஜஸ்தவம் என்ற ஸ்லோகத்தில் பராசர பட்டர் வர்ணிக்கிறார். அதாவது, ‘‘சமணர் முதலோனோரின் ரத்தினம், பொன்னாலான  பிம்பங்களை தம் தோள் வலிமையால் வென்று கொண்டு வந்து மணி மண்டபங்களையும், திருமதில்களையும் திருவரங்கத்தில் நியமித்த  பரகாலகவியான திருமங்கையாழ்வாரை வணங்குகிறோம்’’ என்று பொருள். இவ்வாறு பொன்விக்ரக பொருட்களைக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் பல திரு ப்பணிகளைச் செய்தார். மதில் சுவர் கட்டி வந்தபோது, தொண்டரடிப்பொடியாழ்வார் திருமால் கைங்கர்யத்துக்காக அமைத்த நந்தவனம் குறுக்கிட்டது.  அவ்வாழ்வாரின் பக்தி ஞானத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், மதில் சுவரை அந்தத் தோட்டத்துக்குக் குறுக்காகக் கட்டாமல், வளைத்துச் சென்று,  நந்தவனம் சிறிதும் பாதிக்கப்படாதவகையில் அமைத்தார்.

திவ்ய தேசங்களுக்கு மங்களாசாசனம் செய்து பதிகம் பாடி வருகையில் ‘‘பெரும்புறக் கடலை’’ என்று தொடங்கிய திருக்கண்ணமங்கை பதிகத்தை  ஆழ்ந்த பொருள் பொதிந்த அடுக்கு மொழிகளாலே அழகுறப் பாடி முடித்தார், திருமங்கையாழ்வார். அந்தப் பொருளை அறிய வேண்டும் என்று தி ருக்கண்ணமங்கை எம்பெருமானிடமே தெரிவித்தார்: ‘‘வெண்சங்கமொன்றேந்திய கண்ணா! நின்றனக்கும் குறிப்பாகில் கற்காலம் கவியின் பொரு ள்தானே’’. பகவானும் ‘‘அப்படியே கற்கிறோம். அர்ச்சாவதாரத்தில் இயலாததாகையால், பிறிதொரு காலத்தில் உம்மை ஆச்சார்யனாகக் கொண்டு,  கவியின் பொருளைக் கற்போம்’’ என்று அருளிச் செய்தான்.

அதன்படியே, ஆழ்வார் தமது அவதாரத் திருநக்ஷத்திரமான கார்த்திகை நாளில் நம்பிள்ளையாக அவதரித்தார். அச்சமயம், திருக்கண்ணமங்கை திவ்ய  தேசத்து கண்ணனும், தனது அவதாரத் திருநட்சத்திரமான ஆவணி ரோகிணியில் கிருஷ்ணன் என்னும் திருநாமத்தோடு அவதரித்தார். அவர்தான்  பெரியவாச்சான் என்ற மஹான். அப்படி அவதரித்துப் பரகால கவியின் பாடல்களோடு மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் அவற்றின் அரும் பொரு ட்களையும் நம்பிள்ளையிடம் விரிவாகக் கற்று உலகுய்ய வியாக்யானங்களை வெளிப்படுத்தினார் என்பது பெரியோர்களின் கருத்து. திருமங்கையாழ்வார் தமது ஆறு திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்த பின்பு ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி திருநெடுந்தாண்டகம் என்ற பாசுரத்தை தேவகானத்தில் இசைத்துப் பாடினார்.

அதனால் திருவுள்ளம் உகந்த பெரிய பெருமாள் ‘‘உமக்கு வேண்டிய வரத்தை பெற்றுக் கொள்ளும்’’ என்று நியமித்தருளினார். ‘‘தேவரீர் மார்கழி மாத்தில் கண்டருளுகிற அத்யயன உத்ஸவத்தில் நம்மாழ்வார் அருளிச் செய்த திராவிட வேதத்தையும் (திருவாய்மொழி) திருச்செவி சாத்தியருள வேண்டும் (கேட்டு அருள வேண்டும்) என்று பிரார்த்தித்தார். பெருமாளும் அவ்வண்ணமே அருள்புரிந்தார். அவ்வாணையின்படி திருமங்கையாழ்வார், நம்மாழ்வாருடைய ஊராகிய ஆழ்வார் திருநகரியிலிருந்து அர்ச்சாரூபியான நம்மாழ்வாரை வருடந்தோறும் ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளச்செய்து அவர் முன்னிலையில், வடமொழி வேதம், திராவிட வேதமான நாலாயிர திவ்ய ப்ரபந்தம் இரண்டும் சேர்ந்த உபய வேத பாராயணத்தை சிறப்பாக நடத்திக் காட்டினார்.

பத்து நாட்களையும் ராப்பத்து உத்ஸவமாக  கொண்டாட ஏற்பாடு செய்தார். உத்ஸவம் முடிந்த பின்பு சுவாமி நம்மாழ்வாரை மீண்டும் குருகூர்க்கு (ஆழ்வார் திருநகரி) எழுந்தருளச் செய்வித்தார். இப்படி பத்து நாள் விழாவாகத் தொடங்கிய திருவத்யயன உத்ஸவம், ஆசார்யர்கள் காலத்தில் மற்ற ஆழ்வார்களுடைய திவ்ய பிரபந்தங்களுக்காக பத்து நாள் பகல் பத்து உத்ஸவமும் சேர்ந்து மொத்தம், பகல் பத்து, ராப்பத்து என்பதாக இருபது நாள் உத்ஸவம் நடைபெற்றது. இதோடு இயற்பா  உத்ஸவமும் சேர்க்கப்பட்டு இருபத்தொரு நாள் உத்ஸவமாக வளர்ந்தது. பின்பு பராசரபட்டர் காலத்திலே திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திருநெடுந்தாண்டகத்தின் சிறப்பை நோக்கி பகல்பத்து உத்ஸவ ஆரம்ப தினத்திற்கு முன்னால் திருநெடுந்தாண்டக உத்ஸவமும் சேர்க்கப் பெற்று இப்போது நடந்து வருகிறது.

இத்தகவல் பெரியவாச்சான்பிள்ளை அருளிய கலியனருளப்பாடு போன்ற நூல்களில் காணப்படுகிறது. சில காலத்திற்கு பிறகு ஆழ்வார் திருநகரியிலிருந்து சுவாமி நம்மாழ்வாரை எழுந்தருளச் செய்வதில் பல சிரமங்கள் ஏற்பட்டதால் ஸ்ரீரங்கத்திலேயே வேறொரு நம்மாழ்வார் உத்ஸவ விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது திருவத்யயனோத்ஸவம், எல்லா திவ்ய தேசங்களிலும் 21 நாட்கள்  பகல் பத்து, ராப்பத்து என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், வடநாட்டிலுள்ள திவ்ய தேசங்களில் இம்மாதிரியான அத் யயனோத்ஸவம் நடைபெறுவதில்லை. காரணம் அங்கு வேறுவிதமான சம்பிரதாயம், ஆகம சாஸ்திர முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.  நேபாளத்திலுள்ள முக்திநாத், குஜராத், ராஜஸ்தானிலுள்ள பஞ்ச த்வாரகா திவ்ய தேசங்கள், திருஅயோத்தி, நைமி சாரண்யம், பதரிகாஸ்ரமம், திரு ப்பிரிதி, திருக்கடித்தானம், வட மதுரை, திருவாய்ப்பாடி ஆகியவையே அந்த திவ்ய க்ஷேத்திரங்கள். துஷ்டர்களிடமிருந்து பொருட்களைப் பறித்து பாகவத கைங்கர்யம் செய்வதும் நல்லொழுக்கம்தான் என்று வாழ்ந்து காட்டியதன் மூலம் கலிதோஷத்தைக் கடிந்து நலிந்ததினால் பெரும் புகழ் எய்தினார், திருமங்கையாழ்வார்.

கடைசிக் காலத்தில், திருக்குறுங்குடி எம்பெருமானான நம்பியிடம் மிகவும் பக்தி செலுத்தினார். எம்பெருமான் நம்பி எழுந்தருளியிருக்கும் திருக்குறுங்குடியில் வாழ்ந்து அவரது வடிவழகை அனுபவித்துக் கொண்டே திருநாட்டுக்கு எழுந்தருளினார். உடனே அவரது அருந்துணைவியான குமுதவல்லி நாச்சியாரும் அவரைத் தொடர்ந்து மோட்சம் ஏகினார். இப்போதும் திருக்குறுங்குடியில் ஆழ்வார் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடத்தில் அவரது சந்நதி உள்ளது.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக