புதன், 11 டிசம்பர், 2019

அமுதனை கண்ட கண்கள் - உ.வே. வலையப்பேட்டை ராமாச்சாரியார்


“அமுதம் என்றால் என்ன? கேட்பதற்கு, சாப்பிடுவதற்கு, பார்ப்பதற்கு, அனுபவிப்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது என்பதுதான் பொருள். நல்ல சாப்பாட்டை சாப்பிட்ட உடனேயே 'அமிர்தமா இருந்தது'ன்னு சொல்றோம். அதேமாதிரி நல்ல சங்கீதத்தைக் கேட்டா 'கர்ணாம்ருதமா இருந்தது' ன்னு சொல்றோம். இப்படி நமக்கு இன்பம் தரக்கூடிய அத்தனை பொருட்களையுமே அமுதுன்னுதான் சொல்றோம் இல்லையா? எல்லாவற்றையும்விட மிக மிக உயர்ந்து நிற்பது எதுவோ அதுதான் அமுது. பகவத் சேவை ஒன்றுதான் அமுது. இம்மைக்கும் மறுமைக்கும் எல்லாவிதமான ஏற்றங்களையும் தரக்கூடிய அமுது. அந்த அமுதத்தை வழங்குபவன் அமுதன். யார் அந்த அமுதன்?” என்று, 'அமுதனைக் கண்ட கண்கள்' என்ற தம் சொற்பொழிவைத் துவங்கினார் வலயப்பேட்டை ராமாச்சாரியார்.
“பகவானை நோக்கி நாம் பாடுவது, அதாவது நாம சங்கீர்த்தனம் செய்யறது இருக்கே அதுவே அமுது தான். எம்பெருமானைக் காட்டிலும் நாமசங்கீர்த்தனமே சிறந்தது. இதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால், எம்பெருமான் கட்டிப் பொன்; நாமசங்கீர்த்தனம் என்பது பணி பொன் போன்றது. நமக்கு தெரிஞ்சவா யாரோ அமெரிக்காலேர்ந்து தங்க பிஸ்கெட்டைக் கொண்டு வந்தா, அந்த தங்க பிஸ்கெட்டை வைத்துக் கொள்ளலாம். அதுதான் கட்டி பொன். யாரோ ஒருவர் ஒரு சவரனில் செயின் வாங்கித் தருகிறார் என்றால் அது பணி பொன் போன்றது. எப்படி? அதை நாம் அணிந்து ஆனந்தப்பட முடியும்.

நம் ஹ்ருதயத்தில் நித்ய வாசம் செய்யும் எம்பெருமானை யாராவது பார்த்திருக்கிறோமா? நாம வாழ்க்கையில் எப்போ அடி மேல அடி வாங்கறோமோ அப்போதான் அவனது திருவடியை பற்றணும்னு நினைக்கறோம். பகவான் திருநாமம் என்பது அவ்வளவு உசத்தியானது. கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறார் எம்பெருமான். நாம்தான் கூப்பிடுவதில்லை. ஆழ்வார்கள் எல்லாரும் அப்படி ஒரு மகா பக்தி பண்ணிண்டுதான் இருந்தார்கள்.

கூரத்தாழ்வார் கூரம்ங்கற ஊர்ல பெரிய பணக்காரரா வாழ்ந்து கொண்டிருந்தார். அந்தக் காலத்துல காஞ்சி வரதரை சேவிக்க வருபவர்களில் சிலர் கூரத்தாழ்வாரின் வீட்டுக்குச் சென்று அங்கே பையை வைத்துவிட்டு, வரதராஜரை சேவித்துவிட்டு வந்து இவர் வீட்டில் உணவு உட்கொண்டு விட்டுச் செல்வார்கள். ஒரு நாள் நல்ல வெயில் காலத்தில் ஒரு பெரியவர் கூரத்தாழ்வாரின் வீட்டுக்கு வந்தார். அவரிடம் 'எனக்கு ஒரே ஒரு பிரார்த்தனை. நீங்க காஞ்சிக்கு தானே போறேள். அங்கிருந்து உங்க துணில கொஞ்சம் மண்ணை கொண்டு வர முடியுமா'ன்னு கேட்டார் கூரத்தாழ்வார். அந்த பெரியவரும் கொளுத்தும் வெயிலில் காஞ்சிபுரம் போய் விட்டு வரதராஜரை தரிசனம் பண்ணிட்டு பசியோடு கூரத் தாழ்வார் வீட்டுக்கு வருகிறார். 'நான் கேட்டதை கொண்டு வந்தேளா'ன்னு அவரிடம் கூரத்தாழ்வார் கேட்க, துணியில் முடிந்து வைத்திருந்த மண்ணை பெரியவர் கொட்டினார். அது எல்லாமே அப்படியே சாளக்ராமமாக மாறியதாம். பெருமாள் எழுந்தருளியிருக்கும் இடமெல்லாம் அவ்வளவு புனிதம். அவன் பாதுகை பட்ட இடமெல்லாமே அமுதுதானே!

'அமுதனைக் கண்ட கண்கள்' என்பது திருப்பாணாழ்வாரின் பாசுரத்திலிருந்து எடுத்த வரி. பாணர் குலத்தில் பிறந்த திருப்பாணாழ்வார், எப்போதுமே ரங்கநாதனை மட்டுமே மனத்தில் நினைச்சுண்டு பண் பாடிக் கொண்டு இருப்பார். அப்படி ஒரு ஆறாத காதல் அந்த அரங்கன் மேல. காவேரி கரையோரம் பண் இசைத்துக் கொண்டே இருப்பார் அவர். எம்பெருமானின் அடிமையை மற்றொரு பாகவதர் தூஷனை செய்யக்கூடாதுன்னு சாஸ்திரம் சொல்கிறது. திருப்பாணாழ்வாரை பற்றி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாகச் சொல்வது உண்டு. ரங்கநாதரின் சன்னிதிக்குள் அவருக்குக் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருக்கும் லோகசாரங்கனிடம், 'போய் திருப்பாணாழ்வாரை தோளில் தூக்கிக் கொண்டு வாரும்'ன்னு பகவானே சொன்னார். உடனே அவர், காவிரிக் கரை பக்கம் போனார். அங்கே பண் இசைத்துக் கொண்டிருந்த திருப்பாணாழ்வாரை பார்த்து, ''உங்களை தோளில் சுமந்து கொண்டு வரும்படி பெருமாளே என்னை பணித்திருக்கிறார்” என்கிறார். சொன்ன கையோடு திருப்பாணாழ்வாரை தம் தோளில் சுமந்து கொண்டு ஏழு பிராகாரங்களையும் சுற்றி வந்து ஸ்ரீரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கும் சன்னிதிக்கு அழைத்துக் கொண்டு போகிறார். முதன் முதலாக ரங்கநாதரை தம் கண்களால் கண்டதும் திருப்பாணாழ்வார் பெருமாளின் திருவடி துவங்கி, திருமுடி வரை அப்படியே பத்து பாசுரங்களை “அமலன், ஆதிபிரான்” என்று பாடுகிறார்.

ஒரு பார்வை; ஒரே பார்வை தான். இவன்தான் அமலன், ஆதிபிரான் என்று புரிகிறது அவருக்கு. அதுமட்டுமா? வேறு எதையுமே பார்க்கப் பிடிக்கவில்லை - இதைப் பார்த்த பிறகு.

உயர்வான ஒரு விஷயத்தைப் பார்த்தப் பின்பு, ஒரு சராசரி விஷயத்தைப் பார்க்கப்படாது. அப்படித்தான் ஆனவர் திருப்பாணர். அதைப் பாடறார்: 

'... அண்டர்கோனணியரங்கன் என்னமுதினைக் 
கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்கிறார்.

ஆமாம்; அதோடு முடிஞ்சுது. பளிச்சுன்னு ஒரு மின்னல், ஜோதி! பாணர் பகவானோட ஐக்கியமானார். பக்தி இப்படி இருக்கணும். நம்மைப் பீடிக்கிற அகங்காரம், மமகாரம் எல்லாமே இந்த பத்து பாசுரங்களைப் படித்தாலும், நினைத்தாலும், கேட்டாலும் போய்விடும். ஆழ்வார் கண்ட அமுதனை நாம் நம் மனக்கண்களால் கண்டு அவனையே மனதால் என்றும் நினைப்போமாக.'

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

(சொற்பொழிவைத் தொகுத்தவர் நளினி சம்பத்குமார்)

நன்றி - தீபம் ஜனவரி 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக