கண்ணன் என்னும் மன்னன் - 1 - இந்திரா சவுந்தரராஜன்

கண்ணன் என்னும் மன்னன் - 1 - இந்திரா சவுந்தரராஜன்

இந்த பூ உலகில் மோட்சம் தரவல்ல புனித க்ஷேத்திரங்கள் ஏழு
"அயோத்தி, மதுரா, ஹரித்துவார், உஜ்ஜயினி, காசி, காஞ்சிபுரம், துவாரகை' இந்த ஏழில் துவாரகைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இங்கே தான், நம் கண்ணுக்கு கண்ணான கண்ணன், அண்ணன் பலராமனோடு கூடி ஆட்சி புரிந்தான். இதனால், "துவாரகாதிபதி' என்கிற ஒரு பெயரும் கண்ணனுக்கு ஏற்பட்டது
கண்ணன் பிறந்தது ஓரிடம்... வளர்ந்தது ஓரிடம்.... அவன் மன்னனாய் நல்லாட்சி செலுத்தியதும் ஓரிடம் தான்...! தேவகிக்கும்
வசுதேவருக்கும் மகனாய் சிறைக்குள் பிறந்தவன். யசோதையின் மகனாகி மதுரா நகரில் குறும்புகளின் சிகரங்களில் ஏறுகிறான். பின், அங்கிருந்து துவாரகை வந்ததும், அங்கே அவன் மனிதர்களுக்கே உண்டான காம்யார்த்தங்களோடு வாழ்ந்து பெற்ற 
அனுபவங்கள் பலப்பல! ருக்மிணி, பாமா, ஜாம்பவதி என்று மூன்று ரத்தினப் பெண்களை மணந்ததெல்லாம் துவாரகாதிபதியாக இருந்தபோது தான்!
இதில் ஜாம்பவதியை அடையக் காரணமான சமந்தகமணி என்னும் அதிசய ரத்தினக்கல் ஒன்றால் ஏற்பட்ட அனுபவங்கள் மிக ரசமானவை. அதற்கு முன், துவாரகைக்கு அப்படி என்ன சிறப்பு என்று பார்த்து விடுவோமே....? 
ஸர்யாதி என்று ஒரு மன்னன். இந்த உலகம் அவ்வளவையும், தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆள வேண்டும் என்பது அவன் விருப்பம். இதனால் அகந்தை, பேராசை, கோபம், பொறாமை என்று வேண்டாத குணங்கள் இவனிடம் மண்டிக் கிடந்தன
இவனுக்கு பல புதல்வர்கள். அவர்களில், ஆனந்தன் என்பவன் மிகவும் மாறுபட்டவன். எப்படி இரண்யனுக்கு மகனாக பிரகலாதன் வந்து பிறந்தானோ, அப்படி இந்த ஸர்யாதிக்கு மகனாக ஆனந்தன் வந்து பிறந்து விட்டான் எனலாம். ""இந்த உலகம் எனக்கு சொந்தம் என்று கூறினால் தவறப்பா... இந்த உலகம் பூதேவிக்கு சொந்தம். பூதேவி அந்த ஹரிக்கு சொந்தம். அந்த ஹரிக்கே நாமெல்லாம் சொந்தம்,'' என்பான்
ஸர்யாதிக்கு மகனின் ஹரிபக்தியும் சரி... தன்னை மீறிப் பேசும் தன்மையும் சரி.... 
சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதே சமயம், ஆனந்தன் கூறுவதே சத்யமான உண்மை என்கிற ஞானமும் இல்லை
ஒருநாள் பார்த்தான். ""அடேய் ஆனந்தா... நீ இனி என் புதல்வனில்லை. என் ராஜ்யத்தில் உனக்கு இடமுமில்லை. பரந்த இந்த உலகின் அவ்வளவு நிலப்பரப்புமே என் ஆளுகைக்கு உட்பட்டதாகும். எனவே, இந்த மண்ணில் எங்கும் உனக்கு இடமில்லை. உனக்கொரு இடம் வேண்டுமென்றால், நீ சதா போற்றும் ஹரியிடமே கேட்டு வாங்கிக் கொள். அவனும், உனக்கான இடத்தை எப்படித் தருகிறான் என்று பார்க்கிறேன்!'' என்று கூறி ஆனந்தனை துரத்தினான்
ஆனந்தன் ஒன்றும் அதைக் கேட்டு அசரவில்லை
""அப்பா.. மண் மீது தான் உங்கள் நாட்டாமை. நீர் மீதல்ல.... என் ஞானப்பிதா பள்ளி கொண்டிருப்பது பாற்கடல் நீர்மிசை தானே? நாரமாகிய நீரை அணைந்து கிடப்பவன் என்பதால் தானே, அவனை "நாரணன்' என்றே அழைக்கிறோம்? எனவே, அவன் பள்ளி கிடந்தருளும் அந்த கடல் நீர் மிசை நான், அதன் கரையை எனக்கு இடமாகக் கொள்வேன். இனி அவன்பாடு
என்பாடு'' என்று கூறி விட்டு அலைகள் வந்து தழுவிச் செல்லும் கரையில் வந்து நின்றான்
அப்பனே அடித்துத் துரத்தி விட்டானே என்கிற கவலை கொஞ்சமும் இன்றி அப்பனுக்கு அப்பனான அந்த ஹரியை எண்ணித் தவம் செய்யலானான். இந்த உலகில் காரணமில்லாமல் காரியம் ஏது
எந்த ஆணவம் படைத்தவன் சாதித்திருக்கிறான்? அவர்கள் செயலின் எதிர்வினைகளால் சாகசங்களும், சாதனைகளும் வேண்டுமானால் நிகழ்ந்ததுண்டு. நானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டான் இரண்யன். அவனாலேயே நமக்கெல்லாம் நரசிம்மம் கிடைத்தது. இங்கேயும் ஸர்யாதியின் ஆணவம் அவன் மகனையே துரத்தப் போய், ஒரு அதிசயம் நிகழ ஆரம்பித்தது. அந்த ஹரியும், தன் சதுர்புஜங்களோடு சங்கு சக்கரதாரியாய் அவனுக்கு காட்சி தந்தார்
""ஆனந்தா.. உனக்கான இடத்தை இங்கேயே நான் தருகிறேன். உன் காலடி பட்டு கடல் அலைகளால் கழுவப்பட்ட இந்த பூமி இனி உன்னுடையது. என் இருப்பிடமான வைகுண்டத்தின் ஒரு பாகம் இது என்றும் கூட, நீ எடுத்துக் கொள்ளலாம்'' என்று கருணை செய்தார்.
அந்த கடல் பரப்பில் நூறு யோசனை அளவுக்கு நிலப்பரப்பு எழும்பி நின்றது. ஸ்ரீ ஹரி அத்தோடு நின்றாரில்லை
""ஆனந்தா.... உன்னைத் தொட்டுத் துலங்கும் இம்மண்ணில் நானே ஒரு காலம் அவதாரம் எடுத்து வந்து வாழ்வேன். இங்கே என்னை ஐந்து தினங்கள் இடையறாது தியானிப்பவர்கள் என்னை அடைவார்கள். அவர்களின் எலும்புகள், நான் முழங்கும் திருச்சங்கம் என்னும் சங்காகி, இக்கடலில் விளையும்'' என்றும் திருவாய் மலர்ந்தார்
அதனால் தான் அந்த புண்ணியத்தலம், பத்தோடு ஒன்று பதினொன்று என்று ஆகிடாமல், "துவாரகை' என்றானது. கடலுக்கு நடுவில் அமைந்த ஒரு நாடாக கூர்ஜரத்துக்கு (குஜராத்) மேற்கில் இது அமைந்தது
கடல் மாநகரம் என்பதால் இதன் மாளிகைகளும் சரி, தோட்டங்களும் சரி கண்களைக் கவர்ந்திழுத்தன. இது போக பாலங்கள், தேர் செல்லத் தனியாய்.., யானை செல்லத் தனியாய் என்று அதில் பல பிரிவுகள்
எல்லாம் ஸ்ரீ ஹரியின் கட்டளையால் விஸ்வகர்மா செய்த வேலைப்பாடு. ஊரே ஜெகஜ்ஜோதியாக ஜொலித்தது. வைகுண்ட பாகம் என்றால் சும்மாவா? அன்று இப்படித் தான் துவாரகை உருவானது
இன்று அதன் அரசர் பலராமர் ஆவார். அனாத்ருஷ்டன் என்பவனே தளபதி. விகத்ரூ என்பவர் தான் பிரதான மந்திரி. உத்தவர், கங்கர், அக்ரூரர், சத்யகர், சித்ரகர், ப்ருது என்று சபையில் மந்திரி பிரதானிகள். கண்ணன் மன்னன் தான். ஆனாலும், தலையிருக்க வாலாடக் கூடாது என்று, அண்ணன் பலராமருக்கு பின்னால் தன்னை நிறுத்திக் கொண்டு விட்டான்
அவன் பிறந்து வளர்ந்த மதுராபுரிக்கும் அவன் அரசனே! ஆனால், கம்ச வதத்துக்கு பின், அதை கம்சனின் தந்தையான உக்ரசேனன் வசமே ஒப்படைத்து விட்டான்
தாயும் தந்தையுமாகிய வசுதேவரும், தேவகியும் இங்கேயும் இருப்பர். அங்கேயும் இருப்பர்.
அன்றாடம் முதல் வந்தனங்கள் அவர்களுக்கே....! கண்ணனின் பால்ய பிராயம் தான் யசோதை வசம் இருந்தது. இன்று கண்ணன் அன்புடையோர் அனைவர் வசமும் இருப்பவனாகி விட்டான். அன்று ஆனந்தனுக்கு வரமளித்தது போலவே, அவதார புருஷனாகி துவாரகைக்கும் வந்து விட்டான். துவாரகையும் கண்ணனின் கல்யாண கோலம் காண ஏங்கியது
அது தான் ருக்மிணி கல்யாணம்!
பொதுவில் கல்யாணங்களே அழகு தான். அதில் தெய்வத் திருமணங்களுக்கு ஒரு தனித்த அழகும், அருளும் உண்டு. எப்படி என்று பார்ப்போம். விதர்ப்ப நாட்டுக்கு அரசன் பீஷ்மகன்
இவனுக்கு ஐந்து குமாரர்கள். ஒரு குமாரத்தி. இந்த குமாரத்தியே ருக்மிணி. ருக்மி, ருக்மாத், ருக்மபாஹீ, ருக்மகேஷ், ருக்மமாலி என்பது அவர்கள் பெயர்கள். அதில் ருக்மி தான் மூத்தவன். இவன் சேதி நாட்டு அரசன் சிசுபாலனின் உயிர் நண்பன். சிசுபாலனுக்கே தன் சகோதரியை மணம் செய்து தர வேண்டும் என்கிற விருப்பமும் கொண்டிருந்தான். ஆனால், ருக்மிணி கண்ணபிரானைப் பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து, மானசீகமாய் தன்னை கிருஷ்ண பத்தினி ஆக்கிக் கொண்டு விட்டான். கண்ணன் வந்து தன்னை அள்ளிச் செல்ல மாட்டானா என ஏங்கினாள். ஆனால், தன் சகோதரன் ருக்மி, சிசுபாலனுக்கே தன்னை மணம் முடிக்க எண்ணியிருப்பதை அறிந்து தவித்துப் போனாள்.
ஒரு அந்தணக் கிழவரை துவாரகைக்கு தூது அனுப்பினாள். கிழவரும் துவாரகைக்கு படாத பாடுபட்டு வந்து சேர்ந்து, கண்ணனையும் சந்தித்து ருக்மிணியின் தூதுச் செய்தியை கூறத் தலைப்பட்டார்
இந்த தூது செய்தியோடு கூடி கண்ணன் ருக்மிணி மணந்தது வரையிலான சம்பவங்களைச் சொல்வதே ருக்மிணி பரிணயம்
இதை வாசிப்பவர்கள் மணமாகாத பெண்களாக இருந்தால் அவர்களுக்கு திருமணமாகும். மணமானவர்களாக இருந்தால் புருஷனோடு இணக்கம் அதிகமாகும். மொத்தத்தில் கண்ணனின் ராஜானுக்ரஹம் எனும் சந்தோஷம் வரமாகக் கிட்டும்.  
இன்னும் வருவான் 
நன்றி தினமலர் 

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை