ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 21 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

சிரிப்பையும் கோபத்தையும் சேர்த்தவர்!


மத்யான வேளையில் ஒருவர் சாப்பிட்டுவிட்டு உபன்யாசம் கேட்க உட்காரும் போது, லேசாகக் கண்ணை அசத்தும்! அதைத் தூங்குகிறார் என்றெல்லாம் நாம் சொல்லிவிடக் கூடாது! அதற்கு பிரம்மானுபாவம் என்று பெயர். ஆத்மா பிரம்மத்துடன் அனுபவிக்கிறது அல்லவா! ஆத்மா பிரம்மத்துடன் அனுபவிப்பதற்காகத்தான், இரவில் நாம் தூங்குகிறோம். அதனால்தான் காலையில் தூங்கி எழுந்தவுடன் இந்திரியங்கள் எல்லாம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆக... உபன்யாசம் என்பதும் பிரம்மானுபவத்தைப் பெறுவதற்காகத்தானே?


இதை எதற்காக சொல்ல வந்தேன் என்றால், தூங்கிக் கொண்டு இருக்கும் ஒருவரால், உபன்யாசம் செய்து கொண்டும் இருக்க முடியுமோ? தூங்கிக் கொண்டு இருக்கும் ஒருவரால், உபன்யாசம் கேட்டுக் கொண்டும் இருக்க முடியுமோ? நடந்துகொண்டே இருக்கும் ஒருவர், படுத்துக்கொண்டும் இருக்க முடியுமோ? இவற்றையெல்லாம் போலத்தான் கோபமும் அருளும் சேரவே சேராது. கோபித்துக் கொண்டால் கோபிக்கத்தான் முடியும். அருள் புரிந்தால் அருள் புரியத்தான் முடியும்.


ஆனால், இங்கு ஒரு ஆச்சர்யம் பாருங்கள். ஒரு கண் சூரியனைப்போல கோபத்தைக் காண்பிக்கிறது. தகிக்கிறது. மற்றொரு கண் சந்திரனைப்போலே அனுக்கிரகத்தைப் பொழிகிறது. குளிர்கிறது. ‘சந்திர சூர்யௌச நேத்ரே’ என்று உபநிஷதம் சொல்கிறது அல்லவா? குளிர்ச்சி ஒரு பக்கம். தகிப்பு ஒரு பக்கம். கோபம் ஒரு பக்கம். பிரசாதம் மறுபக்கம். இது நடக்குமா? ஹிரண்ய கசிபுவினிடத்திலே ஒரு பக்கம் கோபத்தைக் காட்டுகிறார். பிரஹ்லாதனிடத்திலே மறுபுறம் பிரசாதமாகிய அருளைக் காட்டுகிறார். நாம்கூட அவற்றை ஒரு உருவத்தில் சேர்த்துவிடலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? ஒரு பொம்மை பண்ணினால் சேர்த்துவிடலாம்! ஆனால், நிஜ உருவத்தில் சேராத... சேர முடியாத கோபத்தையும் பிரசாதத்தையும் சேர்த்தார் அல்லவா? இது நடக்குமா? ஒரு உதாரணத்தையும் பார்க்கலாம்.

ஒரு குகை இருக்கிறது. அதில் ஒரு சிங்கம் படுத்திருக்கிறது. அது பெண் சிங்கம். அது இப்போதுதான் குட்டிகளைப் போட்டிருக்கிறது. தன்னுடைய மார்பகத்திலிருந்து அது பால் ஊட்டிக் கொண்டிருக்கிறது. அப்போது வாசலில் ஒரு யானை வந்து நிற்கிறது. அந்த யானை பிளிறுகிறது. எப்போதுமே யானையின் பிளிறலை மட்டும் சிங்கத்தால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! ஒரே கோபமாக வந்தது. அந்தக் கோபத்துடன் எழுந்தது அந்தப் பெண் சிங்கம். அப்படியே எழுந்து குகையின் வாசலை நோக்கிச் சென்றது. அப்போது குட்டிகள் எல்லாம் பால் சாப்பிட்டுக் கொண்டே இருந்தன. அந்தப் பக்கம் கண்ணைப் பார்த்தால் கோபம் கொப்பளிக்கிறது யானையைப் பார்த்து. இந்தப் பக்கம் தன்னுடைய மார்பகத்திலிருந்து பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆக, ஒரு பக்கம் குட்டிகளுக்குப் பால் ஊட்டிக் கொண்டிருப்பது அருள். பிரசாதம். இன்னொரு பக்கம் யானையைப் பார்த்து கோபமாக கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. இதை ஒரு சாதாரண சிங்கமே பண்ணும் போது, சிங்கப் பிரானால் பண்ண முடியாதா என்ன?


இவ்வாறாக ஒரு பக்கத்தில் கோபமும் ஒரு பக்கத்தில் பிரசாதமுமாக இரண்டும் உள்ளன என்பதற்கு என்ன சாட்சி? திருவன்! திருவன் என்று சொன்னாலே லக்ஷ்மியை பிரசாதத்துக்காக... அருள் பொழிவதற்காக மடியில் வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னைக் கோபத்துக்காக வைத்துக் கொண்டார்! லக்ஷ்மி தேவி என்றால் திரு அல்லவா? திருவை உடையவன் திருவன்.


எந்த மடத்தில் வேண்டுமானாலும் போய் சேவித்துப் பாருங்கள். பெரிய பெரிய ஆசார்ய புருஷாளின் எந்தத் திருமாளிகையில் வேண்டுமானாலும் போய் சேவித்துப் பாருங்களேன். அழகியசிங்கர்தான் திருவாராதனப் பெருமாளா இருப்பார். எந்த மடாலயத்திலும் ஆசிரமத்திலும், அப்படித்தான் சேவை சாதிப்பார் பெருமாள். ஏன் அவரே இருக்கிறார் என்று கேட்கிறீர்களா? சேராததை சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டுமல்லவா?


சாஸ்திர வாக்கியங்கள் இருக்கின்றனவே... அவற்றை மேலெழுந்த வாரியாகப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால், ஒவ்வாமை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒன்றோடு ஒன்று ஒத்து வரவே வராது. இந்த வாக்கியம் இப்படி சொல்கிறது. ஆனால், அந்த வாக்கியம் அப்படி சொல்கிறதே? இதனோடு அது ஒத்துப் போகவே இல்லையே! பிரம்மம் சகுணமா? பிரம்மம் நிர்க்குணமா? பிரம்மம் ஜகத் காரணமா? பிரம்மம் உபாதான காரணமா? நிமித்த காரணமா? ஒன்று சொல்லும் பேத ஸ்ருதி. மற்றொன்று சொல்லும் அபேத ஸ்ருதி.


மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், ஒன்றுக்கொன்று முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறதல்லவா? இந்த முரண்பாடுகளையெல்லாம் களைவதுதான் பூர்வாசார்யர்களுடைய வேலை. அந்த சாஸ்திர வாக்கியமும் சரிதான். அந்த சாஸ்திர வாக்கியமும் சரிதான். இரண்டும் ஏக அபிப்ராயம். இரண்டும் ஐக்கியம். இரண்டும் ஏகமானதாகத்தான் சொல்கிறது.


இதனால்தான் ஸ்ரீராமானுஜர், தனது ஸ்ரீபாஷ்யத்தின் இறுதியில் ‘இதி ஸர்வம் சமஞ்சஸம்’ என்று சாதித்தார். அதாவது, “இப்படியாக ஒன்றுக்கொன்று பேத வாக்கியங்களெல்லாம், முரண்பாடில்லாமல் ஒருங்கவிடப்பட்டன” என்றார். அப்படியானால் முரண்பாடில்லாமையைப் பண்ணுவதே ஆசார்யர்கள்தானே? முரண்பாட்டை சரிப்படுத்திவிட்டது யார்? லக்ஷ்மி நரசிம்மன்; அழகிய சிங்கப் பெருமான்தானே? அதனால்தான் அவரையே எல்லோரும் திருவாராதனம் பண்ணுகிறார்கள், சேராத இரண்டை சேர்த்துக் கொடுப்பதற்காக.


நம்மிடமும் எத்தனையோ பொருந்தாத விஷயங்கள் இருக்கும். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம். எல்லாம் பொருந்திவிடுகிறதா என்ன? அதிலும் இப்போதெல்லாம் ரசாயனம் ஒத்து வர வேண்டும் என்று ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆங்கிலத்தில் ஏதோ வாக்கியம்கூட சொல்கிறார்கள். அப்படியானால்தான் மேற்கொண்டு கல்யாணம் செய்து கொள்வோம் என்கிறார்கள். கல்யாணம் ஆன பிற்பாடு ஏதோ ஒரு பிணக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால் ஒவ்வாமை என்று ஏற்படுகிறது. அவள் பிறந்து வளர்ந்தது எங்கேயோ. இவன் பிறந்து வளர்ந்தது எங்கேயோ. ஒருவருடைய மனசு மற்றொருவருக்குத் தெரியாது. அவன் மனசு இவளுக்குத் தெரியாது. இவள் மனசு அவனுக்குத் தெரியாது. கல்யாணம் பண்ணிவிடுகிறோம்.


‘அந்த மாதிரி இருந்தாலே ஆபத்தாயிற்றே! அப்படிப் பண்ணிக் கொள்ளலாமா?’ என்று கேட்டால், தாராளமாப் பண்ணலாம் சுவாமி! நரசிம்மப் பெருமாளை சேவித்துக் கொண்டே பண்ணிக் கொள்ளலாம். அவர்தான் பொருந்தாததை, உடனே பொருத்தி விட்டுவிடுகிறார் அல்லவா!


இரண்டு விஷயங்கள் பொருந்தவில்லையே என்று கவலையே பட வேண்டாம். உடனே, நரசிம்ம ஸ்வாமியிடம் போய் வேண்டிக் கொண்டால் பொருந்திவிடும். “ஸ்வாமி... தேவரீர்தான் பொருந்தாததைப் பொருத்தியவர். எங்களுக்கும் என்ன பொருத்தம் என்று புரியவில்லை. நீர்தான் பொருத்தி வைக்க வேண்டும். நீர்தான் ரக்ஷிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டால், அவர் பொருத்திவிட்டுப் போகிறார்.


கோபத்தையும் பிரசாதத்தையுமே பொருத்திய நரசிம்மருக்கு, ஒரு ஆணையும் பெண்ணையும் பொருத்துவதா கஷ்டம்! அது பெரிதா என்ன?


மேலும் அவர் காட்டுகிறார். இத்தனை கோபத்துடன் நான் இருக்கிறேன். பிராட்டியைப் பார்! நேர் எதிர்!


முதலில் அவர்கள் இருவருக்குள் எப்படி ஒத்துப்போயிற்று என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நமக்கு ஒத்துப்போகிறதா, ஒத்துப் போகிறதா? என்று பார்க்கிறோமே தவிர, கருணையே வடிவெடுத்தவள் அவள், கோபமே வடிவெடுத்தவர் இவர்! இவர்கள் இரண்டு பேருக்கும் எப்படி ஒத்துப்போகிறது என்று கேட்டீர்களானால், அவளுடைய தாக்கம்... பாதிப்பு அதிகம் இவரிடத்தே! எப்படி என்ற கேட்கிறீர்களா?


(வைபவம் தொடரும்)


நன்றி - தீபம் நவம்பர் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக