சத்யபாமா சத்ராஜித்தை கேள்விகளால் உலுக்கி எடுத்து விட்டு கண்ணீரோடு விலகிக் கொள்ள, சத்ராஜித்தும் நடந்ததை எல்லாம் அசை போடத் தொடங்கினான்.
இவ்வேளையில் அவன் மாளிகை முன், திபுதிபுவென ரதங்கள் வந்து நிற்பதும், அதன் எதிரொலியாக குதிரைகளின் கனைப்புச் சத்தமும், மண்புழுதியின் வாசமும் மாளிகையின் உள்ளே வரை தாக்கத்தை ஏற்படுத்தியது.
மாளிகை கட்டியங்காரன் தனக்கான இடத்தில் இருந்து வெளியே பார்த்தான். யாதவ வீரனான சததன்வா என்பவனும், க்ருத வர்மா என்னும் வீரனும், யாதவர்களின் குரு எனப்படுபவருமான அக்ரூரரும் இறங்கி வந்தபடி இருந்தனர்.
அவர்களைப் பார்த்த கட்டியங்காரன் எழுந்து கட்டியம் கூறத் தொடங்கினான்.
""யதுகுல திலகர் வீர மார்த்தாண்டர் சததன்வா பராக்...!
யதுகுல ரட்சகர் யதுகுல போஷகர் க்ருதவர்மா பராக்....!
யதுகுல ஞானி சதுர்வேத பூஜிதர் அக்ரூரர் பராக்.... பராக்.... பராக்! -
என்றபடியே மணியையும் இசைத்தான். அதன் கணீர் ஒலி மாளிகை முழுவதும் பரவியது.
பிரசேனஜித்தின் இழப்பால் இருண்டு போயிருந்த மாளிகைக்குள், அம்மூவர் வரவால் ஒரு பரபரப்பு உருவானது. அவர்களை முதலில் எதிர்கொண்டவள் பாமா தான்...
""வர வேண்டும்... வர வேண்டும் தங்கள் வரவு திரு வரவாகட்டும்...'' என்றாள் சம்பிரதாயமாக...
சததன்வா பாமாவைக் கூர்மையாகப் பார்த்தான். அவளது இளமையும், எழிலும் அவனைச் சுண்டி விட்டது. கிருதவர்மாவிடமும் பாமாவைப் பார்த்த நொடி ஒரு பெருமூச்சு. அக்ரூரர் மட்டும் அவர்கள் போல பாமாவின் அழகில் கரைந்து விடாமல், ""பாமா... எங்கள் வரவை நீ திருவரவாக்க தேவையில்லை. மவுனமாக
வணங்கினாலே போதும். நாங்கள் சூதகத்திற்கு (துக்கம் கேட்க) வந்திருப்பவர்கள்...'' என்றார் அக்ரூரர்.
அதைக் கேட்டதும், பாமாவின் கண்களில் சித்தப்பா பிரசேனஜித்தின் அகோர மரணத்தின் விளைவான கண்ணீர் துளிர்க்கத் தொடங்கியது.
""அழாதே பாமா... எங்கே உன் தந்தை?''
""உக்ராண அறையில் இருக்கிறார். வந்து விடுவார்..'' - பாமா சொல்லும் போதே மேல் வஸ்திரம் தரை புரள
கை கூப்பிய படியே இறுகிய முகத்துடன் சத்ராஜித் வணங்கினான். அக்ரூரர் முன்சென்று தன் கைகளால் அவனைப் பற்றிக் கொண்டு தன் வருத்தத்தை உணர்த்தினார்.
அவருக்குப் பின் சததன்வாவும், கிருதவர்மாவும் அப்படியே செய்தனர்.
பின் அவர்கள் மூவரும் ஒன்றாக அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்திட, சத்ராஜித்தும் அமர்ந்து கொண்டான். பாமா அங்கே நின்றிருந்தாள்.
கிருதவர்மா முதலாவதாகப் பேசத் தொடங்கினான்.
""யாதவாதித்தரே.... நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால், சகோதரன் விஷயத்தில் அப்படி இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே...!'' என்றான்.
""வளமாக வாழ வேண்டிய வயதில் பிரசேனஜித்துக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டது கொடுமை. அதே சமயம்
அரிய பொக்கிஷமான சமந்தக மணி கையில் இருக்க பிரசேனஜித் கொல்லப்பட்டிருக்கிறான் என்றால் அங்கே சிந்திக்க நிறைய விஷயங்கள் இருப்பதாக எனக்குப் படுகிறது. '' - என்று விரல்களைச் சொடக்கி விட்டுக் கொண்டான் சததன்வா. அவன் பேச்சு பாமா, சத்ராஜித் இருவரையுமே கூர்மைப்படுத்தியது.
""சததா.... எதற்கு தயக்கம்- மனதில் பட்டதை தயங்காமல் கூறு....'' என்று அவனைத் தூண்டினார் அக்ரூரர்.
""கூறத் தான் போகிறேன் அக்ரூரரே... எனக்கென்ன பயம்? நான் உத்தம யாதவன்... அந்த கண்ணனைப் போல மாயாவி அல்ல....'' என்று அக்ரூரருக்கு பதில் சொல்வது போல, கண்ணனை அவன் மாயாவி என்றது பாமாவைக் கீறியது.
சத்ராஜித்தும்,""நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? - என்று நிமிர்ந்து கேட்டான்.
""யாதவாதித்தரே.... இன்னுமா புரியவில்லை. வலிமையான சமந்தக மணியை அபகரிக்கவும், உங்கள் கீர்த்திக்கு மாசு ஏற்படவும் அந்த கண்ணன் தான் ஏதோ செய்திருக்கிறான். நாங்களும் நகருக்குள் எல்லோரும் பேசிக் கொள்வதை கேட்டு விட்டுத் தான் வருகிறோம்...'' - சததன்வா அப்படி சொன்னதும் பாமா ஆவேசமானாள்.
""சூதகத்துக்கு வந்த சந்தர்ப்பத்தில் வம்பு பேசாதீர்கள். அந்த மணி எங்கே இருக்கிறது என்ற விபரம் எங்களுக்குத் தெரியும். கிருஷ்ண பிரபு மகா உத்தமர். தீர்க்கதரிசியான அவரின் பேச்சை கேட்டிருந்தால், என் சித்தப்பா மரணித்திருக்க மாட்டார்...'' பாமாவின் பதில் மூவரையும் மிரட்டியது.
""பாமா... மணி இருக்குமிடம் தெரிந்து விட்டதா எங்கே? யாரிடம்?'' - அக்ரூரர் படபடத்தார்.
""அதை நான் கூறத் தேவையில்லை. துக்க விசாரிப்புக்கு நன்றி. நீங்கள் புறப்படலாம்...''
""பாமா... அழகுப் பதுமை நீ- இப்படியா கோபப்படுவாய்? - சததன்வா அவளைப் புகழ்ந்து மடக்கப் பார்த்தான்.
""இப்படியா விவேகமின்றிப் பேசுவாய்?'' என்று பாமா சததன்வாவைக் கேட்டாள்.
""பாமா... நான் உன்னை மணக்க விரும்புகிறேன். என்னிடம் விவேகம் பற்றியெல்லாம் பேசாதே.... மனதில்
பட்டதைப் பேசுவது என் இயல்பு....'' என்றான் சததன்வா.
""உனக்கு அப்படி ஒரு எண்ணமிருந்தால் அதை அழித்து விடு. இல்லாவிட்டாலும் அது தானாய் அழிந்து போய் விடும்'' - பாமாவின் பேச்சு நெருப்பாய் சுட்டது.
சததன்வாவின் கண்களில் ஒரு கொலை வெறியே உருவாகியிருந்தது.
மூவரும் முறைத்தபடி மெல்ல எழுந்து அங்கிருந்து புறப்பட்டனர்.
பாமா, ""அப்பா.... நம் பொருட்டு போராடிக் கொண்டிருக்கும் கிருஷ்ணப் பிரபுவை இவர்கள் குற்றம் சொல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?''
""அதுவும் உண்மை தான்... ஆனாலும், நாளை உனக்கு இதனால் ஏதும் ஆபத்து நேர்ந்தால் கிருஷ்ணனா வந்து காப்பாற்றுவான்?''
- சத்ராஜித்தின் கேள்விக்கு ருக்மிணி,
"" அப்பா... நான் அவரிடம் என்னை எப்போதோ இழந்து விட்டேன். அவரை சரண் புகவும் போகிறேன். என்னைப் பற்றி இனி கவலைப்படாதீர்கள்.
நிச்சயம் அவர் பார்த்துக் கொள்வார்!'' சத்ராஜித்திடம் பெரும் திகைப்பு!
- இன்னும் வருவான்
நன்றி - தினமலர்