ஸ்ரீ ராமாநுஜருக்குப் பின்னர் தோன்றிய மகான்களில் ஸ்ரீ வேதாந்ததேசிகர் மிகவும் முக்கியமானவர். காஞ்சிமா நகரில் தூப்புல் என்ற திவ்வியதேசத்தில் திருவேங்கடமுடையான் சந்நிதியில் ஒலிக்கும் திருமணியின் அம்சமாக ஸ்ரீ வேதாந்ததேசிகர் அவதரித்த எழுநூற்றைம்பதாவது வருடம் தற்போது நடைபெறுகின்றது. புரட்டாசி திருவோணம் அவரது அவதாரத் திருநட்சத்திரமாகும்.
ஸ்ரீ ராமாநுஜரைப் போலவே ஸ்ரீ வேதாந்ததேசிகரும் ஸ்ரீரங்கத்தில் நீண்டகாலம் தங்கி அருட்பணி ஆற்றிக்கொண்டிருந்தபோது வடநாட்டிலிருந்து இஸ்லாமியர்கள் பெரும்படையுடன் தமிழகமெங்கும் ஊடுருவத்தொடங்கினர். வரும் வழியிலுள்ள திருக்கோயில்களையெல்லாம் அவர்கள் சூறையாடி வந்ததைக் கேள்விப்பட்ட தேசிகரும் மற்ற பக்தர்களும் பெருமை மிக்க ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் மூலஸ்தானத்தைக் கற்களைக்கொண்டு மூடிவிட்டார்கள்.
பிள்ளைலோகாச்சாரியார் உள்ளிட்ட பக்தர்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீரங்கநாதர் உற்சவமூர்த்திகளைத் தோளில் சுமந்தபடி திருமாலிருஞ்சோலைக்குச் சென்றனர். அங்கு சிலகாலம் இருந்த பின்னர், திருப்பதி திருமலைக்கு கொண்டு சென்று திருவேங்கடமுடையானின் மூலஸ்தானத்தில் வைத்து பூஜித்து வந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியார் முக்தியடைந்து விட்டார்.
இஸ்லாமியப்படையினர் ஸ்ரீரங்கத்தை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், ஸ்ரீ சுதர்சனபட்டர் என்னும் பெரியவர் தாம் எழுதிய "சுருதப்பிரகாசிகை' என்னும் அரிய வைணவ தத்துவ நூலையும், தம்முடைய மகன்கள் இருவரையும் ஸ்ரீ தேசிகரின் பாதுகாப்பில் ஒப்படைத்து, ஸ்ரீரங்கத்திலேயே தங்கியிருந்து, படையெடுப்பின் போது இறுதி மூச்சை விட்டார்.
ஓலைச்சுவடி, இரு சிறுவர்கள் மற்றும் தம்முடைய சீடர்கள் சிலருடன் மேற்கு நோக்கிப் பயணித்த ஸ்ரீ தேசிகர், அமைதி தவழும் ஸத்யாகாலத்தை அடைந்து அங்கேயே தங்கியிருக்கலானார். எழில்மிகுந்த ஸ்ரீ கோட்டை வரதராஜர், ஸ்ரீ பெருந்தேவித்தாயார் அருள்பாலிக்கும் திருக்கோயிலும் அவரது கருத்தைக் கவர்ந்தன.
தமது நித்திய அநுஷ்டானங்களைக் குறைவறச் செய்து வந்தது மட்டுமின்றி, புதுப்புது நூல்கள் இயற்றியும், சீடர்களுக்கு நல்லுபதேசமும் செய்தும் காலம் கழித்து வந்த ஸ்ரீ வேதாந்ததேசிகர், ஸத்யாகாலத்தில் சுமார் பன்னிரெண்டு ஆண்டு காலம் தங்கியிருந்தார்.
ஸ்ரீ சுதர்சன பட்டரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட சுருதப்பிரகாசிகை என்ற நூலில் பொதிந்துள்ள தத்துவங்களைப் பிரசாரம் செய்து வந்ததுடன், ஸ்ரீ சுதர்சன பட்டரின் மகன்களுக்கும் பூணூல் அணிவித்துக் குறைவற வளர்த்துவந்தார்.
நடுவில் சிறிது காலம் திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டைக்கு எழுந்தருளி, ஸ்ரீசெல்வநாராயணப் பெருமாளை வணங்கி, அங்கும் சில நூல்களை இயற்றினார்.
மீண்டும் ஸத்யாகாலம் திரும்பிய ஸ்ரீ தேசிகர், ஸ்ரீரங்கநாதப் பெருமானை மீண்டும் தரிசிக்க ஆவல் கொண்டார். அந்நியர் படையெடுப்பால் ஸ்ரீரங்கத்துக்கு உண்டாகியிருக்கும் ஆபத்துகளை விரைவில் நீக்குமாறு ஸ்ரீரங்கநாதர்-ஸ்ரீரங்கநாயகித்தாயார் இருவரையும் பிரார்த்தித்துக்கொண்டு, அபீதிஸ்தவம் (பயம்போக்கும்துதி) என்ற வடமொழி ஸ்தோத்திரத்தை இயற்றினார். இருபத்தொன்பது சுலோகங்கள் கொண்ட அந்த ஸ்தோத்திரத்தை ஸ்ரீரங்கம் உள்ள திசையைநோக்கியபடி தினந்தோறும் பாடி, மனமுருகி வேண்டியும் வந்தார்.
அச்சமயத்தில், செஞ்சியைச் சேர்ந்த கோபணராயன் என்ற மன்னன் படையெடுத்துவந்து, ஸ்ரீரங்கத்திலிருந்த இஸ்லாமியப் படையினரை விரட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீரங்கநாதர் உற்சவ மூர்த்திகளை திருப்பதி திருமலையிலிருந்து கொண்டுவந்து மீண்டும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற வழிவகுத்தான்.
இதை அறிந்த ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஸ்ரீ கோட்டை வரதராஜப் பெருமாளையும், ஸ்ரீ பெருந்தேவித் தாயாரையும் வணங்கி உத்தரவு பெற்றுக்கொண்டு, மகிழ்ச்சியுடன் ஸ்ரீரங்கம் திரும்பி, ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டார் என்பது வரலாறு.
பெங்களூரு - மைசூரு சாலையில், பெங்களூருவிலிருந்து சுமார் 125 கி.மீ. தூரத்தில், மட்டூர் மற்றும் கொள்ளேகால் அருகில் உள்ள ஸத்யாகாலம் இயற்கை எழில்கொஞ்சும் திருத்தலமாகும். மற்ற வைணவத் திருக்கோயில்களில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிதரும் ஸ்ரீ வேதாந்த தேசிகர், இத்திருக்கோயிலில் மட்டும் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார்.
நன்றி - தினமணி 11 05 2018