திங்கள், 30 செப்டம்பர், 2019

‘சிதாஷீர நியாயம்’னா என்ன? - வேளுக்குடி கிருஷ்ணன்

பாலில் சர்க்கரை போட்டு நாம் சாப்பிடுகிறோம். சர்க்கரையே சேர்க்காமல் ஒருவர் பாலே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

சர்க்கரையே தெரியாது. சரியென்று பாலையே குடித்துக் கொண்டிருப்பார்.

பாலே தெரியாது. சர்க்கரை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இன்னொருவர். அவர் சர்க்கரையை சாப்பிடுவார். ஆனால், பாலில் ஒரு நாள் சர்க்கரையைக் கலந்து சாப்பிட்டுவிட்டார் என்றால், அப்புறம் தனித்தனியாக சாப்பிடுவதற்கு எண்ணமே போகாது. சர்க்கரை இல்லாத பாலை சாப்பிடுவோமா? பால் இல்லாத சர்க்ரையைத்தான் சாப்பிடுவோமா?

அதுபோல, மத்ஸ்யாவதாரம் மீனான அவதாரம். கூர்மாவதாரம் ஆமையான அவதாரம். வராகாவதாரம் பன்றியான அவதாரம். இவை மூன்றும் மிருகமாக மட்டுமே பிறந்தவை. நரசிம்மப் பெருமானுக்குப் பிற்பட்ட முதல் அவதாரம் வாமனாவதாரம். தேவனாகப் பிறந்தார். இந்திரனுக்குத் தம்பிதான் வாமனாவதாரம். பரசுராம, ராம, பலராமன், கல்கி இவை எல்லாமே மனுஷ்யனான அவதாரங்கள்.

நரசிம்ஹர். அவர் மட்டுமே, ஒரு பக்கத்திலே மிருகமாக இருந்தார். மறுபக்கத்திலே மனிதனாக இருந்தார்.

கழுத்துக்கு மேலே சிங்க உரு. கழுத்துக்குக் கீழே மனித உரு. சேராத இரண்டைச் சேர்த்தார் எம்பெருமான்பாலும் சர்க்கரையும் சேர்த்தாற்போலே. சேர்த்து அனுபவித்து விட்டோமென்றால் தனியாக மிருகாவதாரத்துக்கும் புத்தி போகாதாம்; தனியாக மனுஷ்யாவதாரத்துக்கும் புத்தி போகாதாம்.

இந்த நரசிம்மாவதாரத்தை, ஆழ்வார்கள் அனைவரும் ஆச்சர்யமாக அனுபவித்துள்ளார்கள். முக்கியமாக எம்பெருமான் அஹோபில திவ்யதேசத்திலே சேவை சாதிக்கிறார்.

அந்த நரசிங்கரையும் லக்ஷ்மி நரசிம்மராகப் பல இடங்களில் வணங்குகின்றோம். யோக நரசிம்ம சுவாமியாகப் பல இடங்களில் சேவை சாதிக்கிறார். என்றோ நடந்த நரசிம்ம அவதாரத்தை நாம் இழந்துவிட்டோம். அன்றைக்கு நாம் சேவிக்கவில்லையே என்ற குறை இருக்கிறதே அந்தக் குறை தீரத்தான், விக்கிரக வடிவில் எத்தனையோ திவ்ய தேசங்களில் எம்பெருமான் சேவை சாதிக்கிறார். அதில், பிரதான திவ்யதேசம் என்று பார்த்தால் அஹோபிலம்.

அஹோபிலம், நவ நரசிம்ம க்ஷேத்ரம் என்று பெயர்பெற்ற திவ்யதேசம். கீழ் அஹோபிலம்; மேல் அஹோபிலம். ஜ்வாலா நரசிம்மர், பாவன நரசிம்மர். பார்க்கவ நரசிம்மர், சத்ரவட நரசிம்மர்என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நரசிம்மராக பகவான் அங்கே சேவை சாதிக்கிறார்.

அதோடு மட்டுமில்லாமல்சோள சிம்மபுரம் கடிகாசலம்’ – ஒரு நாழிகைப் பொழுது அந்த மலையில் நாம் நின்று விட்டோமானால் அனைத்துப் பாபங்களும் நீங்கிப்போகும். அதிலும், கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை என்று சொன்னால் அவ்வளவு கூட்டம். கால் வைக்க இடம் இருக்காது. நாற்பது ஐம்பதாயிரம் பேர் ஞாயிற்றுக்கிழமை தோறும் சேவிக்கிறார்கள்.

திருமங்கையாழ்வார் பாடினார்,

மிக்கானை மறையாய்த் தெரிந்த விளக்கை
என்னுள் புக்கானைப் புகழ் சேர் பொலி
கின்னாப் பொன்மலையைத்
தக்கானைக் கடிகத் தடம் குன்னின் மிசை இருந்த
அக்காரக்கனியை அடைந்துய்ந்து போனேனே.’

அக்காரம் என்றால் சர்க்கரை. அந்த
சர்க்கரையில் கனி செய்தால் எப்படி இருக்கும்?

கர்நாடகத்தில் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு சர்க்கரையால் ஆன பொம்மையாகப் பழம் செய்து சீர் வைப்பார்கள். திருமங்கையாழ்வார் இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இவ்வளவுதானா பெருமாள் என்று நினைத்துவிட வேண்டாம். சர்க்கரையை விதையாக விதைக்க வேண்டுமாம்.

சர்க்கரையே மரமாக முளைக்க வேண்டுமாம். அந்த சர்க்கரை மரம் பழுக்க வேண்டுமாம். அந்தப் பழம்தான் சர்க்கரைப் பழமாம்! அதாவது அக்காரக்கனி! இது மாதிரி நடக்குமா என்று அடியேனைக் கேட்க வேண்டாம்.

சர்க்கரையை விதைத்து அது மரமாகிப் பழுக்க வேண்டுமானால், அந்தக் கனி எவ்வளவு மதுரமாக (இனிமையாக) இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதற்குஅபூதோபமாஎன்று பெயர். இல்லாததை உவமையாகச் சொல்வது. அப்படிப்பட்ட அக்காரக்கனி பெருமாள் கடிகாசலத்திலே எழுந்தருளியுள்ளார்.

அதேபோலக் காஞ்சிபுரத்திற்கு அருகிலே வந்தால் வேளுக்கைஆளரி. வேளுக்கை என்பது அந்த ஊரின் பெயர். ஆள் என்றால் மனிதன். அரி என்றால் சிங்கம். ஆளரி, கோளரி என்ற இரண்டும் கலந்த வடிவிலே அங்கு சேவைசாதிக்கிறார்.

திருநாங்கூருக்கருகிலே திருவாலி திருநகரி. அங்கு பஞ்ச நரசிம்மர்கள் சேவை சாதிக்கிறார்கள்.
இதுபோல் அடியார்கள் தன்னை சேவிக்க வேண்டும் என்றும், தன் தரிசனத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காகவும்தான் லக்ஷ்மி நரசிம்மனாய், யோக நரசிம்மனாய் பற்பல திவ்ய தேசங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார்.

பிரதானமாய் சென்னைப் பட்டினத்துக்குப் போகிறோம். திருவல்லிக்கேணியில் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கு பார்த்தசாரதி மூலமூர்த்தி. நின்ற திருக்கோலம்.
அவருக்கு நேர் பின்புறம் தெள்ளியசிங்கப்பெருமான்.

தெள்ளியசிங்கத்தேவை திருவல்லிக் கேணி கண்டேனேஎன்பது திருமங்கையாழ்வார் பாசுரம். பெருமாள் ரொம்பவும் தெளிவாய் இருக்கிறாராம்.

லக்ஷ்மி நரசிம்மனாய் இருக்கிறார்; யோக நரசிம்மனாய் இருக்கிறார்; தெள்ளிய சிங்கப் பெருமானாய் இருக்கிறார். அவருடைய பெருமை யாருக்குத் தெரியும்? ஒருத்தருக்கும் தெரியாது. சிங்கப் பெருமான் பெருமை சொல்லி முடியாது என்றே நம்மாழ்வார் ஆனந்தப்படுகிறார்.

எங்குமுளன் கண்ணனென்ன மகனைக்
காய்ந்திங்கில்லையாலென்று இரணியன் தூணுடைப்ப
அங்கப்போதே அவன் வீயத் தோன்றிய
என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே

ஒவ்வொரு ஆழ்வாரும் இந்தப் பெருமானை ஒவ்வொரு கோணத்திலிருந்து அனுபவித்திருக்கிறார்கள்.

நரசிம்மன் திருவடிகளே சரணம் !!!

(ஸ்ரீ வேளுக்குடிகிருஷ்ணன் ஸ்வாமி உரையிலிருந்து)

புதன், 25 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 26 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணன் சத்யபாமாவோடு, கருடவாகனத்தின் மீதேறி வருவதைக் கண்ட முரன் திடுக்கிட்டான். ஆனாலும், ஐந்து தலை கொண்ட அவன் கிருஷ்ணனை எதிர்க்கத் தயங்கவில்லை. ஆனால்... ஒரு குழப்பம்! போர்க்களத்திற்கு கிருஷ்ணன் எப்போதும் இப்படி பெண் துணையுடன் வந்ததில்லையே...! 
அவருக்கு பத்தினிகளாக ருக்மிணி, ஜாம்பவதி, காளிந்தி ஆகியோர் இருக்கும் போது பாமாவை மட்டும் அழைத்து வந்தது ஏன் என புரியவில்லை. நரகாசுரன் பெற்ற வரம் அவனுக்கு தெரியுமோ... தெரியாதோ...!
பாமாவைப் பொறுத்த வரை, அவள் கண் எதிரில், சததன்வா என்பவனால் அவளது தந்தையான சத்ராஜித் வெட்டிக் கொல்லப்பட்டார். பாமாவை எப்படியாவது அடைய சததன்வா படாதபாடு பட்டான். ஆனால், பாமா கிருஷ்ணனை நேசித்ததால் சததன்வாவின் ஆசை நிறைவேறவில்லை. இந்நிலையில் சததன்வா, சத்ராஜித்தை கொலை செய்தான். 
சததன்வாவின் அரக்க குணத்தின் உச்ச நிலையைக் கண்ட பாமா கொதித்தாள். இந்த கொதிப்பை அப்படியே விட்டால் பழி உணர்வாக மாறி மனதைப் பாதிக்கும். அசுர சக்திகளிடம் போரிட்டால், கோபம் வெளியேறி மனம் அமைதி பெறும். 
இந்நிலையில் தான் பாமா கிருஷ்ணனுடன் போருக்கு வந்தாள்.
நரகாசுரனைப் பொறுத்தவரை பாமாவுக்கு தாய் ஸ்தானம். கிருஷ்ணனுக்கு தந்தை ஸ்தானம்! தாயும், தந்தையும் மகனைக் கொல்லப் போவது உலகில் இல்லாத அதிசயம் மட்டுமல்ல! தர்மத்தை நிலைநாட்டும் உயர்ந்த நிலையும் கூட.
இப்படி ஒரு பின்புலத்தோடு கிருஷ்ணன் வந்த போது தான், முரனை எதிர்க்க நேர்ந்தது. அவன் நெருப்பு, நீர், ரத்தம் என நாலாபுறமும் மாறி மாறி உமிழ்ந்தபடி போரிட்டான். கிருஷ்ணன் சக்ராயுதத்தை ஏவ, அது முரனின் ஐந்து தலைகளையும் அறுத்து விட்டுத் திரும்பியது. முரனை அழித்ததால் கிருஷ்ணன் 'முராரி' என பெயர் பெற்றான்.
முரனைத் தொடர்ந்து நரகாசுரனின் ஏழு மகன்கள் ஆவேசமாக போருக்கு வந்தனர். அவர்களையும் கிருஷ்ணன் சக்ராயுதத்தை ஏவிக் கொன்றான். ஒருவகையில் இவர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் தான்! தெய்வீகமான சக்ராயுதத்தால் இறுதி முடிவு ஏற்பட்டு வைகுந்தம் செல்வது என்பது சிறப்பு தானே! அசுரர்களுக்கும் நல்ல முடிவு கிடைக்க ஏதாவது நல்ல செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும்.
முரனும், தனது ஏழு மகன்களும் இறந்த செய்தி நரகாசுரனை எட்டியது. அவன் போர்க்களம் புறப்பட்டான். அவனது படை பலத்தை அழிக்க விரும்பிய கிருஷ்ணன் வாள் ஏந்தினான். மறுபுறம் பாமாவும் அசுரப்படை வீரர்களைக் கொன்று குவித்தாள். ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி இரவில், விடிந்தால் 
அமாவாசை என்னும் நிலையில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிருஷ்ணன் தன் சக்ராயுதத்தை ஏவ, நரகாசுரனின் உயிர் பிரிந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 
நரகாசுரனின் தாயான பூமாதேவி தலை துண்டிக்கப்பட்ட மகனின் உடம்பை மடியில் கிடத்தி கண்ணீர் விட்டாள். தாய்ப்பாசம் என்பது தேவர், அசுரர் என்பதைக் கடந்த அன்பு உணர்வு என்பதை உணர்த்தும் விதமாக இது இருந்தது.
சக்கரத்தின் சம்பந்தம் ஏற்பட்டதால் நரகாசுரனின் அசுர குணம் அழிந்தது.
“தந்தையே! நான் இப்போது நல்ல மனநிலையில் இருக்கிறேன். ஆணவம், கோபம், பழி உணர்வு, பாதகச் செயல் என இவ்வளவு காலமும் இருண்ட வாழ்க்கை வாழ்ந்தேன். என்னை அசுரவழியில் நடத்தியதும் நீங்கள் தான். இப்போது நல்லவனாக்கியதும் நீங்கள் தான்! இதை என்னவென்று சொல்வது.... இதனால் யாருக்கு என்ன பயன்?”
நரகாசுரன் கேள்வி கேட்டான்.
“பவுமா... இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இருப்பது போல, இப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணம் வேண்டுமல்லவா? நீ இரண்டுக்கும் உதாரணமாகி விட்டாய்,” என்றாள் பாமா.
“தாயே... தீமைக்கு பொருந்துவது போல, நன்மைக்கும் நான் எப்படி பொருந்துவேன். உங்கள் பேச்சு எனக்கு புரியவில்லை” என்றான் நரகாசுரன்.
“தீமையில் இருந்து தோன்றிய நன்மை நீ. உனக்கு கடந்த காலம் தீமை என்றால், இனி வரும் காலம் நன்மை. பாவச்சகதியில் மூழ்குவோரை நீ மனம் வைத்தால் விடுவிக்கலாம்,” என்று பாமா நல்வழி காட்ட, நரகாசுரனும் புரிந்து கொண்டான்.
“அம்மா... நான் இறந்த இந்த நேரம் அகந்தை, அரக்க குணம் அழிந்த நேரம். இந்த நேரத்தில் என்னை எண்ணி தீமைகளை விலக்கி, தேவியாகிய உன் பாதங்களை எண்ணி வழிபடுவோருக்கு நன்மை அனைத்தும் ஏற்படும் என்று வேண்டுகிறேன். அருள்புரியுங்கள்,” என்றான் நரகாசுரன்.
பூமாதேவி, “பிரபோ... இது சாதாரண காலைப் பொழுதல்ல. ஒரு பாவ விமோசனப் பொழுது. இந்த நேரத்தில் ஒருவர் எண்ணெய் ஸ்நானம் செய்வதும், தீமைகளுக்கு முழுக்கு போடுவதும் ஒன்றல்லவா? என் மகன் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுவது போல இந்த குளியல் விளங்கட்டும். பூமியில் நீர் நிலைகள் அனைத்தும் கங்கையாக மாறட்டும். பரம தரித்திரன் கூட காலைப் பொழுதில் நீராடி செல்வச் செழிப்பு அடையட்டும். இருள் நீங்கி எங்கும் ஒளி மிகுந்து, தீபங்களின் வரிசையாகத் திகழட்டும். நவக்கிரகங்களின் பிடியில் சிக்கித் தவிப்போர் மனதிலும் மகிழ்ச்சி நிரம்பட்டும். இந்த நல்ல நேரத்தில் ஒருவர் வாழ்த்தினால் கோடி வாழ்த்துக்கு இணையாகட்டும்,” என பூமாதேவி கிருஷ்ணனிடம் வேண்டி நின்றாள்.
அந்த நொடியில் கிருஷ்ணனும் அதை ஏற்பது போல மகாவிஷ்ணுவாக காட்சியளித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் தீபாவளித் திருநாள் நமக்கு கிடைத்தது.
- முற்றும்
நன்றி - தினமலர்

கிருஷ்ணஜாலம் - 25 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுர வதத்திற்கு முக்கிய பங்குண்டு. தீபாவளி கொண்டாட காரணமே இந்த நரகாசுரன் தான்.
இவன் யாரோ அல்ல... சாட்சாத் மகாவிஷ்ணுவின் பிள்ளை. பிள்ளை என்றதும் விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா நம் நினைவுக்கு வருவார். நரகாசுரனை அவரது பிள்ளை என்றால் நம்பத் தோன்றாது.
இரண்யாட்சன் என்னும் அசுரன் பூமியை கடலுக்குள் மூழ்கடித்தான். அவனை வதம் செய்ய மகாவிஷ்ணு வராக மூர்த்தியாக பூமியைத் தன் கொம்பில் தாங்கி, கடலில் இருந்து வெளிப்பட்டார். அப்போது வராகரின் கொம்பும், இரு பற்களும் பூமி மீது பட்ட இடம் தான் காமாக்யா. அசாம் மாநிலத்தில் இப்பகுதி உள்ளது. அந்த நாளில் இதற்கு 'ஜ்யோதிஷபுரம்' என்று பெயர். 'பிரகாசமான பட்டணம்' என்பது பொருள். இங்கிருந்த நரகாசுரன் உலகையே நடுங்க வைத்தான். 
பூமாதேவி கடலுக்கடியில் மூழ்கிய நேரத்தில் மீட்டெடுத்த மகாவிஷ்ணு, அவளுடன் கூடியதன் காரணமாகப் பிறந்தவன் நரகாசுரன். 'நரகத்திற்கு இணையாக துன்பம் அளிப்பவன்' என்பதால் நரகாசுரன் எனப்பட்டான். ஆனால், அவனது உண்மையான பெயர் 'பவுமன்'.
இவன் பிறக்கும் போது தீப்பிழம்பு போல சிவப்பாக இருந்தான். கிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கு பவுமன் என்று பெயருண்டு. அது சிவப்பு நிறம் கொண்டது. பெயரிலும், உடலிலும் இருந்த ஒளி அவனது மனதில் இல்லை. மனம் இருளடைந்து காணப்பட்டது. இவனால் மக்களை விட தேவர்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானார்கள்.
பரம்பொருளான திருமாலின் பிள்ளை ஏன் இப்படி இருந்தான் என்று கேள்வி எழலாம். உலகிலுள்ள அனைத்தும் கடவுளிடம் இருந்தே தோன்றுகின்றன என்பதற்கு இதை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். வெளிச்சம் மட்டுமல்ல, இருளுக்கும் கடவுளே காரணம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
மற்ற அசுரர்களைப் போல இவனும் விசேஷ சக்தி பெற பிரம்மாவை நோக்கி தவமிருந்தான். பிரம்மாவிடம், பெற்றோரைத் தவிர வேறு எவராலும் தனக்கு அழிவு உண்டாகக் கூடாது என்ற வரத்தைப் பெற்றான்.
அந்த வரத்தின் பலத்தால் அதிகம் சிரமப்படுத்தியது இந்திரனைத் தான்!
தேவலோகம் சென்று, இந்திர சபையில் இருந்த வெண்கொற்றக்குடை, இந்திரனின் தாய் அதிதியின் காதில் அணிந்திருந்த குண்டலங்களைப் பறித்தான்.
இப்பொருட்களை மீட்க முடியாத இந்திரன், தேவர்களின் முகத்தில் விழிக்கவே வெட்கப்பட்டான். விஷ்ணுவிடம் சென்று முறையிட்டால் நன்மை உண்டாகும் என தேவர்கள் ஆலோசனை கூறினர்.
இதற்கிடையில், நரகாசுரன் தன்னை 'தேவர்களின் தலைவன்' என அறிவித்தான். 'தந்தையான மகாவிஷ்ணுவிடம் அவரது பிள்ளையைப் பற்றி எப்படி குறை சொல்வது' என இந்திரன் தயங்கினான்.
சர்வலோக நாயகனான மகாவிஷ்ணுவுக்கு, மகன் செய்யும் அக்கிரமம் தெரியாமல் போகுமா என்ன?
ஆனால், விஷ்ணு யோக நித்திரையில் இருந்து கொண்டு, அனைத்தையும் கண்டும் காணாதது போல இருந்தார். அப்படி இருந்ததன் பின்புலம் வினோதமானது.
தவறு செய்யும் பிள்ளையின் அசுர குணத்தை தாய் சகிக்கிறாளா அல்லது தர்மத்துக்காக பாசத்தை விட்டு பிள்ளையை எதிர்க்கிறாளா என்பது முக்கியம். ஆனால், நரகாசுரனின் தாய் பூமிதேவி பிள்ளையின் அட்டகாசத்தைக் கண்டு மனம் வருந்தினாள். தன் சகோதரன், பாவியாக இருக்கிறானே என்று பிரம்மாவும் மனம் நொந்தார்.
பிரம்மா தன் தந்தையான விஷ்ணுவிடம் முறையிட நினைத்த நிலையில், அவர் பூலோகத்தில் கிருஷ்ணராக அவதரித்திருந்தார். கிருஷ்ணாவதாரத்தின் போது பிரம்மா, ஆயர்பாடியில் இருந்த மாடு, கன்றுகளை மறைத்தது கூட கிருஷ்ணரின் கவனத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காகத் தான். பிரம்மா மறைத்த சுவடே ஆயர்பாடிக்கு தெரியாத விதத்தில், மாடு, கன்றுகள் உள்ளிட்ட அனைவரது போலி வடிவங்களையும் கிருஷ்ணர் படைத்தார். இதைக் கண்ட பிரம்மா ஆச்சரியத்தில் மூழ்கினார். 
இந்திரன் தனக்குரிய பூஜையை யாதவர்கள் நிறுத்திய போது, அடைமழை பொழியச் செய்தது கூட கிருஷ்ணரின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக என்று எடுத்துக் கொள்ளலாம். 
பிரம்மா, இந்திரன் இருவரும் நரகாசுரனால் கொடுமைகளை அனுபவித்தனர். பொறுமை இழந்த நிலையில், இந்திரன் கிருஷ்ணரிடம் முறையிட்டான்.
“பிரபு.... பவுமனின் அட்டகாசத்தை தாங்க முடியவில்லை. தேவர்களை செயல்பட விடாமல் தடுக்கிறான். தன்னை எதிர்க்கும் மனிதர்களை வதம் செய்கிறான். தாயான பூமாதேவியும் கூட மகனை எண்ணி கண்ணீர் சிந்துகிறாள்” என்றான்.
கிருஷ்ணனும், “வருந்தாதே இந்திரா! நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்று ஜோதிஷபுரம் நோக்கிப் புறப்பட்டார்.
சத்தியபாமாவையும் தன்னுடன் துணைக்கு அழைத்துச் சென்றார்.
அவள் யாரோ அல்ல... பூமாதேவியின் இன்னொரு அம்சம்.
எதிரிகள் நுழைய முடியாதபடி, பவுமன் பல கோட்டைகளை ஜோதிஷபுரத்தில் கட்டியிருந்தான். அந்த கோட்டைகளை அவனது தளபதிகள் கண்காணித்து வந்தனர். அவர்களில் முரன் என்பவனுக்கு ஐந்து தலைகள்!
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கிருஷ்ணஜாலம் - 24 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ண ஜாலத்தில் மிக விசேஷமானது கிருஷ்ணனுக்கும், பெண்களுக்குமான சம்பந்தம் தான். தேவகி, யசோதை, குந்தி, பலராமனின் மனைவி ரேவதி, தங்கை சுபத்ரை, திரவுபதி நீங்கலாக மற்ற எல்லா பெண்களும் கிருஷ்ணனை புருஷனாகவும், தங்களை அவனது அடிமைகளாகவுமே கருதினர். இதில் காமம் கலந்திருந்தாலும், அதை விட பக்தியே அதிகமாக இருந்தது. திருமாலின் அவதாரங்களில் நர நாராயண அவதாரமும் ஒன்று. 
நரன், நாராயணர் என்னும் இருவர் பத்ரிகாசிரமத்தில் பெரும் யோகிகளாக இருந்தனர். பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்து வாழ்ந்த அவர்களை, தேவகன்னியர் கண்டனர். அவர்களின் அழகில் தங்களின் மனதைப் பறி கொடுத்தனர்.
இயற்கையை ரசிக்கும் சமயத்தில் நம்மை மறந்து விடுகிறோம். அழகிய பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, பரந்த கடற்கரை, மலர்ந்த பூக்கள், பனிப்பொழிவு, அந்தி வேளை சூரியன், பறவைகளின் கீச்சு ஒலி, மயிலின் நடனம் என்று இயற்கையில் ரசிக்க எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. இவற்றை ரசிக்க நமக்கு கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால், மனிதனை மனிதன் ரசிக்க முயலும் போது தான், நம் நலன் கருதி பல கட்டுப்பாடுகள் உருவாக்கப் பட்டுள்ளன. அதிலும் ஆண், பெண் ரசனையாகப் பார்த்துக்கொள்ள அதிக கட்டுப்பாடு இருக்கும். 
தேவகன்னியர் நர நாராயணர் முன் மனம் உருகி ரசித்த விஷயத்திலும் இந்தக் கட்டுப்பாடு குறுக்கிட்டது. கடுமையான பிரம்மச்சரியமே தவ வாழ்வின் நோக்கம் என்பதை உணர்த்துவதற்காகவே, திருமால் நர நாராயண அவதாரம் எடுத்தார். பிரம்மச்சரியம் மேற்கொண்டால் எப்படி நடக்க வேண்டும் என்பதையும் இதன் மூலம் வெளிப்படுத்த இருந்தார். இந்த சமயத்தில் தேவகன்னியரே நேரில் வந்தாலும் மனம் சலனப்படக் கூடாது. மனோதிடம் மிக முக்கியம் என்பதை உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்பதும் இவர்களது நோக்கம். 
இந்த நிலையில் தங்களை ரசித்த தேவகன்னியரிடம், “பெண்களே! உங்கள் விருப்பத்தை எங்களால் நிறைவேற்ற முடியாது. அதே நேரம் உங்கள் மீது பிழையில்லை. உடல் பலமும், பொருள் வளமும் நிறைந்த ஒரு ராஜகுமாரனை விரும்புவதில் சுயநலம் இருக்கிறது. ஆனால், சன்னியாசியான எங்களை நேசிப்பதில் சுயநலத்திற்கு வாய்ப்பில்லை. தவசக்தியோடு சேர வேண்டும் என்ற எண்ணமே உங்கள் முன் நிற்கிறது. இது போற்றி வரவேற்கத்தக்க விஷயம். எனவே உங்களுக்கு ஒரு வரம் தருகிறோம்,'' என்றவர்கள் அந்த வரம் பற்றியும் விவரித்தனர். 
''பெண்களே! எதிர்காலத்தில் நான் கிருஷ்ணனாக அவதாரம் எடுப்பேன். அப்போது உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்,'' என்று வாக்களித்தனர். இதில் நரன் அர்ஜுனனாகவும், நாராயணர் கிருஷ்ணராகவும் பிறந்தனர். அந்த தேவகன்னியர்களே ராதை, ருக்மிணி, பாமா, ஜாம்பவதி, காளிந்தி என பல பெண்களாகப் பிறப்பெடுத்தனர்.
கிருஷ்ண பெண் சம்பந்தத்தின் பின்னே இது போல வரங்களும், முன்னேற்பாடுகளும் இருப்பதை தெரிந்து கொள்வது அவசியம். இவர்களில் கிருஷ்ணனை முதலில் அடைந்தவள் ருக்மிணி. இவள் விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனின் மகள். இவனுக்கு ஐந்து ஆண் பிள்ளைகள். ருக்மணி ஒருத்தி மட்டும் பெண். ஆண்களில் மூத்தவன் பெயர் ருக்மி! இதன் சேதி நாட்டு மன்னனான சிசுபாலனின் நெருங்கிய நண்பன். இதனால் இவனிடம் சற்று அசுர புத்தி இருந்தது. தன் தங்கையை சிசுபாலனுக்கும் மணம் செய்து ரத்த சம்பந்தம் ஏற்படுத்தவும் விரும்பினான்.
ஆனால் ருக்மிணியின் மனம் முற்பிறவி சம்பந்தத்தாலும், அவளிடம் இருந்த மகாலட்சுமியின் அம்சத்தாலும் கிருஷ்ணனைப் பரபுருஷனாகக் கருதியது. நேரில் கூட பார்க்காமல், கிருஷ்ணனின் பெருமையைப் பிறர் மூலம் கேட்டே மனம் உருகினாள். மணந்தால் கிருஷ்ணன், இல்லாவிட்டால் இறப்பது என்று ஒருதலைக்காதல் கொண்டாள்.
எப்போதும் இப்படிப்பட்ட காதல் தோற்பதில்லை. இதனிடையே ருக்மி, சிசுபாலனோடு ருக்மிணிக்கு திருமணம் நடத்த நாள் குறித்தான். ருக்மிணியின் மனம் 'கிருஷ்ணா...கிருஷ்ணா...' என்று துடித்தது. ஒரு பிராமணர் மூலம் தன் காதலைச் சொல்ல தூது அனுப்பினாள். தன்னை அழைத்துச் செல்ல விட்டால் மணமேடை பிண மேடையாகி விடும் என்று தெரிவித்தாள்.
உலகில் மானசீகமாக காதலித்த முதல் பெண் ருக்மிணி தான். கிருஷ்ணனும் அவளைக் கைவிடவில்லை. பஞ்சகல்யாணிக் குதிரைகள் பூட்டிய ரதத்தில் விதர்ப்ப நாட்டுக்குள் நுழைந்தான். மணமேடை அருகில் அந்த ரதத்தைக் கொண்டு வர, 'கிருஷ்ணா' என்று கூவிய படி ரதத்திற்குள் ஏறினாள் ருக்மிணி. யாரும் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கிருஷ்ணர் திருமணத்தில் பங்கேற்க வந்திருப்பதாக அனைவரும் கருதினர். ருக்மணி ரதத்தில் ஏறவும், அது துவாரகை நோக்கிப் புறப்பட்டது. சிசுபலான் எரிமலையாகி கோபத்தைக் கக்க, ருக்மி கிருஷ்ணனுடன் மோதத் தொடங்கினான். அப்போது ருக்மியின் தலையை வெட்ட கிருஷ்ணரின் கையில் உள்ள சக்ராயுதம் புறப்பட்டது. ருக்மிணி, கிருஷ்ணனின் காலில் விழுந்து தன் சகோதரனை மன்னிக்கும்படி வேண்டினாள். ருக்மியும் உயிர் பிழைத்தான். 
துவாரகையில் ருக்மணி வாழ்ந்த காலத்தில் அவளைப் போலவே கிருஷ்ணனிடம் அன்பு கொண்டவள் பாமா. இவள் சத்ராஜித் என்னும் செல்வந்தனின் மகள். சத்ராஜித்துக்கு கிருஷ்ணனைக் கண்டால் பிடிக்காது. 
கிருஷ்ணனைப் பின்னுக்குத் தள்ளி, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக, சூரியனை மனதில் நினைத்து தவம் செய்து, அபூர்வமான சமந்தக மணி என்னும் பொக்கிஷத்தைப் பெற்றான். இந்த அபூர்வ மணி இருக்கும் இடத்தில் தினமும் எட்டு யானை எடைக்கு தங்கம் குவியும். எங்கும், எதிலும் வெற்றி உண்டாகும். இந்த மணியைப் பூஜிக்கத் தவறினாலோ அல்லது அதற்கு தீட்டு உண்டாகி விட்டாலோ எதிர்விளைவுகளை உண்டாக்கும். 
தொடக்கத்தில் சத்ராஜித் சமந்தக மணியை சரியாகவே கையாண்டான். ஆனால், நாள் செல்லச் செல்ல நிலை மாறினான். 
கிருஷ்ணனின் மீது கொண்ட பொறாமை எண்ணம் அவனைத் தவறு செய்ய வைத்தது. அந்த மணி காணாமல் போனது. அதைக் கிருஷ்ணன் தான் கவர்ந்திருப்பான் என நினைத்தான். இறுதியில் கிருஷ்ணன் மணியைத் தேடிக் கண்டுபிடித்து சத்ராஜித்திடம் ஒப்படைத்தான். உண்மையை உணர்ந்த சத்ராஜித், அதற்குப் பரிசாகத் தன் மகள் பாமாவை கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்ய சம்மதித்தான். 
இங்கும் முற்பிறவி சம்பந்தம் பாமாவை கிருஷ்ணனை மணக்கத் தூண்டியது. கிருஷ்ண பத்தினியாக பாமா வாழத் தொடங்கினாள். இதற்கிடையில், ஜாம்பவானின் மகள் ஜாம்பவதியும் கிருஷ்ணனை மணந்தது தனிக்கதை.
அடுத்தவள் காளிந்தி. சூரியனின் மகளான இவள், யமுனை நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து கிருஷ்ணனை புருஷனாக அடைய வேண்டும் என்று தவம் செய்தாள். சாகாவரம், தலைமைப்பதவி, புத்திரப்பேறு, மோட்சம் ஆகியவற்றை பெற தவம் செய்பவர்களுக்கு நடுவில், கடவுளைக் கணவராக அடைய தவம் புரிவது என்பது வித்தியாசமானது மட்டுமில்லை. வினோதமானதும் கூட....

காளிந்தியிடம் காணப்பட்டது காமம் இல்லை. கிருஷ்ணனை அடைவதில் பக்தி பாவனை (தவம், தியானம் செய்தல்), தாஸ்ய பாவனை (உருக்கமாக பிராத்திப்பது) என இரு வழிகள் உண்டு. பெண்கள் இதில் தாஸ்ய பாவனையை மிகவும் விரும்புவர். ஏனெனில் கிருஷ்ணனை அடைய உருக்கம் ஒன்றே குறுக்குவழி. பல கிருஷ்ண பக்தர்கள் இதையே கடைபிடித்துள்ளனர். தாஸ்வ பாவனையுடன், பக்தி சேரும் போது கிருஷ்ணன் அருள்புரிவது உறுதியாகி விடும்.
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கிருஷ்ணஜாலம் - 23 - இந்திரா சௌந்தர்ராஜன்

காலயவ்வனன் சாம்பலாகி கிடப்பதைக் கண்ட கிருஷ்ணன், 'இவனும் என் படைப்பு தானே' என்று கேட்டதும், முசுகுந்தனின் மனம் வருந்தியது. 
“பிரபு... பிறருக்கு உதவியே பழகி விட்ட எனக்கு இந்த வதம் வருத்தம் அளிக்கிறது. இது நேராமல் இருந்திருக்கலாமே,” என்றான்.
“இது இப்படி தான் நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருப்பதை மாற்ற முடியாது முசுகுந்தா...” என்றான் கிருஷ்ணன்.
“இப்படி கூடவா ஒருவனின் விதி இருக்கும்?”
“இருக்கப் போய் தானே நிகழ்ந்தது”
“பிரபோ... விதி உன்னால் தானே எழுதப்படுகிறது”
“நான் எழுதுகிறேனா.... முசுகுந்தா.. என்ன இது புதுமையான விளக்கம்?”
“சகல உலகையும் படைத்து, அவற்றை இயக்கி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நீ தானே!”
“நீ சொல்வதில் பிழையில்லை. ஆனால் என் இயக்கத்திற்குள் உன் இயக்கம் என்றொரு விஷயமும் இருக்கிறது. நான் அதில் தலையிடுவதில்லை. இது எப்படி என்றால், ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு வித்தை கற்பிக்கிறார். பின் அவர்களுக்குள் போட்டி வைக்கிறார். போட்டிக்கு அவரே நடுவராக இருக்கிறார். போட்டியாளர்களின் வீரத்தில் அவர் தலையிடுவதில்லை. வெற்றி பெறுவதும், தோற்பதும் அவர்கள் கற்றுக் கொண்ட விதம், செயல்படும் விதத்தைப் பொறுத்தது. நானும் அப்படித்தான்... சகலத்தையும் படைத்தேன். வாழும் நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தேன். அதுவே வேதம் என்றானது. அதைப் பின்பற்றி நடப்பதும், நடக்காததும் வாழ்வில் ஏற்ற, இறக்கங்களை உண்டாக்குகின்றன. அதுவே கர்ம பயனாகி உயிர்களை நடத்துகின்றன. காலயவ்வனனும் அவனுக்குரிய கர்மபயனுக்கு ஆளாகி, இப்போது வைகுண்டத்தை அடைந்துள்ளான். நீ இதைச் சிந்தித்து சலனப்படாதே...” என்ற கிருஷ்ணனின் விளக்கம் கேட்ட முசுகுந்தன் சிலிர்த்துப் போனான்.
அது சரி... யார் இந்த முசுகுந்தன்? அவன் பின்புலம் என்ன?
முசுகுந்தனின் தோற்றமே விசித்திரமானது. இவன் தந்தை மாந்தாதா உலகின் முதல் விசித்திர பிறப்பாளன்.
மாந்தாதா ரிஷிகள் நடத்திய வேள்வியின் பயனாக பெண்ணின் தொடர்பு இல்லாமல், யுவனாசுவன் என்பவனுக்குப் பிறந்தவன். இவனுக்கு நூறு மனைவியர் இருந்தனர். ஆனால் ஒருவரிடமும் புத்திரப்பேறு உண்டாகவில்லை. ரிஷிகளின் உதவியை நாடினான். அவர்கள் இந்திரனின் அருளால் புத்திர உற்பத்தி செய்ய வேள்வி ஒன்றைத் தொடங்கினர். இந்த வேள்வி பல நாட்கள் நடந்தது. ஒருநாள் நள்ளிரவில், யுவனாசுவனுக்கு தாகம் ஏற்பட, தண்ணீருக்காக அலைந்தான். வேள்வி சாலையில் இருந்த கலசம் அவன்கண்ணில் பட்டது. அதில் மந்திர தீர்த்தம் இருந்தது. மறுநாள் யுவனாசுவனனின் நூறு மனைவியருக்கும் வழங்குவதற்கு வைத்த தீர்த்தம் அது. விஷயம் அறிந்த ரிஷிகள் கலக்கம் அடைந்தனர்.
தீர்த்தம் பிள்ளையாகித் தீர வேண்டும் என்பதால் யுவனாசுவனிடம் குழந்தை உற்பத்தி ஏற்பட்டது. அது அவனது தொடையை கருப்பையாக்கிக் கொண்டு வளர்ந்தது. ஒருநாள் தொடையைக் கிழித்துக் கொண்டு பிறந்தும் விட்டது.
வேள்வியின் பயனாக, ஒரு ஆணுக்குப் பிறந்த அதிசயக் குழந்தையை காண இந்திரன் வந்தான். அவன் வந்த சமயம் குழந்தை பசியோடு அழுதது. தாய் இருந்தால் பால் கொடுப்பாள். ஆணுக்குப் பிறந்த பிள்ளைக்கு பாலுக்கு எங்கே போவது?
இந்திரன் இதற்கு ஒரு வழியைத் தேடினான். தன் கட்டை விரலை வாயில் வைத்தான். அதன் வழியாக தான் உண்ட அமுதத்தை குழந்தைக்குப் போய் சேர வைத்தான். இப்போதும் சிறு குழந்தைகள் கட்டை விரலை சூப்புவதைக் காணலாம்.
அபூர்வமாகப் பிறந்து இந்திரனின் கட்டை விரல் வழியே அமுதம் அருந்திய காரணத்தால் 'மாந்தாதா' என்று அழைக்கப்பட்டான். இதன் பொருள் 'பெரும் பலவான்' என்பதாகும். 
இவ்வாறு வித்தியாசமாகப் பிறந்த, மாந்தாதாவின் வம்சாவளியே ராமர் அவதரித்த சூரிய வம்சம்.
இப்படி யுவனாசுவனின் வேள்விப் பயனாக மாந்தாதா பிறக்க, அவன் புதல்வனாக பிறந்தவனே முசுகுந்தன். மாந்தாதாவுக்கு இந்திரன் ஒருவிதத்தில் தாயாக இருந்ததால், முசுகுந்தனுக்கு பாட்டன் உறவாகி விட்டான். இதனால் பூலோகத்தில் ஆட்சி புரிந்தாலும், தேவர்களின் தலைவன் இந்திரனின் சம்பந்தம் முசுகுந்தனுக்கு சுலபமானது. இந்திரனுக்கு துன்பம் நேரும் போது உதவவும் வழி வகுத்தது.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் ஏற்படும் போதெல்லாம், முசுகுந்தன் தன் படையை அழைத்துக் கொண்டு இந்திரனுக்காக போர் செய்தான். இதனால் இந்திரன் வெற்றிகளை சுலபமாகப் பெற்றான்.
முசுகுந்தன் தன் நாட்டை ஆட்சி செய்வதை விட, இந்திரனுக்காக போர் செய்த காலம் அதிகம். இதனால் களைப்பும், சோர்வும் அவனை ஆட்கொண்டது. இதை அறிந்த இந்திரன் அவனை நீண்ட காலம் ஓய்வெடுக்கும் விதத்தில் ஆனந்த நித்திரை கொள்ளும் வரம் அளித்தான். அதற்கு இடையூறு ஏற்படக் காரணமானவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்றும் கூறினான். அந்த வரத்தால் தான் காலயவ்வனன் பலியானான்.
தன்னை எதிர்த்ததோடு, தன் யாதவ குலத்தையும் அழிக்க எண்ணிய காலயவ்வனனை தந்திரத்தால் கிருஷ்ணன் வதம் செய்தான். இந்நிலையில் முசுகுந்தனும், கிருஷ்ணனை விஷ்ணுவாக உணர்ந்து சரணாகதி அடைந்தான். கிருஷ்ணன் அவனிடம், 'இப்பிறப்பில் ஆட்கொள்ள உன் கர்ம பயனில் இடமில்லை. அடுத்த பிறப்பில் உன்னை ஏற்றுக் கொள்வேன்' என்று கூறி அனுப்பி வைத்தான்.
காலயவ்வனனை கிருஷ்ணன் கொன்றதை அறிந்த ஜராசந்தன் ஆவேசம் கொண்டான். பெரும் படையுடன் போருக்குப் புறப்பட்டான். பல முறை தோற்றும் அவனுக்கு புத்தி வரவில்லை. கிருஷ்ணன் நினைத்தால் ஜராசந்தனை முதல் போரிலேயே கொன்றிருக்கலாம். அப்படி கொல்லாமல் விட்டதன் பின்னணியில், ஜராசந்தனின் ஆயுள் பீமனால் முடிய வேண்டும் என்னும் விதியிருந்ததே ஆகும்.
ஜராசந்தன் போரிட வருவதை அறிந்த கிருஷ்ணன் பயந்தோடுவதைப் போல நாடகமாடினான். இதையே தனக்கு கிடைத்த வெற்றியாக கருதிய ஜராசந்தன் மகிழ்ந்தான். கிருஷ்ணனும், பலராமனும் ஒரு மலை மீது எரிந்த காட்டுத்தீயில் குதித்து உயிர் விட்டதாக, ஜராசந்தன் எண்ணும் விதத்தில் நடந்து கொண்டனர்.
ஆனால் சில நாட்களில் துவாரகை திரும்பிய கிருஷ்ணன் அரசாளத் தொடங்கினான். விஷயம் அறிந்த ஜராசந்தனுக்கு தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது. திரும்பவும் போர் புரிய மனம் இல்லாமல் காலம் வரட்டும் என்று காத்திருந்தான்.
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கிருஷ்ணஜாலம் - 22 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணன் முதலில் காலயவ்வனனைச் சந்தித்து, அவனை வெல்லத் தீர்மானம் செய்தான். ஆனால், படைகளைத் திரட்டிக் கொண்டு போர்க்களத்துக்குப் போகவில்லை. தான் ஒருவனே போதுமானது என்பது போல தனியே புறப்பட்டான். அதைக் கண்ட பலராமர் ஆச்சரியத்துடன், “கிருஷ்ணா! என்ன இது விஷப்பரிட்சை?” என்று கேட்ட போது சிரித்தான்.
“நீ சிரித்தாலே விஷயம் இருக்குமே?”
“தெரிந்தே கேட்டால் எப்படி அண்ணா?”
“அந்த விஷயம் என்ன என்பதை நீயே வாய் திறந்து சொல்”
“காலயவ்வனனைச் சந்திக்க படை எதற்கு? நான் ஒருவன் போதாதா?”
“கிருஷ்ணா... படையை விட நீ தான் பெரியவன். என் கேள்வி நீ தனித்து சென்று சந்திக்குமளவு அவன் பெரியவனா என்பது தான்!”
“அவன் பெற்ற வரம் பெரியது அல்லவா?”
“அதுவே அவனுக்கு கர்வத்தை உண்டாக்கி விட்டதே?”
“உண்மை தான்... மாயைக்கு மயங்காதவர் உலகில் ஒருவர் கூட இல்லையே?”
“சரி... அது இருக்கட்டும். வரம் அருளும் உன் திருக்கரத்தால் அவனை நீ அழிப்பது சரியா?”
“நான் அழிக்கப் போவதாக எப்போது சொன்னேன்?”
“பின் எப்படி அவனை என்ன செய்யப்போகிறாய்?”
“அது, பிறகு தெரியத் தானே போகிறது,” என்றபடி கிருஷ்ணன் புறப்பட்டான்.
கிருஷ்ணனைக் கண்ட காலயவ்வனன், “யார் இவன்.... ஒரு மனிதன் இத்தனை அழகுடன் இருக்க முடியுமா?” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டான்.
அப்போது தான் நாரதர் சொன்னது நினைவுக்கு வந்தது. புன்னகைத்தபடி தன் முன் செல்வது கிருஷ்ணன் தான் என்பது காலயவ்வனனுக்குப் புரிந்தது.
“ஏய்... கிருஷ்ணா நில்... என்னுடன் போரிடாமல் எங்கு செல்கிறாய்?” என்று கேட்டபடி பின் சென்றான். கிருஷ்ணன் அவனுக்கு பதிலளிக்கவில்லை.
கிருஷ்ணன் ஓடத் தொடங்கினான். காலயவ்வனனுக்கு ஆச்சரியம் அதிகரித்தது.
“டேய் கிருஷ்ணா! உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உன்னை 'மாயாவி' என்று சொன்னவர்களும் உண்டு. என்னுடன் போர் புரியாமல் தப்பி விட எண்ணுகிறாயா? அது நடக்காது. நான் உன்னை அழிக்கப் பிறந்தவன். நீ பயந்தோடுவதே எனக்கு கிடைத்த முதல் வெற்றி,” என்றபடி பின்னால் ஓடினான்.
கிருஷ்ணன் அப்போதும் பதிலளிக்கவில்லை.
போர்க்களத்தைக் கடந்து நெடுந்தூரம் வந்த கிருஷ்ணன் ஒரு மலைப்பகுதிக்குள் நுழைந்தான். அவனைக் காலயவ்வனன் பின் தொடர்ந்தான். பெரிய மரங்கள் ஒரு குகையின் வாசலை மறைத்தபடி வளர்ந்திருந்தன.
மனிதர்களின் நடமாட்டம் இல்லாததால் முட்செடிகள், புதர்கள் காணப்பட்டன. காட்டு விலங்குகளும் கண்ணில் தென்பட்டன. மலைப்பகுதி என்பதால் பாம்புகளுக்கு பஞ்சமில்லை. மிருகங்களை விழுங்கிஇருந்ததால் அவற்றின் வயிற்றுப் பாகம் புடைத்திருந்தது. வீரன் என்றாலும் கூட, காலயவ்வனன் மனதிலும் அச்சம் எழுந்தது.
கிருஷ்ணனோ சிறிதும் பயப்படாமல், மலைக்குகைக்குள் புகுந்தான்.
காலயவ்வனனோ சற்று தயங்கியபடி குகைக்குள் நுழைந்தான். இருள் மிகுந்த குகையில் ஒரு இடுக்கு வழியாக, சூரியஒளி ஊடுருவியதால் அந்த பாகம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. அங்கே ஒரு திண்ணை போல பாறை இருந்தது. அதன் மீது ஒருவன் குப்புறப்படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன், கிருஷ்ணனாக இருப்பானோ என்று காலயவ்வனன் கருதினான்.
“அடேய் கிருஷ்ணா... இது என்ன மாயாஜாலம்? என்னுடன் போரிடாமல் இப்படி வந்து படுத்து விட்டாயே... மிருகங்கள் நடமாடும் காட்டிற்குள் வரவழைத்து, அவை என்னை விழுங்க வேண்டும் என்று தானே இங்கு வந்திருக்கிறாய். உன்னைக் கொல்லாமல் திரும்பிப் போக மாட்டேன்,” என்று உரத்த குரலில் கத்தினான்.
அவனது பேச்சு குகை எங்கும் எதிரொலித்தது. ஆனால், உறங்கிய மனிதன் சிறிதும் அசையவில்லை.
காலயவ்வனனின் கோபம் அதிகரித்தது.
“அடேய் மாயாவி! எழுந்திருடா!” என்று அருகே சென்று காலணியுடன் தூங்கியவனின் முதுகில் ஓங்கி உதைத்தான். உதைத்த வேகத்தில் பாறையில் இருந்து உருண்ட அவன் அப்போதும் கூட எழுந்திருக்கவில்லை.
காலயவ்வனன் மீண்டும் உதைக்கவும் அவன் தூக்கம் கலைய ஆரம்பித்தது.
உறுமலுடன் எழுந்த அவன் கொட்டாவி விட்டான். அவனது முகத்தில் நீண்ட தாடியும், தலைமுடியும் சிங்கத்தின் பிடரி போல நாலாபுறமும் சிலிர்த்துக் கொண்டிருந்தது.
“இப்படியா பாதி தூக்கத்தில் எழுப்புவாய்? மனித நடமாட்டம் இல்லாத காட்டிற்கு வந்ததே தொந்தரவு இல்லாமல் தூங்கத் தான். ஆனால் அதற்கும் தடை வந்து விட்டதே,” என எழுந்தவன் கண்களைக் கசக்கியபடி காலயவ்வனனைப் பார்த்தான்.
அவ்வளவு தான்!
அடுத்த நொடியே அவனது கண்களில் புறப்பட்ட தீப்பொறி காலயவ்வனனைப் பற்றியது. அலறித் துடித்த அவன், சற்று நேரத்தில் சாம்பலாகக் கிடந்தான்.
தூங்கி எழுந்தவனோ, “அடப்பாவி... என் தூக்கத்தை கெடுத்த நீ சாம்பாலாகி விட்டாயே. இப்படி ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் இங்கு வந்தேன்,” என்று முணுமுணுத்தான்.
அப்போது அங்கு குழலோசை கேட்கத் தொடங்கியது.
அதன் இனிமையில் அவனது தூக்கம், கோபம், வருத்தம் எல்லாம் விலகியது.
அவனையும் அறியாமல் கைகள் குவிந்தன. குகையின் ஒருபகுதியில் இருந்த கிருஷ்ணன், குழல் இசைத்தபடி அவன் முன் விஷ்ணுவாக காட்சியளித்தான். அதைக் கண்டு, “எம்பெருமானே! பரந்தாமா... இந்த ஏழைக்கு காட்சியளிக்க வந்து விட்டாயா?” என பரவசநிலைக்கு அவன் ஆளானான்.
“உன் புண்ணியம் என்னை இழுத்து வந்து விட்டது முசுகுந்தா” என்றான் கிருஷ்ணன்.
“ எம்பெருமானே! என்ன சொல்கிறீர்கள்?”
“ஆம்... இந்திரனுக்காக மனைவி, மக்கள், நாடு என எல்லாம் துறந்து அசுரரோடு போரிட்டவன் நீ. உன் உதவி இல்லாமல் இந்திரனால் வெற்றி பெற முடியுமா?”
“ஐயனே! அது எனக்கு கிடைத்த பாக்கியம் அல்லவா?”
“அந்த பாக்கியமே புண்ணியமாகி விட்டது. பூலோக அரசனாக இருந்தாலும், தேவர்களுக்கு உதவிய உன் தயாள குணமும், வீரமும் அசாதாரணமானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் போரில் காலம் கழித்த நீ, நிம்மதியாக உறங்க வரம் பெற்றதும், அது கலைய காரணமானவர் உன் பார்வையால் சாம்பல் ஆக வேண்டும் என்பதும் விதி. இங்கு சாம்பலாகி கிடப்பவன் கர்க முனிவரின் புதல்வன் காலயவ்வனன். என்னை சாம்பலாக்க நினைத்தான். ஆனால் சாம்பலாகிப் போனான். இதுவும் ஒரு வகையில் நானே சாம்பலானது போலத் தான். என் படைப்பு தானே அவனும்?”
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கிருஷ்ணஜாலம் - 21 - இந்திரா சௌந்தர்ராஜன்

கால யவ்வனன் பிறக்க காரணமே ஒரு சாபம் தான்! இவனைக் குறித்த கதை விஷ்ணு புராணத்தில் உள்ளது. யதுகுலத்தின் குருவாக போற்றப்பட்டவர் கர்கமுனிவர். இவர் ஒருமுறை ஆற்றில் குளித்து விட்டு வரும் சமயம் இவரது தலையில் பறவை ஒன்று எச்சமிட்டது. அந்த எச்சம் ஒழுகி நெற்றியில் திலகம் போல காட்சியளித்தது. தன்னை மறந்த நிலையில் இறை சிந்தனையில் வந்த முனிவருக்கு, இதைப் பற்றிய உணர்வே இல்லை. 
முனிவரின் மைத்துனன், “என்ன இது எச்சில் திலகம்?” என்று கேட்டு சிரித்தான்.
பிறகு தன் நிலையை உணர்ந்த கர்கர், கையால் எச்சத்தை துடைக்க முற்பட, அது முகம் முழுவதும் பரவியது. அப்போது அருகில் இருந்த யதுகுல மன்னர்கள் முனிவரைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். இதைக் கண்ட முனிவருக்கு கோபம் தலைக்கேறியது.
முனிவர்களுக்கு கோபம் சுலபமாக வராது. வந்தால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும்.
“யாதவ மன்னர்களே! நான் உங்களின் குலகுரு என்பதையும் மறந்து என்னை பரிகாசம் செய்து விட்டீர்கள். இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மன்னர் என்ற மமதையே நீங்கள் பரிகாசம் செய்ய காரணம். அதிகாரமும், ஆட்சியும் உங்களின் கையில் இருக்கும் திமிர். இப்போது சொல்கிறேன்...! உங்களை பூண்டோடு அழிக்க ஒருவன் வருவான். அதுவும் என் மூலமாகவே..... எனக்கு நேர்ந்த அவமானத்தை துடைப்பான்....இது சத்தியம்,”என்று சாபமிட்டார்.
பின், அவர் ஒரு யவ்வனப் பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவள் அவரை மணந்து கர்ப்பமானாள். பின் முனிவர் சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். சிவன் காட்சியளிக்கும் சமயம், முனிவரின் மனைவி பிரசவிக்க தயாராக இருந்தாள்.
சிவன் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தனக்கு பிறக்கப் போகும் பிள்ளை மாவீரனாக உலகத்தவர் கண்டு அஞ்சும் பலசாலியாக திகழ வேண்டும் என்று கேட்டார். சிவனும் அவ்வாறே வரம் அளித்தார்.
அவனே காலயவ்வனன். முனிவர் மகனிடம்,“ யாதவ மன்னர்களை அழிக்கப் பிறந்தவன் நீ,” என்று சொல்லி வளர்த்தார்.
பிறரைப் பரிகாசம் செய்வது கடும் பின் விளைவைத் தந்து விடும். அன்று கர்க முனிவரிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. சாப விமோசனம் ஒன்றை கர்கர் சிந்தித்திருப்பார். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. “நீங்கள் நின்ற கோலத்தை யார் பார்த்தாலும் சிரிக்கத்தான் செய்வர்,” என்று நியாயம் வேறு கற்பித்தனர்.
இதைத் தான் 'விநாசகாலே விபரீத புத்தி' (கெட்ட நேரம் வரும் போது புத்தி பேதலிக்கும்) என்பர்.
காலயவ்வனன் தன் தந்தை கர்க முனிவரின் விருப்பப்படி, யாதவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருநாள் நாரதர் அவனைச் சந்திக்க வந்தார்.
அவரிடம் காலயவ்வனன்,“யாதவர்களில் மேலான அரசன் யார்?” என்று கேட்டான்.
“எவ்வளவோ பேர்கள் உண்டு. இப்போது யார் என்றால் அது கிருஷ்ணர், பலராமர் இருவரும் தான்,” என்றார் நாரதர்.
“அவர்கள் என்னையும் விட பெரிய பலசாலிகளா?”
“அது எனக்கு தெரியாது. ஆனால் மகாபலசாலியான ஜராசந்தனால் கூட இவர்களை வெல்ல முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளேன்,” என்றார் நாரதர்.
“அப்படியானால் ஜராசந்தன் என்னைவிட பலசாலியா?”
“இப்படி கேட்டால் எப்படி?” நீ போரிட்டு வெற்றி கொண்டால் அல்லவா அதை முடிவு செய்ய முடியும்!”
“அதுவும் சரி தான்....நான் இந்த கிருஷ்ணர், பலராமர் இருவரையும் அழிக்கிறேன். இவர்கள் யதுகுலத்தவர் தானே?”
“ஆம்... கிருஷ்ண, பலராமர் இருவருக்கும் தங்களை விட தங்களின் இனம் பெரிது. குறிப்பாக தங்களின் செல்வமாக கருதும் பசுக்களும், காளைகளும் பெரிது”
“அப்படியானால் இவர்களை அழித்தால் யதுகுலத்தையே அழித்தது போல் தான் அல்லவா?”
“அப்படித்தான்.... ஆனால் அது சுலபமான விஷயமில்லை”
“எதனால்?”
“கிருஷ்ணர், பலராமர் இருவரும் அவதார புருஷர்கள். அதிலும் கிருஷ்ண பிரபு 32 சாமுத்ரிகா லட்சணங்களும் உடையவர். பாலகனாக இருந்தபோதே அசுர சக்திகளை அழித்தவர். குறிப்பாக கம்சனை அவர் கொன்றது வீரத்தின் உச்சம்.”
“என்னால் கிருஷ்ணனை வெல்ல முடியாது என்று கூறுகிறீரா நாரதரே...”
“அப்படித் தான் தோன்றுகிறது...”
“ என் வரம் பற்றி உமக்குத் தெரியும் அல்லவா?”
“ஆமாம்... ஒருவேளை முடிந்தாலும் முடியலாம்”
“ஒருவேளை என்ன ஒருவேளை... இருவர் கதையையும் முடித்து விட்டு மறுவேலை பார்க்கிறேன்.”
“அப்படி அவர்கள் உனக்கு என்ன கெடுதல் செய்தனர்?”
“எனக்கு செய்தால் என்ன? என் தந்தைக்குச் செய்தால் என்ன?”
“அதுவும் சரி தான். ஆனாலும் யாரோ சிலர் பரிகாசம் செய்ததற்காக, அவர்களின் குலத்தையே அழிக்க நினைப்பது சரிதானா?”
“அதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். இதில் சரி, தவறு என்று சிந்திப்பதெல்லாம் அறிவீனம்”
“அப்படியானால் போர் செய்வதே சரியானது...” என்று நாரதர் ஒதுங்கிக் கொண்டார். உடனடியாக கிருஷ்ணரை சந்தித்த அவர், காலயவ்வனன் படையெடுத்து வரவிருப்பதைத் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஜராசந்தனும், படை திரட்டிக் கொண்டு போருக்கு வந்தான்.
ஜராசந்தன் கெட்டிக்காரன்! காலயவ்வனன் மூன்று கோடி வீரர்களுடன் மதுராவிலுள்ள கிருஷ்ண, பலராமரை அழிக்க தயாராகி விட்டதை அறிந்து கொண்டான். அந்தப் படையுடன், தன் படையும் சேர்ந்தால், அது பெரிய படையாகி விடும். கிருஷ்ணன் தோற்பதும் உறுதி என்று மனதிற்குள் கணக்கு போட்டான்.
இதற்கு முன் பதினேழு முறை கிருஷ்ணனிடம் தோற்றாலும், இந்த முறை வென்றாக வேண்டும் என்ற வெறி அவனுக்குள் இருந்தது. இந்நிலையில் யாதவர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் கிருஷ்ணர், துவாரகையில் ஒரு கோட்டையை மயன் மூலம் கட்டினார். மதுரா நகர யாதவர்கள் அனைவரையும் கோட்டையில் பாதுகாப்பாக தங்க வைத்து விட்டு, ஜராசந்தனையும், காலயவ்வனனையும் காணப் புறப்பட்டார் கிருஷ்ணர்.
இவர்கள் இருவருக்கும் கிருஷ்ணரால் எந்த பாதிப்பும் உண்டானதில்லை. போர் என்ற பெயரில் வம்புச் சண்டைக்கு வருகிறார்கள். எனவே, இவர்களை யுத்த தர்மத்தின் படி சந்திக்க தேவையில்லை. தந்திரங்களால் வெல்வதே சரி என்ற முடிவுக்கு வந்தார் கிருஷ்ணர்.
அவரது தந்திரம் செயல்படத் தொடங்கியது. எப்படி...?
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்