புதன், 28 ஆகஸ்ட், 2019

கண்ணன் என்னும் மன்னன் - 9 - இந்திரா சவுந்தரராஜன்

சிங்கத்தைப் பார்த்த மாத்திரத்தில் பிரசேனஜித்துக்கு நடுக்கம் வந்தது. காரணம், அந்தச் சிங்கத்தின் கண்களில் கொலைவெறி தெரிந்தது
முதலில் அவன் பயந்தாலும், கழுத்தில் இருந்த சமந்தக மணியின் நிமித்தம் அதை வலது கரத்தால் பிடித்துக் கொண்டவனாக 
சிங்கத்தைப் பதிலுக்கு வெறித்தான். அதுவும் வெறித்தது
அவனுக்குள் ஒரு நம்பிக்கை... அந்த மணி தன் கழுத்தில் இருக்கும் வரை தனக்கு எதுவும் ஆகி விடாது என்று...! கையிலும் வேட்டை ஆயுதமாக ஈட்டி இருந்தது. அதை உறுதியாகப் பிடித்தவனாக சிங்கத்தைப் பார்த்தான். அது சட்டென பக்கவாட்டு புதருக்குள் புகுந்து மறைந்து விட்டது
"அப்பாடா...' என்று பெருமூச்செறிந்தான்.
பின் வந்தவழியே திரும்பி நடக்க ஆரம்பித்தான். தன்னோடு வந்த வீரர்கள் எங்கே போனார்களோ என கவலையும் கொண்டான். சிறிது தூரத்திலயே ஒரு தடாகம் தென்பட்டது. அதில் இறங்கி தாகம் தீர்த்துக் கொள்ள இறங்கினான். அதற்கு முன்னதாக, ஏற்பட்ட இயற்கை உபாதை வனத்தில் ஒரு ஓரமாக ஒதுங்கச் சொன்னது. கழுத்து மணியோ அவன் மனதை நெருடியது. சில விநாடிகள் சிந்தித்தவனாக, மணியை கழற்றி அருகில் இருந்த பூச்செடி மீது சூட்டினான்
அப்படியே உபாதையை நீக்க விலகிச் சென்று ஒரு மறைவிடமாகப் பார்த்து அமர்ந்தான். அங்கே அவனருகில் படுத்திருந்தது அந்தச் சிங்கம்!
இருட்டத் தொடங்கியது!
இதனிடையே, தன் ரதத்தில் வேட்டைக்கு வந்திருந்த கண்ணன் வனத்தின் ஒரு பகுதியில் அதை நிறுத்தி விட்டு, ரம்யமான அந்த மாலைப் பொழுதை நாலாபுறமும் பார்த்து ரசிக்கத் தொடங்கினான்.
பறவையினங்கள் கூடு திரும்பும் சப்தம்... மந்த மாருதம் வீசிக் கொண்டிருந்தது. இருள் சூழ்ந்த வனம் பார்க்க பேரழகுடன் இருந்தது. தேடி வந்த சிங்கம் தென்படாததால், நாளை வருவது உசிதம் என்று தோன்றியது.
இருப்பினும் அந்த மாலைப்பொழுதைக் கொஞ்சம் அனுபவிக்கவும் தோன்றியதால், தன் வசமிருந்த புல்லாங்குழலை எடுத்து ஆனந்தமாய் வாசிக்க ஆரம்பித்தான். குழலிசை அந்த பகுதி முழுக்க பரவியதால், பறவைகளும், விலங்குகளும் கண்ணனைச் சூழ்ந்து நின்றன. சில கிளிகள் கண்ணனின் தோளிலேயே அமர்ந்து கொண்டன. கண்ணனும் நெடுநேரம் வரை ராகம் இசைத்தான். முற்றாக இருட்டவும் இசையை நிறுத்தினான். அதன் பின் உயிரினங்கள் பிரிய மாட்டாமல் தயங்கிபடி நின்று கலைந்தன.
கண்ணனும் தன் நீலநயனங்களால் (கண்கள்) அவற்றை புன்னகையோடு பார்த்தான். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பயனாகவே அந்த பட்சிகளுக்கும், மிருகங்களும் கிருஷ்ண தரிசனமும், அவன் குழலிசையும் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது
கண்ணனும் ரதத்தை திருப்பி செலுத்தத் தொடங்கினான். முன்னதாக வானத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் பார்த்த நேரம் 
நான்காம் பிறை...! வானில் ஒரு மூலையில் நிலா இருப்பது கண்ணில் பட்டது
பிறைகளில் மூன்றாம் பிறை தான் மானுடர்கள் பார்க்க உகந்தது. இந்த பிறையை 1000 முறை கண்டவர்கள் மோட்சகதியை அடையும் தகுதி பெற்றவராகி விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களையே "ஆயிரம் பிறை கண்டவர்கள்' என்று நாமும் போற்றி வணங்குகிறோம். கண்ணன் அன்று கண்டது நான்காம் பிறையை... ஒளிக்கீற்றான அதைப் பார்த்து விட்டு ரதத்தை வேகமாகச் 
செலுத்தியவனாக, துவாரகையிலுள்ள அரண்மனையைச் சென்று சேர்ந்தான்
மறுநாள்..... விடியும் போதே பரபரப்பு..... 
மஞ்சத்தில் படுத்திருந்த கண்ணனை எழுப்பிய ருக்மிணி,""பிரபோ! தாங்களா இப்படி உறங்கி விட்டீர்கள்?'' என்று ஆச்சரியப்பட்டாள்.
""நேற்றைய வனப்பிரவேசத்தால் வந்த களைப்பு தான் காரணம் ருக்மிணி...'' என்று கண்ணனும் கொட்டாவி சொடுக்கினான்
""நானும் அப்படியே நினைத்தேன்... ஆமாம்! வனத்தில் நீங்கள் அந்த சத்ராஜித்தின் சகோதரன் பிரசேனஜித்தை பார்த்தீர்களா?'' என்று ருக்மிணி அழுத்தமான பாவனையோடு கேட்டாள்.
""இல்லை! ருக்மிணி... ஏன் கேட்கிறாய்?''
""காரணமாகத் தான்.... உங்களுக்கு முன்பாக வேட்டை நிமித்தம் சமந்தக மணியை அணிந்து கொண்டு வேட்டைக்குப் போனானாம். அவன் இன்னும் திரும்பவில்லையாம்....'' என்றாள்
""அப்படியா?''
""ஆம் பிரபு... இரவெல்லாம் சத்ராஜித்தும் உறங்கவே இல்லையாம். இரவில் தான் அந்த மணி தங்கத்தைத் தருமாமே...?''
- ருக்மணியின் பேச்சு அதற்கு மேல் கண்ணன் காதில் விழவே இல்லை. மாறாக அன்று சத்ராஜித்தை எச்சரித்தது மட்டும் நினைவுக்கு வந்தது. அதன் காரணமாக ஒரு மாயப் புன்னகையும் கண்ணனின் அதரங்களில் உருவாகியது.
""சிரிக்கிறீர்களே.... இதற்கு என்ன பொருள்?''
""மாயை விளையாடத் தொடங்கி விட்டது என்று பொருள் ருக்மிணி...''
""மாயையா... எந்த மாயை?''
""மானுட மாயை....''
""எனக்கு புரியவில்லை. அது என்ன மானுட மாயை..''
""பொறுத்திருந்து பார்... போகப் போக உனக்கு நிச்சயம் புரியும்'' - இது கண்ணனின் தத்துவமான பதில்!
இங்கே இப்படியிருக்க, சத்ராஜித்தின் அரண்மனையே சோகத்தில் ஆழ்ந்திருந்தது
சத்ராஜித் அரண்மனையின் மேல் மாடத்தில் நின்று கொண்டு, அரண்மனைக்குள் வரும் பாதை மேலேயே பார்வையை வைத்துக் கொண்டிருந்தான்
பிரசேனஜித்தோடு சென்ற வீரர்கள் கூட்டம் கூட்டமாக திரும்பியபடி இருந்தனர். ஆனால், பிரசேனஜித் மட்டும் வரவில்லை
அவனோடு சென்ற வீரர்களில் மூத்தவன் உலூவன். அவன் மிக சோகமாக சத்ராஜித் முன் வந்து நின்றான்
""எங்கே பிரசேனஜித்?''
""எதிர்பாராத விதமாக அடர்ந்த வனப்பகுதியில் அவரை பிரிந்து விட்டோம். தேடிப் பார்த்தோம். தென்படவே இல்லை.''
""காலகண்டரின் எச்சரிக்கைக்கு பொருள் இப்போது தான் புரிகிறது. சமந்தக மணியோடு அவனை நான் அனுப்பியது தவறு....''
""என்றால் மணிக்காக யாராவது தீங்கு இழைத்திருப்பார்கள் என நினைக்கிறீர்களா?''
""அப்படி தோன்றினாலும், மணி வைத்திருப்பவருக்கு ஆபத்து நேராது என்பதால் சற்று தைரியமும் மனதில் பிறக்கிறது. இருப்பினும், மாயாவிகள் யாராவது வசப்படுத்தியிருப்பார்களோ என்ற அச்சமும் உள்ளது... அது சரி... காட்டில் யாரையாவது 
பார்த்தீர்களா!''
""வழியில் எதிர்பாராத விதமாக கிருஷ்ண பிரபுவைத் தான் சந்தித்தோம்'' என்று உலூவன் சொன்ன மறுவிநாடியே சத்ராஜித் முகத்தில் பலத்த மாற்றம்
- இன்னும் வருவான்
நன்றி தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக