கண்ணன் என்னும் மன்னன் - 16 - இந்திரா சவுந்தரராஜன்

கண்ணன் என்னும் மன்னன் - 16 - இந்திரா சவுந்தரராஜன்

சத்ராஜித் பாமா சொன்னதைக் கேட்டு விக்கித்துப் போனதோடு, அதற்கு மறுமொழி கூற முடியாதவனாக அமைதிக்குள் புதையத் தொடங்கினான். ஆனால், பாமா சத்ராஜித்தை அப்படியே விடுவதாக இல்லை.
""அப்பா.. என் விருப்பம் குறித்து நீங்கள் எதுவும் கூறாமல் இப்படியே மவுனமாக இருந்தால் என்ன பொருள்?'' என்று கேட்டாள்.
""என் மேல் இப்போது கிருஷ்ணனுக்கு பெரிதும் வருத்தமிருக்கும். அதைவிட பெரிய அளவில் கிருஷ்ண பத்னியான ருக்மிணிக்கும் இருக்கும்
இப்படி இருக்க உன் விருப்பம் எப்படி ஈடேற முடியும்?'' -சத்ராஜித் பாமாவிடம் சரியாகத் தான் கேட்டான்
""நான் ஒரு விஷயத்தை பெரிதும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை அடைய எண்ணி எந்தப் பெண் துடித்தாலும், அது அவருக்கு தெரிந்து விடுமாம். அவரும் அவர்களை ரட்சிப்பாராம்'' என்றாள் பாமா.
"" உனக்குத் தேவை ரட்சணை அல்ல பாமா. கிருஷ்ணனோடு சம்சார பந்தம்....''
""உண்மை தானப்பா.. அந்த பந்தம் தான் எனக்கான ரட்சணை''
""அதிகம் ஆசைப்படுகிறாய் பாமா. அதோடு, கிருஷ்ணனுக்கு ருக்மிணி என்ற மனைவி இருப்பதை மறந்து விடாதே....''
""வீர புருஷர்களுக்கு பல தாரங்கள் இருப்பது வீரலட்சணத்தில் ஒன்றல்லவா?''
""இருக்கலாம். கண்ணனாகிய கிருஷ்ணன் அதற்கு சம்மதிக்க வேண்டுமே...?'' 
""சம்மதிப்பார். நிச்சயம் என்னை ஏற்பார். நீங்கள் சாதுர்யமாக நடந்து கொள்வதில் இருக்கிறது. அது.....''
""பாமா.. யாதவ வீரர்களான சததன்வா, அக்ரூரர், க்ருதவர்மா போன்றவர்களிடம் இருந்து உன்னைப் பாதுகாக்க கிருஷ்ணனுக்கு இணையான வீரன் மண்ணில் இல்லை என்பதை நான் அறிவேன். ஆனால்....'' 
""ஆனால்.. என்று சந்தேகப்படாதீர்கள். என் பிரார்த்தனை பலிக்கும். அது வீண் போகாது....'' - பாமா அப்போதே உருகத் தொடங்கி விட்டாள்.
இதற்கிடையில், வனத்தில் ஜாம்பவான் தன் மொத்த பலத்தையும் பிரயோகப்படுத்தி கண்ணனை எவ்வளவு தாக்கியும் பயனில்லை. கண்ணன் சிரித்தபடி அதை தாங்கிக் கொண்டான். ஜாம்பவானின் செயலை யாராலும் தடுக்க முடியவில்லை. ஜாம்பவதி சண்டைக்கு இடையில் நுழைந்து அடிகளை, தான் வாங்கிக் கொள்ள முற்பட்டாள்
""நீ மாயையால் அடிகளை உன் மேல் விழாதபடி தடுத்துக் கொள்கிறாய். இப்போது என் மகளின் பரிவு வேறு. ஆனாலும், உன்னை விட மாட்டேன்'' என்று ஜாம்பவான் தாக்குதலைத் தொடர்ந்தார்.
அந்த நொடியில் கிருஷ்ணனும், ராமனின் நீல வண்ண மேனியை ஜாம்பவானுக்கு காட்டி மாயம் செய்தான்
கிருஷ்ணனோ ராத்திரியில் பிறந்த அதிலும் அஷ்டமியில் பிறந்த கரியவன். கரியவன் நீலமாக தெரிந்தால் என்ன பொருள்?
ஜாம்பவானுக்கு சிலிர்ப்பு உண்டானது. கண்ணனின் முகத்தைப் பார்த்தாலோ அதில் ஒரு மாயப் புன்னகை. ""நான் ஏமாறமாட்டேன்....'' என்பது போல ஒரு ஆவேசம்... 
அடிக்க கையை ஓங்கும் போதோ மீண்டும் ராமனின் கோலம்....!
இம்முறை கோதண்டம் என்னும் வில்லுடன் அருளும் கோலம் வேறு....
ஜாம்பவானுக்கு மனம் பதைக்கத் தொடங்கியது
""யார் நீ? உண்மையைச் சொல் யார் நீ? '' என் அப்பன் ராமனாக மாறி ஒருவனால் மாயமெல்லாம் செய்ய 
முடியாது. அவன் மாயம் கடந்தவன். ஆனால், நீ அவனாகத் தெரிகிறாய்... எப்படி?'' - ஜாம்பவான் திக்கித் 
திணறி கேட்டிட, கண்ணனும் ஸ்ரீராமனாக திவ்ய தரிசனம் காட்டினான்
""ஜாம்பவான் ... நீ பூத உடலைத் துறக்காமல் சஞ்ஜீவியின் உதவியால் மானுடவாழ்வை நீட்டித்துக் கொண்டு யுகம் கடந்து வாழ்கிறாய். நான் ராமாவதாரம் முடித்து கிருஷ்ணாவதாரம் எடுத்து திரும்ப வந்துள்ளேன். அது தர்மம் சார்ந்தது. இது தந்திரம் சார்ந்தது. இரண்டின் நோக்கமும் தர்மத்தைக் காக்கவே!'' - என்று ராமனாகத் தோன்றிப் பேசி விட்டு மீண்டும் கண்ணனாக தோன்றவும், ஜாம்பவானுக்கு உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்துப் போனது. கண்களில் கண்ணீர் பீறிட்டது.
""பிரபோ.. தங்களையா தாக்கினேன்? உடல், உள்ளம் இரண்டாலும் மிருகமாகி விட்டேனே...! செய்த புண்ணியம் எல்லாம் வீணானதே! இப்போது காட்டிய திவ்ய ரூபத்தை முன்பே காட்டியிருக்கக் கூடாதா
தங்களை அடித்த பாவத்திற்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காதே... பரமாத்வான நீங்கள் இப்படியா மாயம் புரிவது? நான் தாங்குவேனா?'' - ஜாம்பவான் புலம்பினான்
ஜாம்பவதியோ பரவசத்தில் இருந்தாள். அவளுக்குள்ளும் பூர்வ ஜென்ம விழிப்பு. ராமனாக இருந்த காலத்தில் தன்னை ஏற்கச் சொன்னபோது, "இது ஏகபத்தினி விரத வாழ்வு! இந்த பிறப்பில் மனதாலும் பிற மாதரை நினையேன். அடுத்த பிறப்பில் உன்னை ஏற்றுக் கொள்வேன்' என்று சொன்னது நினைவுக்கு வந்தது
கிருஷ்ணனும், ""ஜாம்பவான்.... உன் அடிகளை அர்ச்சனையாகவே கருதுகிறேன். உன் கரம் என் மேனி முழுவதும் பட வேண்டும் என்று விரும்பினேன். அது ஈடேறி விட்டது. ராமசந்திரனாக பட்டாபிஷேகம் நடந்தபோது அனுமனைப் போல நீயும், என்னை கட்டித் தழுவ ஏங்கினாய். கரடி உருவத்தை எண்ணி ஒதுங்கிக் கொண்டாய். நானும் தழுவிக் கொள்ளாமல் விட்டு விட்டேன். உன் விருப்பத்தை இப்போது நிறைவேற்ற சித்தமாக இருக்கிறேன்''- என்ற படி ஜாம்பவானை கண்ணன் இழுத்து அணைத்துக் கொண்டான்
பிறவிப்பயன் பெற்று விட்டதை ஜாம்பவான் உணர்ந்தான்.
""பிரபோ.. பிரபோ...!'' என்று அந்த ஆலிங்கனத்தில் குழைந்தார்! நெகிழ்ந்தார்! மகிழ்ந்தார்! மலர்ந்தார்! அதே மகிழ்வுடன் சமந்தக மணியை எடுத்து கண்ணனின் கழுத்தில் அணிவிக்க முயன்றார்
அப்போது கிருஷ்ணன், "" என்ன இது பேதமை.... இது சத்ராஜித்துக்கு சொந்தமானது. நான் உரிமைப்பட்டவன் அல்ல. கருமைப்பட்டவன்! அதாவது இதைக் களவாடியவன் என்கிற கருமைக்கு ஆளானவன். ஆனாலும், இதை வாங்கிக் கொள்கிறேன். எனக்காக அல்ல. சத்ராஜித்துக்காக'' என்றான்
""பிரபோ.. இன்னொரு விருப்பத்தையும் ஈடேற்ற வேண்டும். ஏதாவது சமாதானம் சொல்லி மறுத்து விடக் கூடாது,'' என்றார் ஜாம்பவான்.
""எதைக் கேட்டாலும் அதைச் செய்திட உறுதியளிக்கிறேன்'' என்றான் கிருஷ்ணன்.
""அதுபோதும்... என் மகள் ஜாம்பவதி கன்னித்துறவியாக எண்ணி வாழ்கிறாள். அவளை ஏற்று அருள்புரிய வேண்டும்,'' - ஜாம்பவான் கேட்கவும், பலராமர் தன் படையினரோடு அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.

- இன்னும் வருவான்
நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை