ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 20 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

துருவனின் தவம்!


அதிகமாய் ஒருவர் கொடுக்க முடியும் என்றால், அதற்குக் கீழே உள்ள எதையும், அவரால் சுலபமாகக் கொடுக்க முடியும் என்றுதானே அர்த்தம்! ஒரு தேவதை ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஒரு தேவதை பணம் காசு கொடுக்கும். ஒரு தேவதை புத்திரப்பிராப்தி கொடுக்கும். ஒரு தேவதை கல்யாணம் செய்து வைக்கும். ஒரு தேவதை மோட்சத்தைக் கொடுக்கும்.


அப்படியானால், கீழே உள்ள தேவதைகள் எல்லாம் சேர்ந்து, மேலே உள்ள தேவதைக்கு உட்பட்டு ஒவ்வொன்றைக் கொடுக்கும். ஆனால், கீழே உள்ள தேவதையால் மோட்சத்தைக் கொடுக்க முடியாது. மோட்சத்தையே கொடுக்க முடிந்த ஒருவரால், கல்யாணம் செய்து வைக்க முடியாதா? மோட்சத்தையே கொடுக்க முடிந்த ஒருவரால், பதவி உயர்வு வாங்கித் தர முடியாதா? தாராளமாகத் தருவார்தான். ஆனால், அவர் லட்சம் கொடுக்கத் தயாராய் முன் வரும்போது, நாம் ஐயாயிரம் கொடு என்று கேட்கலாமோ? நம்முடைய புத்தி ஹீனமான தன்மையை அவரிடமாய் காண்பிப்பது? இருந்தாலும் வரம் வரமென்று எல்லோரும் கேட்கிறார்கள்!

பக்த துருவன் பகவானைக் குறித்து தபஸ் பண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் உத்தானபாதன் என்கிற அரசனுடைய பிள்ளை. ஸ்வயம்புவ மனுவை பிரம்மா படைத்தார். ஸ்வயம்புவ மனுவுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ப்ரியவிரதன். இன்னொருவன் உத்தான பாதன். உத்தானபாதனின் மகன்தான் பக்த துருவன். துருவன் தன் தகப்பனார் மடியில் ஏறி உட்கார வேண்டும் என்று விரும்பினான். ஆனால், மாற்றாந்தாய் வந்து தடுத்தாள். “என் குழந்தைக்குத்தான் அந்த உரிமை உண்டு. நீ எப்போது என் வயிற்றில் பிறக்கவில்லையோ, உனக்கு அந்த உரிமை கிடையாது" என்று சொல்லித் தடுத்து விட்டாள்.

பிள்ளைக்குக் கோபம் வந்துவிட்டது. அடிபட்ட பாம்பைப்போல நேராகக் காட்டுக்குப் போனான். பகவானைக் குறித்து தபஸ் பண்ணினான். கோரத்தவம். ஐந்தே மாதங்கள். அவன் வலது காலைக் கீழே வைத்தால் பூமி இந்தப் பக்கம் சாய்கிறதாம். அவன் இடது காலைக் கீழே வைத்தால் பூமி அந்தப் பக்கம் சாய்கிறதாம். தேவர்களுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது. உடனே, இந்திரன் தன் நாற்காலிக்கு ஆபத்து என்று நினைத்து பயப்பட ஆரம்பித்து விட்டான். அவனுக்கு எப்போதும் அந்த பயம் தான். அந்த நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பான் போலிருக்கிறது. யாராவது தபஸ் செய்ய ஆரம்பித்தால் போதும். ரம்பா, திலோத்தமை, ஊர்வசி, மேனகை இவர்களில் யாரையாவது அனுப்பி, அந்தத் தவத்தைக் கலைக்கத் திட்டமிட்டு விடுவான். எப்படியாவது தன் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா! அதுபோல இந்திரனும் மற்ற தேவர்களும் பகவானிடத்தில் ஓடிப்போய், “உன்னைக் குறித்து ஒரு பிள்ளை தபஸ் பண்ணுகிறார். உடனே அதை நிறுத்தி, எங்கள் ராஜ்ஜியத்தையும் பதவிகளையும் மீட்டுக் கொடு" என்றார்கள்.
பகவான் சொன்னார்: “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே, அதுபோல நீங்கள் எல்லோரும் இப்போது பயந்து போய்க் கிடக்கிறீர்கள். அவன் முதலில் எதற்காகத் தபஸ் பண்ணுகிறான் என்று பார். தேவர்களே... என்னைக் குறித்துத் தபஸ் பண்ணுகிறவன் என்னைத் தவிர மற்ற எதையும் கேட்பதில்லை. மற்றதைக் கேட்டால் நான் கொடுப்பதில்லை. முதலில் அப்படிக் கேட்பவன் என் பக்தனே இல்லையே!" என்றார்

யார் பகவானுக்கு பக்தனாகிறான்? அவரை மட்டுமே விரும்புகிறவன்தான் பக்தன். பிரயோஜனாந்தர சம்பந்தத்தைத் தொலைத்தவன். அதாவது பலன்களின் மீது பற்று வைக்காதவன்.

அப்படியானால் என்னதான் வேண்டுமாம் துருவனுக்கு என்று கேட்டார்கள்.

அதற்கு பகவான் சொன்னான்: “தேவர்களே, உங்களுக்கு அது புரியவே போவதில்லை. அவனுக்கு என்ன வேண்டுமோ, அதைக் கொடுக்க எனக்குத் தெரியும். நீங்கள் தைரியமாகப் போய்விட்டு வாருங்கள். உங்கள் பதவிக்கெல்லாம் எந்த ஆபத்தும் இல்லை" என்று சொல்லி, பகவான் அவர்களை அனுப்பி வைத்தார்.

கருடவாகனாரூடனாக வந்து துருவனின் முன்னால் பகவான் நிற்கிறார். அப்போதும் அவன் கண்களைத் திறக்காமல் இருக்கிறான். பகவானே கண்முன் நிற்கும்போது அவன் கண்மூடி தபஸ் செய்கிறான். அவன் யோக மார்க்கத்தில் உள் புறமாக பகவானைப் பார்த்து சேவித்தவன். ஆகவே, வெளியில் உள்ள பெருமாள் தெரியவில்லை. ஆகவே, பகவான் என்ன செய்தார் தெரியுமா? அவன் உள்ளத்துக்குள் இருக்கும் தன் உருவத்தை மறைத்தார். மறைத்தவுடனே, அவர் எங்கே என்று தேடுவதற்காகக் கண்களைத் திறந்தான். அதே உருவத்துடன் அவன் முன்னால் நின்று சேவை சாதித்து விட்டார் பெருமான். ஆஸ்ச்சர்யமாக சேவித்துவிட்டான். அவன் கேட்ட வரம் என்ன?

பகவான் கேட்கிறார்: “நான் உனக்கு தரிசனம் கொடுத்து விட்டேனப்பா... என்ன வரம் வேண்டும்?" என்று கேட்கிறார்.

“அதைத்தான் கொடுத்துவிட்டீர்களே!" என்றான் அவன்.

“நான் வந்திருக்கிறேனே! ஏதாவது வரம் கேளேன்" என்று சொல்லிப் பார்த்தார்.

“நீ வந்ததே பெரிய வரம்" என்றான். வேறு எதையுமே நான் பிரார்த்தித்ததில்லை. உன் சேவையைத் தவிர, மற்றொரு வரத்தை நாங்கள் பிரார்த்திக்கப் போகிறோமா?

உன் திருவடித் தாமரைகள் கிடைத்தவனுக்கு மற்றதெல்லாம் எப்படி இருக்கும்? அச்சுதனுடைய திருவடித் தாமரை கிடைத்தால் அது பொற்றாமரை அடிகள். இது கிடைத்துவிட்டால், யாரும் பொன்னை விரும்பமாட்டார்கள். அவன் மற்ற அத்தனையையும் புல்லுக்கு சமமாக மதிப்பான்.

அப்படி இருக்கும்போது நேரிலேயே பெருமானைப் பார்த்த பக்தன் பிரஹ்லாதன், பக்தன் துருவன் ஆகியவர்கள் மற்றொரு வரத்தை எதிர்பார்ப்பார்களா?

ஆனால், அதைப் புரிந்து கொள்ளவில்லை இந்த ஹிரண்யகசிபு. தான் பெற்ற வரத்தைத்தான் பெரிதாய்க் கருதி விட்டான். அந்த வரமே பகவான்தான் என்று நினைத்துக் கொள்ளாமல் போய் விட்டானல்லவா?

அதைத்தான் ஆழ்வார், ‘வரம் கருதித் தன்னை வணங்காத வன்மை’ என்றார். தன்னை வெற்றி கொள்வதற்கு இந்த உலகில் ஒரு ஆள் கூட இல்லை என்று இறுமாந்திருந்தான். பெருமானை வணங்காதிருந்தான்.

உரங்கருதி மூர்க்கத்தவனை... அதாவது, தனக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக மூர்க்கமாக நடந்து கொண்டு விட்டான்.

அப்படிப்பட்டவனை ‘நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன்...’ அதாவது மனிதத் தன்மையும் மிருகத் தன்மையையும் கலந்து கொண்டு வந்தவன் ஹிரண்யனை கீண்டு கிழித்துப் போட்டான். திருவன் என்றால் (திரு = மகாலட்சுமி) லட்சுமி நரசிம்மன் என்று அர்த்தம்.

இந்த இடத்திலும் சேராத இரண்டை சேர்த்திருக்கிறார் பாருங்கள் பெருமான்! நரத்துவம், மனிதத்துவம் இரண்டையும் சேர்த்த பெருமை ஒரு பக்கம் இருக்கட்டும். கோபமும் பிரசாதமும் எங்கேயாவது ஒன்று சேருமோ? அதைச் சேர்த்தார் பாருங்கள்.

ஒருவர் மிகவும் கோபப்பட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் சிரித்துக் கொண்டே கோபப்படுவது சாத்தியமா? அழுது கொண்டே இருக்கும் ஒருவன், அதே சமயத்தில் சிரிக்க முடியுமா? ஒருவன் நன்றாத் தூங்கிக் கொண்டே இருக்கிறான். உபன்யாசம் நன்றாய் இருந்தது என்று எப்படி சொல்ல முடியும்? ஒன்று தூங்க முடியும் அல்லது உபன்யாசத்தைக் கேட்க முடியும்! ஆனால், இவர் சேராத இரண்டை சேர்த்து வைத்தாரே!

அது எப்படி?

(வைபவம் தொடரும்)

நன்றி - தீபம் நவம்பர் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக