புதன், 11 டிசம்பர், 2019

பக்தியில் குழைந்த ஞானம் - சீதா ரவி

“ஞானமும் பக்தியும் ஒன்றே தான். பக்தி மார்கமும் ஞான மார்கமும் வேறுபட்டவை அல்ல. அறிவு முதிர்ச்சியுற்று இதயத்தில் ஸ்திரமாக நிலைபெறுகிறபோது, அதுவே ஞானமாகிறது. இந்த ஞானம் ஆக்கம் பெறுகிறபோது, (அர்த்தமுள்ள செயலாகிறபோது) அதுவே பக்தியாக மிளிர்கிறது" என்று ராஜாஜியின் குரல்தான் முதலில் ஒலிக்கும், எம்.எஸ்.ஸின் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிப்பதிவில்! மூதறிஞரின் இந்த வாக்கை வாழ்ந்து காட்டியவர்தானே எம்.எஸ்.சுப்புலட்சுமி! இசை பக்தியும் இறை பக்தியும் அவருக்குள் கனிந்து இசையாக வெளிப்பட்டன. அவரது சங்கீத ஞானமே ஆத்ம ஞானத்துக்கு இட்டுச் சென்றது. அவரது இசையின் பயன், அன்பர் பணிக்கு மடை திருப்பப்பட்டது! விஷ்ணு சஹஸ்ர நாமத்தை ஒலிப்பதிவு செய்ய முற்பட்டபோது, அந்தப் பதிவின்
கால அவகாசம் ஒரு முழு எல்.பி. ரெக்கார்டை நிரப்புவதற்குப் போதவில்லை . அதனால் ஆதிசங்கரரின் 'பஜ கோவிந்தம்' ஸ்லோகத்தின் சில அடிகளை ஆரம்பத்தில் பாடிப் பதிவு செய்துவிட்டு, அதனைத் தொடர்ந்து தியான சுலோகத்துடன் விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் பதிவு செய்ய முடிவெடுத்தனர் சதாசிவம் - எம்.எஸ்.தம்பதி.


திருவனந்தபுரம் இசைக் கல்லூரியில் ஆசிரியராகத் திகழ்ந்த கே.ஆர். குமாரசுவாமி, பஜ கோவிந்தம் முழுமையையும் மெட்டமைத்து, மாணவர்களுக்குப் பயிற்றுவித்திருந்தார். அவற்றுள் தேர்ந்தெடுத்த சில அடிகளை செம்மங்குடி சீனிவாசய்யர் மேடையில் பாடி வந்தார். அவரிடமிருந்து அவற்றைப் பாடம் செய்து எம்.எஸ்ஸும் கச்சேரிகளில் பாடினார். அவ்வடிகளுடன் மற்றும் சில அடிகளையும் சேர்த்துக் கொண்டு தான் ஒலிப்பதிவுக்குத் தகுந்த அளவில் நிர்ணயமாக அமைத்துக் கொண்டார்கள். கே.ஆர்.குமாரசாமியின் சகோதரரும் இசைக் கலைஞருமான கே.ஆர்.கேதாரநாதன், அவரது மனைவி மீரா கேதாரநாதன் இருவரும் எம்.எஸ். அம்மாவுக்கென அனைத்து அடிகளையும் பாடிக்காட்ட, ராதா விஸ்வநாதன், வயலின் கலைஞர் வி.வி.சுப்ரமண்யம் ஆகியோர் கலந்தாலோசித்து இன்று நாம் கேட்டு இன்புறும் இறுதி வடிவத்தை உருவாக்கினர்.


'பஜ கோவிந்தம்' பற்றி ராஜாஜி கல்கியில் எழுதியிருந்தார் என்பதால், அவரிடம் அறிமுக உரை பெற்று ஒலிப்பதிவைத் தொடங்க முடிவாயிற்று. சமகால தத்துவ ஞானியாகவே திகழ்ந்த அவரும் அற்புதமான அறிமுகத்தை அளித்தார். அதில் எம்.எஸ்.ஸின் இசைத்திறன் பற்றியோ பக்தி பற்றியோ அவர் குறிப்பிடவில்லை என்பதே அப்பதிவுக்கு மேலும் ஏற்றமும் கௌரவமும் தருகிறது.


'பஜ கோவிந்தம்' ஆரம்பிக்கும் முன் ஒரு சுலோகம் பாடியிருப்பார் எம்.எஸ்:


ஸ்தாபகாய ச தர்மஸ்ய 
ஸர்வ தர்ம ஸ்வரூபிணே 
அவதார வரிஷ்டாய 
ராமகிருஷ்ணாய தே நம:


என்ற அந்த வரிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக விளங்கிய சுவாமி ரங்கனாதா நந்தாவிடம் ஸ்புரித்தவை. பரமஹம்ஸரைப் பற்றி அவரிடம் உதித்த ஒரு சுலோகத்தின் இரு வரிகள் அவை. இவ்வரிகள் ஏன் 'பஜ கோவிந்தம்' ஒலிப்பதிவில் இடம்பெற வேண்டும்? என்று தோன்றும். வலுவான காரணம் இருந்தது. பஜ கோவிந்தம் - விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிப்பதிவின் விற்பனை வருமானம் முழுமையும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு எழுதித் தரப்பட்டது. அதனை உரிய வந்தனையுடன் செய்ய வேண்டும் எனக் கருதியே இந்த வரிகள் இசைத்தட்டில் இணைக்கப்பட்டன.


எம்.எஸ்.ஸின் குரலில் பஜ கோவிந்தத்தைக் கேட்கிறபோது ஏற்படுகிற சிலிர்ப்பு, இத் தகவல்களை நாம் அறியும்போது மேலும் பன்மடங்காகப் பெருகுகிறது அல்லவா!


நன்றி - தீபம் அக்டோபர் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக