விரைவில் திருமணம் நடக்க, ருக்மிணி பரிணயத்தில், நாம் வாசிக்க வேண்டியது, ருக்மிணி சொன்னதாய் அந்த அந்தணர் கண்ணனிடம் சொன்னது தான்.....
""கண்ணா..... இப்போது நான் சொல்வதெல்லாம் என் குரல்வழி ருக்மிணி சொன்னது... எனவே, என்னை மறந்து என் குரலையும் மறந்து, ருக்மிணியை மனதில் கொண்டு, நான் கூறுவதை செவிமடுத்துக் கேட்பாயாக...'' என்று அந்தணர் தொடங்குகிறார்.
""அச்சுதனே..... மூவுலகிலும் எழிலானவனே! உமது கல்யாண குணங்களை கேள்வியுற்ற நாள் முதல் என் மனம் உன்னையே நாடி நிற்கிறது..... முகுந்தனே..... முக்திக்கு வித்தானவனே.... நல்ல குலத்தில் பிறந்த கன்னியர்களால் உன்னை விரும்பாமல் இருக்க முடியாது என்பதே என் பிரமாணம். நான் மட்டும் எப்படி விதிவிலக்காவேன்?
ஆகையினால், நான் என் மனதில் உன்னையே என் கணவனாய் வரித்து விட்டேன். தாமரை மலர் போன்ற கண்கள் கொண்டவனே! விரைந்து வந்து என்னை ஏற்றுக் கொள். இல்லாவிட்டால், சிசுபாலன் எனும் நரிக்கு நான் மாமிசமாகி விடுவேன். இதுநாள் வரை நான் வாழ்ந்த வாழ்வில் தானதர்மங்களும், புண்ணிய நீராடல்களும், மானசீக பூஜைகளும் இருந்தது உண்மையானால், கிருஷ்ண சந்திரனே! நீயே எனக்கு மாலையிடுவாய். சிசுபாலனுக்கு என்னிடத்தே இடமில்லை- என்றாகட்டும். ஒருவேளை சிசுபாலன் என்னை நெருங்கும் பட்சத்தில் அவனை சிதற அடித்து, என்னை நீ கவர்ந்து சென்றே தீர வேண்டும். இது என் மேல் ஆணை... இன்னும் சுலபமான வழியொன்றும் உண்டு.
நான் குலதெய்வத்தை தரிசிக்க வரும் சமயம் நீ அங்கு வந்தும் என்னைக் கவர்ந்து செல்லலாம். திண்தோள் மணிவண்ணா! உன் திருவடித் தூசுக்கு தவமிருப்போர் வாழும் இவ்வுலகில் உன்னை நான் அடையாது போனால் என் பிறப்பே வீணன்றோ? அது வீணகலாமா? ஒன்று மட்டும் உறுதி.. எத்தனை ஜென்மம் எடுத்தாவது நான் உன்னைச் சேர்ந்தே தீருவேன்!'' என்று ருக்மிணியின் உருக்கமான மொழிகளைச் சொல்லி முடித்த அந்தணர், ""கண்ணா... பாவம் ருக்மிணி.... தவியாய்த் தவித்தபடி உள்ளாள். அவளை ஏமாற்றி விடாதே..'' என்றார்.
கண்ணனும் மறுமொழியாக,""பிராமணரே! உங்கள் வார்த்தைகளில் ருக்மிணியின் காதல் நெஞ்சம் பளிச்சென எனக்குத் தெரிகிறது. நான் ருக்மிணியை கை விட மாட்டேன். அதே சமயம், அவள் சகோதரன் ருக்மி, சிசுபாலன் பால் உள்ள நட்பாலும், அன்பாலும் என்னைப் பகைவனாக கருதுகிறான். அவனுக்கு நான் நேருக்கு நேர் நின்று பாடம் கற்பிப்பேன்,'' என்றான்.
சொன்ன கையோடு அந்தணரோடு அப்போதே விதர்ப்ப நாட்டுக்கு புறப்பட்டு விட்டான். கண்ணன் இப்படி ருக்மிணி நிமித்தம் தனியாக விதர்ப்ப தேசம் சென்ற செய்தி சற்று தாமதமாக பலராமரை எட்டியது. பலராமர் உடனேயே பெரும்படையைத் திரட்டினார். கண்ணனுக்குத் துணைபுரிய புறப்பட்டு விட்டார். அவருக்குத் தெரியும்.. ருக்மிணி விஷயம் நிச்சயம் சண்டையில் தான் முடியும் என்று....
விதர்ப்ப நாட்டிலோ எங்கு பார்த்தாலும் கல்யாணக் களை! சிசுபாலன் தான் மாப்பிள்ளை என்னும் செய்தி மட்டும் ஊர் மக்களை கவலையில் ஆழ்த்தியிருந்தது. அப்போது கண்ணனும், பலராமரும் அங்கு வர, திருமணத்தில் பங்கு கொள்ளத் தான் வருகிறார்கள் என்றே எல்லோரும் எண்ணினார்கள்.
அந்தணர் மட்டும் முன்பாக ருக்மிணியிடம் சென்று, ""கண்ணன் உன்னைக் கவரும் பொருட்டே வந்திருக்கிறார். உற்சாகமாயிரு,'' என்று அவளை மகிழ்வித்தார். அவளும் புதுத்தெம்பு பெற்றாள்.
மறுபுறம் சிசுபாலனும் அவன் நண்பன் சால்வன், ஜராசந்தன், தந்தவக்கிரன், விதுரதன் முதலியோருடன் கூடி ஆலோசனை செய்யத் தொடங்கி விட்டான்.
கண்ணன் ருக்மிணியை அடைய முயன்றால், யுத்தம் தான் என்கிற முடிவுக்கும் அவர்கள் வந்தனர். ஜராசந்தன், ஏற்கனவே கண்ணன் மேல் 18 முறை போர் தொடுத்தான். சிசுபாலனோ, கண்ணனே தன் காலன் என்று அவன் மேல் பெரும் அச்சத்தோடு இருப்பவன். இவர்கள் சேர்ந்தால் கேட்க வேண்டுமா?
மறுநாள், மணமேடையில் ருக்மிணி மாலையும் கழுத்துமாய் நின்ற நிலையில் அவர்கள் பயந்தது போல் தான் நடந்தது. கண்ணனின் ரதம் அவள் முன் வந்து நின்றது தெரியவில்லை. அதில் ருக்மிணி ஏறியது தெரியவில்லை. அப்படியொரு மின்னல் வேகம்... அந்த ரதம் துவாரகை நோக்கிப் பறக்க ஆரம்பித்து விட்டது. பின் தொடர்ந்த சிசுபாலனையும், ஜராசந்தனையும் பலராமர் பார்த்துக் கொண்டார்.
அப்படியும் ருக்மிணியின் சகோதரன் ருக்மி கண்ணனை விடாது பின் தொடர்ந்து மறித்து விட்டான். அடாத வார்த்தைகள் பேசி பாணம் போட முயன்றான். ஆனால், கண்ணனின் பாணங்களால் அவன் நிலை குலைந்து போனான். இறுதியாக, அவனது உயிரைப் பறிக்க வாளை உருவிய போது, ருக்மிணி, தன் சகோதரனை விட்டுவிடும்படி, கண்ணனின் காலில் விழுந்து கதறினாள்.
""பிரபோ... என் சகோதரனை ஏதும் செய்து விடாதீர்கள். அவனை மன்னித்து விடுங்கள்.....'' என்றாள்.
கண்ணனும் அவனை மன்னித்தான். பின் ருக்மிணியுடன் துவாரகை வரவும் ஊரே திரண்டு ஆரத்தி எடுத்து வரவேற்றது.
விதர்ப்ப நாட்டு கல்யாணக் களை இப்போது துவாரகைக்கு வந்து விட்டது.
- இப்படி ருக்மிணி பரிணயத்தை இந்த உலகறியச் சொன்னவர் சுகமுனிவர். இவரே கிருஷ்ண பத்தினியர்களில் இன்னொருவரான சத்யபாமாவுக்கும் கிருஷ்ணனுக்கும் நேரிட்ட திருமண பந்தம் குறித்து விரிவாக கூறத் தொடங்கினார்.
இந்த "சத்யபாமா பரிணயம்' பல அரிய செய்திகளை கொண்டது. அப்படி சுகர் சொன்ன சத்யபாமா பரிணயம் சத்ராஜித் என்னும் யாதவரிடம் இருந்தே தொடங்குகிறது. இவன் மகள் தான் சத்யபாமா! சத்ராஜித், சூரிய பகவானிடம் பக்தி கொண்டவன். சூரிய நமஸ்காரத்தை நாள் தவறாது சிரத்தையோடு செய்து வருபவன்.
அதிகாலை சூரியன் கிழக்கு வானில் உதித்த நிலையில், இருகண்களால் எந்தவித கூச்சமும் இன்றி பூரணமாக பார்க்க முடியும். அவ்வேளை கிரணங்களுக்கும் ஒரு தனித்த சக்தி உண்டு. அப்போது சூரிய காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் சூரியனின் அருளைப் பெறலாம்.
சத்ராஜித்தும், சூரியகாயத்ரியை கோடி கோடி முறை தவறாது ஜெபித்து, சூரிய தேவனையே நேரில் வரவழைத்து விட்டான்.
இதுபோன்ற செயலுக்குப் பின்னால், நோக்கம் ஒன்று இருக்கும் அல்லவா?
சத்ராஜித்துக்கும் அப்படி ஒரு நோக்கம் இருந்தது. அது என்ன?
- இன்னும் வருவான்
நன்றி - தினமலர்