பக்திக்கு அடங்கிய கோபம்!
பகவான், சர்வ வியாபி. நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் வியாபிக்கிறார். நமக்கு வெளியேயும் வியாபிக்கிறார்.
நமக்கு வெளியே வியாபிக்கிறார் என்றால், அவர் நம்மைத் தாங்குகிறார் என்று அர்த்தம்.
என்னிடம் ஒரு கைக்கடிகாரம் இருக்கிறது. அதை நான் கையில் எடுத்துக் கைகளால் மூடிவிடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, என் கைகள் அதைச் சுற்றி வியாபித்திருக்கிறது என்று அர்த்தம். என் கைகள் அதைத் தாங்குகிறது.
அதேபோல்தான் பெருமாளும். முழுக்க வெளியில் வியாபித்து, நம் அனைவரையும் அவர்தான் தாங்குகிறார்.
இதைத்தான் தாரக தார்ய பாவம் என்று சொல்வார்கள். பகவான் தாரகனாக இருக்கிறார். நாம் அனைவரும் தரிக்கப்படுபவர்களாக (அணியப்படுபவர்களாக) இருக்கிறோம். அவர் தாங்குகிறார். நாம் தாங்கப்படுபவர்களாக உள்ளோம். அதற்காகத்தான் வெளியில் வியாபித்திருக்கிறார்.
கையில் வைத்திருக்கும் கைக்கடிகாரத்துக்குள் நான் போக முடியுமா? அது என்னால் முடியாது. ஆனால், பகவான் நமக்குள்ளும் வியாபிக்கிறார். வெளியிலும் வியாபிக்கிறார். வெளியில் எங்கும் இருக்கிறார் என்றால் தாங்குகிறார் என்று அர்த்தம். நமக்குள்ளே வியாபிக்கிறார் என்றால், அவர்தான் ஆணை செலுத்துகிறார் என்று அர்த்தம்.
நமக்குள் புகுந்துகொண்டு பெருமாள் நியமிக்கிறார். சர்வ வியாபகனாய் சர்வ நியந்தாவாய் இருக்கிறார். இதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்கிறோம்? இங்கிருக்கிறார் என்று கைகாட்டியவுடன் அந்த இடத்தில் தோன்றிவிட்டார் அல்லவா!
எங்கிருக்கிறார் என்பது தானே ஹிரண்யகசிபுவின் சந்தேகம்! எங்கிருக்கிறார் என்று கேட்டான். எங்குமிருக்கிறார் என்று பிள்ளை சொல்லிவிட்டான்.
‘எங்குமுளன் கண்ணனென்ன மகனைக்காய்ந்து’ என்று ஆழ்வார் இதைத்தான் சொன்னார். ‘எங்குளன்’ என்பது கேள்வி. ‘எங்குமுளன்’ என்பது பதில். சின்னக் கேள்வி. சின்ன பதில். அவனுக்கு அந்த பதில் புரியவில்லை. யாராயிருந்தாலும் ஓர் இடத்தில்தானே இருக்க முடியும்? வேண்டுமானால் பெருத்துப் போய் இருக்கலாம். எல்லா இடத்திலும் ஒருவரால் இருக்க முடியுமா!
எங்குமிருக்கிறார் என்று பிள்ளை சொல்லியதும் தந்தைக்கு சந்தேகம். இங்கிருக்கிறானா என்று கேட்டான். அதற்கு ‘இங்கிருக்கிறான்’ என்ற பதிலைத்தானே அவன் சொல்ல வேண்டும். ஏனோ அந்த பதிலை அவன் சொல்ல மாட்டேன் என்கிறான். திரும்பத் திரும்ப எங்குமிருக்கிறார் என்று தான் அவன் சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.
ஒருவேளை பிரஹ்லாதன் அந்தத் தூணில் இருப்பதாகச் சொல்லிவிட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆயிரம் வருஷம் கழித்து ஒரு நாத்திகன் வந்து “பிரஹ்லாதனே அந்தத் தூணில் இருப்பதாக ஒத்துக் கொண்டு விட்டான். அதனால், பக்கத்துத் தூணில் இல்லை என்று அர்த்தம்” என்று வாதாட வருவான் அல்லவா! இதற்கு எந்த ரூபத்தில் எதிர்ப்புக் கிளம்பும் என்றே சொல்ல முடியாது. ஓர் இடத்தில் இருக்கிறான் என்று சொல்லிவிட்டால், அடுத்த இடத்தில் இல்லை என்று தானே அர்த்தம் வருகிறது? யாராவது இதைச் சொல்லிவிடுவார்களோ என்று குழந்தைக்கு பயம். அதனால்தான் ‘எங்குமுளன்’ என்றே சொல்லிக்கொண்டிருக்கிறான்.
ஆனால், ஹிரண்யகசிபுவுக்கு புத்தி போதவில்லை. “இங்கிருக்கிறானா?” என்று கேட்க, “இங்குமுண்டு. தந்தையே இங்குமுண்டு” என்றான். இவ்வாறு சொன்ன பிற்பாடுதான், பகவான் அவ்விடத்திலே தோன்றினான். ‘எல்லா இடத்திலும் பெருமான் இருக்கிறான்; சர்வ வியாபகன்’ இது ஒரு கோணம்.
ஆக, உருவத்திலும் அழகன். உள்ளத்திலும் அழகன், சேராத இரண்டை சேர்த்தவன், எங்கும் இருப்பவன் என்று எத்தனை கோணங்கள்!
இது மட்டுமல்ல இன்னொரு கோணம் இருக்கிறதே. எதையும் ஆயுதமாகப் பயன்படுத்துவார். சங்கல்பத்தாலே ஜகத்தை ரக்ஷிக்கிறார். பகவானுக்கு ஒரு ஆயுதத்தைக் கொண்டுதான் ரக்ஷிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஜகத்தை சிருஷ்டிப்பதோ, காப்பதோ அழிப்பதோ இவை அனைத்தையும் தன்னுடைய சங்கல்ப சக்தியாலே செய்கிறார்.
அவர் கண்ணால் பார்த்துக் கையால் ஜகத்தை சிருஷ்டிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர் சிரமப்பட்டு எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சாந்தோக்ய உபனிஷத்தில் சத்வித்துயாப்ரஹரணம் சொல்வது என்னவென்றால் பிரம்மம் அப்படியே சங்கல்பித்துக் கொள்கிறதாம். ‘எல்லாமாக ஆகக்கடவேன்; எல்லாவற்றையும் படைக்கக் கடவேன்’. மனதுதான் நினைக்கும். நினைத்த மாத்திரத்திலே பண்ணுகிறான். கை கொண்டு கால் கொண்டு வியாபரிப்பதில்லை.
சங்க சக்ரம் இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்பதில்லை. அதற்காகத்தான் நகம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தினான். நரசிம்மாவதாரத்துக்கு ஆயுதம் சங்குமல்ல, சக்கரமுமல்ல, கதையுமல்ல, வாளுமல்ல, வில்லுமல்ல! வெறும் நகம்தான். ‘உகிர் நுதி’யாலேயே மொத்தத்தையும் கிழித்துவிட்டார் பெருமாள். இந்தக் கோணத்திலும் நாம் அனுபவித்துக் கொள்ளலாம்.
இப்படி ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு கோணத்தில் பகவானை அனுபவித்துள்ளார்கள். நூற்றுக்கணக்கான பாசுரங்களில் நரசிம்மப் பெருமானை அனுபவித்துள்ளார்கள்.
இந்த நரசிம்மப் பெருமான்தான் லஷ்மி நரசிம்மப் பெருமான். அப்போது பிராட்டி இருந்தாளோ? பிரஹ்லாதனுக்காக அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவைக் கொன்றுவிட்டார். அவருடைய கோபத்தை ஆற்ற வேண்டும் அல்லவா? அந்தக் கோபத்தை ஆற்றுவதற்கு யாராலும் முடியவில்லை.
சாக்ஷாத் மகாலக்ஷ்மியாலேயே முடியவில்லையாம்! அப்போது பிரம்மா பிரஹ்லாதனிடம் வந்து “பிரஹ்லாதா… யாராலும் பெருமாளுடைய கோபத்தை அடக்க முடியவில்லை. நீ ஒருத்தன்தான் பக்த பிரஹ்லாதன். பகவான் பக்தனிடம்தான் அடங்குவார். உன்னால்தான் அவருடைய கோபத்தைத் தணிக்க முடியும்” என்றாராம். பக்தர்களுக்காகவே பகவான் இருக்கிறார். பிரஹ்லாதன் ஒருத்தன்தான் அவருடைய கோபத்தைத் தணித்தான். அவனுடைய கோபத்தை மாற்ற நம் சக்தி கொண்டு மாற்ற முடியாது. நாம் கோபப்பட்டு மாற்ற முடியாது. பக்தியால்தான் அவனை மாற்ற முடியும். ஆகவேதான் அவன் பக்த பிரஹ்லாதன். பக்தி, அன்பு, பாசம், அடிமைத்தனம் இவற்றைக் காண்பித்துத்தான் நரசிம்மப் பெருமானுடைய கோபத்தைத் தணிக்க முடிந்ததாம்.
அவ்வாறு கோபம் மாறி, பிரஹ்லாத வரதனாய், அனுகிரஹ விசிஷ்டனாய் பகவான் எழுந்தருளியிருக்கிறார்.
இவ்வாறு, நரம் கலந்த சிங்க உருவாக பகவான் அவதாரம் பண்ணினது யாருக்காக? நம்மைப் போன்ற ஒரு அசுரப் பிள்ளைக்காக. தவறைத் திருத்திக் கொண்டால் ரக்ஷிப்பான் என்பதை நிரூபிப்பதற்காக. அசுரன் போன்ற நம் போன்றவர்களுக்காகக்கூட பகவான் தோற்றம் அளிப்பான்! அதற்காக பிரஹ்லாதனும் நாமும் ஒன்றாகி விடப் போவது கிடையாது. பிறப்பால் உயர்வு தாழ்வு வராது. நடத்தையால்தான் வரும். பிராமணன் என்று சொல்கிறோம். க்ஷத்ரியன் என்று சொல்கிறோம். வைஸ்யன் என்று சொல்கிறோம். இவையெல்லாம் பிறப்பால் வந்து விடப் போகிறதா?
(வைபவம் வளரும்)
நன்றி - தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)