சனி, 29 ஆகஸ்ட், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 176

 எட்டாவது ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம்

(ஸமுத்ரத்தில் தோன்றின ஸ்ரீமஹாலக்ஷ்மி பகவானை வரித்தலும், அம்ருதத்தை அஸுரர்கள் பறித்தலும், பகவான் மோஹினி அவதாரம் செய்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு, சிவபெருமான் விஷத்தைப் பக்ஷிக்கையில் (பருகுகையில்), இந்திரன் முதலிய ஸமஸ்த தேவதைகளும், பலி முதலிய ஸமஸ்த அஸுரர்களும், ஸந்தோஷம் அடைந்து, வலிவுடன் ஸமுத்ரத்தைக் கடைந்தார்கள். பிறகு, அந்த ஸமுத்திரனின்றும் காமதேனு உண்டாயிற்று. தயிர், பால், நெய், முதலியவற்றால் அக்னிஹோத்ரம் (வேதத்தில் விதிக்கப்பட்ட நித்ய அக்னி கார்யம்) முதலிய வைதிக (வேதத்தில் விதிக்கப்பட்ட) கர்மங்களுக்கு உபயோகப்படுவதாகிய அக்காமதேனுவை, ப்ரஹ்மவாதிகளான ரிஷிகள் அங்கீகரித்தார்கள். தேவதைகள் வந்து, ஹவிர்ப்பாகங்களைப் (யாகங்களில் தேவதைகளைக் குறித்து ஹோமம் செய்யப்படுபவற்றை) பெறுகிற யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களுக்கு வேண்டிய பால், தயிர், நெய், முதலிய பரிசுத்தமான ஹவிஸ்ஸுக்களுக்காக (யாகங்களில் தேவதைகளைக் குறித்து ஹோமம் செய்யப்படும் பொருட்களுக்காக) அவர்கள் அதை அபேக்ஷித்தார்கள் (விரும்பினார்கள்). பிறகு சந்த்ரன் போல் வெளுத்த நிறமுடைய உச்சைச்ரவஸ் என்கிற குதிரை உண்டாயிற்று. அதை, பலிசக்ரவர்த்தி விரும்பினான். இந்திரன், தனக்கு அதில் விருப்பம் உண்டாயினும், காம (ஆசை) க்ரோதங்கள் (கோபம், சினம்) செய்யலாகாதென்ற பகவானுடைய நியமனத்தை நினைந்து, அவ்விருப்பத்தை வெளியிடாமலே இருந்தான். அப்பால், ஐராவதமென்கிற சிறந்த யானையொன்று உண்டாயிற்று. அதுவும், சந்திரன் போல் வெளுத்திருந்தது. மற்றும், அக்கஜேந்தரம் (யானை) சிகரங்கள் போன்ற நான்கு தந்தங்களால் ருத்ரனுடைய கைலாஸ பர்வதத்தின் சோபையைப் (அழகைப்) பறித்தது. 

மன்னவனே! அதன்பிறகு, எட்டுத் திக்கஜங்களும், அப்ரமு முதலிய எட்டு யானைப்பேடுகளும், கௌஸ்துபமென்னும் ரத்னமும், உண்டாயின. அந்தக் கௌஸ்துப ரத்னம் பத்மராகம். ரத்னங்களில் சிறந்த அந்தக் கெளஸ்துபமணியை, பகவான் தன் மார்புக்கு அலங்காரமாகக் கொள்ள விரும்பினான். பிறகு, ஸ்வர்க்கலோகத்திற்கு அலங்காரமாகிய பாரிஜாதமென்னும் வ்ருக்ஷம் (மரம்) உண்டாயிற்று. 

மன்னவனே! நீ இப்பூமண்டலத்தில் விரும்புவோர்களின் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பது போல, அந்தப் பாரிஜாத வ்ருக்ஷம் (மரம்) ஸமஸ்த ப்ராணிகளின் விருப்பங்களையும் ஸர்வகாலங்களிலும் நிறைவேற்றிக்கொடுக்கும் தன்மையுடையது. அப்பால், கழுத்தில் பொன்னலங்காரங்கள் பூண்டு, அரையில் அழகான ஆடைகளை உடுத்தித் திகழ்கின்ற அப்ஸரஸ்த்ரீகள் உண்டானார்கள். அவர்கள், அழகிய நடைகளாலும், விலாஸங்கள் (அழகு, ஒளி) அமைந்த கண்ணோக்கங்களாலும், ஸ்வர்க்கவாஸிகளுக்கு மனக்களிப்பை விளைவிக்கும் தன்மையுள்ளவர்கள். பிறகு, பகவானிடத்தில் மிக்க மனவூக்கமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மி தன் தேஹ காந்தியால் (உடல் ப்ரகாசத்தால்) மின்னல் போலத் திசைகளையெல்லாம் விளங்கச் செய்து கொண்டு, மேற்கிளம்பினாள். தேவதைகள், அஸுரர்கள், தானவர்கள் முதலிய அனைவரும் அவளுடைய அழகு, காம்பீர்யம் (மேன்மை), வயது, தேஹ காந்தி (உடல் ப்ரகாசம்), பெருமை முதலிய குணங்களால் மனம் பறியுண்டு, அவளிடத்தில் மனவிருப்பம் கொண்டார்கள்.

இந்த்ரன், அந்த ஸ்ரீமஹாலக்ஷ்மி உட்காரும் பொருட்டு, மிகவும் அற்புதமான பெரிய ஒரு ஸிம்ஹாஸனம் கொண்டு வந்து கொடுத்தான். கங்கை, யமுனை முதலிய சிறப்புடைய நதிகள் மானிட உருவத்துடன் பொற்குடங்களில் ஜலங்கொண்டு வந்தன. பூமியும், உருவத்துடன் தோன்றி அபிஷேகத்திற்கு வேண்டிய ஓஷதிகளையெல்லாம் (மூலிகைகளையெல்லாம்) கொண்டு வந்தாள். பசுக்கள், பஞ்ச கவ்யங்களை (பால், தயிர், நெய், சாணம், மூத்ரம்) ஈன்றன. வஸந்தருது, உருவத்துடன் தோன்றி, சித்திரை - வைகாசி மாதங்களில் விளையும் புஷ்பங்களை அளித்தது. பிறகு, ரிஷிகள் அபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தார்கள். கந்தர்வர்கள், மங்களங்களைப் பாடினார்கள். நட்டுவப்பெண்கள், ஆடல் பாடல்களை நடத்தினார்கள். மேகங்கள் உருவத்துடன் வந்து, ம்ருதங்கம், பணவம், முரஜம், ஆனகம், கோமுகம், சங்கம், வேணு, வீணை முதலிய வாத்யங்களை முழக்கிப் பெருங்கோஷத்தை விளைத்தன. அப்பால், கைகளில் தாமரை மலரேந்தின அந்த ஸ்ரீமஹாலக்ஷ்மியைத் திக்கஜங்கள் (திசைகளைக் காக்கும் யானைகள்) பூர்ண (புனித நீர் நிறைந்த) கலசங்களால் அபிஷேகம்செய்தன. அப்பொழுது, அந்தணர்கள் அபிஷேக ஸமயத்தில் படிக்க வேண்டிய வேதமந்திரங்களைப் படித்தார்கள். பிறகு ஸமுத்ரராஜன் பொன்னிறமுள்ள பட்டு வஸ்த்ரங்களையும், வருணன் மதுபானத்தினால் மதித்த வண்டுகள் அமைந்த வைஜயந்தியென்னும் பூமாலையையும், விச்வகர்மாவென்னும் ப்ரஜாபதி பற்பல ஆபரணங்களையும், ஸரஸ்வதி முத்துமாலையையும், ப்ரஹ்மதேவன் தாமரை மலரையும், நாகங்கள் குண்டலங்களையும், அந்த ஸ்ரீமஹாலக்ஷ்மிக்குக் கொடுத்தார்கள். 

அனந்தரம் மங்களமான அலங்காரங்கள் செய்யப்பெற்ற ஸ்ரீமஹாலக்ஷ்மி, வண்டுகள் ஒலிக்கப்பெற்ற கருநெய்தல் பூமாலையைக் கையில் ஏந்திக் கொண்டு, அழகிய கபோலங்களும் (கன்னங்களும்), குண்டலங்களும் வெட்கத்துடன் கூடின புன்னகையும் அமைந்து, மிகவும் அழகிய முகத்துடன் அங்கு உலாவினாள். குங்குமம் கலந்த சந்தனம் பூசப்பெற்று, ஒன்றோடொன்று ஏற்றக்குறைவின்றி ஒத்திருக்கின்ற இணைக்கொங்கைகளும், சிறுத்தழகிய இடையும் அமைந்த அந்த ஸ்ரீமஹாலக்ஷ்மி, இனிதாக ஒலிக்கின்ற சிலம்பு தண்டைகளுடன் இங்குமங்கும் உலாவிக்கொண்டு பொற்கொடி போல விளங்கினாள். பிறகு, என்றும் மாறாத கல்யாண குணங்களுடையவனும், கெட்ட குணங்கள் எவையும் தீண்டப்பெறாதவனும் அழிவற்றவனுமாகிய தனக்குரிய புருஷனை அங்குள்ள கந்தர்வர், யக்ஷர், தேவர், ஸித்தர், சாரணர் இவர்களிலும் மற்ற ஸ்வர்க்கவாஸி முதலியவர்களிலும் தேடித்திரிந்தும் தனக்குரியவன் எவனும் தோன்றப்பெறாதிருந்தாள். 

ஒவ்வொருவனிடத்திலும், ஒவ்வொரு தோஷம் புலப்படுகையால், அவர்களில் எவனையும் தனக்குரியவனாக அவள் நினைக்கவில்லை. அம்மஹாலக்ஷ்மி, தன் மனத்திற்குள் இவ்வாறு சிந்திக்கலானாள்.

1. “ருத்ரன், துர்வாஸர் முதலிய சிலர் பெருந்தவமுடையவர்களாய் இருக்கிறார்கள். ஆயினும், அவர்கள் கோபத்தை வெல்ல வல்லமையற்றிருக்கிறார்கள். 

2. இது நிச்சயம் ப்ருஹஸ்பதி, சுக்ரன் முதலிய சிலர் பேரறிஞராய் இருக்கிறார்கள். ஆயினும், அவர்கள் ப்ரயோஜனங்களை (பலன்களை) விரும்புகிறார்களேயன்றி, அவற்றில் பற்றைத் துறக்கவில்லை. ப்ரயோஜனங்களில் (பலன்களில்) பற்றற்ற அறிவே அறிவாமன்றி, மற்ற அறிவு அறிவாகாது. 

3. ப்ரஹ்மதேவன் முதலிய சிலர் பெருமையுடையவர்களாய் இருக்கிறார்கள். ஆயினும், அவர்கள் காமத்தை வெல்லமுடியாமல், தம் புதல்வியைப் புணர்வது முதலிய அக்ருத்யங்களைச் (செய்யத் தகாதவற்றைச்) செய்கிறார்கள்.

4. இந்திரன் முதலிய சிலர் ஐச்வர்யம் உடையவர்களாய் இருக்கிறார்கள். ஆயினும், அவர்களுடைய ஐச்வர்யம், பிறனுடைய ஸங்கல்பத்தினால் விளைந்ததேயன்றி, இயற்கையில் ஏற்பட்டதன்று. அப்படிப்பட்டவர்களை, ஐச்வர்யமுடையவர்களாக எப்படி நினைக்கலாம்? 

5. யமன் முதலிய சிலரிடத்தில் தர்மம் இருக்கின்றது. ஆயினும், அவர்களுக்கு ப்ராணிகளிடத்தில் நட்பு கிடையாது. 

6. சிபிசக்ரவர்த்தி முதலிய சிலரிடத்தில், தானம் செய்யும் குணம் இருக்கின்றது. ஆயினும், அது மோக்ஷத்தை விளைக்கும்படியான நிலைமையில் இல்லை. 

7. எத்தகைய செயல்களும் ப்ரயோஜனத்தை விரும்பாமல் பகவானிடத்தில் அர்ப்பணம் செய்யப்பெறுமாயின், அப்பொழுதுதான் அவை மோக்ஷத்தை விளைக்கவல்லவையாம். பகவானுடைய முகமலர்ச்சியைத் தவிர மற்ற ப்ரயோஜனங்களை விரும்பிச்செய்யும் செயல்களெல்லாம், மோக்ஷத்தை விளைக்க வல்லவையாகமாட்டாது. 

8. கார்த்த வீர்யார்ஜுனன் முதலிய சிலரிடத்தில் வீர்யம் இருக்கின்றது. ஆயினும், அது பகவானுடைய வீர்ய  வேகத்தினால் (பலத்தினால்) பரிஹரிக்கப்பட்டது (பறிக்கப்பட்டது). 

9. பகவானையொழிந்த மற்றவர் அனைவரும் ஸத்வம் முதலிய ப்ராக்ருத குணங்கள் (ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ் இவைகளால்) தீண்டப் பெற்றவர்களேயன்றி, அவை தீண்டப்பெறாதவர்கள் இல்லை. 

10. மார்க்கண்டேயன் முதலிய சிலரிடத்தில் நீண்ட வாழ்நாள் இருக்கின்றது. ஆயினும், அவர்களிடத்தில் நன்னடத்தை (நல்ல ஒழுக்கம்) கிடையாது. அவர்கள், இந்திரியங்களின் த்ருப்திக்காக ப்ரவ்ருத்தி (ஸம்ஸாரத்தை வளர்க்கும்) தர்மங்களில் கால் தாழ்ந்திருக்கிறார்கள். 

11. சிலரிடத்தில் நன்னடத்தையும் இருக்கின்றது. ஆயினும், அவர்கள் என்றும் அழியாத வாழ்நாளுடையவரென்பது நிச்சயிக்க முடியாது. 

12. வேறு சிலரிடத்தில், நன்னடத்தையும், நீண்ட வாழ்நாளும், அமைந்திருக்கிறது. ஆயினும், அவர்களுடைய வேஷம் அமங்களமாயிருக்கின்றது (சுபம் அற்று இருக்கிறது). 

13. எவன் ஸமஸ்த கல்யாண குணங்களுக்கும் விளை நிலமாகி, மிகவும் மங்களமூர்த்தியாய் இருக்கிறானோ, அத்தகைய பகவான் இயற்கையில் அவாப்தஸமஸ்தகாமன் (விரும்பியது அனைத்தும் அடையப் பெற்றவன்).

 ஆகையால் என்னை விரும்பவில்லை என்று நன்றாகச் சிந்தித்து, அப்பால் அம்மஹாலக்ஷ்மி, பகவான் தன்னை மேல்விழுந்து விரும்பாதிருப்பினும், பிறர்க்கு நேரக்கூடாதவைகளும், ஸ்வபாவ  ஸித்தங்களுமான (இயற்கையாகவே அமைந்த) மங்கள குணங்களெல்லாம் அமைந்திருக்கையால், அனைவரிலும் சிறப்புற்றுப் போக மோக்ஷங்களைக் கொடுக்க வல்லவனாகையால், முகுந்தனென்னும் பெயர் பெற்று, ஸத்வம் முதலிய ப்ராக்ருத குணங்கள் தீண்டப்பெறாதவனும், தான் மேல்விழுந்து விரும்பிப் பெறத் தகுந்தவனுமாகிய, அப்பரமபுருஷனையே கணவனாக வரித்தாள். 

அந்த ஸ்ரீமஹாலக்ஷ்மி, வெட்கம் வழியப்பெற்ற புன்னகையினால் மலர்கின்ற கண்களுடையவளாகி, அந்தப் பகவானுடைய மார்பைத் தனக்கு வாஸஸ்தானமாக (இருப்பிடமாக) விரும்பி, தேன்களைப் பருகி மதித்த வண்டுகள் இனமினமாக இரைக்கப் பெற்று அழகாயிருக்கின்ற புதிய கருநெய்தல் பூமாலையை அப்பகவானுடைய கழுத்தில் போட்டு, அவனுடைய அனுக்ரஹத்தை எதிர்பார்த்துக்கொண்டு, அவனருகில் பேசாது நின்றிருந்தாள். மூன்று லோகங்களுக்கும் மாதாவாயிருப்பவளும், ஸமஸ்த ஐச்வர்யங்களுக்கும் ஆதாரமாயிருப்பவளுமாகிய அந்த ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு, மூன்று லோகங்களுக்கும் தந்தையாகிய பகவான், தன்மார்பை நிலைநின்ற மேலான வாஸஸ்தானமாகக் (இருப்பிடமாகக்) கொடுத்தான். அவளும், அவனுடைய மார்பில் இடம் பெற்று வீற்றிருந்து, கருணையமைந்த கண்ணோக்கத்தினால், தன் ப்ரஜைகளான (மக்களான) மூன்று லோகங்களையும், அவற்றைப் பாதுகாக்கும் ப்ரபுக்களையும், வளரச்செய்தாள். 

அப்பொழுது, தேவதைகளைப் பின்தொடர்ந்த கந்தர்வர்களும், ஸித்தர்களும், சாரணர்களும் மற்றுமுள்ள தேவ ஜாதியர்களும், சங்கம், ம்ருதங்கம் முதலிய வாத்யங்களை முழக்கி, ஆடல் பாடல்களைச் செய்து, பெருங்கோஷத்தை விளைத்தார்கள். ப்ரஹ்மதேவன், ருத்ரன், அங்கிரஸ்ஸு முதலிய ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் (படைத்தல் தொழிலைச் செய்பவர்கள்) அனைவரும், அப்பரமபுருஷனுடைய குணங்களை வெளியிடுகின்றவைகளும், பொய்யாகாதவைகளுமான, மந்திரங்களால் அவனை ஸ்தோத்ரம் செய்தார்கள். தேவதைகளும், ப்ரஜாபதிகளும், மற்ற ப்ரஜைகளும் அந்த ஸ்ரீமஹாலக்ஷ்மியால் கடாக்ஷிக்கப்பெற்று, நன்னடத்தை முதலிய குணங்கள் அமைந்து, மிகுந்த ஆனந்தம் அடைந்தார்கள். அப்பொழுது, தைத்யர்களையும், தானவர்களையும், அவள் கடாக்ஷிக்கவில்லை. ஆகையால், அவர்கள் அனைவரும் பலமற்று, உத்ஸாஹமின்றி, வெட்கம் தொலைந்து, மதிமயங்கும் தன்மையர்களானார்கள். 

இவ்வாறு, ஸ்ரீமஹாலக்ஷ்மி தோன்றின பின்பு, ஸுரைக்கு (கள்) அபிமானி தேவதை கமலம்போன்ற கண்களையுடைய ஒர் கன்னிகையாய்த் தோற்றிற்று. அதை அஸுரர்கள் பகவானுடைய அனுமதியின் மேல் பரிக்ரஹித்தார்கள் (ஏற்றார்கள்). 

மஹாராஜனே! அம்ருதத்தை விரும்புகிற தேவாஸுரர்கள், மீளவும் ஸமுத்ரத்தைக் கடைகையில், அதினின்று மிகவும் அற்புதமான ஒரு புருஷன் உண்டானான். நீண்டு பருத்த புஜதண்டங்களும், சங்கம் போல் மூன்று ரேகைகள் அமைந்த கண்டமும், சிவந்த கண்களும், அகன்ற மார்பும், அழகிய ரத்ன குண்டலமும், அமைந்து மேகம் போல் கறுத்து, யௌவன (இளம்) வயதுடையவனாகி, சிறந்த பூமாலை அணிந்து, ஸமஸ்த ஆபரணங்களும் பூண்டு, பொன்னிறமான ஆடையுடுத்தி, தலைமயிர்கள் கறுத்து, நிகுநிகுத்துச் (பளபளத்துச்) சுருண்டு அழகாயிருக்கப்பெற்றுப் புன்னகையுடன் ப்ரகாசித்தான். அவன், ஸிம்ஹம் போலக் கம்பீரமாக அடியிட்டு நடக்குந்தன்மையுடையவன். மற்றும், அவன் கைவளை அணிந்து, கையில் அம்ருதம் நிறைந்த கலசத்தை ஏந்திக்கொண்டிருந்தான். அவன், ஒன்றான பகவானுடைய அம்சத்தினால் பிறந்தவன். தன்வந்தரியென்று பெயர் பெற்றவன். ஆயுர் வேதமென்கிற வைத்ய சாஸ்த்ரத்தை உள்ளபடி ஆராய்ந்தறிந்தவன். யாகங்களில் ஹவிர்ப்பாகமுடையவன். அஸுரர்கள், அவ்வாறு தன்வந்தரி புருஷன் உண்டானதையும், அவன் கையில் அம்ருதம் நிறைந்த கலசம் கொண்டு வந்ததையும் கண்டு, ஸமுத்ரம் கடைந்ததனால் உண்டான வஸ்துக்களையெல்லாம் தாமே பெற விரும்பி, விரைந்து பலாத்காரமாக அவன் கையினின்றும் அந்த அம்ருத கலசத்தைப் பிடுங்கிக்கொண்டார்கள். தேவதைகள். அதைக்கண்டு வருந்தி, பகவானைச் சரணம் அடைந்தார்கள். 

தன் ப்ருத்யர்களுடைய (சேவகர்களுடைய, பக்தர்களுடைய), மனவிருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் திறமையுடைய பகவான், இவ்வாறு தேவதைகள் வருந்துவதைக் கண்டு, “நீங்கள் வருந்த வேண்டாம். உங்கள் ப்ரயோஜனத்தை, நான் என் மாயையினால் ஸாதித்துக் கொடுக்கிறேன்” என்று தேவதைகளுக்கு ஸமாதானம் சொல்லி அவ்விடத்திலேயே அந்தர்த்தானம் அடைந்தான் (மறைந்தான்). அம்ருதத்தின் நிமித்தமாக மனவிருப்பமுற்ற அஸூரர்களுக்குள் ஒருவர் மேலொருவர்க்குக் கலஹம் (சண்டை) உண்டாயிற்று.

மன்னவனே! அவ்வஸுரர்கள் “நான் முன்னே, நான் முன்னே”, என்றும் “நீ கூடாது நீ கூடாது” என்றும் சண்டை செய்தார்கள். அந்த அஸுரர்களில் பலத்தில் மிகுந்த சிலர், அம்ருத கலசத்தைப் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொண்டு போகையில், அவர்களிடத்தினின்றும் அதை மீட்கமுடியாத துர்பலர்களான (பலமற்ற) சில அஸுரர்கள், அந்த ப்ரபலர்களை (பலம் மிக்கவர்களை) நோக்கி இந்த அம்ருதத்தில் தேவதைகளுக்கும் பாகம் கொடுக்க வேண்டும். அவர்களும், நம்மைப்போல வருந்திக் கடலைக் கடைந்தார்களல்லவா? ஆகையால், ஸத்ர யாகத்தில் (நீண்ட நாள் செய்யப்படும் ஒரு யாகம்) எல்லோர்க்கும் யாகத்தின் பலன் ஒத்திருப்பது போல், இந்த அம்ருதத்தில் தேவதைகளுக்கும் பாகம் உள்ளதுதான். இது பழைய தர்மமேயன்றி, நாங்கள் புதிதாக ஏற்படுத்திச் சொல்லுவதன்று என்று பொறாமையினால் அடிக்கடி தடுத்தார்கள். 

இப்படி, விவாதமாயிருக்கும் ஸமயத்தில், எல்லா உபாயங்களையும் அறிந்த பகவான், தன்னுடைய ஸாமர்த்யத்தினால் இத்தகையதென்று நிரூபிக்கமுடியாமல் மிகவும் அற்புதமான ஒரு பெண்ணுருவம் தரித்தான். அப்பெண்மணியின் தேஹம், அழகிய கருநெய்தல் போல் கறுத்து ஸர்வாங்க (எல்லா அங்கங்களும்) ஸுந்தரமாய் (அழகாய்), ஒன்றோடொன்று ஒத்திருக்கின்ற காதுகளில் குண்டலங்களை அணிந்து, அழகிய கபோலங்களும் (கன்னங்களும்), உயர்ந்த மூக்கும் அமைந்த முகத்தினால் மிகவும் ரமணீயமாய் (கவர்ந்து இழுக்கும்படி) இருந்தது. அவளுக்கு யௌவன (இளம்) வயது அப்பொழுது தான் புதிதாக ஆரம்பித்திருந்தது. அதனால், அவளுடைய கொங்கைகள் (மார்பகங்கள்) திரண்டு உருண்டு இணைந்து மிகவும் அழகாயிருந்தன. அக்கொங்கைகளின் (மார்பகங்களின்) பாரம் பொறுக்கமுடியாமல், இடை இளைத்திருந்தது. முகத்தின் வாஸனையில், ஆசையால் மேல் விழுந்து வருகின்ற வண்டுகளின் ஜங்காரத்தினால், அவளுடைய கண்கள் சஞ்சலமாயிருந்தன. மலர்ந்த மல்லிகைப் பூமாலையைத் தலைமயிர்ச் சொருக்கில் சூடி, அழகிய கழுத்தில் கண்டாபரணங்களையும் (கழுத்து ஆபரணங்களையும்), அழகிய புஜங்களில் (தோள்களில்) தோள்வளைகளையும் அணிந்திருந்தாள். அழுக்கின்றி நிர்மலமான ஆடையுடுத்தி, தீபம்  போன்ற, நிதம்பங்களின் (முதுகுக்கும் இடுப்புக்கும் கீழ் உள்ள உடலின் பகுதி) மேல் விளங்குகின்ற, அரை நாண்மாலையால் (ஒட்டியாணத்தால்) மிகவும் ப்ரகாசித்துக் கொண்டிருந்தாள். விலாஸத்துடன் (விளையாட்டுடன்) அழகாய் நடையிடுகின்ற அப்பெண்மணியின் பாதங்களில், சிலம்பு தண்டைகள் ஒலித்துக் கொண்டிருந்தன. அவள், வெட்கம் வழிந்த புன்னகையும், அசைகின்ற புருவ நெரிப்பும் அமைந்த கண்ணோக்கங்களால், அஸுர ச்ரேஷ்டர்களின் மனத்தில் காமவிகாரத்தை அடிக்கடி விளைத்துக் கொண்டிருந்தாள். 

எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக