எம்பெருமானார் - உடையவர் இராமாநுஜர் பரமபதித்த பின்னர் வைணவத்தின் தலைமை பீடம் வெற்றிடமாகவில்லை; சுவாமி தேசிகன் எனப்படும் வேதாந்த தேசிகர் தோன்றியதால், அது வெற்றியிடமாயிற்று. எம்பெருமானாருடைய தரிசனத்தையும், விருத்தியுரையையும் வேதாந்த தேசிகர் மேலும் பிரகாசப்படுத்தியதால், அவர் நிகமாந்த தேசிகர் எனப் பெற்றார். (நிகமாந்த என்பதற்குப் பிரகாசப்படுத்தல் எனப் பொருள்). வடகலையினருக்கு வேதம் முதன்மையானது என்றால், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை 'உபயவேதாந்தம்' என அழைக்கும் வழக்காற்றை, வேதாந்த தேசிகர் உருவாக்கினார். ஆழ்வார்கள் அருளிச் செய்தவை 'நாலாயிர திவ்யப் பிரபந்தம்' என்றால், தேசிகர் அருளிச் செய்தவை, 'தேசிகப் பிரபந்தம்' எனப்படுகிறது.
வேதாந்த தேசிகர் 1268-ஆம் ஆண்டு, புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்தை அடுத்துள்ள தூப்புல் எனும் சிற்றூரில் அனந்தசூரி சோமயாஜிக்கும் தோதாரம்மாவுக்கும் மகனாக அவதரித்தார். தூப்புல் என்றால் தூய்மையான புல், தர்ப்பை எனவும் பொருள்படும். தூப்புலில் தோன்றியதால் இளமைக்காலத்தில் வேதாந்த தேசிகர் 'தூப்புல் பிள்ளை' என அழைக்கப்பட்டார். திருமலையில் உள்ள திருமணியின் அம்சமாக இவர் அவதரித்ததால், 'வேங்கடநாதன்' எனப் பெயரிட்டனர் பெற்றோர்.
தேசிகரின் தாய்மாமனாகிய கிடாம்பி அப்புள்ளான், ஐந்து வயதான தூப்புல் பிள்ளையை நடாதூர் அம்மாளுடைய (நடாதூர் பெண்ணன்று; ஆண் ஆச்சாரியர்) உபன்யாசத்திற்கு அழைத்துச் சென்றார். தூப்புல் பிள்ளையின் முகத்தில் தோன்றிய தீட்சண்யத்தை உற்று நோக்கிய நடாதூர் அம்மாள், பேருரையை பாதியிலே நிறுத்திவிட்டு, தூப்புல் பிள்ளையை அழைத்து, 'இந்தப் பிள்ளை எதிர்காலத்தில் மிகப்பெரிய வேத விற்பன்னராக வருவார். எம்பெருமானாருடைய தரிசனத்தை நிலைநிறுத்தக் கூடிய வல்லமை பெற்றவர் இவரே' என ஆசீர்வதித்து, அவையினருக்கும் அறிமுகம் செய்தார். பின்னர் நடாதூர், கிடாம்பி அப்புள்ளானை அழைத்து, 'எமக்கு வயதாகிவிட்டதால் இந்தப் பிள்ளைக்கு ஆச்சாரியனாக இருந்து வித்தை கற்பிக்க முடியவில்லை; அதனால் நீரே ஆச்சாரியராக இருந்து வடமொழி, தென்மொழி வேதங்களைக் கற்பிக்கவும்' எனப் பணித்தார்.
கிடாம்பி அப்புள்ளானிடம் வேதங்களை வேங்கடநாதன் ஆதியந்தமாகக் கற்றார். வடமொழி - தமிழ்மொழி - மணிப்பிரவாளம் - பிராகிருதம் ஆகிய மொழிகளில் 124 நூல்களை எழுதக்கூடிய பாண்டித்யத்தைப் பெற்றார். எனினும் தமிழ் மீதிருந்த தீராக் காதலினால் தம்மைச் 'சந்தமிகு தமிழ்மறையோன்' என அழைத்துக் கொண்டார். 'சூரியனுடைய ஒளி பரவாத இடத்தைக் கூடக் காணக்கூடும்; ஆனால், தூப்புல் பிள்ளையின் புகழ் பரவாத இடத்தைக் காணுதல் அரிது' என வைணவம் அவரை ஆராதித்தது. தேசிகரின் ஆளுமையைக் கேட்டு ரெங்கமன்னார், 'வேதாந்தாச்சார்யர்' என ஆசீர்வதித்தார்; ரெங்கநாயகி 'சர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்' என விருது வழங்கினார்.
உரிய பருவத்தில் வேங்கடநாதனுக்கு திருமங்கை எனும் நல்லாளுடன் திருமணமும் நடந்தது. காஞ்சிப் பேரருளாளன் அருளினால் பிறந்த குழந்தைக்கு 'வரதன்' எனப் பெயர் சூட்டினார்.
தேசிகர் ஆழ்வார்கள் மீது அளப்பரிய காதல் கொண்டவர். ஆழ்வார்கள் திருமாலின் மறு அவதாரங்கள் எனச் சொல்லி, அவர்களை அபிநவ தசாவதாரம் எனவும் அழைத்தார். அவர் காலத்தில் வேதங்களைச் சிலர்தாம் கற்கலாம் என்ற நிலை இருந்தது. அதனால் தேசிகர் எல்லா வருணத்தைச் சார்ந்தவரும் பெண்களும் வேதத்தைக் கற்கலாம் எனச் சொல்லி, 'சில்லரை ரகசியங்கள்' எனுந் தலைப்பில் 32 நூல்களை இயற்றினார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை 'பழமறையின் பொருள்' என்றார்.
நாலாயிரத்தைக் கற்று வேதங்களில் புரிந்து கொள்ள முடியாத இடங்களைப் புரிந்து கொண்டதாக தேசிகர் கூறுகின்றார். 'செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே' என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இராப்பத்து, பகல்பத்து உற்சவம் நடந்த காலை, பெருமாளுக்கு முன் திவ்யப் பிரபந்தம் ஓதுவதைச் சாத்திர விரோதம் எனக் கூறிச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். தேசிகர், 'நாலாயிரமும் பரம வைதிகமே' என வாதிட்டு, அதனை நிறுவி, உற்சவம் தடையின்றி நடப்பதற்கு வழிவகுத்தார். இந்த வெற்றிக்கு அறிகுறியாகப் பேரருளாளனாகிய வரதராஜ பெருமாள் தம்முடைய திருச்சின்னங்கள் இரண்டனுள் ஒன்றை தேசிகருக்கு மகிழ்ந்தருளினார். அந்த வரலாற்றைப் பின்பற்றியே வரதராஜ பெருமாளுக்கு இன்றும் ஒற்றைச் சின்னமே சேவிக்கப்படுகின்றது. தேசிகரும் தமிழ் இலக்கியத்தில் இதுவரை யாராலும் எழுதப்படாத 'திருச்சின்னமாலை' என்ற பிரபந்தத்தை அருளிச் செய்தார்.
பிற மதத்தார் படையெடுப்பால் திருவரங்கம் பெரிய கோயில் 48 ஆண்டுகள் நித்ய பூசையின்றிக் கிடந்தது. மூலவருக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படாதவாறு சுவாமி தேசிகன் ஒரு கற்சுவரெழுப்பி பகைவர் கண்ணில் படாதவாறு பாதுகாத்தார். உற்சவர் போன்ற விக்கிரகங்களைத் திருமலைக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருந்தார். பின்னர் செஞ்சியை ஆண்ட கோப்பணார்யன் எனும் அரசன் உதவியினால் திருக்கோயில் திறக்கப்பட்டது. ஊரைக் காலி செய்துவிட்டு வேற்றூர் சென்றவர்கள் எல்லாம் திருவரங்கம் திரும்பினர். மார்கழிப் பெருவிழாவின்போது ஆழ்வார்களுடைய திருவுருவங்களை வரிசையாக அலங்கரித்துக் கொணர்ந்தனர். ஆனால், விசாலமான மனசில்லாத சிலர், பல சாதிகளைச் சார்ந்த ஆழ்வார்களுடைய திருவுருவங்களைக் கோயிலுக்குள் கொணர்வது சாஸ்திர விரோதம் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்புத் தெரிவித்தவர்களோடு வேதாந்த தேசிகர் வாதாடி, தமிழ்மறை தந்தருளிய ஆழ்வார்களுக்கு விக்கிரகப் பிரதிஷ்டை, உற்சவங்கள் நடைபெற வேண்டுமென்ற முன்னோர்கள் மரபைக் காட்டி நிறுவினார். பின்னர் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது.
வேதாந்த தேசிகர் அருளிச் செய்த படைப்புகளில் அதிஅற்புதமானது, 'பாதுகா சஹஸ்ரம்' எனும் வடமொழி நூல். பெருமாளுடைய பாதுகையைப் பற்றி இதுவரை எந்த அருளாளரும் எந்த மொழியிலும் பாடவில்லை. நம்மாழ்வாரும் பாதுகையும் ஒன்றே என்று ஒரு சுலோகம் அதில் இடம்பெற்றிருக்கிறது. பாதுகையின் பெருமையை நன்குணர்ந்தவன் பரதன் என்பதால், அவன் 'பரதாழ்வான்' எனப் பாராட்டப்படுவதாக தேசிகர் கருதுகிறார். 'ஒரு காலத்தில் எனக்கு என்னுடல் பெரிதாகத் தெரிந்தது; பின்னர் இறைவனே பெரிதாகத் தெரிந்தான். இப்பொழுது எனக்கு உடம்பும் பெரிதில்லை; இறைவனும் பெரியவன் இல்லை; பாதுகையே, நீயே பெரியவர்' என அருளிச் செய்கிறார் தேசிகர்.
'வானம் அனைத்தையும் ஏடாகக் கொண்டு, ஏழு சமுத்திரங்களையும் மையாகக் கொண்டு, ஆயிரம் தலைகளையுடைய பெருமாளே எழுதினால்தான், பாதுகையின் பெருமையைச் சொல்ல முடியும் என நவில்கின்றார் சுவாமி தேசிகர்.
சுவாமி தேசிகருடைய இளமைக்கால நண்பர் வித்யாரண்யர். அவர் விஜயநகர மன்னருக்கு அணுக்கமாக இருந்தார். தேசிகருடைய அசாத்தியமான ஆற்றலை அறிந்த வித்யாரண்யர், மன்னரிடம் பக்குவமாக எடுத்துரைத்தார். மன்னரும் அரசவைக்கு வருமாறு தேசிகருக்கு ஓர் முடங்கல் அனுப்பினார். ஆனால் விஜயநகர மன்னரை தேசிகர் சந்திக்க மறுத்தார். காஞ்சிப் பேரருளாளனே பெரியவன் என்று கூறி, 'வைராக்ய பஞ்சகம்' என்ற பிரபந்தத்தையும் அருளிச் செய்து, அதனை அரசருக்கு அனுப்பினார். 'வம்மின் புலவீர்! இம்மண்ணுலகில் செல்வர் இப்போது இல்லை!... என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்! மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்' எனும் நம்மாழ்வார் பாசுரங்கள் தேசிகருடைய மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது போலும்.
தேசிகர் வைணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ஒருநாளைக்குக்கூட அவர் பயனின்றிப் பொழுதை கழித்ததில்லை. காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும்வரை, அவர் தமக்கென ஒரு செயல் திட்டத்தை வைத்திருந்தார். இது 'வைஷ்ணவ தினசர்யை' என்று இன்றும் பல்லோராலும் பின்பற்றப்படுகிறது.
தேசிகர் ஆச்சாரியனுக்கு நல் ஆச்சாரியராகவும், பாகவதர்களுக்கே ஒரு தலைசிறந்த பாகவதராகவும் இருந்தார். ஓர் ஆச்சாரியன் எப்படி இருப்பார் என்பதைப் பட்டுக் கத்தரித்தாற்போல எடுத்துரைக்கின்றார். 'ஆச்சாரியன் தம் மனத்துக்குள்ளே பொதிந்து கிடக்கும் தத்துவார்த்தங்களை பணிவோடும் பக்குவத்தோடும் வந்து கேட்கும் சீடர்களுக்கு வாரி வழங்குவார். அவர் பெரிய புகழ் வரும் என்றோ, பெரும்பொருள் வருமென்றோ புண்ணியம் கிடைக்கும் என்றோ எதிர்பார்த்து உபதேசிக்க மாட்டார்கள். சீடர்களைக் கன்றுகளாகப் பாவித்துத் தாம் காமதேனுவைப் போல உபதேச மொழிகளை அள்ளி வழங்குவார் என நயம்பட எடுத்தோதுகின்றார்.
ஆச்சாரியனுக்கு இலக்கணம் வகுத்தது போல், சீடனுக்கு இருக்க வேண்டிய ஒழுகலாறுகளையும் இரத்தினச் சுருக்கமாகக் கட்டறுத்துச் சொல்லுகிறார் தேசிகர். 'பாகவதர்களின் மனத்திலிருக்கும் அஞ்ஞானமாகிய இருளை ஒழித்து, ஞானமாகிய விளக்கை ஏற்றுகின்றனர் ஆச்சாரியர்கள்.
ஆசாரியனுக்குரிய பிரதிபலனை ஆற்றுவதற்கு, ஆச்சரியங்களை நிகழ்த்தும் சர்வேசுவரனாலும் முடியாது என்றால், மற்றவர்களால் எப்படி முடியும்? ஆனால், சீடர்கள் ஆச்சாரியர்களை மனத்தால் தியானிக்க வேண்டும்; அவர்களுடைய கீர்த்தியைப் பேசிப்பேசி வளர்க்க வேண்டும். இவையனைத்தும் ஆச்சாரியன் மேலுள்ள பக்திக்கு ஒரு வடிகாலாக அமையுமே அன்றி, பெற்ற ஞானத்திற்குச் சிறிதும் ஈடாக மாட்டா' என அருளிச் செய்கிறார்.
சுவாமி தேசிகர் வீறார்ந்த வீர வைணவராக வாழ்ந்தார்; திவ்ய தேசங்கள் அனைத்தையும் தரிசித்தார். ஈரத்தமிழில் இலக்கியங்கள் படைத்தார். மறுகண்ணாகத் திகழ்ந்த வடமொழியிலும் அதிசயிக்கத்தக்க இலக்கியங்களைப் படைத்தருளினார். வேதப்பிராயம் நூறு என்பதற்கேற்ப நூறாண்டுக்கு மேல் வாழ்ந்தார். தமக்குப் பின்னால் வைணவம் தழைக்க, வாழையடி வாழையாகச் சீடர்களையும் உருவாக்கினார். 1369-ஆம் ஆண்டு, சீடர்கள் சூழ்ந்திருக்க திருநாடு அலங்கரித்தார். எம்பெருமானார் வைணவத்தின் வேர் என்றால், வேதாந்த தேசிகரை விழுது எனச் சொல்லலாம்.
நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ - ஞானியர்கள்
சென்னி அணிசேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்
எனும் தனியன், காலங்கள்தோறும் தேசிகர் புகழைப் பேசிக்கொண்டே இருக்கும்.
குறிப்பு:
இவ்வாண்டு ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 750-ஆம் ஆண்டாகும்.
நன்றி - தினமணி 07 03 18