செவ்வாய், 10 டிசம்பர், 2019

கோதையும் - பாவையும் - S.கண்ணபிரான்

ஸ்ரீ பாகவத புராணத்தில், மார்கழி நோன்பு பற்றிய சில செய்திகளையும் கேட்டு, கோகுலப் பெண்கள் மார்கழி மாதத்தில் காத்யாயினி தேவியின் பூஜையாகிய விருதத்தை நடத்தி வந்தார்கள். விடியற்காலையில் அருணோதய காலத்தில், எழுந்திருந்து யமுனையில் நீராடி ஈரமணலால் தேவிக்கு உருவம் அமைத்து பூஜித்து எங்களுக்கு கண்ணனை நாயகனாக அருள வேணும் என்று பிரார்த்தித்தார்கள். அப்படி ஒரு மாதகாலம் நோன்பு நோற்றார்கள். ஒரு நாள் கோபியர்கள் அருணோதய காலத்தில் எழுந்திருந்து தோழிமார்களையும் அழைத்துக் கை கோர்த்த வண்ணம் கிருஷ்ண சரித்திரங்களைப் பாடிக்கொண்டும் யமுனை நதியில் விளையாடிக் கொண்டிருந்தனரென்றும், அவ்வமயம் யோகிகளுக்கும் யோகியான கண்ணன் அருள் செய்தானென்றும் ஸ்ரீ பாகவதத்திலுள்ள வரலாறுகளை நன்கு கேட்டுத் தெரிந்துகொண்டு, தானும் கோபியரின் தன்மையை அடையவேண்டுமென எண்ணிக்கொண்டு ஆண்டாள் மார்கழி மாதத்தில் நோன்பு நோற்றாள்.


நாடு செழிக்கவும், மழை பெய்யவும், நல்ல கணவரையடையவும் இஹத்துக்கு வேண்டிய எல்லா ஸாதனங்களையும் பெற மார்கழியில் ஆண்டவனைக் குறித்து நோன்பு நோற்பது ஒரு பழைய வழக்கமாக அமைந்துள்ளது. ஆதியில் கன்னிப் பெண்களால் நடத்தப் பெற்று வந்த மார்கழிநோன்பு தெய்வ பரமாகப் பாடப் பெறும் பெருமையை அடைந்தது என்பதற்குத் திருப்பாவை போதிய சான்றாகும்.


பழைய நோன்பை நம் தமிழ்நாடு மறந்து விட்டது. மார்கழி மாதத்தில் விடியற்காலையில் நீராடி வைணவர்கள் திருப்பாவைப் பாடல்களை, அநுஸந்தித்து பகவதாராதனை நடத்துவது மத அனுஷ்டானம் நாள் ஒன்றுக்கு ஒரு பாட்டு வீதம் முப்பது பாசுரங்களையும், மார்கழி மாதம் முழுவதும் அநுஸந்திப்பது வைணவர்களின் மரபு.


திருப்பாவை முதல் பாட்டில் நோன்பு நோற்கும் காலத்தையும் கண்ணனையும் கொண்டாடுகிறார்கள் ஆயர் சிறுமியர்.


இரண்டாவது பாட்டில் கண்ணன் அவதரித்த இந்த பூமியிலே இந்தக் காலத்தில் வாழும் பாக்யம் செய்தோம். நமது நோன்புக்குச் செய்ய வேண்டிய கார்யங்களைக் கேளுங்கள். விடியற்காலையில் எழுந்திருந்து புருஷோத்தமனுடைய திருவடிகளை பாடிப் புகழ்ந்து, நீராடி தானமும், பிச்சையும் கேட்பவர் திருப்தியடையும்படி மமதையில்லாமலும், கர்வமில்லாமலும் கொடுத்து நெய்யும் பாலும் உண்ணாதவர்களாயிருந்து கண்ணுக்கு மையிட்டுக் கொள்ளாமலும், கூந்தலுக்குப் பூ சூட்டிக்கொள்ளாமலுமிருந்து நியமத்துடன் நோன்பு நோற்கப் போகிறதாக தோழிகளிடம் தெரிவிக்கிறார்கள்.


மூன்றாவது பாட்டில் வேறொரு பயனையும் கருதாமல், பகவந் நாமஸங்கீர்த்தனத்தையே பயனாகக் கருதுகின்ற நாங்கள் நோன்புக்கு அங்கமாய் உலகளந்த மாயனின் பேர் பாடி விடியற் காலையில் நீராடினால் அதன் பயனாக, நோயும், க்ஷாமமும் நீங்கி நாடு முழுவதும் மழை பெய்து க்ஷேமத்தை அடையும் என்றார்கள்.


நான்காவது பாட்டில் மழைக் கடவுளை நாடெங்கும் மழை பெய்யும்படி நியமனம் செய்கிறார்கள் கடல் போலே கம்பீரமாகயிருக்கும், மழைக்கடவுளே, நடுக்கடலினுட் புகுந்து அங்குள்ள நீரையெல்லாம் மொண்டு கொண்டு, உத்ஸாகமாக ஆரவாரத்துடன் வானவீதியில் வரவேண்டும். எம்பெருமானது திருமேனி போலக் கறுத்தும். அவனது வலது கையிலிருக்கும் சக்கரம் போல் மின்ன வேண்டும். இடது கையிலுள்ள சங்கம் ஊதுவது போல் இடி முழக்கங்களிருக்க வேண்டும். உலகமெல்லாம் வாழும்படி மழை பொழிய வேணும் என்று வேண்டிக் கொள்கிறார்கள்.


ஐந்தாவது பாட்டில் இந்நோன்புக்கு இடையூறுகள் ஏதாவது உண்டாகலாம். அதற்குப் பரிகாரமாக நோன்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் யமுனையாற்றங்கரை வாசியும் அன்னையின் வயிறு விளங்க அவதரித்தவனுமான தாமோதரனை நாம் தூய்மையுடன் வந்து நல்ல புஷ்பங்களால் அர்ச்சித்து, வாயாரப்பாடிப் புகழ்ந்து நெஞ்சார நினைத்து வழிபடுவோமானால் யாதொரு இடையூறுகளும் வராது பரந்தாமன் காப்பாற்றுவான் என்ற முடிவைச் செய்து கொள்கிறார்கள்.


ஆறாவது பாட்டு முதல் பதினைந்தாவது பாட்டுக்கள் வரை, தங்களது தோழிப் பெண்களையும் தூக்கத்தில் நின்றும் எழுப்புகிறார்கள். இப்பாசுரம் முழுவதும் சம்பாஷணை ரூபத்தில் இருந்து வருகிறது.


பதினாறாவது, பதினேழாவது பாடல்களில் பகவானை எழுப்ப விருப்பம் கொண்டு, நந்தகோபருடைய மாளிகையில் உள்ள வாயிற் காவலனை அழைத்து கதவுகளைத் திறந்து விடும் படி வேண்டிக்கொண்டும், கதவுகள் திறக்கப்பட்டதும் அரண்மனைக்குட் சென்று நந்தகோபர் யசோதை, பலதேவர் ஸ்ரீ கிருஷ்ணன் முதலியவர்களைத் துயில் உணர்த்துகிறார்கள்.


பதினெட்டு, பத்தொன்பது, இருபது பாடல்களில் கண்ணனையும், ராதையென்று சொல்லக் கூடியவளான நப்பின்னை பிராட்டியையும் துயிலுணர்த்துகிறார்கள்.


21, 22, 23 பாட்டுக்களால் தாங்கள் வந்திருக்கும் வகையை விண்ணப்பித்து, எம்பெருமானைக் குறித்துத் தங்கள் பாவமெல்லாம் தீரும்படி மெல்ல மெல்ல கடாக்ஷித்தருள வேண்டும். எங்கள் மனோரதம் ரகஸ்யமாக உரைக்கக் கூடியதன்று, ஆஸ்தான மண்டபத்திலே ஸிம்ஹாஸனத்தில் நீ, ராஜாதி ராஜனாய், வீற்றிருந்து அடியோங்களது விண்ணப்பங்களைக் கேட்டருளவேணும் என்று யசோதை இளஞ்சிங்கமான கண்ணனை நோக்கி வழிபடுகிறார்கள்.


24-வது பாட்டில், கன்னிப் பெண்களின் பிரார்த்தனைக்கு இணங்கி பரந்தாமன் சிங்காசனத்துக்கு வருகிறான். கோபிமார்கள் தாங்கள் வந்த கார்யத்தையும் மறந்து கிருஷ்ணாநுபவத்தில் ஈடுபட்டுப் புகழத் தொடங்குகிறார்கள்.


25-வது பாட்டில், ஒரே இரவில் ஒருத்தி மகனாய்ப் பிறந்து வேறொருத்தியின் மகனாய் ஒளித்து வளர எப்படியாவது உன்னைக் கொல்ல வேணுமென எண்ணிக்கொண்டிருந்த கம்ஸனின் எண்ணத்தை வீணாக்கி, அன்பர்களுக்கெல்லாம் பெரும் பித்தனாக இருக்கும் பெருமானே, உன்னிடம் புருஷார்த்தத்தை யாசித்து வந்தோம். உன்னுடைய குணங்களை நாங்கள் பாடிக் கொண்டு வந்தமையால் குளிர் தெரியாமலும் சுகமாக வந்து சேர்ந்தோம். நோன்பு என்ற வியாஜத்தால் காணவே வந்தோம் என்று கண்ணனிடம் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள் ஆயர் சிறுமியர்கள்.


26-வது பாட்டில் கண்ணன்ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருந்து பெண்களைப் பார்த்து நம்மை வேண்டுவது யாது? என்றெல்லாம் வினவுகிறான். அதற்கு கன்னிப்பெண்கள் பெருமானே உன்னைக்கண்டு உனது திருநாமங்களை வாயாரச் சொல்ல ஹேதுவாகயிருக்கும் நோன்பைப்பற்றி ஆயர்கள் கூற நாங்கள் அதில் இறங்குகிறோம். இதற்குச் சில உபகரணங்கள் தேவை அவற்றைத் தந்தருளவேணும். பள்ளியெழுச்சிக்கு சங்குகள் வேண்டும். புறப்பாடு கொட்டப் பெரும்பறை வேண்டும் “ஜய விஜயீபவ” என்று வாழ்த்துக்கள் கூறக் கட்டியக் காரர்கள் வேண்டும், எல்லோருடைய முகமும் நன்கு தெரியும்படி தீபங்கள் வேண்டும். கூட்டம் தெரியக் கொடி வேண்டும். இந்த உபகரணங்களைத் தந்து, தேவரீரது அநுக்ரஹத்தையும் தந்தருள வேணும் என பிரார்த்திக்கின்றார்கள்.


27-வது பாட்டில் கண்ணன் ஆயர் சிறுமியர்களைப்பார்த்து மந்தஹாஸ வதனத்துடன் நீங்கள் ஸாதகமாகக் கேட்கும் எல்லாவற்றையும் தருவோம். நோன்பு நோற்ற பின்பு நீங்கள் பெறும் ஸன்மானம் யாது? என்று கேட்டருளினான். அதற்கு அவர்கள் நோன்பு முடிந்ததும், எங்களால் களைந்து வைக்கப் பட்டிருக்கும் அணிகலன்களை அணிந்து கொள்வோம். பட்டாடைகளை உடுத்திக்கொள்வோம். பின்னர் க்ஷீரான்னம் செய்து அது மூடும்படியாக நெய்யைப் பரிமாறி முழங்கையால் வழியுமளவும் உண்டு. உன்னுடன் கூட இருந்து குளிர்ந்து மகிழ வேண்டும். நீ கோபியாமல் எங்களுடன் கூடிக்கலந்து கொள்ளவேண்டும். அதுவே அடியேன்கள் பெறும் சன்மானம் என்று பதிலளிக்கின்றார்கள்.


28-வது பாட்டில் நோன்பை முடித்தபின் ஆடையாபரணங்களையும் பாற்சோறு முதலியவைகளையும் கண்ணனையும் அபேக்ஷித்த சிறுமியர்களைப் பார்த்து பகவான் நீங்கள் அபேக்ஷித்தவைகளைத் தருவதற்கு நீங்கள் செய்த உபாயம் என்ன? என்று கேட்க அதற்கு சிறுமியர்கள் எங்களிடம் யாதொருவிதமான உபாயமுமில்லை, தயா விஷயமாகத்தான் தேவரீர் காரியத்தை நிறைவேற்றித்தரவேண்டும் எங்கட்கு குருகுலவாசமில்லை. ஸத் கர்மங்களில்லை. பிழைகளைத் தெரிந்து திருத்திக் கொள்ளப் போதுமான அறிவுமில்லை, அறியாத சிறுபெண்களை கோபம் செய்யாமல் தலைவனே! எங்களது நோன்புக்கு வேண்டியவைகளைத் தந்தருள வேணும்.


29-வது பாட்டில் ஆயர் சிறுமியர்கள் ஹே பகவானே! நீ இருக்குமிடத்தில் நாங்கள் விடியற்காலையில் வந்து வந்தனங்கள் செய்து உனது திருவடித் தாமரைகளைப் போற்றியதற்குண்டான பிரயோஜனத்தைக் கேட்டருளவேணும். நோன்பு என்கிற வியாஜத்தால் அல்ல நாங்கள் இவ்விடம் வந்தது. எப்பொழுதும் இனி ஒரு நொடிப்பொழுதும் உன்னைவிட்டுப் பிரிய மாட்டோம் எந்தவிதமான அவதாரங்களை நீ எடுத்தபோதிலும், அந்தந்த அவதாரங்களிலும் நாங்கள் கைங்கர்யங்களைச் செய்ய அநுக்ரஹம் செய்யவேணும். மேலும் வேறு வகையான மாறுதலுள்ள விருப்பங்கள் அடியேங்களது மனதில் தோன்றாமலிருக்கவும் அநுக்ரஹம் செய்யவேணும் என்பதான கைங்கர்ய பிரார்த்தனையையும் விண்ணப்பித்துக் கொள்கிறார்கள்.


30-வது பாட்டிலே லக்ஷ்மிபதியான பகவான் ஆய்ச்சியர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அநுக்ரஹம் செய்த வரலாற்றையும், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் புத்ரியாகிய ஆண்டாள் பாடியருளிய இம்முப்பது பாசுரங்களையும் இந்தக்காலத்தில் அநுஸந்திப்பவர்கள் பகவானுடைய திருவருள் பெற்று அவனது சேர்க்கையால் கிடைக்கப்படும் ஆனந்தத்தைப் பெறுவர் என்ற பலச்ருதியையும் இது இன்னாரால் உரைக்கப் பட்டது என்பதான முத்ரையுடன் கூடியதாக அமையப்பெற்றிருக்கிறது.


திருப்பாவையின் 30 பாசுரங்களும், ஆயர் சிறுமிகளின் இயல்பையும், மனப்போக்கையும், வெளியிடுவதுடன் அதற்கு பகவான் அங்கீகாரம் செய்ததாகவும் அமையப்பெற்றிருக்கிறது.
ஆண்டாள் தான் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாகக் கண்டு தன்னை ஒரு கோபிகா ஸ்த்ரீயாக பாவித்துக் காதலனான கண்ணனை சந்திக்க ஆசைப்பட்டாள். இத்தகைய காதல் அனுபவம் பெரியாழ்வார் பக்தியையும் மேம்பட்டு விட்டது. ஒரு நாள் அருமைத் திருமகளை நோக்கி “அம்மா குழந்தாய் நீ யாரை மணம் செய்து கொள்ளப்போகிறாய்” என்று மெள்ள கேட்டார். அதற்கு அவள் (மானிடவர்க் கென்று பேச்சுப்படில்--வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே) என்று மன்மதனை நோக்கிப் பாடிக்கொண்டே எழுந்துபோய் விட்டாள்.


இதைக் கேட்ட பெரியாழ்வாருக்கு ஆண்டாள் புருஷோத்தமனைக்காதலிக்கிறாள். அவனேதான் நமது திருமகளுக்கு இசைந்த புருஷன் என்கிற எண்ணம் உண்டாயிற்று ஆனால் இவளை அவனுக்கு எப்படி மணம் செய்து வைப்பது? என்ற கவலையடைந்தவராயும் மாலையைக் காதலுடன் ஏற்றுக் கொண்ட எம்பெருமான் இவளது விருப்பத்தையும் நிறைவேற்றக்கூடும் என்பதான தேறுதல் உள்ளத்தவராயும் இருந்து வந்தார். அன்றிரவு நித்திரையில் ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கநாதன் ஓர் கனவில் தாம் கோதையை அங்கீகாரம் செய்வதாயும் ஸ்ரீரங்கம் வரும்படியும் தெரிவித்தார். விவாஹ ஸன்னாஹ ஸமயம் முதற்கொண்டு, சேஷஹோமம் முடிந்து மங்களஸ்நானமாகும் வரையிலுள்ள செய்திகளைக் கனவிலனுபவித்த கோதை பொழுது விடிந்தவுடன் அதையெல்லாம் தன் தோழியினிடம் விரிவாகக்கூறி மகிழ்கின்றாள்.


ஆயிரம் யானைகள் புடைசூழ நந்தன் மைந்தன் எதிரே கம்பீரமாக நடந்து வருவதாயும் - பாளைகளோடு கூடின பாக்கு மரங்களையும் கொண்டுவந்து நாட்டி அலங்காரம் செய்யப் பட்டதான கலியாணப் பந்தலில் ஸித்தமானதாகவும் நாளையுதயம் திருமண வைபவமென்று ப்ரஸித்தமாகி மணமகன் திருமண மண்டபத்திலே வந்து புகுந்ததாகவும், இந்திரன் முதலான தேவர்களெல்லோரும் வந்துசேர்ந்து குறுக்கும்நெடுக்குமாகத் திரிந்து காரியங்கள் செய்வதாகவும், நாத்தனாரான துர்க்கை கூறையுடுத்தி மணமாலை சூட்டினதாகவும், சிஷ்டர்களான வைதிக பிராம்மணோத்தமர்கள் நான்கு திசைகளிலிருந்தும் தீர்த்தங்களைக் கொண்டு வந்து ப்ரோக்ஷணம் செய்ததாயும், கண்ணனுக்கும் தனக்கும் கங்கணம் கட்டினதாகவும் இள மங்கையர்கள் பூரண கும்பங்கள் ஏந்திக் கொண்டுவர கண்ணன் பாதுகையை சாத்திக்கொண்டு வருவதாகவும் மங்கள வாத்யகோஷங்கள் வானைப்பிளக்கும்போல் முழங்க, மாதவன் பாணிக்ரஹணம் செய்ததாகவும், வைதீகத் தலைவர்கள் வேத கோஷங்களை உத்கோஷிக்கவும் அச்யுதன் அக்னி காரியங்களைச் செவ்வனே நடத்திவிட்டு தன் கையைப் பற்றிக்கொண்டு ஹோமாக்னியை வலம் வந்ததாகவும் அம்மி மிதிப்பதாகவும் லாஜஹோமம் நடந்ததாகவும், மங்களாலங்காரங்கள் நிறைந்த வீதிகளில் மதயானைமீது ஊர்வலம் வந்ததாகவும் மங்களஸ்நானம் முடிவில் நடைபெற்றதாகவும், கனவில் இவ்வளவையும் அநுபவித்ததாகக் கூறுகிறாள்.


ஸ்ரீ ரங்கநாதன் கனவில் தாம் கோதையை அங்கீகாரம் செய்வதாயும் ஸ்ரீரங்கம் வரும்படியும் தெரிவித்த கட்டளைப்படி மறுதினமே ஆழ்வார் ஆண்டாளை ஒரு பெரிய சிவிகையில் ஏற்றிப் பொதுமக்கள் திரண்டுவர மங்கள வாத்யங்கள் முழங்க ஸ்ரீரங்கம் அழைத்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் முதல் ஸ்ரீரங்கம் வரை எங்கும் ஒரே குதூகலமாகயிருந்தது. ஸ்ரீரங்கத்தின் கோபுரம் தெரிந்ததும் தன் மகளுக்கு அதோ பார் அம்மா. 'பொன்னரங்கம் பொற் சிகரம்' என்று சுட்டிக்காட்டினார். அதன் பின் மூடுபல்லாக்கிலிருந்த கோதை காணப்படவில்லை. கோவில் ஸந்நிதியில் உள்ள மூலஸ்தானத்திடம் போய் ஐக்கியமாகிவிட்டாளாம். ஆனால் அவ்வமயம் ஸ்ரீரங்கநாதன் கோதை காதலித்த கண்ணனாக காக்ஷியளித்தானாம்.


ஆழ்வாருக்குப் புதல்வியான கோதை மறைந்தது ஆச்சரியத்தையும், துக்கத்தையும் விளைத்தது. பிராம்ஹ விவாஹ முறையில், கோதையை அரங்கனுக்கு கன்னிகாதானம் செய்ய முடியாமலாகி விட்டதே என்று சிறிது கலங்கினார். பரம பாவனியான ஆண்டாள் விவாஹ ஸம்பந்தமாகப் பேசியதெல்லாம் கனவில் தானா! இவைகளனைத்தையும் பிரத்யக்ஷமாக நடத்திக் காண்பிக்காமல் ஆட்கொண்டுவிட்டானே ஸர்வேச்வரன் என்றெல்லாம் ஸஞ்சலப்பட்டார்.


ஸர்வாந்தர்யாமியான எம்பிரான் ஆழ்வாரது எண்ணங்களைத் தெரிந்துகொண்டவனாய்த் தன்னுடையதான திரு மார்பிலே கோதையைக் காட்டி, சிட்டரே! அஞ்சலும் துக்கமும் வேண்டாம் நீ நினைத்துக்கொண்டிருக்கிறபடி உமது திருமகளை இப்பொழுதே ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அழைத்துச்செல்லும். அவ்விடம் வந்து நாம் இவளை மணந்து கொள்வோம் என்று அருளிச்செய்தனர். பகவதாக்ஞையின்படி ஆண்டாளும் மூலஸ்தானத்தினின்றும், வெளிவந்து ஆழ்வாருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று சிலகாலம் இருத்து வந்தாள்.


பங்குனி உத்திரமான நன் நாளிலே இறைவன் கருடனது தோள்மீதில் ஏறிக்கொண்டு வடபெருங்கோயிலை அடைந்தனன். ஆண்டாள் திருமணத்தைப் பார்க்கவும் அதில் கலந்து கொள்ள வும் முனிவர்களும் விப்ரர்களும் அமரர்களும் ஏராளமாகக் கூடிவிட்டனர்களாம். பெண்டிர்கள் கோதைக்கு வாஸமஞ்சனம் நீராட்டினார்கள். நல்லதோர் சுப முகூர்த்தத்தில் ஆழ்வார் அழகிய மணவாளனான அரங்கனுக்கு கோதையை தாரை வார்த்து பல்லாண்டு பாடினர். ஸ்ரீ ரங்கநாதன் கோதையையுமழைத்துக்கொண்டு கருடன் தோள்மீதில் ஏறி அந்தர்த்யானமடைந்தார்.
பக்திமானான ஆழ்வாருக்கு மகிழ்ச்சி தாங்கவேயில்லை. பெரியாழ்வாரை எம்பெருமானுக்கே மாமனாராகிவிட்டதாக உலகம் கொண்டாடிற்று. பின்னர் பெரியாழ்வார் எம்பெருமானுடன் சேர்ந்து கோதையினது விக்ரஹத்தை திருமணக் கோலத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதிஷ்டை செய்தார். அங்கு பக்தர்கள் இன்னும் திருப்பாவை பாட்டுக்களைப் பாடிக் கொண்டும், நிகமாந்த மஹாதேசிகனது (கோதாஸ்துதி)யை அநுஸந்தித்துக்கொண்டும் இறைவனையும் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியையும் ஏகாஸனத்தில் கண்ணாரக்கண்டு ஸேவித்து வருகிறார்கள்.


அன்பே உருவாகக் கொண்ட பகவானை நம்பி சரணம் அடைந்து பிரார்த்திப்பவர்களுக்கு அவன் தன்னையும், தன்னுடையதான கைங்கர்யங்களையும், கொடுத்தருளுகிறான் என்பது தான் திருப்பாவையின் ஸாராம்சமான தத்வார்த்தம். ஆண்டாள் காலம் முதல் திருப்பாவைப் பாட்டுக்கள் மக்களிடையே அன்பைப் பெருக்கி ஒற்றுமையை நிலைநாட்டி வந்திருக்கிறது. மக்கள் யாவரும், திருப்பாவை முப்பது பாட்டுக்களையும் நாள் ஒன்றுக்கு ஒரு பாட்டுவீதம் மார்கழி மாதம் முழுவதும் ஓதுவதும் ஓதக்கேட்பதும் செய்து வந்தால் ச்ரிய:பதி யான எம்பெருமானின் திருவருள் பெற்று பேரானந்தம் அடைவார்கள் என்பது திண்ணம்.


சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வாழ்க 
திருப்பாவை வாழ்க அரங்கனார் வாழ்க 
ஆவினம் வாழ்க அடியார்கள் வாழ்க 
அண்ட சராசரம் முற்றும் வாழ்க.


நன்றி - ஶ்ரீ ரங்கநாத பாதுகா மாசி 1972

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக