புதன், 28 ஆகஸ்ட், 2019

கண்ணன் என்னும் மன்னன் - 10 - இந்திரா சவுந்தரராஜன்

சத்ராஜித்தின் முகம் மாறுவதை அப்போது அங்கு வந்த சத்யபாமாவும் கவனித்தாள்.
""என்னப்பா... ஸ்ரீ கிருஷ்ணன் பற்றி சொன்ன மாத்திரத்தில் உங்களுக்குள் இத்தனை தீவிர சலனம்?'' - என்று கேட்கவும் செய்தாள்.
""சலனமில்லை! சந்தேகமம்மா....''
""சந்தேகமா?''
""ஆம்..... இது அந்த மாயாவியின் வேலை தான்....''
""அப்பா அவசரப்படாதீர்கள்....''
""அவசரப்பட என்னம்மா உள்ளது. அன்று நம் மாளிகைக்கு தேடி வந்த போதே நான் பயந்தேன். அதே போலாகி விட்டது....''
""சித்தப்பாவை கிருஷ்ணன் தான் ஏதாவது செய்து விட்டாரா?''
""அதிலென்ன சந்தேகம்? பிரசேனஜித் காட்டுக்கு சென்றதைத் தெரிந்து கொண்டு பின் தொடர்ந்து சென்றிருப்பதை தான் 
நம் வீரர்கள் பார்த்து விட்டனரே....?''
""காட்டுக்கு அவரும் வேட்டையாட சென்றிருக்கலாம். சென்ற இடத்தில் கண்ணில் பட்டிருக்கலாம்...''
""பாமா... கிருஷ்ணனைப் பற்றி உனக்கு தெரியாது. பவிசாக வந்து, இது ராஜாவிடம் தான் இருக்க வேண்டும் என பலராமர் 
விரும்புவதாக பேசிப் பார்த்தான். நான் துளியும் அசைந்து கொடுக்கவில்லை. பிரசேனன் மணியோடு வனம் போவது தெரியவும் வேலையைக் காட்டி விட்டான்.''
""பலராமரை சந்தித்து குற்றம் சாட்டப் போகிறீர்களா?''
""பிறகென்ன... கை கட்டி வாய் பொத்தி மவுனமாக இருக்கச் சொல்கிறாயா? அந்த சமந்தகமணி வாராது வந்த மாமணியம்மா...''
""மணியா பெரிது... அதை விட பெரிது நம் சித்தப்பாவாயிற்றே?''
""உண்மை தான்! மணியின் வல்லமையை மீறி அதை அபகரிக்கும் ஆற்றல் கிருஷ்ணனுக்கே உண்டு. சிறுவயதில் கண்ணன் புரிந்த சேட்டைகளைச் சொன்னால் நீ நம்ப மாட்டாய். யமுனை மடுவில் காளிங்கன் என்ற பாம்பை அவன் அடக்கிய விதம் 
ஒரு பெருமாயம். அதேபோல, தேனுகன் என்னும் அசுரனை அவன் பந்தாடியதும் மாயமே. மிக உச்ச பட்சம் கோவர்த்தனகிரியை சுண்டு விரலால் தூக்கிச் சுமந்தது தான். இன்று வரை இந்த ஆற்றலுக்கு காரணம் எனக்கு புரியவே இல்லை. கேட்டால் அவன் மகாவிஷ்ணுவின் அம்சம், அவதாரம் என்று புளகாங்கிதப்படுகிறார்கள். எல்லாமே மலிவான மாயம் என்பதே என் கருத்து...'' 
""அப்பா.... வியப்பது போல கிருஷ்ண சந்திரனை நீங்கள் இகழ்கிறீர்களே. எனக்கு உங்கள் பேச்சு தான் புரியாத புதிராக உள்ளது...''
""பாமா.. இதற்கு மேல் நீ எதுவும் பேசாதே. நான் இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருக்க தீர்மானித்துள்ளேன். அதற்குள் பிரசேனன் வந்து சேர வேண்டும். இல்லாவிட்டால், இது கிருஷ்ண சதி தான் என்று தீர்மானித்து அதற்கேற்ப நான் செயல்படப் போகிறேன்'' என்றான் சத்ராஜித்!
சத்யபாமா அதைக் கேட்டு கவலை வயப்பட்டாள்.
விலகிச் சென்று அந்தப்புர மாடத்தில் நின்று கொண்டு கிருஷ்ணன் குறித்து சத்ராஜித் கூறியவைகளை எல்லாம் அசை போடத் தொடங்கினாள்.
"தேனுக வதம், பூதகி வதம், காளிங்க நர்த்தனம், கோவர்த்தனக் குடை' என்று அந்த சம்பவங்களைக் கற்பனை செய்து அவள் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
"இத்தனை ஆற்றல் மிக்கவரா பிரசேனஜித்தை கடத்தி சமந்தக மணியை அபகரித்திருப்பார்...?'
தனக்குள் கேட்டுப் பார்த்துக் கொண்ட போது தோழிகள் சுசீலையும், விமலையும் "வரலாமா தோழி...' என்று கேட்டனர்.
""வா சுசீலை.. வா விமலை..''
""நாங்கள் தான் வந்து விட்டோமே.... ஆமாம், உன் முகத்தில் ஏன் இத்தனை சலனம்?''
""உங்களுக்கு எதுவும் தெரியாதோ?''
""ஓரளவு கேள்விப்பட்டோம். ஆனால் எங்களால் பிரபு கிருஷ்ணனை சந்தேகிக்க முடியவில்லை. அவர் ஆபத்பாந்தவர்... ஆபத்தானவர் அல்ல....'' என்றாள் சுசீலை.
""என் உள்ளமும் அவ்வாறே எண்ணுகிறது. ஆனால், என் தந்தையோ அவரையே சந்தேகப்படுகிறார். அதற்கேற்பவே சூழலும் 
அமைந்திருக்கிறது....'' என்றாள் பாமா.
""கவலைப்படாதே... கிருஷ்ணப் பிரபு இதைக் கேள்விப்பட்டால் சும்மா இருக்க மாட்டார். உன் சித்தப்பா காட்டில் வழி தவறி எங்காவது போயிருப்பார். பிரபு அவரை அழைத்து வந்து விடுவார் பார்.''
""உண்மையாகவா?''
""துவாரகாவாசிகளுக்கு சிறு துன்பமும் நேரக் கூடாது என்பதிலே கிருஷ்ணப் பிரபு மிகவே அக்கறை உடையவர்.'' விமலை சொன்னதைக் கேட்டு பாமா அப்படியே நடக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள்.
பாமாவின் பிரார்த்தனை செயல்படத் தொடங்கியது. ருக்மிணியின் காதுக்கு Œத்ராஜித் சந்தேகப்படுவது சென்று சேர்ந்தது. அதைக் கேட்ட மாத்திரத்தில் துடித்தாள். கிருஷ்ணனை தேடத் தொடங்கினாள். கிருஷ்ணனோ தோட்டத்து மயில்களுக்குத் தானியம் 
தந்தபடி இருந்தான்.
ருக்மிணி ஓடி வந்தாள்
மூச்சிறைத்தாள். சத்ராஜித்தின் சந்தேகத்தை சொன்னாள். ஏதும் தெரியாதவன் போல, கிருஷ்ணனும் கேட்டுக் கொண்டான்.
வசுதேவர், தேவகி, பலராமர், உக்ரசேனர் என தொடர்ந்து சகல யாதவர்களுமே இதை எதிரொலித்தனர். ""துவாரகாவாசி ஒருவன் அரிய பொருளோடு காணாமல் போய் விட்டான் என்றால், அதை கண்டறிவது நம் கடமை அல்லவா?'' - கேட்டார் பலராமர்.
""நிச்சயமாக'' கிருஷ்ணன் பதிலளித்தான்.
""நமக்கும் சத்ராஜித்துக்கும் பொதுவான மக்கள் சிலரோடு நீ காட்டுக்குப் புறப்படு. அப்போது தான் சத்ராஜித்துக்கும் உன்னை சந்தேகப்பட்டது தவறு என்பது புரியும்.''
""இதோ இப்போதே புறப்படுகிறேன்'' - என்று கிருஷ்ணன் கிளம்பினான்.
அவனோடு துவாரகையைச் சேர்ந்த பொதுவான பிரஜைகள் 12 பேர் வனம் நோக்கி குதிரையில் புறப்பட்டனர்.
விஷயமறிந்த சத்ராஜித் மாளிகையில் இருந்து பார்க்கவும் செய்தான்.
பாமாவும் ஓடி வந்து பார்த்தாள். மானசீகமாய், ""பிரபோ... நீங்கள் வெல்ல வேண்டும்'' என்று பிரார்த்தித்தாள்.
ஒரு வழியாக வனம் புகுந்தது கிருஷ்ண படை!
ஆனால், பிரசேனஜித்தைக் காணவில்லை. அவனுடைய கிழிந்த உடைகளும், செருப்பும், ரத்தக்கறையும் கண்ணில் பட்டன. பிரசேனஜித் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை என்பது போல அவனது தலை மட்டும் ஓரிடத்தில் கிடந்தது.
- இன்னும் வருவான்

நன்றி தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக