சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் என்ற திருத்தலத்தில் அவதரித்து வைணவ மதத்தையும், விசிஷ்டாத்துவைத தத்துவத்தையும் தழைக்கச் செய்தவர் எம்பெருமானார் ஸ்ரீராமானுஜர்.
விஷ்ணு பக்தியும், விசிஷ்டாத்துவைத நெறியும் எம்பெருமானார் தரிசனம் என்றே போற்றப்படுகின்றன.
அந்த எம்பெருமனார் தரிசனம் இப்பூவுலகில் நிலைபெறத் தமது தரிசனத்தையே (கண் பார்வையையே) விலையாய்க் கொடுத்த தியாகச் செம்மல்தான் கூரத்தாழ்வார் என்ற வைணவப் பெரியவர்.
வைணவர்களின் மூன்று முக்கியத் திருத்தலங்களில் பெருமாள் கோயில் என்று சிறப்பிக்கப்படும் கோயில் நகரமாம் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கூரம் என்ற திருத்தலத்தில் ஒரு சௌமிய வருடம் தை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தார் கூரத்தாழ்வார். ஸ்ரீராமானுஜருக்கு (ஏறத்தாழ) ஒன்பது வருடங்கள் முற்பட்டவர் இவர். இவரைக் கூரேசர் என்றும் அழைப்பார்கள். ஸ்ரீராமபிரானின் அம்சமாகப் பிறந்தவர் என்றும் போற்றப்படுபவர் இவர்.
கூரத்தாழ்வார் பெயர்க்காரணம்
பிறந்த கணம் முதல் இறையனுபவத்தில் ஆழ்ந்திருந்த நம்மாழ்வார், ஸ்ரீமந்நாராயணனின் அவதார லீலைகளில் ஈடுபடுகையில் அப்படியே மூர்ச்சித்துவிடுவாராம். ஸ்ரீகண்ணபிரான் தான் பரம்பொருள் என்பதை மறைத்துக் கொண்டு யசோதைப் பிராட்டியால் உரலில் கட்டப்பட்டதை எண்ணி, எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே என்று பாடியபடி ஆறு மாதம் நினைவு நீங்கிக் கிடந்தார் நம்மாழ்வார்.
அதுபோலவே ஒருமுறை – உயர்வற உயர்நலம் உடையவன் என்ற நம்மாழ்வாரின் திருவாய் மொழிப் பாசுரத்தின் முதலடியைக் கேட்டவுடன் சகுணப் பிரம்மம் என்று போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் உயர்ந்த கல்யாண குணங்களை எண்ணியபடியே மூர்ச்சித்தார் கூரேசர்.
இதையறிந்து அங்கு வந்துசேர்ந்த ஸ்ரீராமானுஜரும், ஆழ்வானே எழுந்திரும்! என்று அழைக்கவும் மீண்டும் நினைவு தெளிந்தார். அதுமுதல் இவர் கூரத்தாழ்வான் என்றே அழைக்கப்பட்டார்.
கூரத்தில் பெரும் செல்வந்தராய் பெரியதோர் திருமாளிகையில் வசித்து வந்த கூரத்தாழ்வார் காஞ்சி ஸ்ரீவரதராஜப் பெருமானிடம் அளவில்லாத பக்தி பூண்டிருந்தார். தமது திருமாளிகைக்கும் ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கும் இடையே ஆங்காங்கே பெரிய கண்டா மணிகளைக் கட்டியிருந்தார் கூரத்தாழ்வார்.
ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் ஆராதனங்கள் முடிந்தபின்பு அம்மணிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒலிக்க, கடைசி மணியின் ஒலி கேட்டு, பெருமானின் நைவேத்தியம் நிறைவேறியதை அறிந்து அதன்பின்பே கூரத்தாழ்வார் உணவு உட்கொள்வார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீராமானுஜரின் பெருமைகளை அறிந்த கூரத்தாழ்வார் அவரை அணுகி பஞ்ச சம்ஸ்காரம் என்னும் தீட்சையைப் பெற்றுக் கொண்டு அஷ்டாகரம் மற்றும் துவய மந்திரங்களின் பெருமையை உணர்ந்து, ஓதி, ஓதுவித்துக் கொண்டு வரலானார்.
திருவரங்கம் சென்று தங்கியிருந்த ஸ்ரீராமானுஜருடன் தாமும் தங்கி ஒரு கணமும் அவரைப் பிரியாது அணுக்கத் தொண்டு புரிந்து வந்தார் கூரத்தாழ்வார்.
மடியில் கனம், வழியில் பயம்
சிறிது காலம் கழித்து கூரத்தில் உள்ள தமது பெரும் செல்வம் அனைத்தையும் எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு வர எண்ணி, தம் மனைவியார் ஆண்டாள் அம்மையாருடன் கூரம் திரும்பினார்.
எல்லாவற்றையும் அளித்துவிட்டு, விஷ்ணு பக்தியையும், ஆசாரிய பக்தியையுமே தமது சொத்துக்களாக ஏற்று, காஞ்சி ஸ்ரீவரதராஜனைத் தரிசித்துக் கொண்டு மதுராந்தகம் வழியாகத் திருவரங்கம் நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கையில் – இருட்டுகிற நேரம்; வழியில் பயமாயிருக்கிறது! என்றாள் ஆண்டாள் அம்மாள்.
எதனால் பயம்? என்று இவர் கேட்க, தாங்கள் உணவு அருந்தும் தங்கக் கிண்ணத்தை மட்டும் தங்களுக்கு உதவும் என்று மடியில் கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்! என்றாள் மனைவி. அந்தத் தங்கக் கிண்ணத்தை வாங்கிப் புதரில் வீசி எறிந்த கூரத்தாழ்வார், இப்போது பயமில்லையே! மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்..? என்று கூறினார். அந்த அளவுக்குப் பொன், பொருள் இவற்றின் மீதான பற்றினை வென்றிருந்தார் கூரத்தாழ்வார்.
தசரதர் போல்
திருவரங்கத்தில் வசித்தபோது, உண்ணும் உணவில் சிறிதும் நாட்டமின்றிப் பெருமாள் திருநாமங்களைக் கூறும் பற்பல பாசுரங்களையும், தோத்திரங்களையும் கூறியபடி இருப்பார். இதனால் வருந்திய ஆண்டாள் அம்மாள் திருவரங்கனின் நைவேத்திய சமயத்தில் ஒலித்த வாத்திய இசையைக் கேட்டு பெருமாளே! உமது பக்தரை இப்படி உணவுப் பற்றில்லாமல் வைத்திருப்பது நியாயமா? என்று வேண்டினாள். என்ன ஆச்சரியம்?!
அரங்கனின் அசரீரி வாக்குப்படி, அவனது அரவணைப் பிரசாதமாகிய சர்க்கரைப் பொங்கலை அர்ச்சகர்கள் கோயில் மரியாதையுடன் கூரத்தாழ்வார் வீட்டிற்கே கொண்டு வந்து சமர்ப்பித்தனர். ஆழ்வாரும், ஆண்டாள் அம்மாளும் மகிழ்ந்து அந்த அரவணைப் பிரசாதத்தைப் பக்தியுடன் உண்டனர். அதுவரை புத்திர பாக்கியம் இன்றியிருந்த கூரத்தாழ்வார் – ஆண்டாள் தம்பதியினருக்கு ஸ்ரீபராசர பட்டர், ஸ்ரீவேதவியாச பட்டர் என்ற இரண்டு ஞானக் குமாரர்கள் பிறந்து பெருமை சேர்த்தனர்.
புத்திர காமேஷ்டி யாகத்தில் கிடைத்த பாயசம் மூலம் தசரதருக்கு ஸ்ரீராமர் முதலிய நான்கு சத்புத்திரர்கள் பிறந்தது போல், ஸ்ரீரங்கநாதனின் அரவணைப் பிரசாதம் ஆழ்வான் தம்பதியினருக்கு அற்புதமான புத்திரப் பேற்றை அளித்தது.
கூரத்தாழ்வாரின் நினைவாற்றல்
ஒருசமயம் கூரத்தாழ்வாருடன் ஸ்ரீராமானுஜர் காஷ்மீர் வரை சென்று அங்குள்ள சாரதாபீடத்தில் அருள்பாலிக்கும் சரஸ்வதி தேவியை வழிபட்டு அருள்பெற்று, போதாயன விருத்தி எனப்படும் பிரம்ம சூத்திரச் சுவடிகளைப் பெற்றுக் கொண்டார். பல நூறு பக்கங்கள் கொண்ட சுவடியை அன்றிரவு கூரத்தாழ்வார் ஒருமுறை வாசித்துப் பார்த்தார்.
மறுநாள் தென்னாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இருவரையும் வழிமறித்த காஷ்மீரப் பண்டிதர் கூட்டம் அந்தச் சுவடிகளைப் பறித்துச் சென்றது. கலங்கி நின்ற ஸ்ரீராமானுஜரிடம், முதல்நாள் இரவே தாம் அனைத்தையும் மனப்பாடம் செய்துவிட்டதாகக் கூறி, அவற்றைக் கூறியும் காட்டினார் கூரத்தாழ்வார். ஸ்ரீராமானுஜர் மிக மகிழ்ந்தார். ஆழ்வாரின் நினைவாற்றலால் தாம் எழுதப் போகும் பிரம்மசூத்திர உரை (ஸ்ரீபாஷ்யம்) பொலிவு பெறும் என்று மனநிறைவு அடைந்தார்.
சீடர் குருவானார்
ஸ்ரீராமானுஜர் வைணவத்தின் பரப்பை விசாலப்படுத்துவது கண்டும் கேட்டும் பொருமிய கிருமிகண்ட சோழ மன்னன், நாலூரான் என்பவர் மூலம் ஸ்ரீராமானுஜரைத் தனது அவைக்கு வரவழைத்து சைவசமயத்தை ஏற்காத பட்சத்தில் அவரது கண்களைக் குருடாக்கிவிடும் நோக்கம் கொண்டிருந்தான்.
ஸ்ரீராமானுஜருக்கு ஒரு தீங்கும் நேரலாகாது என்று கருதிய ஸ்ரீ கூரத்தாழ்வார் அவரை வேறு சில சீடர்களுடன் கர்நாடகத்துக்குத் தப்பிச் செல்லும்படி கேட்டுக் கொண்டு, அவரது காவியுடையைத் தாம் அணிந்து கொண்டு பெரிய நம்பிகள் (இராமானுஜரின் ஆசாரியர்களில் ஒருவர்) துணைக்கு வர, கிருமிகண்ட சோழனின் அவைக்குச் சென்றார். இருவரது கண்களும் சோழனால் பழுதாக்கப்படுகின்றன.
சில நாட்களில் பெரிய நம்பிகள் முக்தியடைய, ஸ்ரீகூரத்தாழ்வார் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று ஸ்ரீகள்ளழகரை மனக்கண்களால் தரிசித்து ஸ்ரீவைகுண்ட ஸ்தலம் முதலிய ஐந்து ஸ்தோத்திரங்களை வடித்தார்.
சுமார் பனிரெண்டு ஆண்டுகள் கழித்து, கிருமிகண்ட சோழன் மறைவுக்குப் பிறகு ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் சந்திக்க, இருவரும் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீவரதராஜப் பெருமாளைத் தரிசித்தனர்.
உமக்கு என்ன வரம் வேண்டும்? என்று ஸ்ரீவரதராஜர் கேட்க, நாம் பெறும் மோட்ச அனுபவம் நாலூரானும் (சோழனிடம் காட்டிக் கொடுத்தவன்) பெற வேண்டும் என்று வேண்டி உயர்ந்து நின்றார் கூரத்தாழ்வார்.
அப்படியே ஆகட்டும்! என்று வரமளித்த வரதர், நீர் எம்மையும், ஸ்ரீராமானுஜரையும் மட்டும் பார்க்கக் கடவது! என்றும் வரம் கொடுத்தார்.
குருவை வரவேற்க
ஒருமுறை நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றில் முன்னதாக முக்தியடைந்து வைகுந்தம் செல்பவர்கள், பிறகு வருகின்ற முக்தர்களை எதிர்கொண்டு வரவேற்பார்கள்! என்று இருந்ததை மனதில் வாங்கிக் கொண்டார் கூரத்தாழ்வார்.
உடனே நேராகத் திருவரங்கன் சன்னதிக்குச் சென்ற ஸ்ரீகூரத்தாழ்வார், எம்பெருமானே அடியேனுக்கு விரைவில் முக்தி அருளும்! அப்போதுதான் அடியேன் முன்னதாக வைகுந்தம் வந்து, எதிர்காலத்தில் வைகுந்தம் வரவிருக்கும் அடியேனது குருநாதராகிய ஸ்ரீராமானுஜரை எதிர்கொண்டு வரவேற்க முடியும்! என்று வேண்டிக் கொண்டார்.
அதன்படியே வெகுவிரைவில் முக்தியடைந்து வைகுந்தத்தை அலங்கரித்தார் ஸ்ரீகூரத்தாழ்வார். எம்பெருமான், எம்பெருமானார் இருவரிடமும் விசுவாசமாய் இருக்கும் படியும், தாயாரிடம் பணிவாக இருக்கும்படியும் தம் மகன்களுக்கு உபதேசித்து முக்தியடைந்தார் ஸ்ரீகூரத்தாழ்வார்.
உத்தம பக்தர்களின் வரிசையில் தமக்கென ஒரு நிரந்தர இடம்பெற்றுவிட்ட ஸ்ரீகூரத்தாழ்வார் நம் யாவருக்கும் ஒரு தலைசிறந்த வழிகாட்டியாவார்.
நன்றி - ஓம் சக்தி ஜுலை 2013