மயக்கும் தமிழ் - 47 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நாவெல்லாம் நாலாயிரம் நெஞ்செல்லாம் நாராயணம்!

வியன் மூலவுகு பெறினும், போய்
தானே தானே ஆனாலும்,
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனைபூம்கழல் அடிக்கீழ்ச்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ  பாவியானுக்கே?

திருவாய்மொழி

நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்களிலேயே வைணவத்தின் அடிநாதமாக விளங்கக் கூடியது இந்தப் பாசுரம்! அப்படியென்ன இந்தப் பாசுரத்தில் சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா? பகவானைவிட பாகவதன் சிறந்தவன், இன்னும் ஒருபடி எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆண்டவனை விட அந்த எம்பெருமானை சதாசர்வ காலம் வழிபடும் அடியவர்கள் உயர்ந்தவர்கள்.

பரம பகவாதப் பெருமக்களின் காலடித் தடங்கள் மிக உயர்ந்தவை. இதை மனதில் வைத்து நம் சிந்தை சிலிர்க்க தேன் தமிழில் திருவாய்மொழியில் திருவாய் மலர்ந்திருக்கிறார் வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார். பாகவதர்களுக்கு அடிமை செய்யாமல் அனுபவிக்கும் எவ்வளவு பெரிய பேறும் பெரிதா என்ன? அதனால் யாருக்கு என்ன பயன்?
‘‘வியன் மூவுலகு பெறினும்’’ என்று பாசுரத்தின் முதல் வரியிலேயே அகன்ற மூன்று உலகங்களின் செல்வத்தைப் பெற்றால்தான் என்ன? இவ்வுலக வாழ்வின் தொடர்பு நீங்கி மேலுலகம் கிடைத்தால்தான் என்ன? இவை இரண்டும் பெரிதா? இவை இரண்டையும்விட எம்பெருமானின் திருவடிக்கு ஆட்பட்ட பாகவதர்களுக்கு அடிமை செய்வதே பெறத்தக்க பேறு என்கிறார் நம்மாழ்வார். பாசுரத்தில் இன்னும் பல செய்திகளையும் சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் ரஸம் கலந்து மயக்கும் தமிழில் நம் மனதை கொள்ளையடிக்கிறார் நம்மாழ்வார்.

இறைவனின் திருமேனி அதாவது, அவனுடைய உருவம் அல்லது வடிவம், வடிவழகு என்று நாம் எப்படி உருவகப்படுத்திக் கொண்டு நினைத்துக் கொண்டாலும் சரி இறைவனைப் பற்றிய அழகான வர்ணனையைத் தருகிறார். ஆழ்வார் ‘‘புயல் மேகம் போல் திருமேனி அம்மான்’’ கார்காலத்து மேகம்போல் களையான கருத்த நிறம் உடையவன், அவனை வணங்குபவரை வாரிச் சுருட்டிக் கொள்கிற வலிமை உடையவன் எம்பெருமான். அடியவர்களுக்கு சேவை செய்வதனால் இப்பிறப்பிலியே நான் இன்பம் பெற்றேன். திருத்தாள் வணங்கி, இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியானுக்கே? நம்மாழ்வார் தம்மை பாவி என்கிறார். நம்மாழ்வாரே தன்னடக்கத்தோடு பணிவின் எல்லையின் நின்று கொண்டு பேசுகிறார். நம்மாழ்வாரே பாவி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

அடியார்கள் வாழ
அரங்கநகர் வாழ 
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ

என்று வைணவ அடியவர்கள் தினசரி திருக்கோயிலில் எம்பெருமானின் சந்நதியில் பக்தியோடு சொல்லுவார்கள். அடியார்கள் நன்றாக இருந்தால்தானே அந்த 
ஆண்டவனுக்கே பெருமை!

கொள்வான் இல்லையேல்
கொடுப்பவனுக்கு என்ன மரியாதை!
பெறுவார் இல்லையேல்
பெருமாளின் மகிமைதான் என்ன?

இந்த அர்த்தத்தில்தான் நம்மாழ்வார் திருவாய்மொழியில் பாகவதோத்தமர்களை சிறப்பு செய்கிறார். நம்மாழ்வார் இப்படி பாகவதர்களை திருமாலின் பேரருளை கருணை உள்ளத்தோடு வணங்கும் அடியவர்களை ஆச்சரியப் பார்வையோடு பார்த்தார். அப்படி பார்த்த நம்மாழ்வாரையே தெய்வமாக புகலிடமாக குருவாக, இன்னும் சொல்லப் போனால் குருவிற்கும் மேலாக பாவித்து தூய உள்ளத்தோடு நெக்குருக நெஞ்சுருக, அவரை உள்வாங்கிக் கொண்டவர் மதுரகவியாழ்வார்.

நாவினால் நவிற்றின்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே;
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவேனே!
மதுரகவியாழ்வார்

பக்தியிலும், அடிமை சேவகம் புரிவதிலும், அதை செயல்படுத்துவதிலும், தன்னுடைய ஞானகுருவான ஆழ்வார்களின் தலைமகனாக விளங்கும் நம்மாழ்வாரையே மிஞ்சி விட்டார் மதுரகவியாழ்வார்! மதுரகவியாழ்வார் பாசுரக் கருத்து இதுதான். நம்மாழ்வாருடைய திருப்பெயரை நாவினால் துதித்து மேலான இன்பத்தைப் பெற்றேன். அந்த ஆழ்வாருடைய விரும்பத்தக்க திருவடிகளை அடைந்தேன். இது சத்தியம். அவரைத் தவிர வேறொரு தெய்வத்தை ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன். திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்குத் தலைவனாக விளங்கும் நம்மாழ்வார் இசையோடு அருளிச் செய்த திருவாய்மொழிப் பாசுரங்களை இனிய இசையுடன் பாடி சுகமான நினைவில் இவ்வுலகில் பறவையைப் போல திரிந்து கொண்டிருப்பேன்.

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவேனே! நம்மாழ்வார் மீது எத்துணை காதலும் அன்பும் பக்தியும் பெருங்கருணையும் இருந்ததால் மதுரகவியாழ்வாருக்கு இந்த உயர்ந்த நிலை சாத்தியப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு குருவும் குருவின் தகுதி தெரிந்து அந்த தகுதியை உள்வாங்கிக் கொண்ட சிஷ்யரான ஆழ்வாரையும் நாம் வேறெங்கு பார்க்க முடியும்? நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார் என்றால் அவரையே தெய்வமாக கருதிப் போற்றும் மதுரகவியாழ்வார் ஆழ்வார் திருநகரிக்கு பக்கத்து ஊராகிய திருக்கோளூரில் அவதாரம் செய்தார். நாலாயிர திவ்யப்பிரபந்தம் முழுவதுமே அன்பின் சாரல்தான். தூய்மையான பக்திக்கு முன் வேறு எதுவும் தேவையில்லை என்பதை முன்னிறுத்துகிறது. 

விஷ்ணுவே முழு முதற் கடவுள் என்பதை முன் வைக்கிறது வைணவம். ஆனால், அந்தப் பரம்பொருளைப் பாடாமல், பரம்பொருளை கெட்டியாகப் பற்றிய நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் பற்றியது ஏன் தெரியுமா? நம்மாழ்வாரின் அபார ஞானம் வேதத்திற்கு ஒப்பாக தமிழை தன் வசப்படுத்தி இந்த தரணிக்குத் தந்த தலைமகன் ஆழ்வார்களின் தலைமகன் திருவாய்மொழி மிக்க சிந்தனையுடன் அழகுணர்ச்சியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது வைணவப் பேராசான்களின் மிக உயர்ந்த கருத்தாகும். அடியார்களைப்போற்றி வணங்கிய நம்மாழ்வாரையும், நம்மாழ்வாரை தன் நெஞ்சில் வைத்து போற்றி வழிபட்ட மதுரகவியாழ்வாரின் படைப்புகளை தூய்மையான உள்ளத்தோடு படிப்போம். படித்தபடி வாழ்க்கைப் பயணத்தில் கடைபிடிப்போம். பிறகு என்ன? எல்லா நாட்களும்  நல்ல நாட்களே...

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை