கிரக தோஷம் போக்கும் தசாவதார தரிசனம்

கிரக தோஷம் போக்கும் தசாவதார தரிசனம்

யார் இந்தப் பெண்? முகமது பின் துக்ளக்கின் படை ஸ்ரீரங்கம் கோயிலை துவம்சம் செய்தது. நான்காம் திருச்சுற்றை கிட்டத்தட்ட முற்றிலுமாக அழித்துவிட்டது என்றே சொல்லலாம். அதோடு படையின் ஒரு பகுதியினர் கோயிலிலேயே தங்கிவிடவும் செய்தனர். கோயிலுக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் அவர்களுடைய பசியை ஆற்றின! அந்த நிலையிலும் ரங்கன் அவர்களுக்கு இப்படி கருணை செய்தான்! இவர்களது அக்கிரமத்தால் வெகுண்ட பலரில் இந்த எம்பெருமானடியாரும் (சைவக் கோயில்களில் தேவரடியார்கள் போல, வைணவக் கோயில்களில் நடன சேவை புரியும் அடியவர்கள்) ஒருத்தி. இனி தன்னால் நடனமாடி, அரங்கன் புகழ் பாடி, பக்தி செலுத்த முடியாதே என்று பெரிதும் வேதனையுற்றாள். 

தன் பாணியில் ஆலய சேவை செய்ய இயலாத தன் நிலையை எண்ணி அவள் உள்ளம் நொந்தாள். இதைவிட நேரடியாக மோட்சத்துக்கே போய், ஸ்ரீமன் நாராயணனுக்கே சேவை புரியலாம் என்றும் அவள் கருதிவிட்டாள். அப்படி போகும் வாய்ப்புத் தனக்குக் கிட்டுமானால், அதற்குமுன் இப்படி ஒரு பக்தித் தடையைத் தோற்றுவித்த பாவியை அழித்துவிட்டே அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவள் தீர்மானித்தாள். தன்னை வசீகரமாக அலங்கரித்துக் கொண்டாள். முகமதிய படைத் தளபதியைத் தன் கவர்ச்சியால் ஈர்த்து, தங்கத்தால் ஆன ரங்கநாதரின் உற்சவர் விக்ரகம் இருக்குமிடம் தனக்குத் தெரியும் என்றும் அதைத் தான் அவனுக்குக் காட்டுவதாகவும் கூறி அழைத்துச் சென்றாள்.

அவனுக்குப் போக்குகாட்டியபடி கிழக்கு பெரிய கோபுரத்தின் உச்சிக்கு இட்டுச் சென்ற அவள், அங்கிருந்து அவனைக் கீழே தள்ளி கொன்றாள். பிறகு, அந்த மாபெரும் சாதனையைப் புரிந்த திருப்தியில் தானும் கீழே குதித்தாள். தலைவனை இழந்த படை அங்கிருந்து தறிகெட்டு ஓடி மறைந்தது. ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு உரிய மரியாதை செய்ய அரங்கன் விரும்பினான் போலும்! அதனால், தீரச்செயல் புரிந்து, உயிர் பிரியும் தறுவாயிலிருந்த அந்தப் பெண்ணை பலரும் காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் அந்தப் பெண்ணோ, தன்னைக் காப்பாற்றுவதைவிட, தன் வேண்டுகோள் ஒன்றை அவர்கள் நிறைவேற்றித்தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.

அதாவது, ‘‘என்னைப் போன்ற எம்பெருமானடியார்கள் முக்தி அடையும் காலத்தில், அவர்களுடைய ஈமக்கிரியைக்காக கோயில் திருமடப்பள்ளியிலிருந்து நெருப்பும் திருக்கொட்டாரத்திலிருந்து அமுதுக்கான தானியங்களும் சுவாமியிடமிருந்து திருமாலை, திருப்பரிவட்டம் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றையும் பிரியும் ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும்வகையில் அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டாள். அன்று அவளுக்கு அந்த மரியாதையை அளித்த கோயில் நிர்வாகத்தினர், இன்றுவரை விடாமல் அந்த மரபினர் வைகுந்தம் ஏக, அதே மரியாதையைத் தொடர்ந்து அளித்து வருகிறார்கள்.

ஸ்ரீரங்கக் கோயிலில் தரிசிக்க வேண்டிய இன்னொரு சந்நதி, தசாவதார சந்நதி. பத்து அவதாரங்களும் இங்கே கோயில் கொண்டிருப்பதுபோல வேறு ஆலயம் எதிலாவது காணப்படுகிறதா என்று தெரியவில்லை.

ராமாவதார ஸூர்யஸ்ய சந்த்
                ரஸ்ய யதுநாயக
ந்ருஸிம் ஹோ பூமிபுத்ரஸ்ய ஸௌம்ய
                      ஸோம ஸிதஸ்யச
வாமநோ விபுதேந்தரஸ்ய பார்கவோ
                           பார்க்கவஸ்ய
கூர்மோ பாஸ்கர புத்ரஸ்ய ஸைம்க்ஹி
                     கேயஸ்ய ஸுகர
கேதுர் ம்நாவாதாரஸ்ய யோகாசாந்
                          யேபி கேசரா
-என்கிறார், சுவாமி வேதாந்த தேசிகர்.

இந்தப் பாடலில் தேசிகர் முதலில் ராமாவதாரத்தைக் குறிப்பிட்டதன் முக்கிய காரணம், இந்த தசாவதாரங்களுக்கும் மூலமானவர், ராமனின் இக்ஷ்வாகு குலத்தின் குலதெய்வமாகத் திகழ்ந்த இந்த ரங்கன்தான் என்பதே. இந்த தசாவதார சந்நதியில் வழிபட்டால், கீழ்காணும் கிரக தோஷங்கள் நீங்குவதாகச் சொல்கிறார்கள்: ராமாவதாரம் - சூரியன்; கிருஷ்ணாவதாரம் - சந்திரன்; நரசிம்மவதாரம் - செவ்வாய்; கல்கி அவதாரம் - புதன்; வாமனவதாரம் - வியாழன்; பரசுராம அவதாரம் - சுக்கிரன்; கூர்ம அவதாரம் - சனி; வராக அவதாரம் - ராகு; மத்ஸ்ய அவதாரம் - கேது; பலராம அவதாரம் - குளிகன் (சனியின் மகன்)  இந்த தசாவதார சந்நதியில் தங்கியிருந்தபடிதான் கோயிலுக்கு அருஞ்சேவை ஆற்றினார் திருமங்கையாழ்வார்.

முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண
முனிவரொடு தானவரும் திசைப்ப வந்து
பன்னுகலை நால் வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய நம் பரமன் காண்மின்

-என்பது திருமங்கையாழ்வாரின் பாடல். ஸ்ரீரங்கனின் இந்த அர்ச்சாவதாரத் திருமேனி பிரம்மனின் கோரிக்கையால் உலகோருக்குக் காணக் கிடைத்தது என்கிறார் ஆழ்வார். அரக்கர்களை அழித்து, அவர்கள் ஒளித்திட்ட வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்ததோடு, அவற்றை அவனுக்கு உபதேசமும் செய்தார். அந்த அருள் வல்லமையால் பிரம்மன் பிரபஞ்சத்தைப் படைத்தான். ஆனாலும் ஏனோ மனக்குழப்பம் அடைந்தான். தான் படைத்த பிற உயிர்களோடு, தனக்கும் நிலையில்லாமை உண்டு என்ற உண்மை, தடுமாற்றம் தந்தது. வேறு வழி தெரியாமல், பல்லாண்டுகளாக அஷ்டாக்ஷர மந்திரத்தை உபாசித்தவாறே கிடந்தான்.

பரந்தாமன் அவன்முன் தோன்றி அவன் வேண்டுவது யாது என்று வினவ, தானும் ஏனையோரும் எளிதாக தரிசனம் காணும்வகையில் அவர் அவதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். உடனேயே தான் திருப்பாற்கடலில் காட்டும் கோலத்தை, அப்படியே இங்கே, ஸ்ரீபிரணவாகார விமானத்தில் அர்ச்சாவதாரமாகக் காட்டினார் பெருமாள் - இது ஆழ்வார் பாடலின் திரண்ட கருத்து. இப்படி உலகோர்க்கெல்லாம் அர்ச்சாவதாரமாகக் காட்சியளித்த அந்த ரங்கனைத் தானும் தினமும் தரிசித்து மகிழ வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீரங்கத்தில், கோயிலுக்குள்ளேயே தங்கியிருந்தார் திருமங்கையாழ்வார்.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை