புதன், 11 டிசம்பர், 2019

பஜ கோவிந்தம் - வித்யாரண்யன்

“பயணத்துல, வழிதவறி வந்துட்டோம். வீட்டுக்குத் திரும்பிப் போயாகணும். வழியே தெரியாதபோது எப்படித் திரும்பறது? ஊருக்குள்ளே பிரயாணம்னா, யாருகிட்டயாவது வழி கேட்கலாம். ஆனா, காட்டுக்குள்ள வந்தாச்சு. எந்தப் பக்கம் பார்த்தாலும் மரம், செடியாத் தெரியறது. ஒண்ணும் புரியலை. இப்ப என்ன செய்யறது? அதனால, காட்டுல இருக்கற புலியைத் தேடிப்போய், ' எனக்கு திரும்பிப் போக வழி தெரியலை. நீ வந்து வழிகாட்டு'னு கேட்க முடியுமா? அது சரியான காரியமா? ஆனா, 'என்னைக் காப்பாத்து'னு, அழிக்கறவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டார் ஒருத்தர். அது சரியா? ஏன் அப்படிக் கூப்பிட்டார்?”


கேசவானந்தரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சற்றே வியப்பு ததும்ப அவரை பார்த்தார்கள். பேச்சில் இப்படி ஒரு உதாரணம், ஒரு கேள்வி என்றெல்லாம் சுவாரஸ்யம் எழுப்பி, வந்திருக்கும் மனத்தையெல்லாம் வயப்படுத்துவதில் அவர் கெட்டிக்காரர். எல்லாரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். காவி வஸ்திரம் தரித்து, நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க வீற்றிருந்த கேசவானந்தர் தொடர்ந்து பேசினார்:


"என்னன்னு புரியலை இல்லியா? யாரு இப்படி கூப்பிட்டதுன்னா, ஆசார்ய சங்கரர். எப்போ கூப்பிட்டார்? பஜகோவிந்தத்துல வர ஒரு ஸ்லோகத்துல கூப்பிடறார். இது, எல்லாருக்கும் தெரிஞ்ச பிரசித்தமான ஸ்லோகம். 


புனரபி ஜனனம் புனரபி மரணம் 
புனரபி ஜனனீ ஜடரே சயனம் 
இஹ சம்ஸாரே பஹூ துஸ்தாரே 
க்ருபயா பாரே பாஹி முராரே


அட்சர சுத்தமாக உச்சரித்த கேசவானந்தர், “எம். எஸ். அம்மா குரல்ல இதைக் கேட்கும் போது, அந்தக் குரல்லயே ஒரு உருக்கம், 'பகவானே வந்து என்னைக் காப்பாத்த மாட்டியா'னு வழியற ஏக்கம் எல்லாம் தெரியும். தன்னை பகவானிடம் ஆத்மசமர்ப்பணம் செய்துவிட்ட ஒரு ஜீவனின் குரல் அது. அந்த உருக்கம், அந்தக் கரைதல் இதுதான் பகவானை ஈர்க்கிறது.


சரி; இந்த ஸ்லோகத்துல முராரின்னு ஒரு சொல் வந்துது. யார் இந்த முராரி? முரனை சம்ஹரித்தவன். சம்ஹாரம் பண்ணவனைக் கூப்பிட்டு காப்பாத்துன்னு சொல்லலாமா? அவன் காப்பாத்துவானா? நிச்சயம் காப்பாத்துவான். ஏன்? அவனால், சம்ஹாரம் செய்யப்பட்ட முரன் என்பவன் ஒரு அசுரன். மிகுந்த வலிமை பெற்றவன். அது மட்டுமில்ல; நரகாசுரனோட படைத்தளபதி. அப்படின்னா, அவனைக் கொன்றவன் யார்? சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணன்தான் அவனை சம்ஹாரம் செய்தான். அதனால, முராரி என்கிற திருநாமம் அவனுக்கு உண்டு.


அவனை எதுக்கு இங்கே கூப்பிடணும்? நாமும் வழி தெரியாம இந்த சம்சாரமாகிற காட்டுக்குள்ள வந்துட்டோம். மறுபடி பிறப்பு, மறுபடி இறப்பு என்கிறதான பெரிய ஆபத்து நம்மை நோக்கிக் காத்துக் கிட்டிருக்கு. அதை நோக்கித்தான், ஆசை என்கிற அசுரன் நம்மைச் செலுத்திக் கொண்டு இருக்கிறான். அவன்தான் இந்த முரன். அவனை ஏவினது யார்?


முரனை ஏவினது நரகாசுரன். இங்கே ஆசையை யார் ஏவினாங்க? நம்முடைய மனம். இந்த மனம், ஆசையைத் தூண்டிவிட்டது. அந்த ஆசை, ஐம்புலன்களையும் தன்னோடு கூட்டாகச் சேர்த்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் பிறப்பு என்கிற நிலையை நோக்கி நம்மைச் செலுத்துகிறது. இந்த ஆபத்திலிருந்து, முரனை அழித்தவனான கிருஷ்ணா, நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் ஆசார்யர்.


ஆனால், கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இதுல உண்டு. இங்கே முராரின்னு கூப்பிட்ட ஆசார்யர், ஆரம்பத்துல 'கோவிந்தனை வழிபடு' என்றுதான் ஆரம்பிக்கிறார். அதுவும், கோவிந்தன் என்கிற திருநாமத்தை மூன்று முறை சொல்கிறார். அதுக்கப்புறம் உள்ள முப்பது பாடல்கள்ல ஒரு தடவை கூட கோவிந்தன்னு சொல்லலை. முராரி, விஷ்ணு இப்படியான வார்த்தைகளைத்தான் சொல்றார். என்ன காரணமா இருக்கும்?


விஷ்ணு என்கிற பதத்துக்கு எங்கும் வியாபித்திருப்பவன் என்று அர்த்தம். பகவான் எங்கும் நிறைந்திருப்பவன் என்பதனாலே அதைப் பயன்படுத்தி குறிப்பா ஒரு விஷயத்தை சொல்லிப் புரிய வைக்கறது சிரமம் இல்லியா? 'காத்தே இல்லை'ன்னா, மரம் அசையலை; வியர்க்கிறதுன்னு அர்த்தம். இதே, 'வண்டில காத்து இல்லே'ன்னா, அது பயணத்துக்கு பயன்படாதுன்னு அர்த்தம். இப்படி குறிப்பா புரிய வைக்கறதுக்காக, முராரின்னு பயன்படுத்தினவர், ஆரம்பத்துல கோவிந்தன்னு சொன்னதுக்கும் ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கத்தானே செய்யும்? அதென்ன?


கிருஷ்ணனுக்கு கர்காச்சாரியார் வைத்த பெயர் வாசுதேவன். கரிய திருமேனி கொண்டதால் உண்டான திருநாமம் கிருஷ்ணன் என்பது. ஆனா, இந்திரனால் அபிஷேகப் பெயர் மாதிரி சூட்டப்பட்ட திருநாமம் 'கோவிந்தன்.' எப்போ? கோவர்த்தன மலையை குடையாகத் தூக்கி நின்று, பெருமழையில் இருந்து பசுக்களையும் மக்களையும் காத்தானே, அப்போ உண்மை புரிந்து, தன்னுடைய தப்பை உணர்ந்து இந்திரன் சூட்டின திருநாமம் 'கோவிந்தன்.' அதனால், அது விசேஷமானதான்னா இல்லை. வேறென்ன?


அந்தத் திருநாமம்தான், பகவானின் சுபாவத்தை அப்படியே உணர்த்துகிறது. அவன், தன்னுடைய அடியார்களை, தன்னை நம்புபவர்களை, தன்னைச் சரண் புகுந்தவர்களை எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை என்று உணர்த்துகிற திருநாமம் இது. மலையைத் தூக்கிக் காத்த அந்த பகவான், மலைமீதே சன்னிதி கொண்டிருக்கிறான். அதனால்தான் திருமலையிலும் கோவிந்த நாமம் கோலாகலமாகக் கேட்கிறது. அந்த நினைப்போடு, நம்பிக்கையோடு கோவிந்தனை வழிபடுவோம். 


பஜ கோவிந்தம்! பஜ கோவிந்தம்!!''


நன்றி - தீபம் அக்டோபர் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக