சனி, 18 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 158

ஏழாவது ஸ்கந்தம் -  ஐந்தாவது அத்தியாயம்

(ஹிரண்யகசிபு தன் பிள்ளையான ப்ரஹ்லாதனுடைய விஷ்ணு பக்தியைக் கண்டு அவனை வதிக்கப் பார்த்தல்)

நாரதர் சொல்லுகிறார்:- அஸுரர்கள், ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்த சுக்ராசார்யரை, தமக்குப் புரோஹிதத்தொழில் செய்யும்படி ஏற்படுத்திக்கொண்டிருப்பது யாவர்க்கும் தெரிந்தவிஷயம். அந்தப்படிக்கு, அச்சுக்ராசார்யருடைய பிள்ளைகளான சண்டன், அமர்க்கனென்ற இருவர்கள் அஸுர ராஜனான ஹிரண்யகசிபுவின் க்ருஹத்தில், புரோஹிதத்தொழில் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வஸுரராஜன், தங்களிடம் படிக்கும்படி கொண்டுவிட்ட ப்ரஹ்லாதனுக்கும், மற்ற அஸுரப் பிள்ளைகளுக்கும், அவர்கள் நீதி முதலியவற்றைப் படிப்பித்துக்கொண்டு வந்தார்கள். அப்படியிருக்கையில், அந்த ப்ரஹ்லாதன் குரு சொன்னதைக் கேட்டு, அப்படியே வாசித்தானேயன்றி, தன்னுடையவனென்றும், பிறனென்றும் வீண் அபிமானத்தை (எண்ணத்தை) விளைக்கும்படியான அவன் சொல்லை மனத்தில் நன்மையென்று நினைக்கவில்லை. 

பாண்டுவின் புதல்வனே! ஒரு நாள் அவ்வஸுரராஜன், தன் பிள்ளையை மடிமேல் உட்காரவைத்துக்கொண்டு  “அப்பா! குழந்தாய்! உனக்குக் குரு சொல்லிக் கொடுத்தவைகளில் எது நன்றென்று தோன்றுகிறதோ, அதைச் சொல்வாக” என்று வினவினான். 

ப்ரஹ்லாதன் கூறுகிறான்:- “ஓ அஸுரச்ரேஷ்டனே! இவ்வுலகத்தில், ப்ராணிகள் தேஹத்தை ஆத்மாவாகவும், தம்மை ஸ்வதந்த்ரராகவும் (தம் இஷ்டப்படி செயல்பட வல்லவர்களாகவும்) நினைத்து சப்தாதி விஷயங்களில் விருப்பமுற்று, அந்த வீண்பிடிவாதத்தினால் ஸர்வ காலமும் மனம் கலங்கப் பெற்றிருக்கிறார்கள். நரகத்தில் கொண்டு தள்ளுவதும், பாழுங்கிணறு போன்றதுமான, இல்லற வாழ்க்கையைத் துறந்து வனத்திற்குச் சென்று தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தைப் போக்கும் திறமையுள்ள பகவானைப் பற்றுவார்களாயின், அதுவே நன்மையென்று நான் நினைக்கிறேன்” என்றான். 

நாரதர் கூறுகிறார்:- ஹிரண்யகசிபு, தனக்குச் சத்ருவான விஷ்ணுவின் பக்ஷத்தில் நிலை நின்றிருக்கிற பிள்ளையின் வார்த்தையைக் கேட்டுச் சிரித்து, என் சத்ருவாகிய விஷ்ணுவினிடத்தில் மனம் சென்றவர் பாலர்களின் புத்தியைக் கலைக்கிறார்கள். குருவின் க்ருஹத்தில், விஷ்ணு பக்தர்களான ப்ராஹ்மணர்கள் மறைந்திருந்து, சிறுவனுடைய புத்தியைக் கலைக்கின்றார்கள். இது நிச்சயம். ஆகையால் இவன் புத்தி மாறாதிருக்குமாறு நன்கு விசாரித்துக் கொள்ளுங்கள் என்றான். பிறகு, தைத்ய புரோஹிதர்கள் ராஜ படர்களால் தங்கள் க்ருஹத்தில் கொண்டு விடப்பட்ட ப்ரஹ்லாதனை அழைத்து, அவனை நல்வார்த்தைகளால் புகழ்ந்து, இனிய உரையுடன் இவ்வாறு வினவினார்கள். 

“குழந்தாய்! ப்ரஹ்லாதா! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும். பொய்சொல்லாமல் உண்மையைச் சொல்வாயாக. உன்னோடு கூடப் படிக்கிற பிள்ளைகளில் ஒருவனுக்கும் இல்லாத இந்த விபரீத புத்தி, உனக்கு மாத்ரம் எங்கிருந்து உண்டாயிற்று? இப்புத்தியின் மாறுபாடு, உனக்குப் பிறரால் உண்டாயிற்றா? அல்லது, உனக்கே இயற்கையில் ஏற்பட்டிருக்கின்றதா? தைத்யவம்ச முக்தாமணி! உன் குருக்களாகிய நாங்கள் இதைக் கேட்க விரும்புகிறோம். இதை எங்களுக்குச் சொல்” என்றார்கள். 

ப்ரஹ்லாதன் கூறுகிறான்:- அதைக் கேட்ட ப்ரஹ்லாதன், அந்தக் குருக்களை நோக்கி “ப்ராணிகள், எவனுடைய மாயையால் மதி (புத்தி) மயங்கி (கலங்கி), தன்னுடையவனென்றும், பிறனென்றும் வீணான பேதம் (வேற்றுமை) பாராட்டுகின்றார்களோ, அப்படிப்பட்ட பகவானுக்கு நமஸ்காரம். புருஷர்கள் அந்தப் பகவானை அனுஸரிப்பார்களாயின், அவர்களுக்குத் தேஹாத்மாபிமானத்தினால் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணத்தினால்) உண்டாகிற “நான் வேறு, இவன் வேறு” என்னும் துர்ப்புத்தி (கெட்ட புத்தி) பறந்து போய்விடும். அப்புத்தியை, பசுபுத்தி (விலங்கு புத்தி) என்று சொல்வார்கள். இது ஸம்ஸாரமாகிற மஹானர்த்தத்தை (மிகப்பெரிய கெடுதியை) ஓயாமல் விளைக்கும். இத்தகைய துஷ்டபுத்தி (கெட்ட புத்தி), அப்பகவானைப் பணிகிறவர்களுக்கு உண்டாகாது. பரமாத்மாவான அப்பரமபுருஷனுக்கு, தன்னுடையவனென்றும், பிறனென்றும் பேதபுத்தி கிடையாது. பிறரால் வருந்தியும் செய்ய முடியாத எல்லாக்கார்யங்களையும், அவன் அவலீலையாகச் (விளையாட்டாகச்) செய்வான். அவ்வாறு வேதங்களாலும், வைதிகர்களாலும் அவன் நிரூபிக்கப்படுகிறான். வேதவாதிகளான ப்ராஹ்மாதிகளும் எவன் ஸ்வரூபத்தை நிரூபிக்கப் புகுந்து மதிமயங்கப் (புத்தி கலங்கப்) பெறுகிறார்களோ, அவனே என் புத்தியைக் கலைக்கின்றான். அயக்காந்தத்தின் (இரும்பை இழுக்கும் காந்தத்தின்) அருகில் இரும்பு சுழல்வதுபோல, என் மனமும் பகவானுடைய ஸந்நிதியில் பேதிக்கின்றது (கலைக்கிறது). அவன் அனுக்ரஹம் செய்து, என் மனத்தில் ஸந்நிதானம் செய்து, எனக்கு இத்தகைய சித்த வருத்தியை (மனதில் எண்ணத்தை) விளைக்கின்றான்” என்றான். ஆழ்ந்த மதியுடைய (புத்தியுடைய) ப்ரஹ்லாதன், தைத்ய புரோஹிதர்களான அவ்வந்தணர்களுக்கு, இவ்வளவு மாத்ரமே மொழிந்து பேசாதிருந்தான். 

நாரதர் கூறுகிறார்:- பிறகு, வேறு உபாயத்தினால் அவனை ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள வல்லமையற்ற குருக்கள், அவனை விரட்டிக் கோபித்து ராஜஸேவகனைப் பார்த்து அடா!  “ராஜஸேவகனே! பிரம்பைக் கொண்டுவா. இவன் நமக்கு அபகீர்த்தியை (பழியை) விளைக்க வந்தவன். தைத்ய குலத்தைக் கொள்ளி போல் பாழ்செய்கிறான். துர்ப்புத்தியான (கெட்ட புத்தி உடைய) இவன் விஷயத்தில் நான்காவதான தண்டோபாயத்தையே (தண்டனை என்ற வழியையே) உபயோகப்படுத்த வேண்டும். தைத்யர்களாகிற சந்தனக் காட்டில், இவன் கண்டக வ்ருக்ஷம் (முள் மரம்) போல் பிறந்தான். தைத்யர்களாகிற சந்தன மரங்களின் வேர்களை அறுக்கும் கோடாலி போன்ற விஷ்ணுவுக்கு இச்சிறுவன் காம்பு போன்றிருக்கிறான்” என்றுரைத்து அந்த ப்ரஹ்லாதனை விரட்டுதல் முதலிய பல உபாயங்களால் பயப்படுத்தி, அவனுக்குத் தர்ம (அறம்), அர்த்த (பொருள்), காமங்களை (இன்பங்களை) விவரிக்கின்ற சாஸ்த்ரங்களைக் கற்பித்தார்கள். பிறகு, அவர்கள் ஸாம (ஸமாதானம் செய்தல்), தான (லஞ்சம் கொடுத்தல்), பேத (புத்தியை மாற்றுதல்), தண்ட (தண்டனை) என்கிற நான்கு உபாயங்களையும் ப்ரஹ்லாதன் நன்றாக உணர்ந்திருப்பதை அறிந்து, மாதாவால் தேய்த்துக் குளிப்பித்து அலங்காரம் செய்யப்பெற்ற அச்சிறுவனை, ஹிரண்யகசிபுவினிடம் அழைத்துக்கொண்டு போனார்கள். பிறகு, ஹிரண்யகசிபு தன் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கின்ற ப்ரஹ்லாதனுக்கு ஆசீர்வாதம் செய்து, அபிநந்தித்து (மகிழ்ந்து, வரவேற்று), புஜங்களால் (கைகளால்) பிள்ளையின் தலையை அணைத்து, பெரிய ஆனந்தம் அடைந்தான். ஓ, யுதிஷ்டிரனே! அனந்தரம் பிள்ளையை மடிமேல் உட்காரவைத்துக் கொண்டு, உச்சி முகந்து, ஸந்தோஷத்தினால் முகம் மலரப்பெற்று, கண்ணீர்களால் நனைத்து இவ்வாறு மொழிந்தான்.  

ஹிரண்யகசிபு கேட்கிறான்:- “அப்பா! வளர்ந்த வாழ்நாளுடையவனே, ப்ரஹலாதா! நீ, இத்தனை காலமாய்க் குருவினிடத்தில் ஏதேது கற்றனையோ, அவற்றில் உனக்கு நன்றாக வந்ததும், சிறந்ததுமான ஒன்றைச் சொல்வாயாக” என்றான். 

ப்ரஹ்லாதன் கூறுகிறான்:- அதைக் கேட்ட ப்ரஹ்லாதனும், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் குணங்களைக் கேட்பது (ச்ரவணம்), அவன் நாமங்களை வாயாரப்பேசுவது (கீர்த்தனம்), அவனை நெஞ்சார நினைப்பது (ஸ்மரணம்), அவன் பாதங்களைப் பணிவது (பாதஸேவனம்), அவனைப் பூஜிப்பது (அர்ச்சனம்), அவனை நமஸ்கரிப்பது (வந்தனம்), அவனுக்குத் தாஸனாயிருப்பது (தாஸ்யம்), அவனிடத்தில் நட்பு செய்வது (ஸக்யம்), அவனிடத்தில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்வது (ஆத்ம நிவேதனம்) ஆகிய ஒன்பது லக்ஷணங்கள் அமைந்த பக்தி யோகத்தை அறிவிக்கும் சாஸ்த்ரத்தைக் கற்பானாயின், அது கல்விப் பயிற்சிகளில் சிறந்ததாகுமென்று எனக்குத் தோன்றுகின்றது. சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட பக்தியோகத்தை மனத்தூய்மையுடன் பகவானிடத்தில் செய்து, அவ்வாறு செய்த பக்தியோகத்தை அப்பகவானிடத்தில் அர்ப்பணமும் செய்வானாயின், அதுவே சிறப்புடையதாம்” என்றான். 

அப்பொழுது ஹிரண்யகசிபு, இவ்வாறு மொழிந்த பிள்ளையின் வசனத்தைக் கேட்டு, கோபத்தினால் உதடு துடிக்கப் பெற்று, குருபுத்ரனைப் பார்த்து  “ஏ! ப்ராஹ்மணாதமா! இதென்ன இப்படிச் செய்தாய்? என்னைப் பொருள் செய்யாமல், என் சத்ரு (எதிரி) பக்ஷத்தில் (பக்கத்தில்) புகுந்து, எனக்குக் கெடுதியைச் செய்ய முயன்றால், துர்ப்புத்தி! என் குழந்தைக்கு அஸாரமான ( ஸ்வாரஸ்யமற்ற, வீணான) அம்சத்தைக் கற்பித்தனையே. இவ்வுலகத்தில், சிலர் நண்பர் போலிருந்து மனத்தில் கெட்ட எண்ணம் கொண்டிருப்பதுண்டு. அவர்கள், தாங்கள் அஸாதுக்களாயினும் (நல்லவர்களில்லையாகிலும்), அது வெளியாகாதபடி ஸாதுக்களின் வேஷம் தரித்திருப்பார்கள். பாபிஷ்டர்களின் பாபம் ரோகமாய் (வியாதியாய்) வெளியாவது போல, அவர்கள் செய்யும் த்ரோஹமும் (கெடுதியும்) ஒரு காலத்தில் வெளியாகும்” என்றான் . 

குருபுத்ரர்கள் கூறுகிறார்கள்:- “ஓ இந்த்ரசத்ரூ! உன் பிள்ளைக்கு இது நாங்கள் கற்பித்ததன்று. பிறரும் கற்பிக்கவில்லை. இவனே இவ்வாறு சொல்லுகிறான். ராஜனே! இவனுக்கு இப்புத்தி ஜன்மத்திலேயே உண்டானது. பிறரால் கற்பிக்கப்பட்டதன்று. ஆகையால், கோபத்தை அடக்குவாயாக. எங்கள்மேல் குற்றத்தை ஏற்றவேண்டாம்” என்றார்கள். 

நாரதர் கூறுகிறார்:- குருபுத்ரரால் இவ்வாறு மறுமொழி கூறப்பெற்ற அவ்வஸுரன், மீளவும் பிள்ளையைப் பார்த்து அட அமங்களனே (நன்மையற்றவனே)! இப்புத்தி உனக்குக் குருவின் உபதேசத்தினால் விளையாததாயின், துர்ப்புத்தி (கெட்ட புத்தி) உனக்குப் பின்னை எப்படி உண்டாயிற்று? என்றான். 

ப்ரஹ்லாதன் கூறுகிறான்:- “இல்லற வாழ்க்கையில் மனம் செல்லப்பெற்றவர்களுக்குத் தன்னாலாவது,  பிறராலாவது, ஒருவர்க்கொருவராலாவது ஸ்ரீவாசுதேவனிடத்தில் பக்தி ரூபமான மதி (புத்தி) உண்டாகாது. அவர்கள், இந்திரியங்களை அடக்க முடியாமல், ஸம்ஸாரமாகிற நரகத்தில் புகுந்து, நேற்று அனுபவித்த விஷயங்களையே மற்றறை நாளும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இப்படி சப்தாதி விஷயங்களில் ஆழ்ந்த மனமுடையவர்களுக்கு, ஸ்ரீவாசுதேவனிடத்தில் பக்தி எப்படி உண்டாகும்? அவர்கள், தங்களுக்குப் புருஷார்த்தமும் (அடையப்பட வேண்டிய வஸ்துவும்), அதை நிறைவேற்றிக்கொடுக்கும் உபாயமுமாகிய ஸ்ரீவாசுதேவனை அறிய மாட்டார்கள். அவர்கள், சப்தாதி விஷயங்களையே புருஷார்த்தமாக (அடையப்பட வேண்டிய வஸ்துவாக)  நினைந்திருப்பவர்கள்; துர்ப்புத்திகள் (கெட்ட புத்தி உள்ளவர்கள்); குருடர்களால் வழி நடக்கப்பெற்ற குருடர்கள் வழி தெரியாமல் பள்ளத்தில் விழுவது போல, அவர்கள் வர்ணாச்ரம தர்மங்களாகிற பல பூட்டுக்கயிறுகள் நிரம்பின வேதமாகிற தாமணியில் (கயிற்றில்) ஈச்வரனால் கட்டுண்டு, கேவலகாம்ய (சிறு சிறு பலன்களைப் பெறும்) கர்மங்களில் மனம் செல்லப்பெற்ற மூடர்களால் வஞ்சிக்கப்பட்டு, அக்கர்மங்களிலேயே கால் தாழ்ந்து, அடிக்கடி ஜன்ம, ஜரா, மரணாதி துக்கங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய புத்தி, மஹாநுபாவனான பகவானுடைய பாதார விந்தங்களை ஒருகாலும் தீண்டுகிறதில்லை. அவனுடைய பாதார விந்தங்களை நினைப்பார்களாயின், அவர்களுக்கு இந்த ஸம்ஸார துக்கம் தானே பறந்து போகும். ஒரு ப்ரயோஜனத்தையும் விரும்பாத பெரியோர்களின் பாதார விந்தங்களில் படிந்த பராகத்தைப் (துகள்களைப்) பணியாத வரையில், ஸம்ஸாரிகளின் புத்தி பகவானுடைய பாதங்களைத் தீண்டாது” என்று மொழிந்து பேசாதிருந்தான். 

ஹிரண்யகசிபு அதைக் கேட்டு, கோபத்தினால் விவேகம் கெட்டு, பிள்ளையை மடியினின்றும் கீழே தள்ளி, அவன் சொன்னதை நினைத்துப் பொறுக்கமுடியாமல், கோபம் தலையெடுத்துக் கண்கள் சிவந்து, “ஓ ராக்ஷஸர்களே! இவனை அப்புறப்படுத்துவீர்களாக. இச்சிறுவன் வதிக்கத்தகுந்தவன். ஆகையால், இவனைச் சீக்ரத்தில் வதிப்பீர்களாக. இவன் தன்னுடைய நண்பர்களான நம்மைத் துறந்து, தனது சிற்றப்பனை வதித்த விஷ்ணுவின் பாதங்களை தாஸன் போலப் பூஜிக்கிறான். ஆகையால். இவன் என் ப்ராதாவைக் கொன்ற விஷ்ணுதான். இவனை வதிப்பீர்களாக. மனநிலைமையில்லாத இச்சிறுவன், விஷ்ணுவுக்குக்கூட அனுகூலனாயிருப்பானென்று எனக்குத் தோற்றவில்லை. அவனிடத்திலும் இவன் நல்ல எண்ணத்தோடு இருக்கமாட்டான். இவன், ஐந்து வயதிலேயே துறக்கமுடியாத தாய், தந்தைகளிடத்திலுள்ள ஸ்நேஹத்தைத் (அன்பைத்) துறந்தானல்லவா? சத்ருபக்ஷத்தில் (எதிரிகளின் பக்கம்) பிறந்தவனாயினும், ஒளஷதம் (மருந்து) போல ஹிதம் (நன்மை) செய்வானாயின், அவனைப் பிள்ளையாகக் கொள்ளலாம். நமது தேஹத்தில் பிறந்தவனாயினும், ரோகம் (வியாதி) போலக் கெடுதியை விளைப்பானாயின், அவனைத் துறக்க வேண்டும். தன் தேஹத்தில் கை, கால் முதலிய ஏதேனுமொரு அங்கம் பாம்பு, விஷம் முதலியவற்றால் தீண்டப்படுமாயின், அதை அப்பொழுதே அறுத்துவிடவேண்டும். அதனால் மற்ற அங்கங்கள் ஸுகமாயிருக்குமல்லவா? 

இந்த்ரியங்களை வெல்ல விரும்பும் முனிவனுக்கு, ராகாதி தோஷத்திற்கிடமான இந்த்ரியம் சத்ருவாயிருப்பது (எதிரியாயிருப்பது) போல, பிள்ளையின் வேஷம் பூண்ட இவன், எனக்குச் சத்ரு (எதிரி). ஆகையால், இவனை விஷம் கலந்த உணவைக் கொடுத்தல், உறங்கும்போது கொல்லுதல், தனியாக அமர்ந்திருக்கும்போது கொல்லுதல் முதலிய எல்லா உபாயங்களாலும் வதிக்கப் பார்க்க வேண்டும்” என்றான். கையில் சூலாயுதமேந்தினவர்களும் கூரான கோரைப் பற்களும், பயங்கரமான முகமும், சிவந்த தாடி மீசைகளும், தலைமயிர்களுமுடைய, அவ்வரக்கர்கள் இவ்வாறு ப்ரபுவால் கட்டளையிடப் பெற்று, பயங்கரமான ஸிம்ஹநாதங்களைச் (சிங்க கர்ஜனை) செய்து, “வெட்டு! குத்து!” என்று மொழிந்து கொண்டு, உட்கார்ந்திருக்கிற ப்ரஹ்லாதனை எல்லா மர்ம ஸ்தானங்களிலும் (உடலின் உயிர்நிலைப் பகுதிகளிலும் சூலங்களால் ஹிம்ஸித்தார்கள். சேதனாசேதன விலக்ஷணனாகையால் (ஜடப்பொருள்கள், ஜீவாத்மாக்கள் இவைகளை விட வேறானவன் ஆகையால்) இத்தகையனென்று நிரூபிக்க முடியாதவனும், ஸர்வாந்தர்யாமியும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரம புருஷனிடத்தில் நிலைநின்ற மனமுடைய அந்த ப்ரஹ்லாதனிடத்தில், அவ்வரக்கர்கள் செய்த மரண உபாயங்களெல்லாம் அவனுக்கு மரணத்தையாவது, வருத்தத்தையாவது விளைக்காமல், பாபிஷ்டன் (பாபியானவன்) செய்யும் ஸந்த்யாவந்தனாதி ஸத் கர்மங்கள் (நற்செயல்கள்) போலப் பயனற்றவையாயின. இவ்வாறு அவர்களுடைய ப்ரயத்னங்களெல்லாம் வீணானதால், தைத்யேந்த்ரனாகிய ஹிரண்யகசிபு, “இதென்ன! இவன் ஆயுதங்களால் அடிக்கப்பட்டும் மரணம் அடையவில்லையே. இவனால் தான் நமக்கு ம்ருத்யுவோ (மரணமோ)? என்று சங்கித்து (ஸந்தேஹப்பட்டு) இவனை எப்படியாவது வதிக்க வேண்டுமென்னும் நிர்ப்பந்தத்துடன், அவனுடைய வதத்திற்குரிய உபாயங்களை ஆலோசித்து, திக்கஜங்களைக் (திசைகளைக் காக்கும் யானைகளைக்) கொண்டு மிதிக்க விடுவது, மேலான ஸர்ப்பங்களைக் (பாம்புகளைக்) கொண்டு கடிக்க விடுவது, மரணத்தை விளைக்கும்படியான ஹோமங்களைச் செய்வது, மலைச்சிகரங்களினின்று கீழ் விழத் தள்ளுவது, திடீரென்று இடி விழுவது முதலிய மாயைகளை ப்ரயோகிப்பது, மூச்சு வெளிவரவொட்டாமல் நவத்வாரங்களையும் தடுப்பது, விஷங்களைக் கொடுப்பது, ஆஹாரம் (உணவு) கொடாமல் உபவாஸம் வைப்பது, பனி, காற்று, அக்னி, ஜலம் இவற்றில் தள்ளுவது, பர்வதங்களைக் (மலைகளைக்) கொண்டு வந்து மேல் எறிவது இவை முதலிய பல உபாயங்களால் அஸுரர்களைக் கொண்டு வதிக்கப்பார்த்தும், அவனை வதிக்க முடியாமல் வேறு உபாயமும் தோற்றாமல் மிகப் பெருஞ்சிந்தையில் அழுந்தினான்.  

“நான் இச்சிறுவனைப் பலவாறு விரட்டினேன். இவனை வதிக்கப் பல உபாயங்களைச் செய்தேன். மாரண ஹோமம் (ஒருவனைக் கொல்வதற்காக செய்யும் ஹோமம்) முதலிய கெட்ட தர்மங்களையும், சூலத்தினால் குத்துவது முதலிய பல த்ரோஹங்களையும் (கெடுதிகளையும்) செய்தேன். இவன், தன் தேஜஸ்ஸினாலேயே பாதுகாக்கப் பெற்று அவற்றாலும் மரணம் அடையவில்லை. இவ்விளைஞன், நான் செய்த மரண உபாயங்களுக்கெல்லாம் எட்டாதிருக்கிறான். இவன் பாலனாயினும், இவன் புத்தி நல்ல திறமையமைந்திருக்கிறது. தாய், தந்தைகளால் ஹரிச்சந்திரனுக்கு, நர பசுவாக விக்ரயம் செய்யப்பட்ட (விற்கப்பட்ட) சுனச்சேபன் போல இவன், நான் செய்த த்ரோஹங்களைச் (கெடுதிகளை) சிறிதும் நினைக்காமலேயிருக்கிறான். 

[குறிப்பு:- அஜீகர்த்தருடைய நடுப்பிள்ளை சுனச்சேபன். அவனை, அவனது தந்தை, வருணனுக்காக அரிச்சந்திரன் செய்யும் வேள்வியில், வேள்விப் பசுவாக அரிச்சந்திரன் மகனான ரோஹிதனிடம் விற்றுவிட்டார். அப்பொழுது அவனை அச்சடங்கடத்திலிருந்து அவன் தாய்மாமனான விசுவாமித்திர மகரிஷி காப்பாற்றினார். அதனால், சுனச்சேபன் தந்தையை விடுத்துத் தாய்மாமனது கோத்திரத்தை ஏற்றான். (இக்கதை ஒன்பதாவது ஸ்கந்தத்தில் 7வது அத்தியாயத்தில் கூறப்படுகிறது)]

இவன், இந்திரியங்களை வென்றவன். இவனுடைய ப்ரபாவம் அளவிடக் கூடாததாயிருக்கின்றது. இவனுக்கு எதனாலும் பயம் உண்டாகவில்லை. இவன், எதனாலும் மரணம் அடையாதிருக்கிறான். இவனோடு விரோதித்துக் கொள்வதனால், எனக்கே ம்ருத்யு (மரணம்) நேரிடும். இவனால் எனக்கு மரணம் நேராதாயின், மற்ற எதனாலும், எனக்கு மரணம் உண்டாகாது” என்று அப்புதல்வனைப் பற்றின சிந்தையால் சிறிது ஒளிமழுங்கி, முகம் தொங்கப்பெற்றிருக்கின்ற ஹிரண்யகசிபுவைப் பார்த்து, குரு புத்ரர்களான சண்ட அமர்க்கர்கள் ஏகாந்தத்தில் இவ்வாறு மொழிந்தார்கள்.  

“உன் புருவ நெரிப்பு மாத்ரத்தினால், ஸமஸ்த லோக பாலர்களும் பயந்தார்கள். நீ ஒருவனே மூன்று லோகங்களையும் ஜயித்தாய். ப்ரபூ! அப்படிப்பட்ட உனக்கு, சிந்திக்கத்தக்கது எதுவாயினும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. அறியாக்குழந்தைகளின் நடத்தை, குணத்திற்காவது, தோஷத்திற்காவது இடமன்று. ஆகையால், குருவான பார்க்கவர் வரும் வரையில், இப்பாலன் பயந்தோடாதபடி, இவனை வருண பாசங்களால் கட்டி வைப்பாயாக. பெரியோர்களின் ஸேவையால் புத்தி உண்டாகக்கூடும். அதுவுமன்றி, வயது சென்றால் தானே நற்புத்தி உண்டாகும்” என்றார்கள். அதைக் கேட்ட ஹிரண்யகசிபுவும். அப்படியே ஆகட்டுமென்று குரு புத்ரர்கள் மொழிந்ததை அங்கீகரித்து,  “குருபுத்ரர்களே! இவனுக்கு இல்லற வாழ்க்கையிலிருக்கின்ற மன்னவர்களின் தர்மத்தை உபதேசிப்பீர்களாக” என்றான். 

அவர்களும், அப்படியே வணக்கமுள்ள ப்ரஹ்லாதனுக்குத் தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) இவற்றின் ஸ்வரூபத்தை உபதேசித்தார்கள். ராக த்வேஷாதிகளால் (விருப்பு, வெறுப்பு முதலியவைகளால்) சப்தாதி விஷயங்களில் மனம் சென்ற அந்த குருபுத்ரர்கள், உபதேசித்த தர்மார்த்த காமங்களையும், அவர்களுடைய உபதேசங்களையும், அவன் ஹிதமாக நினைக்கவில்லை. குரு, இல்லற வாழ்க்கைக்கு வேண்டிய கார்யங்களைச் செய்யும் பொருட்டு வெளியில் போகும் பொழுது, அவனோடொத்த வயதுள்ள படிக்கும் பிள்ளைகள், அவகாசம் நேரப்பெற்று, ப்ரஹ்லாதனையும் விளையாட அழைப்பார்கள். மஹா விவேகியாகிய ப்ரஹ்லாதன், அப்பிள்ளைகளை இனிய உரைகளால் அழைத்து, மன இரக்கத்துடன் சிரித்துக்கொண்டே, ஜ்ஞான மார்க்க நிஷ்டையை அவர்களுக்கு உபதேசிப்பான். அப்பிள்ளைகளும், அவனிடத்தில் கௌரவத்தினால், விளையாட்டுக் கருவிகளையெல்லாம் துறந்து, ராகத்வேஷாதிகளையுடைய (விருப்பு, வெறுப்பு முதலியவைகளை உடைய) ஸம்ஸாரிகளுக்கு நேரக்கூடிய மன விகற்பங்களால் (குறைகளால்) தீண்டப்பெறாத மதி (புத்தி) உடையவர்களாகி, மனத்தையும், கண்ணையும் அவனிடத்திலேயே வைத்து அவனைச் சுற்றி உட்காருவார்கள். ப்ராணிகளிடத்தில் கருணையும், நட்புமுடையவனும், மஹாபாகவதனுமாகிய அவ்வஸுரகுமாரன், அவர்களை நோக்கி இவ்வாறு சொல்லத்தொடங்குவான். 

ஐந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக