ஶ்ரீமத் பாகவதம் - 109

பஞ்சம ஸ்கந்தம் (ஐந்தாவது ஸ்கந்தம்) – முதல் அத்தியாயம்

(தவம் செய்யப் போன ப்ரியவ்ரதன் மீளவும் வ்ருத்தாந்தத்தைக் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னன் சொல்லுகிறான்:- ஸ்ரீசுக முனிவரே! ப்ரியவ்ரதன் பகவத் பக்தனென்றும் ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்த நிறைவாளனென்றும் (முழுமை பெற்றவன் என்றும்) மொழிந்தீர். புண்யபாபரூப கர்மபந்தத்திற்கும் அதனால் விளையும் ஜ்ஞான ஸங்கோசத்திற்கும் இடமான இல்லற வாழ்க்கையில் அவன் எப்படி மீளவும் விருப்புற்றான்? அந்தணர் தலைவரே! ஸம்ஸாரத்தில் பற்றைத் (ஆசையைத்) துறந்த அத்தகைய பெரியோர்களுக்கு இங்கனம் பாபிஷ்டமான இல்லற வாழ்க்கையில் அபிநிவேசம் (ஈடுபாடு) உண்டாகாதே. இது நிச்சயம். ப்ரஹ்மர்ஷீ! பகவானுடைய பாதங்களின் நிழலில் ஒதுங்கி ஸம்ஸார தாபங்களைத் (உலகியல் துன்பங்களைத்) துறந்து ஸுகித்திருக்கும் (மகிழ்ச்சியுடன் இருக்கும்) பெரியோர்களுக்குக் குடும்பத்தில் ப்ரீதி உண்டாகாதல்லவா? மற்றும், அம்மன்னவன் மனை, மனைவி, புதல்வன் முதலிய குடும்பத்தில் பற்றுடையவனாய் இருப்பினும், அவனுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மாறாத பக்தியும் மோக்ஷ ஸித்தியும் உண்டாயினவென்கிறீர். இவ்விஷயத்தில் எனக்குப் பெரிய ஸந்தேஹமாயிருக்கின்றது. 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! நீ சொன்னது வாஸ்தவம் (உண்மை). ஆயினும் பகவானுடைய பொன்னடிப் போதுகளில் (மலர்களில்) மனம் வைத்த மானிடர் தன்னிடத்தில் பக்தி செய்யும் தூய மனமுடையவர்க்கு அன்பனாகிய அந்த பகவானுடைய கதைகளைக் கேட்கையாகிற மங்கள மார்க்கத்தில் நடப்பதற்குப் பலவகை இடையூறுகள் நேரினும் அதைப் பெரும்பாலும் துறக்கமாட்டார்கள். மனுவின் புதல்வனாகிய அந்த ப்ரியவ்ரதன் நாரதருடைய பாதஸேவையால் தத்வ (ஆத்ம பரமாத்ம தத்வங்களின் ஸ்வரூபங்கள்) ஹித (பரமாத்மாவை அடைய நாம் செய்ய வேண்டிய உபாயம்) புருஷார்த்தங்களை (இவற்றால் ஏற்படும் பலன் அதாவது பகவானுக்கு பரமபதத்தில் செய்யும் கைங்கர்யம்) அனாயாஸமாக அறிந்து பரம பாகவதனாகி ப்ரஹ்மஸத்தத்திற்கு முயன்று (ஆயுள் முழுவதும் ப்ரஹ்மத்தை த்யானம் செய்ய ஸங்கல்பித்து) வாஸுதேவனிடத்தில் மாறாத ஸமாதியோகம் (பகவானை மனதால் கண்டு அனுபவித்தல்) கைகூடும்பொருட்டு, செய்கிறவனும் (கர்த்தா), செயப்படும் பொருளும் (கார்யம்), செயற்குரிய கருவிகளும், செயல்களுமாகிய எல்லாவற்றையும் பகவானிடத்தில் அர்ப்பணம் செய்து வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டிருக்கையில் நீதிசாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட ராஜகுணங்களெல்லாம் அவனிடத்தில் மாறாதிருந்ததனால் தந்தையாகிய ஸ்வாயம்புவ மனுவால் இவன் ராஜ்யபரிபாலனம் செய்யும்படி வேண்டப்பெற்றான். 

தந்தையின் வார்த்தையை தான் தடுக்கக் கூடாதாயினும் அந்த ராஜ்யாதிகாரத்தில் ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட ப்ரக்ருதியின் பரிணாம ரூபமான தேஹத்தைப்பற்றியும் அதைத் தொடர்ந்த ராக (விருப்பு) த்வேஷ (வெறுப்பு) முதலியவற்றைப் பற்றியும் ஜ்ஞானஸங்கோசம் (அறிவில் குறைவு) உண்டாகுமென்பதை ஆலோசித்து அதை அவன் அபிநந்திக்கவில்லை (மகிழ்ச்சியுடன் ஏற்கவில்லை). அப்பால் தன் ஜ்ஞான சக்ஷுஸ்ஸினால் ஜகத்திலுள்ள ஸமஸ்த ப்ராணிகளுடைய அபிப்ராயத்தையும் அறியுந்திறமையுடைய தேவர்களில் தலைவனான ப்ரஹ்மதேவன் இவனுடைய அபிப்ராயத்தை அறிந்து ஸமஸ்த வேதங்களோடும் மரீசி முதலிய ரிஷி கணங்களோடும் கூடத் தனது லோகத்தினின்று இறங்கினான். வரும்பொழுது ஆகாயத்தில் சந்த்ரன்போல் திகழ்கின்ற அந்த பிரமன் ஆங்காங்கு விமான வரிசைகளில் வீற்றிருக்கின்ற தேவச்ரேஷ்டர்களால் அடிக்கடி பூஜிக்கப்பட்டு, வழிகள் தோறும் கூட்டங்கூட்டமாய் இருக்கின்ற ஸித்தர், கந்தர்வர், ஸாத்யர், சாரணர், முனிவர், கின்னரர், உரகர் இவர்களால் பாடப்பெற்றவனாகிக் கந்தமாதன பர்வதத்தின் தாழ்வரையைத் தன் தேஹகாந்தியால் விளங்கச் செய்துகொண்டு அங்கு இருக்கின்ற ப்ரியவ்ரதனுடைய அருகுக்கு (அருகில்) வந்தான். அப்பொழுது ப்ரியவ்ரதனுக்குத் தத்வோபதேசம் செய்வதற்காக அவ்விடம் வந்திருந்த நாரதமுனிவர் ஹம்ஸவாஹனத்தைக் கண்டு தன் தந்தையாகிய ப்ரஹ்மதேவன் வருவதை அறிந்து விரைந்தெழுத்து பூஜா த்ரவ்யங்களுடன் பிதா புத்ரர்களான ப்ரியவ்ரதன் ஸ்வாயம்புவமனு இவர்களும் தானுமாகக் கைகூப்பிக் கொண்டு ஸ்தோத்ரம் செய்தார். பரதவம்சாலங்காரனே! ப்ரஹ்மதேவனும் நாரதர் செய்த பூஜையை அங்கீகரித்து அவர் செய்த ஸ்தோத்ரத்தினால் தன் குணங்களும் தான் ஸத்யலோகத்தினின்று இறங்கின நல்வரவும் மற்ற மேன்மைகளும் சொல்லப்பெற்று ஆதிபுருஷனுடைய அம்சாவதாரமாகிய அப்பிரமன் கருணைகூர்ந்த கண்ணோக்கத்துடன் ப்ரியவ்ரதனை நோக்கி.,

ப்ரஹ்மா சொல்கிறார்:- “அப்பா! உண்மையான ஒரு வார்த்தை சொல்லுகிறேன். இதை உணர்வாயாக. இந்த்ரியங்களால் அறியமுடியாத பரமபுருஷனுடைய கட்டளையே இது. நீ அவன்மேல் அஸூயையின்றி (பொறாமையின்றி) இவ்வசனத்தை ஏற்றுக்கொள்வாயாக. இந்த பகவானுடைய ஆஜ்ஞையை நீயும் உன் தந்தையாகிய இம்மனுவும் மஹர்ஷியாகிய இந்நாரதரும் நானும் ஆகிய நாம் அனைவரும் ஸவாதீனமற்று (நமது வசமின்றி) நடத்துகிறோம். நாம் இஷ்டப்படாதிருப்பினும் அவன் நம்மைக்கொண்டு தன்னிஷ்டப்படி நடத்திக்கொள்ளும் திறமையுடையவன். எப்படிப்பட்டவனும் தவம், வித்யை, யோகபலம், புத்திபலம், அர்த்தம், தர்மம் இவற்றில் எதனாலும் தானாகவாவது பிறர் மூலமாவது இப்பரமபுருஷனுடைய கட்டளையை வேறுவிதமாக்க வல்லனாகமாட்டான். அப்பா! ஜகத்திலுள்ள (உலகிலுள்ள) ஜந்துக்கள் (ப்ராணிகள்) யாவும் ஜன்மம், மரணம், சோகம், மோஹம், பயம், ஸுகம், துக்கம் இவற்றிற்காகவும் கர்மங்களைச் செய்வதற்காகவும் மோக்ஷத்திற்காகவும் பகவானுடைய ஸங்கல்பத்தினால் ஏற்பட்ட தேஹத்தைத் தரிக்கின்றன. குழந்தாய்! இப்பகவானுடைய வாக்காகிற தாம்புக்கயிற்றால் ஸத்வாதி குணங்களும் வர்ணாச்ரம கர்மங்களுமாகிற அறுக்கமுடியாத பூட்டுக்களால் நாம் அனைவரும் கட்டுண்டு மூக்கில் கயிறு கோர்க்கப்பெற்ற நான்கு கால் ப்ராணிகள் மனுஷ்யனுக்கு வேலை செய்வதுபோல், அந்தப் பகவானுக்குப் பூஜை செய்கின்றோம். 

ப்ரியவ்ரதனே! கண்ணில்லாதவர் கண்தெரிந்தவனால் நிழல், வெயில் முதலிய வழிகளில் நடத்தப்பெறுவது போல், நாம் ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்ட தேவாதி சரீரங்களையும் வர்ணாச்ரமாதிகளையும் பெற்று,

ஸாத்விகம் – ஸத்வ ஆஹாரம், ஆயுள், புத்தி, பலம், ஆரோக்கியம், ஸெளக்யம், மகிழ்ச்சி இவைகளை விருத்தி பண்ணும்.

ராஜஸம் – அதிக புளிப்பு, உப்பு, உறைப்பான, அதிக உஷ்ணமாக இருக்கும் ராஜஸ ஆகாரம், துக்கம், சோகம், வியாதி இவைகளுக்குக் காரணமாகிறது.

தாமஸம் – காலம் கடந்த, அதாவது பழையது, புளித்தது, அழுகியது, ஊசிப் போயிருக்கும் ஆகாரம் தாமஸப் போக்கை ஏற்படுத்துவது.

ஆகிய மூன்று வகையான நமது கர்மங்களுக்குத் தகுந்தபடி அவனால் கொடுக்கப்பட்ட ஸுகத்தையாவது துக்கத்தையாவது அனுபவிக்கின்றோம். தேஹாத்மப்ரமம் (இவ்வுடலே ஆத்மா என்ற தவறான எண்ணம்) முதலிய அஜ்ஞானங்கள் நீங்கப்பெற்றவன் அஜ்ஞான தசையில் போலவே ஸுகதுக்கங்களுக்கிடமான புண்யபாபகர்மங்களை அனுபவித்துக் கொண்டிருப்பினும் அந்த ஸுகதுக்கங்களால் விளைகிற தேஹத்தின் நிறைவு குறைவுகளைப் பற்றின அபிமானமின்றித் தன் தேஹ யாத்ரையை நடத்திக்கொண்டு வரவேண்டும். அஜ்ஞானிக்கும் (அறிவற்றவனுக்கும்) ஜ்ஞானிக்கும் (அறிவுடையவனுக்கும்) தேஹயாத்ரை ஒத்திருப்பினும், ஜ்ஞானமுடையவன் வேறு தேஹத்திற்கிடமான ஸாத்விகாதி (ஸத்வ, ரஜஸ், தமஸ் முதலிய) கர்மங்கள்  எவற்றையும் செய்யமாட்டான். ஜன ஸஞ்சாரமில்லாத (மக்கள் நடமாட்டமில்லாத) வனத்தில் காய்கிழங்குகளைப் பக்ஷித்துக்கொண்டு (உண்டுகொண்டு) வாஸம் செய்வானாயினும் ஊக்கமற்றிருப்பானாயின், பஞ்சேந்திரியங்களும் மனமுமாகிற சத்ருக்கள் அனைவரும் கூடவே இருக்கின்றார்கள் ஆகையால் அவனுக்குப் பயம் (ஸம்ஸாரம்) நேரவே நேரும். இந்திரியங்களை வென்று ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவை அனுபவிக்கையால் நிறைவாளனான ப்ரஹ்மநிஷ்டனுக்கு இல்லறவாழ்க்கை என்ன கெடுதியை விளைக்கும்? ஜ்ஞான நிஷ்டைக்கு விரோதிகளான இந்திரியங்களாகிற சத்ருக்களை வெல்ல விரும்புவானாயின், பலிஷ்டரான சத்ருக்களை ஜயிக்க விரும்பும் மன்னவன் துர்க்கத்தில் (கோட்டையில்) இருந்து அவர்களை ஜயிப்பது போல், இவனும் க்ருஹஸ்தாச்ரமத்தில் இருந்துகொண்டே அதற்கு யத்னம் (முயற்சி) செய்யவேண்டும். சத்ருக்கள் க்ஷீணித்தபின்பு மன்னவனைப் போலவே ஜ்ஞானியும் இஷ்டப்படி வெளியில் திரியலாம். நீ பகவானுடைய பாதாரவிந்தங்களாகிற துர்க்கத்தைப் (கோட்டையைப்) பற்றியிருப்பவன். நீ இந்த்ரியங்களாகிற சத்ருக்கள் அனைவரையும் நன்றாக வென்றவன். ஆயினும் பரமபுருஷனால் கொடுக்கப்பட்ட இவ்வுலக போகங்களைச் சிலகாலம் அனுபவிப்பாயாக. அப்பால் பற்றற்று மோக்ஷம் பெறுவாய்” என்று மொழிந்தான். 

சுகர் சொல்கிறார்:- இங்கனம் சொல்லப்பெற்ற மஹாபாகவதனாகிய அந்த ப்ரியவ்ரதன் மூன்றுலோகங்களுக்கும் ஹிதம் (நன்மையை) உபதேசிப்பவனான அந்த ப்ரஹ்மதேவனுடைய கட்டளை லகுவாயிருக்கையால் (எளிதில் ஆசரிக்கக் கூடியதாயிருக்கையால்) தலை வணங்கி அப்படியே ஆகட்டுமென்று பஹுமானத்துடன் அங்கீகரித்தான். நான்முகக் கடவுளும் விதிப்படி பூஜை செய்யப்பெற்று நாரதரும் ப்ரியவ்ரதனும் ப்ரீதியுடன் பார்த்துக்கொண்டிருக்கையில், பெருமஹிமையுடையதும் நெடுநாள் அழிவற்றிருப்பதுமான தன்னுடைய லோகத்திற்குப் போனார். மனுவும் ப்ரஹ்மதேவனால் தன் மனோரதம் நிறைவேறப் பெற்றுப் புதல்வனை ஸமஸ்த பூமண்டலத்தின் மரியாதையைப் பாதுகாக்கும்படி ஏற்படுத்தி மிகவும் கொடிய சப்தாதி விஷயங்களாகிற விஷமடுவில் விளையும் விருப்பத்தினின்று மீண்டான். இங்கனம் ப்ரியவ்ரத மன்னவன் முதலில் தன் விருப்பத்தின்படி பகவத் ஆராதன ரூபமான கர்மத்தில் அபிநிவேசங்கொண்டு (ஈடுபாடு கொண்டு) ஸமஸ்த ஜகத்தின் பந்தத்தையும் போக்கும் ப்ரபாவமுடைய ஆதிபுருஷனான பகவானுடைய பாதார விந்தங்களை எப்பொழுதும் த்யானித்துக்கொண்டிருந்து அதனால் மலங்களெல்லாம் கழித்து (மனதிலிருந்த அழுக்கெல்லாம் தொலைந்து) மனம் தெளிந்து நின்மலனாயிருப்பினும் (அழுக்கற்றவனாயிருப்பினும்) பெருமைபொருந்திய ப்ரஹ்மாதிகளை வெகுமதிக்க விரும்பி அவர்களது கட்டளையை அங்கீகரித்துப் பூமண்டலத்தை ஆண்டு வந்தான். அப்பால் அவன் விச்வகர்மாவென்னும் ப்ரஜாபதியின் புதல்வியான பர்ஹிஷ்மதி என்பவளை மணம்புரிந்து தன்னோடொத்த குணமும், சீலமும், செயலும், உருவமும், வீர்யமும் பொருந்தி உதாரர்களான பத்துப் புதல்வர்களையும் அவர்களுக்குத் தங்கையான ஊர்ஜஸ்வதியென்கிற ஓர் பெண்ணையும் பெற்றான். அப்புதல்வர்கள் பதின்மரும் ஆக்னீத்ரன், இத்மஜிஹ்வன், யஜ்ஞபாஹு, மஹாவீரன், ஹிரண்யரேதஸ்ஸு, அக்ருதப்ருஷ்டன், ஸவனன், மேதாதிதி, வீதிஹோத்ரன், கவி என்று அக்னியின் பேருடையவர். இவர்களில் கவி, மஹாவீரன், ஸவனன் என்கிற இம்மூவரும் இந்த்ரியங்களை வென்று பால்யம் முதல் ஆத்ம வித்யையில் ஈடுபட்டு பரமஹம்ஸர்களின் ஆச்ரமத்தைக் கைப்பற்றினார்கள். அவ்வாச்ரமத்தில் நிலை நின்ற அவர்கள் இந்திரியங்களை அடக்கியாள்கையே தன்மையாகப் பெற்று ஸமஸ்த ஜீவ ஸமூஹத்தையும் சரீரமாகவுடையவனும் ஸம்ஸாரத்தில் பயந்தவர்களுக்கு ரக்ஷகனுமான வாஸுதேவனுடைய திருவடித் தாமரைகளையே எப்பொழுதும் த்யானித்துக்கொண்டிருந்து அதனால் பரமபக்தியோகம் நழுவாமல் வளரப்பெற்று அதன் மஹிமையால் பரிசுத்தமான ஹ்ருதயத்தில் ஸகல சேதனா சேதனங்களையும் சரீரமாகவுடைய பகவான் தோற்றப்பெற்று அவனுக்குட்பட்டதான ஆத்ம ஸ்வரூபத்தையும் ஸாக்ஷாத்கரித்து எல்லோரும் மோக்ஷத்தை அடைந்தார்கள். அந்த ப்ரியவ்ரதனுக்கு மற்றொரு பார்யையிடத்தில் உத்தமன், தாமஸன், ரைவதன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் மன்வந்தராதிபதிகள் ஆனார்கள். அந்த ப்ரியவ்ரதமன்னவன் தன் புதல்வர்கள் இங்கனம் சாந்தி முதலிய நற்குணங்களெல்லாம் அமைந்திருக்கையில், தடைபடாத ஸமஸ்த (எல்லா) பௌருஷங்களும் (ஆண்மை, வீரம்) அமைந்த பலமுடைய தன் புஜதண்டங்களில் (தோள்களில்) தரித்த வில்லின் நாணொலியால் தர்ம விரோதிகள் அனைவரும் தொலையப் பெற்றுத் தன் காதலியான பர்ஹிஷ்மதியுடன் கூடி அவளுக்கு நாள்தோறும் ஆநந்தத்தை வளர்த்து அவளால் எதிர்கொண்டு வெகுமதிக்கை முதலிய ஸத்காரங்களெல்லாம் பெற்றுப் பெண்களுக்கு இயற்கையில் ஏற்பட்ட ஸ்ருங்கார சேஷ்டைகளாலும் வெட்கத்தினால் குறுகின புன்னகை அமைந்த கண்ணோக்கங்களாலும் அழகிய பரிஹாஸ (கிண்டல்) வாக்யங்களாலும் விவேகமற்றவன் போன்று காமக்கலவியில் (இன்பச்சேர்க்கையில்) ஆழ்ந்து, ஆழ்ந்த மனமுடையவனாயினும் ஒன்றுமறியாதவன் போல் காமபோகங்களை அனுபவித்து வந்தான். 

ஸூர்யன் மேருபர்வதத்தைச் சுற்றிப் பூமண்டலத்தைப் பாதியே விளங்கச் செய்கிறான். பாதி மேருவின் நிழலால் மறைக்கப்பட்டு ஸூர்ய ப்ரகாசமின்றியே இருக்கின்றது என்னும் மனக்குறையினால் அம்மன்னவன் இப்பூமண்டலம் முழுவதையும் விளங்கச்செய்ய விரும்பி பகவானை ஆராதித்து மிகுந்த ப்ரபாவமுடையவனாகி ஸூர்யனோடொத்த வேகமுடையதும் அவனைப்போல் பேரொளியுடன் திகழ்வதுமான தேரின்மேல் ஏறி இரவையும் பகலாக்கி விடுகிறேனென்று மற்றொரு ஸூர்யன் போன்று அந்த ஸூர்யனைப் பின்தொடர்ந்து ஸூர்ய ப்ரகாசமில்லாத தேசத்தையும் விளங்கச் செய்து கொண்டு ஏழு தடவைகள் மேருபர்வதத்தின் நாற்புறத்திலும் சுற்றினான். அங்கனம் அம்மன்னவன் சுற்றும்பொழுது அவனுடைய ரதத்தின் சக்கரக்கட்டு ஊன்றினவிடங்களில் அகழிகள் போல் ஆழ்ந்த ஏழு பள்ளங்கள் ஏற்பட்டன. அவையே எழு ஸமுத்ரங்களாயின. அவற்றிற்கிடையிலுள்ள பூமியின் பாகங்கள் ஏழு த்வீபங்களாயின. அவை ஜம்பூத்வீபம், ப்லக்ஷத்வீபம், சால்மலித்வீபம், குசத்வீபம், க்ரெளஞ்சத்வீபம், சாகத்வீபம், புஷ்கரத்வீபம் என்னும் பேருடையவை. அவை ஒன்றைவிட ஒன்று இருமடங்கு அதிகமான அளவுடையவை. ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டு ஒன்றுக்கு வெளியில் ஒன்றாக ஏற்பட்டிருப்பவை. லவண ஸமுத்ரம், இக்ஷுஸமுத்ரம், ஸுராஸமுத்ரம், க்ருதஸமுத்ரம், க்ஷீரஸமுத்ரம், ததிஸமுத்ரம், சுத்தஸமுத்ரம், என்னும் இவையே அவ்வேழு ஸமுத்ரங்கள். இவை முன்சொன்ன ஏழு த்வீபங்களுக்கும் அகழிகள் போன்றிருக்கும். ஒவ்வொரு ஸமுத்ரமும் தன்னால் சூழப்பட்ட த்வீபத்தோடொத்த அளவுடையவை. இவ்வேழு ஸமுத்ரங்களும் க்ரமத்தில் முன்சொன்ன ஏழு த்வீபங்களுக்கு வெளியில் தனித்தனியே ஏற்பட்டிருக்கின்றன. ப்ரியவ்ரதன் தன் புதல்வர்களில் துறவறம் பெற்றவர் போக தன்னைத் தொடர்ந்திருக்கிற ஆக்னீத்ரன், இத்மஜிஹ்வன், யஜ்ஞபாஹு, ஹிரண்ரேதஸ்ஸு, க்ருதப்ருஷ்டன், மேதாதிதி, வீதிஹோத்ரனென்கிற ஏழு பிள்ளைகளையும் ஜம்பூத்வீபம் முதலிய அவ்வேழு த்வீபங்களில் ஒவ்வொன்றுக்கு ஒருவனாக அவற்றிற்கு அதிபதிகளாக ஏற்படுத்தினான். தன் புதல்வியான ஊர்ஜஸ்வதியைச் சுக்ராசார்யனுக்குக் கொடுத்தான். தேவயானி என்பவள் சுக்ரனுக்கு அந்த ஊர்ஜஸ்வதியிடத்தில் பிறந்தவள். த்ரிவிக்ரமாவதாரம் செய்த பகவானுடைய பக்தர்களும் அவனுடைய பாதாரவிந்த பராகத்தினால் (மகரந்தங்களால்) பசி தாஹம் முதலிய ஆறு குணங்களையும் வென்றவருமான பெரியோர்களுக்கு இத்தகைய புருஷச்செயல் நேருவது ஓர் ஆச்சர்யமன்று. 

நல்வழியினின்று நீங்கின பரமபாபிஷ்டனும் இந்த பகவானுடைய திருநாமத்தை ஒருக்கால் உரைப்பானாயினும், அந்த க்ஷணமே அவன் ஸம்ஸார பந்தத்தைத் துறப்பான். (அவனுடைய திருநாமத்தின் ப்ரபாவமே இத்தகையதானால் அவனுடைய பாதாரவிந்தங்களின் ப்ரபாவம் எப்படியிருக்கும் என்பதை ஆலோசிப்பாயாக.) இங்கனம் அளவில்லாத பலமும் பராக்ரமமுடைய அந்த ப்ரியவ்ரத மன்னவன் நாரத முனிவருடைய பாதங்களை விட்டுப் பிரிந்தவுடனே தான் ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் விழுந்து அதனால் வருந்தினாற்போலிருப்பதை நினைத்து மனத்தில் வெறுப்புற்று “ஆ ! நான் தவறு செய்தேன். நான் இந்திரியங்களால் இழுக்கப்பட்டு, ப்ரக்ருதியின் பரிணாமங்களும் அஜ்ஞானத்தினால் இவையே போக்யங்களென்று ஸம்பாதிக்கப்பட்டவைகளும் கடைசியில் விஷம் போன்றவைகளுமான சப்தாதி விஷயங்களாகிற பாழுங்கிணற்றில் தள்ளுண்டேன். இதைவிட மதிகேடு (புத்திகெட்டதனம்) வேறென்ன வேண்டும்? இதுவரையில் அனுபவித்தது போதும். இப்பெண்மணிக்கு விளையாட்டு மிருகம் போன்ற என்னைச் சுடவேண்டுமல்லவா?” என்று தன்னைப் பழித்துக்கொண்டான். பிறகு பகவானுடைய அனுக்ரஹத்தினால் ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையான ஸ்வரூபத்தை ஆராய்ந்தறியப்பெற்று ஸம்ஸார தாபங்களற்றுக் களிப்புற்றுத் தன்னை அனுஸரித்திருக்கின்ற புதல்வர்களுக்கு ஏழு த்வீபங்களையுடைய பூமண்டலத்தை க்ரமப்படி பங்கிட்டுக்கொடுத்துத் தனக்குப் பலவகைப் போகங்களை அளித்த தன் மனைவியைப் பிணம்போல் நினைத்து மஹத்தான ஐச்வர்யத்தையும் துறந்து வெறுப்புற்று மனத்தில் பகவானுடைய இனிய லீலைகளையும் அற்புதச் செயல்களையும் சிந்தித்துக்கொண்டு மீளவும் நாரதருடைய பதவியைத் தேடிக்கொண்டு சென்றான். அவன் புகழை இங்கனம் பாடுகிறார்கள். ப்ரியவ்ரதன் செய்த கார்யத்தை ஈச்வரன் தவிர மற்ற எவன் தான் செய்ய வல்லனாவான்? இவன் பூமண்டலத்தின் இருட்டைப் போக்கிக்கொண்டு தேர் சக்கரக்கட்டுகள் பாய்ந்தமையால் ஏற்பட்ட பள்ளங்களால் ஏழு ஸமுத்ரங்களைக் கற்பித்தான். இவன் ஜம்பூத்வீபம் முதலிய த்வீபங்களை ஏற்படுத்திப் பூமியைப் பாகம் பாகமாய்ப் பிரித்தான். அந்த த்வீபங்களில் ஒவ்வொன்றிலும் ப்ராணிகளின் ஸௌக்யத்திற்காக நதி, மலை, வனம் இவை முதலியவற்றால் தனித்தனியே எல்லைகளையும் ஏற்படுத்தினான்.

பகவானுடைய பக்தர்களுக்கு நண்பனாகிய இந்த ப்ரியவ்ரத மன்னவன், பாதாளம், ஸ்வர்க்கம், பூமி இவற்றிலுள்ள பலவகையான போகங்களையும் யோகமஹிமையால் விளையக்கூடிய அணிமாதி மஹிமைகளையும் நரகம் போல் நினைத்தான். 

முதலாவது அத்தியாயம் முற்றிற்று.

2 கருத்துகள்

  1. (தவம் செய்யப்போன ப்ரியவ்ரதன் மீளவும் வ்ருத்தாந்தத்தைக் கூறுதல்)

    இதனை Heading ஆக வைக்கவும் தட்டச்சு செய்து அனுப்ப மறந்துவிட்டேன். தற்போததான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  2. (தவம் செய்யப்போன ப்ரியவ்ரதன் மீளவும் வ்ருத்தாந்தத்தைக் கூறுதல்)

    இதனை Heading ஆக வைக்கவும் தட்டச்சு செய்து அனுப்ப மறந்துவிட்டேன். தற்போததான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
கருத்துரையிடுக
புதியது பழையவை