தேமதுரத் திவ்விய திருமொழி!
மாரிமாக்கடல் வளைவணற்கு இளையவன்
வரைபுரை திருமார்வில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்
தாழ்ந்தது; ஓர் துணை காணேன்;
ஊரும் துஞ்சிற்று; உலகமும் துயின்றது;
ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று; திசைகளும் மறைந்தன;
செய்வது ஒன்று அறியேனே!
பெரிய திருமொழி
அறிவு தரும் பெரிய திருமொழியைப் படைத்த திருமங்கையாழ்வார் ஒரு பெண்ணின் நிலையில் நின்று சிந்திக்கும் தலைவிப் பாசுரம் இது! பரம்பொருளான பகவான் கண்ணன் மீது கொண்ட தீராக் காதல், மோகம், பிரிவு ஆற்றாமை, உள்ளத்துணர்வின் தூய வெளிப்பாடு, அன்பு, பிரேமை, நட்பு என்று இந்த பாசுரத்திற்குள் அத்தனையும் அடக்கம். இன்னும் சொல்லப் போனால் உணர்ச்சிகளின் கொந்தளிப்பு இந்தப் பாசுரம்... இந்தப் பாசுரத்தையும் அதன் தன்மையையும் பற்றி வியாக்கியானச் சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை ருசிகரமாக பல செய்திகளை, நிகழ்வுகளை, கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.
திருவாய்ப்பாடியில் அதாவது பகவான் கண்ணனின், ஆன்மா குடிகொண்டு இருக்கும் ஊரில் உள்ள பெண்கள் ஓரிரவில் கண்ணனைப் பிரிந்து தனியே இருந்தபோது ஏற்பட்ட மனஉணர்வை அடிப்படையாகக் கொண்டு பரகால நாயகி அதாவது, திருமங்கையாழ்வார் பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
திருவாய்ப்பாடியில் அதாவது பகவான் கண்ணனின், ஆன்மா குடிகொண்டு இருக்கும் ஊரில் உள்ள பெண்கள் ஓரிரவில் கண்ணனைப் பிரிந்து தனியே இருந்தபோது ஏற்பட்ட மனஉணர்வை அடிப்படையாகக் கொண்டு பரகால நாயகி அதாவது, திருமங்கையாழ்வார் பிரமாதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
மாலைப் பொழுது வந்து விட்டது. எங்கும் ஒரே இருள் சூழ்ந்து விட்டது. துணைக்கு யாரும் இல்லை. இந்தக் கண்ணனும் தவிக்க விட்டுவிட்டுப் போய் விட்டான் என்ற நிலையில் கண்ணன் மீது பித்து பிடித்த இளம் பெண் சொல்வது போல பாசுரம் அமைந்துள்ளது. ஊரும் துஞ்சிற்று; உலகமும் துயின்றது திசைகளும் மறைந்தன;செய்வது ஒன்று அறியேனே! இந்த ஊரில் உள்ளவர்கள் எல்லாம் உறங்கி விட்டனர். அதாவது, தூங்கப் போய் விட்டனர். உலகமும் எந்தப் பரபரப்பும் இல்லாமல் அமைதியாகி விட்டது. ஆனால், என் மனம் மட்டும் கண்ணன் மீது கொண்ட எல்லைகள் மீறிய உணர்வால் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அதனால் தான் பாசுரத்தின் கடைசி வரையில் ஆழ்வார் மிக அற்புதமாக ஒரு வரியை படைத்திருக்கிறார். செய்வது ஒன்று அறியேனே! நாம் ஒன்றை மிக நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். நமக்கு மிக வேண்டிய ஒரு நண்பரை சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கி வைத்திருப்போம்.
நண்பர் குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடியாமல் காலதாமதம் செய்து விட்டால் அந்த அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ நம் மனம் தவியாய் தவிக்கும். மிகச் சாதாரண மானுட உணர்விற்கே இந்த நிலை என்றால், இந்தப் பெண்ணோ எல்லாம்வல்ல மாயக்கண்ணன் மீது உடல் சார்ந்த காதல் இல்லை, மாறாக உள்ளம் சார்ந்த காதலை வைத்திருக்கிறாள். அந்த நிலையில் திருமங்கையாழ்வார் கண்ணன் காதலியாக இந்த உணர்வுகளை நமக்கு யாத்து தந்திருக்கிறார்.
நாம் ஒன்றை மிக நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தப் பாசுரம் படைக்கப்பட்ட காலம் எட்டாம் நூற்றாண்டு அன்றைக்கே மிக எளிய நடையில் இனிய தமிழில் மயக்கும் சொற்களை போட்டு தேனமுதாக தந்திருக்கிறார் ஆழ்வார். பக்தி என்பது உடல் சார்ந்தது இல்லை, அது உள்ளம் சார்ந்தது. அதை இல்லம் தோறும் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே பரம்பொருள் மீதான பக்தியை பரகால நாயகி என்ற திருப்பெயரால் திருமங்கை ஆழ்வார் படைத்திருக்கிறார்.
சாதாரண பகவானின் அவதாரங்களில் ராமனை வணங்கத்தக்கவன் என்றும், கிருஷ்ணனை அதாவது, கண்ண பரமாத்மாவை அனுபவிக்கத் தகுந்தவர் என்றும் பெரியோர்கள் கூறுவதுண்டு. உண்மைதான் கண்ணன் நம் பண்பாட்டுக் காவலன், அவன் குடமாடுகூத்தன், நர்த்தன நாயகன், ஆசாபாசங்களில் ஈடுபட்டு அறிவு தராததை அனுபவத்தின் மூலம் தரும் ஆச்சர்யத்திற்கு உரியவன், தூய்மையான பக்திக்கு எந்த ஆடம்பரமும் தேவையில்லை. ஒரு துளி இலையும், தூய மனமும் போதும் என்று இருப்பவன். அவன் ஒரு கருணைக்கடல், வற்றாத ஜீவநதிபோல பேரின்பங்களை எல்லாம் வாரி வழங்குகிறவன். திருமங்கையாழ்வார் இப்படி கண்ணபெருமானை கொண்டாடுகிறார் என்றால், பெரியாழ்வாரோ இன்னும் ஒருபடி மேல் சென்று யசோதையாக தன்னைப் பாவித்துக் கொண்டு கண்ணனை பச்சிளம் பாலகனாக பாவித்து அவர் படைத்த பெரியாழ்வார் திருமொழி பாசுரங்கள் இருக்கிறதே, தேனில் பலாச்சுளையை தோய்த்து சாப்பிட்டால் எப்படி இருக்கும், அடடா தேமதுரத் தமிழ்பக்தி இலக்கியத்தில் பெரியாழ்வார் பாசுரங்கள் எல்லாம் மிக முக்கியமாக கருதப்படுகின்றன!
கரும்பின் எந்தப் பாகத்தை சாப்பிட்டாலும் இனிப்பதைப் போல பெரியாழ்வாரின் எல்லாப் பாசுரங்களும் மிக மிக இனிமையானது தான். ‘‘மாறில் மணிவண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே!’’ பக்தியின் பரவச நிலைக்கே சென்று விட்டார் பெரியாழ்வார். ஒப்பிலாத நீலமணி போன்ற கண்ணன் மீது இந்தப் பெண் பிச்சேறி நிற்கின்றாளே, இது எப்படி சாத்தியம் ஆயிற்று? பெரியாழ்வாராக இருந்தாலும் சரி, திருமங்கையாழ்வாராக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண் பாவத்தில் நின்று கண்ணனுக்கு வாழ்த்துப்பா வாசிக்கிறார்கள். இன்னொரு பாசுரத்தில் இப்படி முடிக்கிறார் பெரியாழ்வார். தலைமகனுடன் சென்ற தன் மகளைக் காணாமல் அவளின் தாய் உருக்கமாக உறுகுவதாக அமைகிறது இந்த பாசுரம்.
‘‘இல்லம் வெளியோடிற்றாலோ,
என் மகளை எங்கும் காணேன்!
மல்லரை அட்டவன் பின்போய்
மதுரை புறம்புக்காள் கொல்லோ?’’
இதிலே இடம்பெற்ற சொற்களின் அடர்த்தி இதில் காட்டப்படுகிற பாங்கு, தோரணை எல்லாம் ஒருவித நெருக்கத்தையும், உருக்கத்தையும் சொல்வதாக அமைந்திருக்கிறது. இங்கேதான் வீட்டில் இருந்தாள்! என் பார்வையை விட்டு அவள் எங்கும் போகவில்லை. ஆனால், திடீரென்று அவள் இல்லை, எல்லா இடங்களிலும் அவளை அதாவது, என் மகளைத் தேடித் தேடி களைத்துப் போய் விட்டேன் என்ற சூழலில் ஆழ்வார் பயன்படுத்திய வார்த்தை தான் இது!
அவளை எங்கும் காணேன்! சரி அவள் எங்கு சென்று இருப்பாள்? மல்லர்களை வீழ்த்திய அந்த மாயவன் மாமாயன் திசைகளையே தீர்மானிக்கிற அந்த குன்றம் ஏந்திய குளிர் மழை காத்தவனை குழல் ஊதுகிற வேணுகோபாலன் இருக்கிற இடம் தேடிப் போயிருப்பாளோ? என்று தானே கேள்வி எழுப்பி, அதற்கான பதிலையும் அவரே அழகாக எளிமையாக தந்திருக்கிறார். பெரியாழ்வாரின் பாசுரங்கள் எல்லாம் ஒருபோதும் திகட்டியதில்லை. ஒரு பாசுரத்தில் கண்ண பரமாத்வாவின் காலைப் பிடித்துக் கொண்டு கதறுகிறார் பெரியாழ்வார்.
‘‘கேசவா! புருடோத்தமா!
கிளர் சோதியாய் குறளா!’’
என்று வார்த்தைகளுக்கு வர்ணம் பூசுகிறார். பெரியாழ்வாரோ அல்லது அவரது அற்புதத் திருமகள் ஆண்டாள் நாச்சியாரோ, திருமங்கையாழ்வாரோ இவர்கள் பாடிய பகவான் கண்ணன் மீதான பாசுரங்கள் எல்லாம் மகத்தான சக்திவாய்ந்தவை. அவைகளை உள்ளச் சுத்தியோடு படித்தால் இதயம் ஈரமாகும், நற்சிந்தனைகளின் கூடாரமாக நமது வாழ்வு இனிக்கும். கண்ணன் திருவடிகளே சரணம்... சரணம்... சரணம்...
நன்றி - தினகரன்