வெள்ளி, 17 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 19 - திருப்பூர் கிருஷ்ணன்

பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா!

பண்டரிபுரத்தில் விட்டலனது சந்நிதியில் தம்மை மறந்து பாண்டுரங்கனையே பார்த்துக் கொண்டிருந்தார் நாமதேவர். அந்தக் கிருஷ்ண விக்ரகத்தின் எழிலில் மனம் பறிகொடுத்து நின்றார். 

அவருக்கு சுமார் இருபத்தைந்து வயதிருக்கலாம்! ஆனால், இந்தச் சிறிய வயதிற்குள் கண்ணன் மேல் எத்தனை பக்தி! 

ஊரும் உலகமும் அவரைப் புகழ்ந்தது. ஆனால், அந்தப் புகழ்ச்சியே அவர் மனதில் நம்மை மிஞ்சிய பக்தன் யாருமில்லை என்ற கர்வத்தைத் தந்துவிட்டது. "கர்வம்" என்ற அந்த உணர்வை மட்டும் விட்டுவிட்டுப் பார்த்தால், உண்மையிலேயே நாமதேவருக்கு இணையான பக்தர் இல்லைதான்! 

பாண்டுரங்கன் அவரை எப்படித் திருத்துவது என்று சிந்தித்தவாறு அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். இறைசக்தி கிருஷ்ணரைத் தவிர வேறு வடிவத்தில் கிடையாது என்று நினைக்கிறார் அவர். அவ்விதம் நினைத்தால் அது, பல வடிவங்கள் எடுக்கக்கூடிய இறையாற்றலை ஒப்புக் கொள்ளாததாக அல்லவா ஆகும்! 

பண்டரிபுரத்தைத் தவிர வேறு திருத்தலமே கிடையாது என்றும் திடமாகக் கருத்து வைத்திருக்கிறார். அதுவும் சரியல்லவே! உலகெங்கும் பரந்துள்ள கடவுள் சக்தி, ஒரே ஊரில் மட்டுமே கட்டுண்டு கிடப்பதாக நினைப்பதும் மூடத்தனம் தான் அல்லவா!

நாமதேவரின் சமகாலத்தில் வாழ்ந்த இன்னொரு பக்தரான ஞானதேவர் அன்று பண்டரிபுரம் வந்திருந்தார். முக்தா என்ற சகோதரியும், நிவ்ருத்தி, ஸோபானர் ஆகிய இரு சகோதரர்களுமாக அவர்கள் மொத்தம் நான்குபேர். நால்வரும் இறைபக்தியில் தோய்ந்த உயர்நிலை அடியவர்கள். எல்லாருமே இருபத்தைந்து வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள். ஞானதேவர் தம் தூய்மையை நிரூபிப்பதற்காக ஒருமுறை எருமையைப் பேசவைத்த பெருமைக்குரியவர்.

நாமதேவர், ஞானதேவர் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் சந்தித்துக் கொள்வது அதுதான் முதல்முறை. ஞானதேவரைவிட, சற்று வயதில் மூத்தவரான நாமதேவரைத் தன் சகோதரர்களோடும் சகோதரியோடும் தேடிச்சென்று வணங்கினார் ஞானதேவர். 

நாமதேவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. பேசாமல் நின்றுவிட்டார். 

"என்னதான் கிருஷ்ண பக்தர் என்றாலும் தம்மைவிட வயதில் குறைந்தவரை வணங்குவதாவது! இவர்கள் நால்வரும் பல தலங்களுக்கு யாத்திரை போய்விட்டு வந்திருக்கலாம். இருக்கட்டுமே! எல்லாத் தலத்தையும் விட உயர்ந்த தலம் பண்டரிபுரம் அல்லவா? நான் இங்கே பற்பல ஆண்டுகளாக வசிக்கிறேனே! என் பாண்டுரங்கனை மனமார வழிபடுகிறேனே? என் கிருஷ்ணன் எனக்கு நேரில் காட்சி தருகிறான் என்ற விஷயம் இவர்களுக்குத் தெரியுமோ இல்லையோ? பண்டரிபுரத்தில் உள்ள கிருஷ்ணனை பக்திசெய்யும் பக்தர்களுக்கு இணையானவர்கள் உலகில் வேறு யார் உண்டு?" ஆணவத்தால் நாமதேவரின் தலை சற்று நிமிர்ந்தது.

நாமதேவரை வணங்கிய ஞானதேவர் தம் உடன் பிறந்தவர்களையும் வணங்கச் சொன்னார். அவரது சகோதரர்கள் இருவரும் வணங்கினார்கள். ஆனால், சகோதரி முக்தா வணங்கவில்லை. அவள் குறும்பு கொப்பளிக்கும் விழிகளோடு நாமதேவரைப் பார்த்தவாறிருந்தாள். நாமதேவரின் உள்ளத்தில் ஓடும் ஆணவம் மிக்க சிந்தனைகளை அவளது உள்மனம் புரிந்து கொண்டுவிட்டது. 

"அண்ணா! சந்தன மரத்தை விஷச்செடி சுற்றிக் கொண்டிருந்தால் அது சந்தன மரமே என்றாலும் பயன்படுமா? நாமதேவர் என்ற சந்தன மரத்தை கர்வம் என்ற விஷச் செடி சுற்றிக் கொண்டிருக்கிறது. நான் இவரை வணங்கினால் அந்த விஷச்செடியையும் சேர்த்து வணங்கியதாக ஆகும். விஷச்செடிக்கு என்றும் நான் வணக்கம் தெரிவிக்க மாட்டேன்."

அந்தப் பெண்ணின் துடுக்கான பேச்சு நாமதேவர் மனத்தில் சுருக்கென்று தைத்தது. அவர் பேசாதிருந்தார். ஆனால், ஞானதேவர் தன் தங்கையிடம் அறிவுறுத்தலானார்.

"முக்தா! நம்மைவிடச் சற்று வயது கூடியவர் அவர். மூத்தவர்களை அவர்களது வயதிற்காக வணங்குவதுதானே பண்பாடு?''

"இருக்கலாம். ஆனால், பக்தியுலகில் வயது கணக்கில் வருவதில்லை. பக்தியின் ஆழம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்படும். பக்தி என்ற பாற்குடத்தில் ஒருதுளி ஆணவம் என்ற விஷம் கலந்தாலும் பால் பயன்படாது. அண்ணா! இவர் பக்தர் தான். அந்த மரியாதை இவரிடம் எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இவர் இன்னும் பக்குவம் அடையவில்லை. பக்குவத்தைச் சோதித்துப் பார்க்கக் கோராகும்பரைத் தான் அழைக்கவேண்டும். கோராகும்பரே! எங்கிருக்கிறீர்கள்? இங்கே சற்று வாருங்களேன்''.

கோராகும்பர் பண்டரிநாதர் மேல் பக்திகொண்ட இன்னொரு பரமபக்தர். குயவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் முக்தாவின் அழைப்பைக் கேட்டு ஓடிவந்தார். முக்தா பேசலானாள்:

"கோராகும்பரே! இங்கே நாங்கள் நால்வரும், நாமதேவரும் சேர்த்து மொத்தம் ஐவர் இருக்கிறோம். எங்களின் மூளை என்கிற பானையில் எந்தப் பானை பக்குவமில்லாததால் உடையக்கூடியது என்று கொஞ்சம் தட்டிப் பார்த்துச் சொல்லுங்கள்!''

கோராகும்பர் தன் கைகளால் ஒவ்வொருவர் தலையையும் தட்டிப் பார்த்தார். நாமதேவரின் தலையைத் தட்டியபோது, அதன் உள்ளிருந்த ஆணவம் "ணங்" கென்று ஒலி எழுப்பியது!

"நாமதேவரின் மூளையைக் கொஞ்சம் வாழ்க்கை என்கிற சூளையில் வைத்து எடுக்க வேண்டும். அது இன்னும் சரியாக வேகவில்லை.''

"எதிர்காலத்திலேனும் அது வேகுமா? பயன்படுமா?''

"சொல்ல முடியாது. கிருஷ்ணன் அருளிருந்தால் வேகலாம். இல்லாவிட்டால் கட்டை வேகும்வரை அது வேகாமலும் போகலாம்!''

சொல்லியவாறே கோராகும்பர் பண்டரிநாதனது நாமங்களை உச்சரித்தவாறு விடைபெற்றுச் சென்றார். ஞானதேவரும் அவரது சகோதர சகோதரிகளும் கூட கிருஷ்ணரது திருநாமங்களை இசைத்தவாறு அடுத்த திருத்தலத்தைத் தரிசிப்பதற்காக, அந்த இடத்தை விட்டு அகன்றார்கள். நாமதேவர் மட்டும் அதே இடத்தில் நெருப்பின் மேல் நிற்பதுபோல் நின்று கொண்டிருந்தார். அவர் நெஞ்சம் சூடாகியிருந்தது. 

"ஞானதேவர் உள்ளிட்ட நால்வரும் சரி... கோராகும்பரும் சரி... உலகத்தினர் போற்றும் உன்னத பக்தர்கள் அல்லவா? அவர்கள் என்னைச் சரிவர மதிக்கவில்லையே? கண்ணனையே நேரில்கண்ட என் பக்திக்கு இதுதானா மரியாதை? இதைப் பற்றிக் கண்ணனிடமே கேட்டுவிட வேண்டும்".

நாமதேவர் கண்ணீருடன் பண்டரிநாதன் முன் போய் நின்றார்.

"கிருஷ்ணா! எனக்குப் பதில்சொல்!'' என்று உரிமையோடு கேட்டார்.

இடுப்பில் கை வைத்தவாறு செங்கல் மேல் நின்றிருந்த கிருஷ்ணன் செங்கல்லை விட்டு இறங்கினான். நாமதேவரின் கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்தான். பின் அருள்பொங்கப் பேசலானான்:

"நாமதேவரே! ஞானதேவர் உள்ளிட்ட நால்வரும் கோராகும்பரும் என்னை உள்ளது உள்ளவாறு அறிந்தவர்கள். எல்லாத் திருத்தலங்களிலும் சிவன் உள்ளிட்ட எல்லா வடிவங்களிலும் இருப்பது நான்தான் என்பதை உணர்ந்தவர்கள். ஆனால், நீ என்னை நேரில் கண்டு பேசினாலும் என்னுடைய இந்தக் கிருஷ்ண வடிவம் தவிர இறைசக்திக்கு வேறுவடிவமே இல்லை என்றும், பண்டரிபுரம் என்ற திருத்தலம் தவிர வேறெங்கும் இறைவனைக் காணமுடியாது என்றும் நினைக்கிறாய். கோராகும்பர் சொன்னது சரிதான். நீ இன்னும் பக்குவம் அடையவேண்டும். விசோபாகேசர் என்ற மகானிடம் போய் சீடனாகச் சேர். நான் எங்கும் பரந்திருப்பவன் என்பதையும் நான் இல்லாத இடமே இல்லை என்பதையும் பண்டரிபுரம் நான் இருக்கும் இடங்களில் ஒன்றுதானே தவிர, அதுமட்டுமே நான் இருக்கும் இடம் அல்ல என்பதையும் புரிந்துகொள்வாய். அதோடு எனக்கு இந்தக் கிருஷ்ண வடிவம் மட்டுமல்ல, அந்தந்த ஜாதி மத சம்பிரதாயங்களுக்கு ஏற்றவாறு இன்னும் பற்பல வடிவங்கள் உண்டு என்பதையும் உணர்வாய்!'' சொல்லிவிட்டுக் கண்ணன் மறைந்தான். விசோபாகேசரைத் தேடிச் சென்றார் நாமதேவர். 

அந்த அடியவர் ஒரு சிவன் கோயிலில் உறங்கிக் கொண்டிருந்தார். உறங்குகிறாரா அல்லது பாவனையா? மெல்ல அருகே சென்று பார்த்தார் நாமதேவர். "என்ன அபசாரம் இது?" அவரது கால்கள் சிவ லிங்கத்தின் மேல் கிடந்தன. 

"ஆகா! சிவனும் தனது வடிவம் தான் என்றல்லவா கண்ணன் கூறினான்? சிவ லிங்கத்தின்மேல் கால் படுதல் சரியல்லவே?" நாமதேவர் மெல்ல அந்தக் கால்களைப் பற்றிக் கீழே வைத்தார். அப்படி அவர் வைத்த மறுகணம் அங்கே புதிதாய் ஒரு சிவ லிங்கம் தோன்றியது. அதன் மீது விசோபாகேசரின் கால்கள் விழுந்தன. 

அடடா! நாமதேவர் அந்தக் கால்களை மறுபடியும் எடுத்து வேறிடத்தில் வைக்க முனைந்தார். கால்வைத்த இடமெல்லாம் கால்களின் கீழே சிவ லிங்கங்கள் முளைக்கலாயின. நாமதேவர் மாற்றி மாற்றி அவரது கால்களை எடுத்துவைத்துக் கைசோர்ந்து போனார். திகைத்தவாறு சுற்றிலும் பார்த்தார். எங்கும் சிவ லிங்கங்கள். 

நகைத்தவாறே எழுந்து உட்கார்ந்தார் விசோபாகேசர். 

"கிருஷ்ணனால் என்னிடம் அனுப்பப்பட்ட சீடனே! உண்மை விளங்கியதா?'' என்று கேட்டார். 

"கிருஷ்ணன் எங்கும் இருக்கிறான், அவன் எல்லா வடிவங்களிலும் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டேன் குருவே!'' என்று சொல்லி நாமதேவர் அவர் கால்களில் விழுந்து வணங்கியபோது, கடவுள் தத்துவம் குறித்த ஒரு பேருண்மையைத் தெரிந்து கொண்ட நிறைவில் அவர் விழிகளில் கண்ணீர் பெருகியது. 

நன்றி - தினமலர் செப்டம்பர் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக