ஶ்ரீமத் பாகவதம் - 157

ஏழாவது ஸ்கந்தம் - நான்காவது அத்தியாயம்

(ஹிரண்யகசிபு வரங்களைப் பெற்று, லோக பாலர்களையெல்லாம் வென்று, விஷ்ணு  த்வேஷத்தினால் (வெறுப்பினால், பகைமையினால்) அவர்களைப் பீடித்தல்)

நாரதர் சொல்லுகிறார்:- இவ்வாறு ஹிரண்யகசிபுவால் வேண்டப்பெற்ற ப்ரஹ்மதேவன், அவனுடைய தவத்தினால் ஸந்தோஷித்து, எவர்க்கும் கிடைக்க முடியாத அவ்வரங்களையெல்லாம் அவனுக்குக் கொடுத்தான். அந்த அன்னவாஹனன் அவ்வஸுரனை நோக்கி  “அப்பனே! நீ என்னிடத்தில் வேண்டுகிற இவ்வரங்கள் எப்படிப்பட்ட புருஷர்களுக்கும் கிடைக்கக் கூடாதவை. ஆயினும், இவ்வரங்களை உனக்குக் கொடுக்கிறேன்” என்று மொழிந்து, அஸுர ச்ரேஷ்டனாகிய அவனால் பூஜிக்கப்பட்டு, ப்ருகு, தக்ஷர் முதலிய ப்ரஜாபதிகள் துதித்துக்கொண்டு பின்தொடர, போய்ச் சேர்ந்தான். ஹிரண்யகசிபு இவ்வாறு ப்ரஹ்ம தேவனிடம் வரம் பெற்று, ஸ்வர்ணம் போன்ற தேஹமுடையவனாகி, தன் ப்ராதாவான ஹிரண்யாக்ஷனைக் கொன்றதை நினைத்துப் பகவானிடத்தில் த்வேஷம் (பகைமை) செய்தான். அம்மஹாஸுரன், மூன்று லோகங்களையும், எல்லாத்திக்குகளையும், தேவர், அஸுரர், மனுஷ்யச்ரேஷ்டர்கள், கந்தர்வர், கருடர், உரகர், ஸித்தர், சாரணர், வித்யாதரர், ரிஷிகள், பித்ருக்கள், முனிவர், யக்ஷர், ராக்ஷஸர், பிசாசர், ப்ரேதர், பூதபதிகள் இவர்களையும் மற்றும் பூதங்களில் எவ்வெவை சிறப்புடையவைகளோ அவற்றையும் ஜயித்து வசப்படுத்திக் கொண்டு, ஜகத்தையெல்லாம் வென்றவனானான். 

அவன், இந்த்ரன் முதலிய லோகபாலர்களின் தேஜஸ்ஸையும்  அவர்களது ஸ்தானங்களையும் பறித்தான். நந்தன தேவ உத்யானத்தையும் (தோட்டத்தையும்) கைப்பற்றினான். எல்லா ஸம்ருத்திகளும் அமைந்த ஸ்வர்க்கலோகத்தில், விச்வகர்மாவால் நேரே நிர்மிக்கப்பட்டதும், மூன்று லோகத்து ஐச்வர்யங்களும் அமைந்திருப்பதுமான, இந்த்ரனுடைய பவனத்தில் வாஸம் செய்தான். அவ்விந்த்ர பவனத்தில் படிக்கட்டுகள் பவழங்களால் இயற்றப் பெற்றிருக்கும். தரையெல்லாம் இந்த்ர நீல ரத்னங்கள் பதித்திருக்கும். சுவர்கள், ஸ்படிக, ரத்ன மயமாயிருக்கும். கம்பங்களெல்லாம், வைடூர்ய மணிகளால் ஏற்பட்டிருக்கும். மற்றும், அவ்விடத்தில் அற்புதமான மேற்கட்டுகளும், பத்மராக ரத்னமயமான ஆஸனங்களும், பால் நுரைபோல் வெளுத்து முத்துச்சரங்கள் தொங்கவிடப்பெற்ற மெத்தென்னும் பஞ்ச சயனங்களும் அமைந்திருக்கும். அங்கு, அழகான பற்களுடைய தெய்வ மடந்தையர்கள் ஒலிக்கின்ற சிலம்பு தண்டைகளால் ஆங்காங்கு சப்தம் செய்துகொண்டு உலாவி ரத்ன மயமான ஸ்தம்பங்களில் அழகிய தங்கள் முகங்களைப் பார்த்துக் கொள்வார்கள். மஹாபலிஷ்டனும், நினைத்தபடி நடத்தும்படியான மன உறுதியுடையவனும், உலகங்களையெல்லாம் ஜயித்துத் தானொருவனே அரசனாயிருப்பவனும், எவராலும் கடக்க முடியாத ஆஜ்ஞை (கட்டளை, ஆனை) உடையவனுமாகிய அந்த ஹிரண்யகசிபு, தன்னால் பீடிக்கப்பட்ட தேவாதிகளால் வந்தனம் செய்யப்பெற்ற பாதங்களுடையவனாகித் தேவேந்த்ரபவனத்தில் வாஸம் செய்து கொண்டு மனக்களிப்புற்றிருந்தான் (இன்புற்றிருந்தான்). 

ஓ யுதிஷ்டிரனே! கொடிய நாற்றமுடைய (துர்நாற்றமுடைய) மத்யத்தினால் (கள்ளினால்) மதித்து (மயங்கி), கண்கள் சிவந்து சுழலப் பெற்று, தவமஹிமை, தேஹபலம், இந்த்ரிய பலம் இவை அமைந்த அவ்வஸுரச்ரேஷ்டனை ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்களாகிய மூவர் தவிர மற்ற அனைவரும் கையில் உபஹாரங்களைக் கொண்டு பணிந்தார்கள். பாண்டுவின் புதல்வனே! தன் பலத்தினால், மஹேந்த்ரனுடைய ஸிம்ஹாஸனத்தைக் கைப்பற்றி, அதன் மேல் உட்கார்ந்திருக்கின்ற அவ்வஸுரனை, விச்வாவஸுவும், தும்புருவும், என்னை முதலாகவுடைய மற்றவர்களும், கந்தர்வர்களும், ஸித்தர்களும், ரிஷிகளும், வித்யாதாரர்களும், அப்ஸரஸ்த்ரீகளும் அடிக்கடி பாடிக்கொண்டிருந்தார்கள். வர்ணாச்ரம தர்மங்களில் நிலைநின்றிருக்கின்ற ப்ராஹ்மணர் முதலிய அனைவரும் தக்ஷிணைகள் (யாகத்தில் கொடுக்கப்படும் காணிக்கை) ஸம்ருத்தமாயிருக்கப் பெற்ற யாகங்களால் அவனையே ஆராதித்தார்கள். அவனும், தன்னுடைய தேஜஸ்ஸினால் ஹவிர்ப்பாகங்களைப் பெற்றான். அவனால் ஆளப்பெற்ற ஏழு தீவுகளோடு கூடின இப்பூமண்டலம், முழுவதும் உழுது பயிரிடாமல் தானே பலன்களை விளைத்துக்கொண்டிருந்தது. ஸ்வர்க்கமும் அவன் விரும்பினதையெல்லாம் கறந்தது. ஆகாயமும், பல வகை ஆச்சர்யமான வஸ்துக்களைக் கொடுத்தது. 

லவண ஸமுத்ரம், ஸுராஸமுத்ரம், க்ருதஸமுத்ரம், இக்ஷ ஸமுத்ரம், ததிஸமுத்ரம், க்ஷீரஸமுத்ரம், சுத்தஸமுத்ரம் ஆகிய ஏழு ஸமுத்ரங்களும் அவற்றின் பத்னிகளான கங்காதி நதிகளும், அலைகளால் ரத்னங்களைக் கொழித்தன. பர்வதங்களெல்லாம் அவன் விளையாடுவதற்கு உரிதாய் இருக்குமாறு குஹைகளில், எல்லா ருதுக்களிலும் உள்ள பூ, காய் பழம் முதலியவை அமைந்த வ்ருக்ஷங்களைத் தரித்தன. இந்த்ராதி லோகபாலர்கள் ஆண்டபொழுது அந்தந்த ருதுக்களுக்குரிய குணங்களையே தரித்தன. இவன் ஆளும்பொழுது, அந்த நியதியே இல்லாமற் போயிற்று. இந்த்ரன் முதலிய ஸமஸ்த லோகபாலர்களுடைய அதிகாரத்தை, அவனொருவனே நடத்திக்கொண்டு வந்தான். இவ்வாறு, திசைகளையெல்லாம் வென்ற அவ்வஸுரன், தானொருவனே ராஜனாகி, ப்ரீதியின்படி, இஷ்டமான விஷயங்களை அனுபவித்துக்கொண்டிருந்தும், இந்திரியங்களை வெல்ல முடியாமல் த்ருப்தி அடையாதிருந்தான். ஸனகாதிகளின் சாபத்தினால் அஸுரஜன்மம் பெற்ற அந்த ஹிரண்யகசிபு, இவ்வாறு ஐச்வர்யத்தினால் மதித்துக் (கர்வப்பட்டு) கொழுத்து, சாஸ்த்ரமார்க்கத்தைக் கடந்து நடந்து கொண்டிருக்கையில் வெகு காலம் கழிந்தது. அவ்வஸுரனுடைய கொடிய தண்டனைக்குப் பயந்த லோகபாலர்கள் அனைவரும், வேறு சரணம் நேரப்பெறாமல் பகவானையே சரணம் அடைந்தார்கள்.  

“ஸர்வநியாமகனும் (எல்லோரையும், எல்லாவற்றையும் நியமிப்பவனும்) தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்குத் தன்மையுடையனுமாகிய பகவான் எந்தத் திசையில் இருக்கிறானோ, ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்களற்றுப் பரிசுத்தமான மனமுடைய ஸந்யாஸிகள் எந்தத் திசையில் சென்று மீளவும் திரும்பி வருகிறதில்லையோ, அத்தகைய திக்குக்கு நமஸ்காரம்” என்று அத்தேவர்கள் பகவான் பாதுகாப்பானென்னும் விச்வாஸமுடையவராகி, புத்தி ஸமாதானம் பெற்று வாயுவையே ஆஹாரமாகக் கொண்டு உறக்கமின்றி,  “ஓம். நீ ஷாட்குண்ய பூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); ஸர்வாந்தராத்மா; மிகுந்த மன இரக்கமுடையவன்; பரிசுத்த ஜ்ஞானாநந்த ஸ்வரூபன். உன்னை அடைந்தவர்களுக்கு, ஸம்ஸார (இவ்வுலக துன்பமாகிற) பயம் (அச்சம்) நீங்கி, நிர்பயமான (அச்சமற்ற)  மோக்ஷம் உண்டாகின்றது. உனக்கு நமஸ்காரம்” என்று ஹ்ருஷீகேசனை ஸ்தோத்ரம் செய்தார்கள். 

அப்பொழுது, மேகத்வனி (மேகம் இடிக்கும் ஒலி) போலத் திசைகளையெல்லாம் ஒலிப்பித்துக்கொண்டு, ஸாதுக்களுக்கு அபயத்தை விளைப்பதான, ஒரு அசரீரி வாக்கு உண்டாயிற்று. “ஓ தேவ ச்ரேஷ்டர்களே! நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களெல்லோர்க்கும் க்ஷேமமே உண்டாகும். என் காட்சி ப்ராணிகளுக்கு நன்மையை விளைக்குமேயன்றி வீணாகாது. அஸுர அதமனான (அஸுரர்களில் கொடியவனான) அந்த ஹிரண்யகசிபுவின் துஷ்டத்தனம் எனக்குத் தெரியும். அவனை நான் வதிக்கப்போகிறேன். சில காலம் பொறுத்துக்கொண்டிருப்பீர்களாக; எப்பொழுது அவனுக்கு தேவதைகளிடத்திலும், வேதங்களிடத்திலும், பசுக்களிடத்திலும், ஸாதுக்களான ப்ராஹ்மணர்களிடத்திலும், தர்மத்திலும், என்னிடத்திலும் த்வேஷம் (வெறுப்பு, பகைமை) உண்டாயிற்றோ, அப்பொழுதே அவன் சீக்ரத்தில் நசித்துப் போக வேண்டியது நிச்சயமாய் விட்டது. அவன், தன் பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு எப்பொழுது த்ரோஹம் (கெடுதி) செய்வானோ, அப்பொழுது ப்ரஹ்மாவின் வரங்களால் உறுதி பெற்றவனாயினும், அவனை நான் வதிக்கப் போகிறேன். அந்த ப்ரஹ்லாதன், அந்தராத்மாவான என்னிடத்தில் நிலைநின்ற மதி(புத்தி) உடையவன்; ஸம்ஸ்த ப்ராணிகளிடத்திலும் நட்புடையவன்; ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய தோஷங்களற்றவன். ஆகையால், அத்தகைய ப்ரஹ்லாதனிடத்தில் த்ரோஹம் (கெடுதி) செய்வானாயின், அவனை நான் பொறுக்க மாட்டேன். உடனே வதிக்கப்போகிறேன்”. 

நாரதர் கூறுகிறார்:- இவ்வாறு தேவதைகள் பகவானால் மொழியப்பெற்று, அவனுக்கு நமஸ்காரம் செய்து, மனக்கவலை தீர்ந்து, இனி அஸுரன் முடிந்தானென்று நினைத்து, திரும்பிப்போனார்கள். பின்பு தைத்ய ராஜனான அந்த ஹிரண்யகசிபுவுக்கு, மிகவும் அற்புதமான நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். ப்ரஹ்லாதன், அனுஹ்லாதன், ஸம்ஹ்லாதன், ஆஹ்லாதனென்று அவர்களுக்குப் பெயர். அவர்களில் ப்ரஹ்லாதன் கோபமில்லாமை முதலிய நற்குணங்களால் சிறந்திருந்தான். அவன் பெரியோர்களைப் பணியும் தன்மையுடையவன்; ப்ராஹ்மண குலத்திற்கு அனுகூலன் (ஆதரவானவன்); சீலமுடையவன் (நற்குணமுடையவன்), ஸத்யஸந்தன் (உண்மை பேசுபவன்); ஜிதேந்த்ரியன் (இந்த்ரியங்களை வென்றவன்); ஸமஸ்த ப்ராணிகளையும் தன்னைப்போல் மிகுந்த ப்ரீதியோடு பாராட்டும் தன்மையன்; அவர்களுக்கு ஹிதத்தையே (நன்மையையே) தேடுந்தன்மையன். அவன், பெரியோர்களின் பாதங்களைத் தாஸன் போலப் பணிவான். தீனர்களிடத்தில் (ஏழை, எளியவர்கள், புகலற்றவர்களிடத்தில்) தந்தையைப் போல வாத்ஸல்யமுடையவன். தன்னோடொத்தவர்களிடத்தில், ப்ராதாவைப் (சஹோதரனைப்) போல ஸ்நேஹம் (நட்பு, அன்பு) உடையவன். குருக்களை, ஈச்வரனைப் போலப் பாவிப்பான். கல்வி, பணம், அழகு, நற்குலப்பிறவி இவைகளாலும், மற்றும் பல காரணங்களாலும், உண்டாகக்கூடிய கர்வம், தம்பம் (வஞ்சனை, ஏமாற்றுதல்) இவை தீண்டப்பெறாதவன். துக்க நிமித்தங்கள் பல உண்டாயிருப்பினும், அவற்றைப் பற்றிச் சிறிதும் பயப்படமாட்டான். இஹ (இந்த உலக), பர லோகங்களிலுள்ள (ஸ்வர்கம் போன்ற வேறு உலகங்களிலுள்ள) எல்லா விஷயங்களும் அநித்யமென்று (அழியக்கூடியவை என்று) நினைத்து அவற்றில் விருப்பமற்றவன். இந்திரியங்கள், ப்ராணன்கள், சரீரம், புத்தி இவற்றை எப்பொழுதும் அடக்கிக் கொண்டிருப்பவன்; காமமற்றவன்; தான் அஸுரகுலத்தில் பிறந்தவனாயினும், அஸுர ஸ்வபாவங்கள் எவையும் தீண்டப் பெறாதவன்.  ராஜனே! ப்ரஹ்லாதனிடத்தில், நான் சொன்ன இக்குணங்களும் மற்றும் பல நற்குணங்களும் இருந்ததாகப் பண்டிதர்களால் அடிக்கடி கொண்டாடப்படுகின்றன. இப்பொழுதும், பண்டிதர்கள் பகவானுடைய குணங்களைப் போல, அவன் குணங்களை மறவாதிருக்கிறார்கள். 

மன்னவனே! ஸாதுக்களின் ப்ரஸ்தாவமுள்ள (நல்லோர்களைப் போற்றும்) ஸபையில், சத்ருக்களுங்கூட இந்த ப்ரஹ்லாதனை உபமானமாக (உதாரணமாக) எடுத்துக் கொள்கிறார்கள். உன்னைப் போன்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? நான், அவனுடைய குணங்கள் கணக்கிட முடியாதவையென்று அவன் மஹிமையை மாத்ரம் சொல்லுகிறேனேயன்றி, அவன் குணங்களையெல்லாம் என்னால் சொல்ல முடியாது. அவன், வாஸுதேவனிடத்தில் ஜன்மஸித்தமான (பிறவியிலேயே ஏற்பட்ட) பக்தியுடையவன். இவன், பால்யம் முதற்கொண்டே பகவானிடத்தில் நிலைநின்ற மனமுடையவனாகையால், சிறுவர்களுக்கு இயற்கையில் ஏற்பட்ட விளையாடல்களைத் துறந்து, க்ரஹத்தினால் பிடியுண்டவன் போல், ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் பக்தியால் மனங்கலங்கி, உலக வ்ருத்தாந்தத்தைப் பற்றின சிந்தை சிறிதும் இல்லாதிருந்தான். இவன் பகவானுடைய சிந்தையால், தேஹ தர்மங்களை மறந்து, இருத்தல், திரிதல், புசித்தல், படுத்தல், பருகுதல், பேசுதல் முதலிய செயல்களைச் செய்து கொண்டிருப்பினும், அவற்றை நினையாமலேயிருந்தான். பகவானைப் பற்றின சிந்தையால் மனங்கலங்கி, ஒருகால் பகவானுடைய சிந்தையால் ஆனந்தம் அடைந்து, அவன் குணங்களை உரக்கப் பாடுவதும், ஒருகால் ஸந்தோஷத்தின் மிகுதியால் கர்ஜிப்பதும், ஒரு கால் வெட்கமின்றிக் கூத்தாடுவதும், ஒருகால் தன்னைப் பகவானாகவே பாவித்து அவனுடைய செயல்களை அபிநயிப்பதுமாய் (நடிப்பவனுமாய்) இருந்தான். ஒருகால் இடைவிடாத த்யானத்தினால் ஸந்தோஷம் அடைந்து, நிலைநின்ற ஸ்நேஹத்தினால் (அன்பினால்) ஆனந்த நீர்களைப் பெருக்கி, கண்களை மூடிக்கொண்டு, உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகப் பெற்று பேசாதிருந்தான். அந்த ப்ரஹ்லாதன், ஒரு ப்ரயோஜனத்தையும் எதிர்பாராத ஸ்நேஹத்தினால் (அன்பினால்), பகவானுடைய பாதாரவிந்தங்களின் ஸேவை நேரப்பெற்று, அதனால் அடிக்கடி மஹானந்தத்தை அடைந்து, சப்தாதி விஷயங்களின் பற்றினால் வருந்தக்கூடிய மனத்தை ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்களின்றிப் பரிசுத்தமாயிருக்கச் செய்தான். மன்னவனே! அவன் பாகவதர்களில் சிறந்து, மஹா விவேகியாயிருந்தான். அவனுடைய மஹிமைகளைச் சொல்லி முடியாது. ஹிரண்யகசிபு, இத்தகையனான தன் பிள்ளையினிடத்தில் த்ரோஹம் (கெடுதி) செய்தான்.

யுதிஷ்டிரன் சொல்லுகிறான்:- ஓ தேவரிஷி! நிரபராதியும், ஸாதுவுமான தன் பிள்ளைக்குத் தந்தையான ஹிரண்யகசிபு த்ரோஹம் (கெடுதி) செய்தானென்றீர். அதை அறிய விரும்புகிறோம். பிள்ளைகள் சொன்னபடி கேளாமல் ப்ரதிகூலர்களாய் (எதிரிடையாய், விரோதமாய்) இருந்தாலும், தந்தைகள் அவர்களிடத்தில் வாத்ஸல்யமுடையவராகி, நல்வழியில் படிவதற்காக விரட்டுவார்களேயன்றி, சத்ருக்களைப் போல த்ரோஹம் (கெடுதி) செய்யமாட்டார்கள். இன்னும், அனுகூலர்களும் (ஆதரவாயும், இசைந்தவராயும்) ஸாதுக்களுமாகித் தந்தையே தெய்வமென்று பாவித்திருப்பார்களாயின், அவர்களிடத்தில் தந்தைகள் த்ரோஹம் (கெடுதி) செய்யமாட்டார்களென்பதைப் பற்றி சொல்ல வேண்டுமோ? ப்ரஹ்மரிஷி! தந்தை பிள்ளையிடத்தில் வைத்த த்வேஷம் (வெறுப்பு, பகைமை), தன் மரணத்திற்கு எப்படிக் காரணமாயிற்றென்பதைக் கேட்க வேண்டுமென்று எங்களுக்குப் பெரிய குதூஹலமாயிருக்கின்றது. அதைப் போக்குவீராக. 

நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை