வியாழன், 29 ஆகஸ்ட், 2019

கண்ணன் என்னும் மன்னன் - 14 - இந்திரா சவுந்தரராஜன்

குகைக்குள் நுழைந்த ஜாம்பவான், ஜாம்பவதியுடன் கண்ணன் பேசிக் கொண்டு நிற்பதையும், அவனது கையில் சமந்தக மணி மாலை இருப்பதையும் பார்த்தவுடன் தவறாக எண்ணி விட்டார்
வேகமாய் கண்ணனை நெருங்கி சமந்தகமணி மாலையைப் பறித்தார்.
""அடேய் யார் நீ...? நான் இல்லாத வேளையில் என் பெண்ணோடு உனக்கென்ன பேச்சு? யாரைக் கேட்டு இந்த மாலையைக் கையில் எடுத்தாய்?'' என்று கேள்விக்கணை தொடுத்தார்.
கண்ணனோ ஜாம்பவானின் பேச்சை ரசிக்கத் தொடங்கினான். ஒரு பிறப்பு கடந்து மறுபிறப்பில் காணும் போது ஏற்படும் சிலிர்ப்பு வேறு..... 
அப்படியே ராமனாக அவதரித்த போது, ஜாம்பவான் உடனிருந்த தருணங்கள் மனதில் தோன்றத் தொடங்கின.
அன்று கண்ட அதே தோற்றம்....! அனுமனின் சிரஞ்சீவி மூலிகையை உட்கொண்டவர்களில் ஜாம்பவானும் ஒருவர். அதன் வீர்யம் மற்றும் தபோசக்தி, கூடவே தான் விரும்பும் வரை மண்ணில் ராமநாம ஜெபம் செய்தபடி உயிர் வாழ விரும்பிய அந்த விருப்பம்.... இதெல்லாமே ஜாம்பவானை இந்த நொடி வரை 
உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதைக் கண்ட கண்ணனின் மனதிற்குள், ஜாம்பவான் தொடர்பாய் மேலும் எவ்வளவோ எண்ணங்கள்!
அவ்வளவும் ஞாபகமாய் ஞாபகத்திற்கு வந்தன
ஆனால், ஜாம்பவானுக்கு அது தெரியவில்லை. கண்ணன் மமதையோடு பதில் கூறாமல் நிற்பது போல் தோன்றியது. அதே வேளை ஜாம்பவதி இடையிட்டு, ""தந்தையே! இவர் யாரென்று தெரிந்தால்....'' என்று ஆரம்பித்தாள்
அவளை முறைத்து பார்த்த ஜாம்பவான், ""அதைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேனே... ஆனால், வாயைத் திறக்காமல் இவன் பார்ப்பதைப் பார்த்தால், இவன் இந்த மணியை அபகரிக்க வந்த ஒரு மாயாவி போலவே தெரிகிறது. ஆனால், எந்த மாயாவியாலும் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் ராமச்சந்திர மூர்த்தியின் அத்யந்த பக்தன். அவராலேயே ஜாம்பவான் என விளிக்கப்பட்டவன்...'' என்றார். அதைக் கேட்ட கண்ணனும் ஜாம்பவானை சீண்டத் தொடங்கினான்.
""அது யார் ராமச்சந்திர மூர்த்தி.... எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே?''
""என்ன ராமச்சந்திர மூர்த்தி யாரா? அடப்பாவி... ஒரு அவதார மூர்த்தியைத் தெரிந்திராத நீயெல்லாம் ஒரு மனிதனா? உன்னோடு நான் பேசுவது கூட பாவம். முதலில் இங்கிருந்து வெளியேறு....'' 
""நான் வெளியேறுவது இருக்கட்டும். நீ வார்த்தைக்கு வார்த்தை கூறும் அந்த ராமச்சந்திரன் என்ன என்னை விட பெரியவனா?''
""என்ன சொன்னாய்... ராமச்சந்திர பிரபுவை விட நீ பெரியவன் என்கிறாயா? அவரை விட பெரியவர் என்று ஒருவர் சர்வ லோகங்களிலும் கிடையாதே. அப்படி இருக்க நீ அவரை விட பெரியவன் போல பேசுகிறாயே.... உன்னை என்ன செய்கிறேன் பார்...'' ஜாம்பவான் அருகில் இருந்த கதாயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு யுத்த வீரனைப் போல முன் வந்தார்
""அடேயப்பா... இப்படி கதையோடு வந்தால் நான் பயந்து விடுவேனா?'' - கண்ணனும் கேட்டான்.
"" என்றால் என்னோடு மோது. என் மூர்த்தியை சாதாரணமாகக் கருதிய உன்னை நான் வதம் செய்யாது விட மாட்டேன்....'' - அங்கே இருவருக்கும் இடையே யுத்தம் மூண்டு விடும் ஆபத்து உருவாகவும், ஜாம்பவதி குறுக்கே புகுந்தாள்.
""தந்தையே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவர் நீங்கள் நினைப்பது போல மாயாவி அல்ல'' 
- என்று கதறினாள்.
"" இருக்கலாம். ஆனால், எப்போது என் ராமனை ஏளனமாய்ப் பேசினானோ அப்போதே அவன் எதிரியாகி விட்டான். இவனுக்கு நான் யார் என்பதைக் காட்டுகிறேன்...'' 
""போதும்.... முழுவதுமாக என்னைப் பேச விடுங்கள்'' என்று சொல்லிய ஜாம்பவதியை கண்ணன் தடுத்தான்
""பெண்ணே! நீ இனி பேசாதே. இவர் வீரத்தை நானும் பார்க்க விரும்புகிறேன்....'' - என்றான்.
""என்ன துணிச்சல் உனக்கு.... என் வீரத்தைக் காண நீயும் விரும்புகிறாயா? இந்தா! வாங்கிக் கொள்....!'' 
ஜாம்பவானின் கதாயுதம் கண்ணனின் தோளில் மோதியது. குகைக்குள்ளேயே யுத்தம் தொடங்கியது. அங்கிருந்த துவாரகாவாசிகள் விக்கித்துப் போயினர். அதில் இருவர் மட்டும் பலராமர், சத்ராஜித் ஆகியோரிடம் தகவல் தர புறப்பட்டனர்
""ஏய் மாயாவி... நீ எவ்வளவு தாங்கினாலும், உன் மேனியை நான் புண்ணாக்காது விட மாட்டேன்'' - என்றபடியே கதாயுதத்தை போட்டு விட்டு கண்ணனோடு கட்டிப் புரண்டு சண்டையிடத் தொடங்கினார். கண்ணனோ, ""பலே! ஆஹா.. அற்புதம்'' என்று சிலாகித்தான். ஆனால், ஜாம்பவானோ மேலும் மூர்க்கமாகி விட்டார். யுத்தம் தொடர்ந்தபடியே இருந்தது
இதற்கிடையில், விஷயம் அறிந்து ஆச்சர்யப்பட்டுப் போனார் பலராமர்!
அதை விட அதிர்ச்சி வசப்பட்டான் சத்ராஜித்
சமந்தக மணி ஜாம்பவான் வசம் இருப்பதும், கண்ணனோடு யுத்தம் நடக்கும் விஷயமும் அவனை வாயடைக்கச் செய்து விட்டது.
ஆனால், சத்யபாமா கண்ணன் யுத்தம் செய்வதை அறிந்து பதைத்தாள். சத்ராஜித்திடம், ""அப்பா! தாங்கள் நேரில் சென்று யுத்தத்தை நிறுத்தி, உண்மையை எல்லோரும் உணரும்படிச் செய்யுங்கள்....'' என்றாள்.
இங்கே பாமா பேசிக் கொண்டிருக்கும் போதே, பலராமர் ஒரு படையோடு காட்டுக்குப் புறப்பட்டு விட்டார். சத்ராஜித்தின் அரண்மனைக்கு வெளியே புழுதி பறக்கச் செல்லும் குதிரைகளின் ஓட்டம், சத்ராஜித்தைக் கட்டிப் போட்டு விட்டது
கூடவே, ஒரு இனம் புரியாத கூச்சம். கண்ணனைக் கள்வன், மாயாவி என்று இகழ்ந்ததை எண்ணி வெட்கப்பட்டான்
""அப்பா.... நீங்கள் தயங்குவது எனக்குப் புரிகிறது. உங்களால் கரடி மனிதனிடம் அடிபட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ண பிரபு.... முதலில் அவர் மேல் பழி..... இப்போதோ அவர் மேல் வலி காயம்! எல்லாம் உங்களால் தான்! என்ன பரிகாரம் தேடப் போகிறீர்கள்?'' - பாமாவின் கேள்விக்கு சத்ராஜித்தால் பதில் கூற முடியவில்லை.
""எப்போது அந்த மணி உங்கள் வசமானதோ, அப்போதே நீங்கள் மிகவும் மாறி விட்டீர்கள். அதை பதவிக்காக வைத்துக் கொள்ளவும் உங்களால் முடியவில்லை. அன்று கிருஷ்ண பிரபு சொன்னது போல, மணியை 
பலராமரிடமோ இல்லை உக்ரசேன மகாராஜாவிடமோ தந்திருந்தால், இன்று சித்தப்பா இறந்து போகவும், நீங்களும் தலை குனிந்து நிற்கவும் தேவையிருக்குமா? - பாமாவின் பேச்சைக் கேட்ட சத்ராஜித் ஒன்று பேச முடியாமல் நின்றான்.

- இன்னும் வருவான்
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக