படையோடு வந்த பலராமரைப் பார்த்ததும் கண்ணன் ஓடிச் சென்று சமந்தகமணியை தந்து விட்டு காலில் விழுந்து எழுந்தான். பின்னர் ஜாம்பவானும், ஜாம்பவதியும் வந்து அவர் காலில் விழுந்தனர். கண்ணன் நடந்ததை பலராமரிடம் கூறத் தொடங்கினான்.
""அண்ணா! இவ்வளவு தூரம் நீங்கள் என்னைத் தேடி வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. தங்கள் பாசத்தை எண்ணி நெகிழ்கிறது என் மனது. அதே வேளையில் இங்கே உத்பாதம் ஏதும் ஏற்பட்டு விடவில்லை. மாறாக ஜாம்பவான் என்னும் பெரும் பலவானின் தொடர்பு தான் ஏற்பட்டுள்ளது.
பிரசேனஜித்தைக் கொன்ற சிங்கத்தை வேட்டையாடி மணியை பாதுகாத்தவர் தான் இந்த ஜாம்பவான். நான் வரவும் எனக்களித்து விட்டார். நான் நீங்கள் வரவும் உங்களிடம் அளித்து விட்டேன். இனி துவாரகாபதியான உங்கள் பாடு- அந்த சத்ராஜித் பாடு. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
- கண்ணன் பேசியதைக் காதுகள் கேட்டுக் கொண்ட போதிலும், பலராமரின் கண்கள் கண்ணனின் காயம்பட்ட மேனியை வருடிக் கொண்டிருந்தன. கண்ணனையும் அது சற்று சங்கடப்படுத்தியது. பலராமர் அது குறித்து,""கண்ணா.. உன் மேனி முழுக்க தென்படும் காயம் நீ இந்த கரடியோடு யுத்தம் புரிந்ததை கூறாமல் கூறுகிறது. எனக்கு செய்தி வரவே, உனக்கு உதவவே படையோடு வந்தேன். ஆனால், நீயோ தலைகீழாக பேசிக் கொண்டிருக்கிறாய். இது என்ன நாடகம்?'' என்றார்.
""நாடகமா... அபச்சாரம். அபச்சாரம்! ஜாம்பவானோடு நான் யுத்தம் புரிந்ததாக உங்களுக்கு வந்த செய்தி தவறானது. நாங்கள் விளையாடினோம். அவ்வளவு தான்...''
""போதும் நிறுத்து... விளையாட்டு காயமா இப்படி இருக்கும்?''- பலராமர் பலத்த குரலில் கோபிக்க ஜாம்பவானே நடந்ததை மறைக்காமல் கூறிட முன் வந்து, ஜாம்பவதியை மணந்து கொள்ள வேண்டியது வரை சொல்லி பலராமர் காலிலும் மீண்டும் விழுந்தார்.
""யாதவப் பிரகாசரே! அடியேன் பெரும்பாவி! அதற்காக என்னைத் தண்டியுங்கள். ஆனால், என் மகளை ஏற்றுக் கொள்ள மறுக்காதீர்கள். அவளை நான் திவ்ய பிரசாதமாகவே வளர்த்துள்ளேன். அவள் மானிடர்க்கானவள் அல்ல. தேவர்களுக்கானவள்,'' என்று கண்ணீர் விட்டார்.
பலராமர்,""கண்ணா... என்ன செய்யப் போகிறாய்?'' என்று கேட்டார்.
""அண்ணா அறியாததா.. விட்டகுறை தொட்ட குறை போலவே இதைக் கருதுகிறேன்''
""புரிகிறது... ஜாம்பவானை நானும் அறிவேன். ஜாம்பவதியைச் சேர வேண்டும் என்பது விதியாக இருந்தால் அதை மாற்ற இயலாது. எதற்கும் ருக்மிணியை குறித்து யோசித்துக் கொள்...''
""அண்ணா... ருக்மிணி முதலில் வருந்தினாலும், முடிவில் நிச்சயம் ஏற்றுக் கொள்வாள். அவளை நானறிவேன். நான் வாக்குறுதி தவறுவதை ஒருக்காலும் ஏற்க மாட்டாள்.''
""நான் மட்டும் ஏற்பேனா...? இது தெரிந்தல்லவா நீயும் வாக்குறுதி தந்திருக்கிறாய்.
உன் தந்திரம் எனக்கு தெரியாதா என்ன?'' என்றார் பலராமர்.
""தந்திரமா? என்னிடமா? அண்ணா!''
""போதும் ... இப்படி நீ சாதித்ததை எல்லாம் நான் அறிவேன். இது அதைப் பேசுவதற்கான காலம் இல்லை. ஆக வேண்டியதைச் செய்..'' - பலராமர் இப்படி சொல்லவும் ஜாம்பவான், சூழ்ந்திருக்கும்
உறவினர், துவாரகாவாசிகள் முன்னிலையில் ஜாம்பவதி கழுத்தில் கண்ணனை மாலையிடச் செய்தான்.
புதுமண தம்பதியர் பலராமர், ஜாம்பவான் பாதம் தொட்டு வணங்கி எழுந்தனர்.
ஜாம்பவானுக்கு மெய் சிலிர்த்தது. தான் பற்ற வேண்டிய பாதங்கள் தன்னைப் பற்றியதை எண்ணி பூரித்தான். இனி தான் சாதிக்க ஏதுமில்லை என்று எண்ணினான்.
இந்த திருமண விஷயம் ருக்மிணிக்கு தெரிந்தால் அவள் என்ன செய்வாள்? அரண்மனையில் ருக்மிணி, ஜோதிடர் காலகண்டரை அழைத்து பிரசன்னம் பார்த்தபடி இருந்தாள்.
வனத்திலே ஜாம்பவானோடு யுத்தம், பலராமர் வேறு படை திரட்டி சென்றுள்ள நிலையில் அடுத்து என்னாகும் என்பதை தெரிந்து கொள்ள கால பிரசன்னம் தான் அவளுக்கான ஒரே வழியாக இருந்தது.
காலகண்டரும் சோழிகளை உருட்டியபடி சகலத்தையும் சொல்லிக் கொண்டிருந்தார்.
""தேவியாரே... எல்லாம் சுபமாக முடிந்து விட்டது. கிருஷ்ண பிரபுவை தாங்கள் அடைந்தது போல ஜாம்பவதியாரும் அடைந்து விட்டார்,'' என்று சொன்னதும் ருக்மிணியிடம் ஒரு சலனம். அதையும் காலகண்டரே நீக்க முயன்றார்.
""தாயே... கிருஷ்ணபிரபு பிறப்பால் தான் மானிடர். மற்றபடி அவர் அந்த பரம்பொருள் என்பதை தாங்கள் இன்னுமா அறியவில்லை? அவர் மட்டில் ஆண், பெண் என்று சகலரும் ஜீவாத்மாக்களாக மட்டுமே உணரப்படுவர். அம்மட்டில் ஜாம்பவதி என்னும் ஜீவாத்மாவும், அவரோடு சேர்ந்திருக்கிறது. அப்படி இருக்க சராசரி பெண்களைப் போல "சக்கள' உணர்வில் சிக்கலாமா?'' - என்று கேட்க ருக்மிணி சலனத்தில் இருந்து விடுபட்டாள்.
""உண்மை தான் காலகண்டரே! என் நாதன் பரம பவித்ரன். தானும் ஆடி, தன்னைச் சார்ந்தவர்களையும் ஆட்டுவிப்பவன். அதில் ஆயிரம் அர்த்தமிருக்கும். அவர் பரம சாமுத்ரிகா லட்சணர். அவரை வந்தடைந்திருக்கும் ஜாம்பவதி இனி என் சகோதரி...'' என்ற ருக்மிணி சந்தோஷத்தோடு காலகண்டருக்கு பொன்,பொருளை ஒரு தட்டில் வைத்து கொடுத்தாள்.
""தாயே! நான் இன்னும் சில சங்கதிகள் கூற விரும்புகிறேன்'' - என்றார் காலகண்டர்.
""சொல்லுங்கள்....''
""சமந்தக மணி கிடைத்து விட்டது. அதனால், தற்காலிகமாகத் தான் கிருஷ்ணபிரபு மீதான பழி நீங்கியுள்ளது. ஆனாலும், அது நிரந்தரமாக நீங்கவில்லை...''
""ஏன் அப்படி.... இதற்கு மேல் இன்னும் என்ன நடக்க வேண்டும்?''
""அது நடக்க நடக்கவே புலனாகும். சொல்லப் போனால் இனி தான் தாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது,'' - காலகண்டர் மிரட்டாமல் மிரட்டினார். ருக்மிணி அதைக் கேட்டு மீண்டும் சலனப்பட்டாள்.
""தாயே! எது நடந்தாலும் அது நன்மையில் தான் முடியும். நம் பிரபு அதற்காகவே அவதாரம்எடுத்துள்ளார். இந்த வாழ்வே ஒரு வகையில் நாடகம் தான். நாமெல்லாம் அதில் பாத்திரங்கள். நம் பாத்திரத்தை நாம் சரியாகச் செய்தால் போதும். மற்றதை பிரபு பார்த்துக் கொள்வார்!''- காலகண்டரின் விளக்கம் ருக்மிணியை சற்று ஆற்றுப்படுத்தியது.
இவ்வேளையில் பாவம் பாமா... அவளுக்குத் தான் இது போல சூட்சும ரகசியங்களை சொல்ல எவருமில்லை. அவள் மனம் ஜாம்பவதியை கண்ணன் மணந்து கொண்டதை எண்ணி கலங்கியிருந்தது.
இங்கே ருக்மிணி- அங்கே ஜாம்பவதி! இந்நிலையில் தன்னால் கிருஷ்ணபிரபுவை அடைய முடியுமா என்கிற சந்தேகத்தில் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.
- இன்னும் வருவான்
நன்றி - தினமலர்